vithaikulumam.com
சமகாலகுறிப்புகள்

குமாரவடிவேல் குருபரனின் மீதான் தடை தொடர்பில் மாணவர் ஒன்றியம்

குமாரவடிவேல் குருபரனின் மீதான தடை தொடர்பில் மாணவர் ஒன்றியம் அவரது உரிமையின் பக்கமே நிற்பதாக இன்று அறிவித்திருந்தது. பேரவை உரிய அழுத்தத்தை கொடுக்காதவிடத்து பல்கலைக்கழக சமூகமும் பொது அமைப்புகளும் மக்களும் இணைந்து போராட வேண்டி வரும் என்று சொல்லியிருந்தார் ஒன்றியத் தலைவர்.

இந்த வேளையில் பேரவைக்காகவோ வேறு யாருக்காகவுமோ ஒன்றியமும் மாணவர்களும் காத்து நிற்கத் தேவையில்லை. முதலில் செய்ய வேண்டியது மாணவர்களை அரசியல்மயப்படுத்துவது தான். இந்தப் பிரச்சினையின் ஆழம் அங்கு தான் உள்ளது. குருபரன் வெளியில் இயங்குவது மட்டுமல்ல, பல்கலைக்கழகச் சூழலில் அவர் உண்டாக்கிய அரசியல் உரையாடல்கள் முக்கியமானவை. பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் உரையாடல்களில் ஈடுபட வேண்டும், அதுவே முதன்மையான அளவில் இப் பல்கலைக்கழகத்திற்கு இருக்கும் தேவை. பெரும்பான்மை மாணவர்கள் இது யாருடையதோ பிரச்சினையைப் போலவே அணுகுகிறார்கள், அதற்குக் காரணம் ஏற்கனவே உள்ள அரசியல் வறுமை தான். மாணவர்கள் கலந்துரையாடலில் ஈடுபடுவது மிகவும் குறைவு, இப்போது கூட அவர்கள் அறிவார்ந்து இந்த நிலைப்பாட்டிற்கு
வந்து சேர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.

மிக மேலோட்டமான பிரச்சினையாகவே அணுகுகிறார்கள், இது அவர்களின் அரசியல் வெளியின் மேல் விழும் அடி என்பதை உணர்ந்து எதிர்க்கும் பலம் அவர்களிடமில்லை. இது குருபரன் என்ற ஒற்றை நபரினதோ அல்லது பல்கலைக்கழக சுயாதீனம் என்ற கருத்தினதோ பிரச்சினை மாத்திரமல்ல. இராணுவத்தினதும் அரசினதும் அழுத்தங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கப் போகிறது, அதனை எதிர்கொள்ள மக்களை அறிவூட்ட வேண்டிய இடத்திலிருக்கும் மாணவர்கள், இந்தப் பிரச்சினையின் பின்னாலுள்ள பெரிய பூதத்தை பார்க்கிறார்கள் இல்லை, அல்லது அதனை எதிர்கொள்ள சீரான ஆய்வுகளையோ, உரையாடல்களையோ சமூக மட்டத்தில் முன்னெடுக்கும் வேலைகளையோ செய்கிறார்கள் இல்லை. அதுவே இப்போதைய தேவை.

எதை அழிப்பதற்காக அல்லது அச்சுறுத்துவதற்காக அரசும் இராணுவமும் செயற்படுகிறதோ அதைக் காப்பாற்றுவதே முதன்மையான பணி. அது மாணவர்களின் அரசியல் வெளி. அரசியல்மயப்படாத மாணவர் சமூகத்தால் எந்தப் பயனும் விளையாது. மாணவர்களை அரசியல்மயப்படக் கோரியவர்களில் குருபரனும் முக்கியமானவர், அதற்காகச் செயற்பட்டவர். அவருக்குச் செய்யும் நீதி என்பது உங்களுக்கு நீங்களே செய்யும் நீதி, உங்கள் அரசியல் பேசும் சுதந்திரத்தை வெறும் பேச்சளவில் நிறுத்திக்கொள்ளாமல் மாணவர்களை அரசியல்மயப்படுத்த வேண்டிய தேவை ஒன்றியத்திற்கும் விரிவுரையாளர்களுக்கும் உண்டு.

உரையாடல்களை நிகழ்த்துங்கள், பிரச்சினைகளின் வேர்களை அறியுங்கள்.

கற்பி. ஒன்று சேர். போராடு

-கிரிசாந்

Related posts

மேலைக்கடலில் பிளாஸ்டிக் கப்பலும் – வட கடலில் பேருந்துகளும்

vithai

வட்டார மொழிகளின் அரசியலை எதிர்கொள்ளுதல்

vithai

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதியும் ஒரே இலங்கைக்கான நீதியும்

vithai

சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய சினிமாக்கள்

vithai

ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம்

vithai

பெரியபரந்தன் பிள்ளையாரும் சமூக நீதியும்

vithai

Leave a Comment