vithaikulumam.com
கட்டுரைகள் கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்

மாற்றுக் குரல்

யாழ்பாணத்தைச் சேர்ந்த மாற்றுப்பாலினத்தவர்களுக்கான ஓர் அமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பகட்ட உரையாடல்களை கடந்த காலத்தில் இரண்டு முறை விதை குழுமம் ஊடாக நிகழ்த்தியிருந்தோம். முதலாவதாக அவர்களின் பிரச்சினைகளை அவர்களே உரையாடுவது நிகழ்ந்தது. அதில் பல விவாதங்களை நிகழ்த்தி சில முடிவுகளுக்கு வந்திருந்தோம். ஒரு பொதுத்தளத்தை இதன் பொருட்டு உருவாக்குவதென்பது அவற்றுள் முக்கியமான ஒரு முடிவு.

பிறகு சில மாதங்களின் பின் மறுபடியும் கூடி அதற்கான அமைப்புக் கட்டமைப்பை உருவாக்குவது பற்றி கலந்துரையாடி, அந்த அமைப்பிற்கு “மாற்றுக் குரல்” என்றும் பிறகு அதற்கு ஒரு நிர்வாக கட்டமைப்பையும் உருவாக்கினோம். அதனை சுதந்திரமான ஒரு அமைப்பாக உருவாக்குவதே எங்கள் எண்ணம். எந்த ஒரு அமைப்பினதும் துணை நிறுவனமாகவோ,அவர்களின் பிரச்சினைகளுக்கு போய் நின்று கதைத்துக் கொண்டிருப்பதுமோ அன்றி, இந்த புதிய அமைப்புக்கு ஏராளம் வேலைகள் இருக்கின்றன. அதன் சுதந்திரம் மற்றும் எல்லைகளை சரியாக வரையறுத்துக் கொள்ள வேண்டும். மாற்றுப் பாலினத்தவர்கள் பற்றிய எந்த அடிப்படை அறிவுமற்ற பெரும்பான்மை சமூகத்தில், முதலாவதாக இவர்களின் குரல் ஒலிப்பதே மாற்றானது தான். பாலியலை ஒரு திருட்டுப் பண்டமாக அல்லது பால் நிலையை வெறும் இருமையில் மட்டுமே பார்த்து பழகிய சமூகத்திற்கு இவர்களின் குரல் கேலிக்குரியதாக இருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்தமான இந்த சமூகத்தின் பல புரிதல்களுக்கு இவர்களின் குரல் வேறு பல அர்த்தங்களையும் கேள்விகளையும் உருவாக்கும்.

இன்று ஈழ நிலா பதிவு செய்த ஒரு பதிவை கீழே தருகிறேன்.

//ஏனோ இவர்கள் வாழ்க்கையில் குருதியில் குளிப்பிற்கு பஞ்சமே இராது. கடந்த இரு நாட்களுக்கு முன் என் தோழி எனக்கு அலை பேசி எடுத்திருந்தாள் அவள் ஒரு மாற்றுப்பாலின பெண். ஒருவருட இருவருட நட்பல்ல பதினாறுவருட நட்பு. கனகாலம் தொடர்பில் இல்லை திடீரென வந்த அலைபேசிக்கு இசைவடைய என் கை பதறிற்று. ஆர்வத்தோடு எடுத்து வணக்கம் சொன்னேன். சத்தமே இல்லை, பின்னர் ஓ என்ன புலம்பலுடன் அழத் தொடங்கினாள். ஓரிரு நிமிடங்கள் பேச்சே இல்லை, விம்மலும் விக்கலுமான அழுகையே நிறைந்திருந்தது.
அதன் பின் மெல்ல மெல்ல குரலை வெளியில் கொணர்ந்தாள். “எனக்கு வாழ பிடிக்கலடி சாகப்போறன் இவயலோட இருக்கிறத்துக்கு சாகிறதுதான் நிம்மதி” என்றாள். என்ன நடந்தது என்பதை தீர விசாரிக்க ஆரம்பித்தேன்
சாதரண ஒரு மாற்றுப்பாலின பெண்ணுக்கு ஆரம்பத்தில் பாடசாலை, சமூகம், வீடு இவற்றில் சந்திக்கும் பிரச்சினைக்கு ஒருபடி மேலே இவளுக்குப் போய்விட்டதை அறிந்தேன்.

இவளின் குடும்பத்தினர் எல்லாரும் நன்கு படித்தவர்கள். தாய் யாழ் போதனா வைத்தியசாலையில் சிரேஷ்ட அறுவை சிகிச்சை அறை தாதியாக இருந்து ஓய்வு பெற்றவர். அது போல் சொந்தங்கள் எல்லாருமே ஆசிரியர் பணியிலும் கிராமசேவகர் அலுவலர்களாகவும் உள்ளனர். இப்படி கல்வி அறிவு கொண்டவர்களுக்கு பகுத்தறிவு என்பது அறவே இல்லை.
2012 தனது பெண்மை குறித்த விடயங்களை வீட்டில் சொன்னதிலிருந்து இன்று வரை மனஉளைச்சலில்தான் கிடக்கிறாள். இதில் என்ன கொடுமைகள் என்றால் ஆரம்பத்தில் இவளுக்கு மனநோய் பிடித்துள்ளதாக எண்ணி யாழ் பிரபல மனநல வைத்தியரை சந்திக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. பிறகு வேறொரு உள ஆரோக்கிய நிபுணரை நாடி வைத்தியம் மேற்கொண்டுள்ளனர் இதில் என்ன நாசம் என்றால் மனநல மருத்துவம் படித்தவர்களுக்கு பாலினதேர்வு (Sexual orientation) பாலின அடையாளம் (Sexual identity) இடையிலான வேறுபாடு தெரியாமல் இவளை ஓர்பால் ஈர்ப்புள்ள நபராகக் கருதி இரவில் நன்றாக தூங்கி எழும்ப நித்திரை குளிசைகளை கொடுத்துள்ளார்கள்.
சிறிது நாட்களில் அவர்களின் அந்த முயற்சி தோற்றுப்போகவே யாரோ ஒருத்தி வீட்ட வந்து இவளுக்குப் பெண் பேயை யாரோ செய்வினை செய்து ஏவி விட்டதாக கூறியுள்ளார்கள். அதற்காக யாழ்ப்பாணம் சுன்னாகம் பக்கம் உள்ள ஒரு மந்திரவாதியை சந்தித்து இவளுக்கு பேய்விரட்ட ஏற்பாடு நடந்துள்ளது. அதுக்கும் இவள் போயிருக்கிறாள். அதிலும் பயனில்லை பின் பாசையூர் போகும் வழியில் தியான இல்லத்தில் அருட்தந்தை லோறன்ஸ் நன்றாக பேயோட்டுவார் என்று யாரோ கூற அங்கேயும் பல முறை அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சென்று பயனில்லை. அவள் பிறப்பில் கொண்ட பெண்மையை மனநோய் என்னனும் பேய், பிசாசு என்றும் கூறி அறிவியல் ரீதியாக சிந்திக்க மறந்த படிப்பறிவாளிகளை நினைத்தால் ஆத்திரம் மூண்டது எனக்கு. ஈற்றில் வெளியூர் சென்று யாரோ வாங்கிக் கொடுத்த மந்திரித்த வீபூதியை அவள் உண்ணும் உணவில் கொடுத்த வண்ணம் இருந்துள்ளனர். இதை அறிந்த பின்னே இனியும் பொறுக்க முடியாதென என்னை அழைத்தாள்.
நான் என்ன பொலிசா இல்லை ஐ நா மனித உரிமை ஆணைக்குழு செயலாளரா. என்னால் ஒரு உதவி செய்ய முடியும் என்றேன். நீ யாழ்பாணத்தை விட்டுப் போய் வேறொரு இடத்தில் இருக்க உதவுவேன் என்றேன். கொழும்பில் தோழி ஒருத்தியை தொடர்பு கொண்டு இவளைப் பற்றி கூறினேன். உடனே தன்னிடம் அனுப்பு என்றாள். அந்த இரவே புதிய பறவையாய் புறப்பட்டுப் போனாள்.
பெற்றவர் பாசமும் வேசம் போடும் மாற்றுப்பாலினத்தவர் விடயத்தில் அவர்களின் சுய கௌரவத்தால்.

திருநங்கையரின் பெண்மை நிராகரிக்கப்படும் இடத்து தம்முயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு போய்விடுவர்.//

இதற்கு காரணம் இவர்களுக்கிடையிலான அல்லது இவர்கள் பொருட்டு உண்மையான அக்கறை கொள்ளும் ஒரு கூட்டு அமைப்பை நாம் வலிமையாக உருவாக்கவில்லை என்பது தான்.

ஊடகங்கள் இவர்களின் கதைகளை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. அவை புதினம் பார்க்கும் இந்தச் சமூகத்திற்கு நொறுக்குத்தீனி போல் தான் இருக்கும். ஆனால் நாம் சிந்திக்க வேண்டியதும் உழைக்க வேண்டியதும் இப்படித் தன்னுடைய கூட்டிலேயே தன்னால் வாழமுடியாமல் பறந்து தப்ப நினைக்கும் பறவைகளைப் பற்றியது தான். அவர்களுக்கான கூட்டுப் பலத்தை, பாதுகாப்பை நாம் உருவாக்க வேண்டும், இந்த முறை நாம் சிந்திக்க வேண்டும். எப்பொழுதையும் போல உருக்கமான பதிவு என்று கடந்து கொண்டிருக்கக் கூடாது. இது ஈழ நிலாவுக்கு தெரிந்தது, எழுதி விட்டாள். ஆனால் இன்னும் இப்படி எத்தனை கதைகள் நம் குருட்டுக் கண்களுக்கு முன் நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ தெரியாது.

அவர்களின் மாற்றுக் குரல் இப்பொழுது ஒலித்தேயாக வேண்டும். நமது காலத்தில் நம்மோடு வாழும் அனைவரதும் சுய கவுரவத்தையும், மரியாதையையும் அவர்களுடைய தேர்வு செய்யும் உரிமையையும், பாதுகாப்பையும் நாம் காப்பாற்ற வேண்டும், அதுதான் இந்த இனத்தையும் அறிவையும் விடுதலை செய்யும்.

-கிரிசாந்

https://kirisanthworks.blogspot.com/2016/09/blog-post_7.html?m=1&fbclid=IwAR17pURHMNUA9r0IAs2xV0tiCsLnxFyJqwwPI7F3gLeG6L2FTniaIP6PP9w

Related posts

வாசிப்பும் உரையாடலும் : நிகழ்வு 03

vithai

வாசிப்பு மாத கலந்துரையாடல் |சிட்டுக் குருவிகள் புத்தகக் குடில்

vithai

வாய்ப்பாட்டு மட்டை

vithai

தாய்மையை ஏன் பால் நீக்கம் செய்ய வேண்டும்?

vithai

நானும் கூட என்னும் பெண்ணியப் பகிர்வுக் குறியீட்டுச் செயற்பாட்டியக்கம் #MeToo

vithai

குழப்படி, களவு மற்றும் தண்டனைகள்

vithai

Leave a Comment