vithaikulumam.com
கட்டுரைகள் கலந்துரையாடல்கள் சமகாலகுறிப்புகள் செயற்பாடுகள்

பவளப்பாறைகளை உண்ணக்கூடிய மெளனம்

நீங்கள் கப்பல் ஒன்றைக் கட்ட விரும்பினால் மக்களை மரங்களை எடுத்துவரச் சொல்வதற்குப் பதிலாக அவர்களுக்கு கடலினுடைய மகத்துவத்தைக் கற்பியுங்கள்.
-அந்துவான் செய்ண்ட் எக்சுபரி (Antoine de Saint-Exupery)

நெட்பிளிக்ஸில் இயற்கை வரலாற்றியலாளர் டேவிட் ஆட்டன்பரோ (David Attenborough) விபரிக்கும் நமது கிரகம் (our planet) ஆவணப்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அதன் நான்காவது பகுதி கடற்படுக்கைகளின் உயிர்ப்பல்வகைமையைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தது. நிலப்பகுதிக்கு சமீபகமாக இருக்க கூடிய சூரிய ஒளிபடக்கூடிய கடற்படுக்கைகள் ஒவ்வொரு நாட்டினதும் இயற்கை மரபுரிமையாகவும், பாதுகாக்கப்பட வேண்டிய கடல் வளமாகமும் இருப்பவை. ஏனெனில் 90% வீதமான கடல்வாழ்கைக்குரிய உயிரிகள் இக்கடற்படுக்கையில் வசிப்பதாக ஆவணப்படம் விளக்கிச் செல்கிறது. குறிப்பாக அக்கடற்படுக்கைகளில் இருக்க கூடிய பவளப்பாறைத்தொகுதிகள் மொத்த கடல்வாழ்க்கைக்குமான ஆதாரமாக இருக்கிறது. இப்பவளப் பாறைகள் பூமி வெப்பமடைவதால் தொடர்ச்சியாக அழிவடைந்து கொண்டிருக்கின்றன. ஆவணப்படம் அவை வெளிறி; இறந்து சாம்பலாவதை காட்டும் போது பதைக்கிறது. அதற்கு முந்திய காட்சியில் மீன்களும் சீல்களும் பிற தாவரங்களும் உயிரிகளும் எப்படி அங்கு ஓர் இணக்கமான வாழ்க்கைக் கோலங்களைக் கொண்டிருக்கின்றன என்று விளக்குகிறது ஆட்டன் பரோவின் குரல். கடற்சிங்கம் ஒன்று பவளப்படுக்கையில் இருக்க கூடிய முள் போன்ற உடலமைப்பு உயிரினம் ஒன்றை சென்று பிடித்து உண்கிறது, அதைப்போல வாயில் பெரிய பற்களைக்கொண்ட குறிப்பிட்ட மீன் கூட்டங்களும் அதை உடைத்து உண்கின்றன, பிறகு அவரின் குரல்அங்கு வளர்ந்திருக்கும் கடல்தாவங்கள் அங்குள்ள பவளப்பாறைகளையும் நீர்ச்சூழலையும் குளிர்ச்சியாக வைத்திருக்க அவசியமானவை என்பதை விளக்குகிறது. முள் போன்ற அந்த சிறிய உயிரினங்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படாமல் விட்டால் அவை அந்த தாவரங்களை உண்டு முடித்துவிடும் தாவரங்கள் இறந்தால் சூட்டில் பவளங்கள் இறந்துவிடும் பிறகு மொத்த உயிர்ப்பல்வகைமையே இறந்து விடும் என்பதை நாமே புரிந்துகொள்ள முடிகிறது. அங்கே நிகழக்கூடிய உணவு வலை ஒரு இயைபை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இடையில் அந்தக்குரல் ஏற்கனவே இப்பூமியில் இருக்க கூடிய 50% பவளத்தொகுதிகள் அழிந்துவிட்டதென்ற தகவலையும் தருகின்றது. காபனீர் ஒட்சைட்டும் அதன் விளைவான புவி வெப்பமாதலும் கடலை அமிலமாக்கும் போது கடற்படுக்கைகளும் பவளத்தொகுதிகளும் அழியத்தொடங்குகின்றன.

பொதுப்புத்தியில் இயற்கையின் நியதி ’தக்கன பிழைக்கு’ என்பது டார்வினுக்கு பிறகு வாய்ப்பாடாகவே மாறிவிட்டது, ஆனால் இயற்கையிடம் அதன் வாழ்க்கையிடம் ஒரு ஒருங்கிசைவு இருக்கிறது. யாரும் கற்பிக்காத அறமொன்றுள்ளது. ஜியாங் ரோங் எழுதிய ‘ஓநாய் குலச்சின்னம்’ என்ற நாவலில் ஓநாய்கள் மான்களை வேட்டையாடும் காட்சி ஒன்றை விபரிப்பார், நாலா பக்கமும் இருந்து மான்களைச் சூழ்ந்து கொள்ளும் ஓநாய்கள் மான்கூட்டத்தை வேட்டையாடும் , ஒரு அளவிற்கு மேல் ஒருபக்கமாக தம் வியூக வளையத்தை தளர்த்தி கொஞ்ச மான்களைத் தப்பித்துச்செல்லவிடும். மான்கூட்டம் அழிந்து போனால் ஓநாய்களுக்கு அடுத்த வேட்டைக்கு மான்கள் இருக்காது என்பதால் ஓநாய்கள் அவற்றைப் போகவிடும். அதே போல அங்குள்ள மங்கோலிய மேச்சல் நில மக்கள் ஓநாய்களைப் பாதுகாப்பார்கள், அவை அந்த நிலத்தின் தெய்வங்களாக கருதப்படும். தங்களின் ஆடுகளை வேட்டையாடினாலும் ஓநாய்கள் அழிந்து போனால் அந்த மேச்சல் நிலமே அழிந்து போகும், மான்கள் முதலான தாவர உண்ணிகள் வேகமாக இனம் பெருகக் கூடியவை மந்தைக்கணக்கில் பெருகி மேச்சல் நிலத்தை முழுவதுமாக மேய்ந்து முடித்தால் அந்த நிலத்தில் ஆடுகளுக்கோ, குதிரைகளுக்கோ மேச்சல் இருக்காது மேச்சல் இல்லாவிட்டால் மனிதர்கள் அங்கே வாழமுடியாது. அதனால் ஓநாய்கள் அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்தி அந்த நிலத்தின் சமநிலையைப் பேணுகின்றன என்பதும் பின்னர் ‘கலாசாரப் புரட்சியின்’ போது மாவோவின் படைகள் மேச்சல் நில ஓநாய்களை அழிப்பதன் மூலம் மேச்சல் நிலம் எப்படி அழிகிறது , அங்குள்ள மானுட வாழ்க்கை எவ்வாறு அழிகின்றது என்பதே நாவலின் மொத்தக் கதையும். இது காட்டுக்கும் நிலத்துக்கும் மட்டுமல்ல கடலுக்குமானதுதான். நிலத்தினுடைய இருதயமாகவும் சுவாசப்பையாகவும் நாம் காடுகளையும் மரங்களையும் சித்தரிக்கின்றோம், அதேபோல கடலின் இருந்தயமாக கடற்படுக்கைகளே இருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரை எமக்கு ‘உரித்தான’ கடற்படுக்கை என்பது கடல் வாழ்க்கையின் இருதயம்.
இங்கே பவளப்பாறையையும் கடல்வாழ்க்கையையும் பாதுகாப்பது என்பது மனிதர்களைப் பாதுகாப்பதாகும். ஏன் நாம் பவளப்பாறைகளைப் பாதுகாக்க வேண்டும்? என்று கேட்டால் நம்முடைய உணவும் பொருளாதாரமும் கடலிற்கு மேலே பயணிக்கும் கப்பல்களின் போக்குவரத்தில் தங்கியிருப்பதில்லை, அவை கடலின் படுக்கைகளில் விளையும் உயிர்களில் தங்கியிருக்கின்றன. இன்றைக்கு புவி வெப்பமடைதல் போல கடற்படுக்கைகளை அழிப்பதில் பெரிய பங்கெடுக்கும் ரோலர் படகுமூலம் வழித்துச்செல்லப்படுவதனாலும், கடல் அமிலமாகவோ இரசாயனமாகவோ ஆக்கப்படும் போது ஏற்படும் அழிவும் பெரியளவில் பங்கெடுக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரை இந்திய- தமிழ் நாட்டு ரோலர் படகு முதலாளிகளும் மீனவர்களும் பவளங்களை வாரி அழித்துச் செல்வதில் முதன்மையான நாசகாரர்களாக மாறியிருக்கிறார்கள். இது தவிர அவ்வப்போது இலங்கைக் கடற்பிராந்தியத்தில் நடக்க கூடிய விபத்துக்களும், கடலில் கொட்டப்படுகின்ற கழிவுகளும் பவளங்களை அழித்துவிடுகின்றன.

சமீபத்தில் இலங்கையின் கடலில் எரியத்தொடங்கிய இரசாயனக் கப்பல் ஒன்று பேசு பொருளானது, கப்பல் எரிந்து சிதையும் நிலையில்தான் அதில் இராசயனங்கள் இருப்பதும் அவை கடலில் கரைவதும் பற்றிய தகவல்கள் வெளியாகின. கப்பலில் பிரச்சினை இருக்கின்றது என்று அனுப்பப்பட்ட மின்னஞ்சல் முதற்கொண்டு இலங்கையின் அரசியலில் பெரியளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. கடல் ஆமைகளும், மீன்களும் தங்களுடைய வாயிலும் பூக்களிலும் இரசாயனங்களுடன் கரையொதுங்கியபடியிருக்கின்றன.

ஆனால் இதுபற்றி ஊடகங்களும், மக்களும் எத்தகையை விபரணையை வைத்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். கொஞ்ச நாட்களுக்கு முதல் சூயஸ் கால்வாயை கப்பல் ஒன்று மறித்து நின்ற போது எழுந்த அதே ‘பார்வையாளர்’ மனநிலையா மக்களிடம் இருக்கின்றது ? என்ற சந்தேகம் வருகின்றது. அப்படித்தான் என்றால் , நம்மிடமுள்ள கூட்டு அசட்டைத்தனத்தை , அறியாமை என்று சொல்ல முடியுமா? அல்லது நாம் ஒவ்வொன்றையும் அறிந்துகொள்கிறோம் ஆனால் சிந்திக்காமல் இருக்கிறோம் என்று எடுத்துக்கொள்வதா? மங்கோலிய மேச்சல் நிலத்தினுள் நுழைந்த மாவோவின் படைகளுக்கும் நமக்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கின்றன? கப்பல் எரிந்தது கப்பல் கம்பனிகளின் அசட்டைத்தனம், அல்லது அதைக்கண்காணிக்காமல் விட்டது அரசாங்கத்தின் தவறு. என்று சொல்லிவிட்டு அப்படியே நடப்பதை வேடிக்கை பார்க்கலாம் இல்லையா? எதிர்க்கட்சிகளுக்களையும் ஊடகங்களையும் தவிர நாம் எல்லோரும் பார்வையாளர்களா? அரசினதும் அதன் கூட்டு நிறுவனங்களினதும் ஏனைய அரசுகளினதும் பொறுப்பின்மைக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? சரி நாம் தான் ஓட்டுப்போட்டோம், நாம்தான் வரி கட்டுகிறோம் ஆனால் நடைமுறையில் இதைக் கேள்வி கேட்பதோ மாற்றுவதோ சாத்தியமா? பவளப்பாறைகள் வெளிறி இறந்து போக முதல் இவற்றை எல்லாம் மாற்றுவது சாத்தியமா?
சூழலியல் செயல்வாதம் என்றாலும் ஏனைய பண்பாட்டு அரசியல் செயற்பாடுகள் என்றாலும் சிந்திப்பதும் செயற்படுவதும் அடிப்படையானது. அது ஏற்படுத்த கூடிய அறிதலை குறித்த குழுக்களோ, அமைப்புக்களோ தங்களுக்குள் பகிர்ந்துகொள்வதும் முக்கியமானது. ‘இயற்கையைப் பாதுகாப்பது’ அரசார்பற்ற அமைப்புக்களின் ‘அஜெண்டாக்களுக்குள்’ இருக்க கூடிய செல்வந்தர்களினதும் , பிரபலமானவர்களினதும் ‘ப்ரோஜெக்டுகளாகவும்’ மட்டும் மாறியிருக்கும் இப்பெரும்பான்மைச் சூழலில் நம்முடைய பணிதான் என்ன?

சூழல் மீதான தனிமனித அக்கறைகளும், கரிசனைகளும் சிறுபான்மைத்தரப்பாகவே இருக்கின்றது. அதிலும் நம்மிடம் இருக்க கூடிய அரசியல் மயப்படாத தன்மை இக்கூட்டு அசமத்துவத்தை பாதுகாத்து வைத்திருக்கின்றது. சூழலியல் அமைப்புக்களோ, சூழலில் அக்கறையுள்ள தனிமனிதர்களோ சூழலியல் செயற்பாடு என்பதில் மரம்நடுதல், பிளாஸ்ரிக்கை ஒழித்தல் முதலான செயற்பாடுகளுடன் சுருங்கிப்போகிறார்கள். வெளித்தெரியக்கூடிய, நம்மை உணர்ச்சி வசப்படுத்துகின்ற இத்தகைய பேரழிவுகளுக்கு பின்னால் இருக்க கூடிய அரசியலையும் அவை தொடர்பு பட்டு இருக்க கூடிய பிற சமூக அசமத்துவங்களின் அரசியலையும் விளங்கிக்கொள்ளாத போது நம்மால் இவற்றை மாற்ற முடியாது. சனநாயகச் சூழலின் ‘பங்குபற்றுதல்’ ‘கூட்டு வேலை’ என்பன அடிப்படையானவை. நாம் ஏன் இதனைச் செய்ய வேண்டும்? எப்படிச்செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்குரிய பதிலைச் சென்றடைய நாம் ஒவ்வொரு பிரச்சினைகள் தொடர்பிலும் ‘அரசியல் மயப்பட்ட’ புரிதல்களுக்குச் செல்லும் போதே கூட்டு வேலையும் பங்குபற்றுதலும் சாத்தியமாகின்றது.
இவற்றோடு சனநாயகத்தில் ‘பொதுசன அபிப்பிராயம்’ என்றொரு அரசியல் சொல்லாடல் இருக்கிறது. பொதுவாக அரசறிவியல் துறையில் இருக்க கூடிய இச்சொல்லாடல் ‘கட்சிகள்’ பொதுசன அபிப்பிராயத்தை மாற்றி, திரட்டி வெற்றிபெறுவது பற்றிப்பேசும். ஆனால் பொதுசன அபிப்பிராயம் என்பது எல்லாவகை அரசியலையும் தீர்மானிக்க கூடிய பெரிய ‘அழுத்தமாகவும்’ சிந்தனையை, மக்கள் மயப்படுத்தும் வெளியாகவும் இருக்கின்றது. இங்கே பொதுசன அபிப்பிராயம் என்பது மக்களிடம் உள்ள கூட்டான அறிதல். இப்பொதுசன அபிப்பிராயம் உருவாகி வருவதில் எவையெல்லாம் செல்வாக்குச்செலுத்துகின்றன என்பதை கிராம்சி முதலான மாக்சியர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். சிவில் அமைப்புக்கள் எனப்படும் மக்களுடன் இணைந்து மக்களின் அபிப்பிராயத்தை உருவாக்க கூடிய அமைப்புக்கள் பொதுசன அபிப்பிராயத்தின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்கின்றன என்பதை ‘கருத்தியல் மேலாண்மை’ என்ற எண்ணக்கரு மூலம் நிரூபனம் செய்திருக்கிறார்கள். இப்பின்னணியில் தான் கூட்டுச் சிந்தனை, கூட்டு உழைப்பு என்பவற்றைக் கொண்ட ‘அமைப்பாய் திரள்வது’ பற்றிய உரையாடல் சமகாலத்தில் வளர்த்தெடுக்கப்படுகின்றது.

சூழலியல் செயல்வாத அமைப்புக்கள், எனைய பண்பாட்டு அமைப்புக்கள் ‘பொதுசன அபிப்பிராயத்தை’ நோக்கியே தமது விழிப்புணர்வைச் செய்ய வேண்டும், அரசியல் மயப்பட வேண்டும். பங்குபற்றுதலை, கூட்டு உழைப்பை விரிவாக்க வேண்டும். ஊடகங்கள் , சமூக ஊடகங்கள் என்று மக்கள் ’அறிய’ கூடிய வெளிகளைப் இவற்றுக்காகப் பயன்படுத்தலாம், இங்கே அடிப்படையில் பொதுசன அபிப்பிராயம் என்பது ’உரையாடுவதை’ அடிப்படையாகக் கொண்டதுதான். இப்பிரச்சினையும் சரி ஏனைய சூழலியல் பிரச்சினைகளும் சரி எழும் போது அவை அக்கறையுள்ள ஒரு சில தனிமனிதர்களின் பொருமலோடு அடங்கி போகும் சம்பவங்கள் அயர்ச்சியைத் தருகின்றன. கூட்டான அபிப்பிராய உருவாக்கத்தின், சிந்தனையின் பங்காளிகளான அமைப்புக்கள் மெளனமாகவே இருக்கின்றன. நம்முடைய விழிப்புணர்வின் முதல் அங்கம் மெளனத்தைக் கலைப்பதுதான்.
ஏனென்றால் நம்முடைய மெளனம் பவளப்பாறைகளைக் கூட உண்ணகூடியது.

-யதார்த்தன்

Related posts

காட்டுப்புலம் ஒரு சமூக உரையாடல்- 4

vithai

ஆகாயத்தில் ஒரு வாக்கு

vithai

”குமாரசாமி குமாரதேவன் – வாசிப்பும் அறிதலும்” மின்னூல் வெளியீடு

vithai

போராடுவது என்றால் என்ன?

vithai

வட்டார மொழிகளின் அரசியலை எதிர்கொள்ளுதல்

vithai

இலங்கை இன முரண்பாட்டை விளங்கிக் கொள்ளுதல் ” கூட்டத் தொடர் -1

vithai

Leave a Comment