vithaikulumam.com
கட்டுரைகள் சமகாலகுறிப்புகள்

அரசியல்மயப்படல் : வாசிப்பு, எழுத்து, பதிப்பு

இலக்கியம் என்றால் என்ன என்ற அதி சிக்கலான கேள்விக்கு இலக்கு + இயம் என்று பட்டிமன்றப் பேச்சாளரைப்போல பதில் சொல்லக்கூடிய இலக்கியம் சார்ந்து இயங்க கூடிய பலரையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதை தனி நபர் சார் குற்றச்சாட்டாக வைக்காமல் அதை அச்சூழல் சார்ந்து இயங்கும் கணிசமான தரப்புகளின் அரசியல் மயமற்ற தன்மை என்றே பார்க்க வேண்டும். இங்கே அரசியல் என்பதை ‘அதிகாரம் பற்றியது’ என்று கருதும் போக்கு குறைவாகவே இருக்கிறது. அதிகாரம் என்பது ஒன்றின் மீது இன்னொன்று நிகழ்த்தப்படும் மேலாதிக்கம் , அல்லது செல்வாக்கு என்று சொல்லலாம் என்று நினைக்கின்றேன். அரசியல் அதிகாரம், பொருளாதார அதிகாரம், பண்பாட்டு அதிகாரம் என்பவற்றின் கீழ் ஏனைய எல்லா அதிகாரங்களையும் வகைப்படுத்தலாம் இவை அனைத்தும் இணைந்த கூட்டு மொத்தத்தினை ‘அரசியல்’ என்ற சொற்பதத்தினால் குறிக்கிறோம். அரசியல் அதிகாரம், பண்பாட்டு அதிகாரம், பொருளாதார அதிகாரம் என்று நம்முடைய எல்லாச்சூழலையும் தீர்மானிப்பவை ஒன்றை ஒன்று அதிகாரம் செய்கிறன.

அரசியல் என்ற கருதுதலில், உடல், இனம், வர்க்கம், பால், பாலியல், சாதி, அடையாளம், வரலாறு, வரலாற்று எழுத்து, கோட்பாடு, கட்சி, அரசு, பிரதேசம், பொருளாதாரம், கருத்து, மொழி, சூழலியல் என்று அரசியல் பல்வேறு கூறுகளைக் கொண்டது. உண்மையில் இந்தப்பட்டியல் மிகவும் நீண்டு சென்று உட்கூறுகளாக விரியக்கூடியது. ஒவ்வொரு உட்கூறிலும் விரிவிலும் ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் கொள்ளும் தொடர்பு, அதிகாரம் என்பவற்றை நாம் ஒவ்வொரு சூழமைவிலும் கவனித்துச் செல்லலாம், இதைத்தான் அரசியல் என்கிறோம். இங்கே அரசியலற்றது, அரசியல் நீக்கப்பட்டது என்று எதுவுமே இல்லை. இலக்கியச் செயற்பாடுகள் ,அமைப்புக்கள் குழுவேலைகளும் கூட அப்படித்தான்.

இலக்கியங்கள் மனிதர்கள் கண்டறிந்த கலை வடிவங்களுக்குள் முக்கியமானவை, அவை கருத்துருவாக்கத்தையும் செயல் வாதத்தையும் கோரக்கூடியவை. இலக்கியங்களை சமூகத்தின் பயன் பெறுமதி மிக்க செயல்வாதமாகக் கருதும் போதே நாம் பிற எல்லாவற்றிலும் அரசியல் மயப்படுவதற்கான அடிப்படைகளைச் சென்று சேர முடிகிறது. ஏனெனில் நவீன அறிவியலை, நவீன கலையை, நவீன வரலாற்று எழுத்தை, சனநாயகத்தை, மாக்சியத்தை என்று நவீன மனிதர் தம்மைக்கண்டடையும் போது அவர்களின் பின்னாலும் அருகிலும் இருந்தது இலக்கியமாகும்.
மனிதர்களின் வாழ்க்கையின் அடிப்படைகளைத் தீர்மானிக்கும் அரசியல், பொருளாதாரம் , சமூகம், பண்பாடு, மொழி என்பவற்றின் முன்னேறிய வடிவங்களைக் கண்டடைவதன் அடிப்படைகளை தொகுக்க கூடிய பெரிய வெளியாக இலக்கியம் சமகாலத்தில் தன்னை விரித்துக்கொள்கிறது. அது புத்தாக்கம், கருத்தியல், செயல்வாதம் மூன்றையும் சமூகத்தை நோக்கி இணைத்துச்செல்கின்றது. இவ்வகையில் இலக்கியச் செயல்வாதம் அல்லது செயற்பாடானது மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கின்றது.

1. வாசிப்பு
2. எழுத்து
3. பதிப்பு

வாசிப்பு, எழுத்து, பதிப்பு இவை மூன்றும் வெறுமனே பொழுது போக்காகவோ, தன்னை , தன்முனைப்பை வெளிப்படுத்தும் இடமாகவோ, வணிகநோக்கில் செயற்படுவது என்றோ கருதுவதும் நம்புவதும் வாழ்க்கைச்சுரண்டக்கூடிய முதலாளிய கட்டமைப்பின் ஆபத்தான வேர்களைச் சென்று சேருவதாகும்.

வாசிப்பு

வாசகர் தன்னுடைய தனிப்பட்ட புரிதலுக்காக வாசிப்பதாகச் சொல்லும் போதும் சரி வாசகர்கள் கூட்டாக உரையாடி தங்களை மேம்படுத்திக்கொள்ளும் போதும் சரி வாசிப்பு தன்னுடைய அரசியலைக் கொண்டிருக்கிறது. அதாவது வாசிப்பு என்பது தனிப்பட்ட நலனுக்காகவோ அல்லது மனித அறிவும் சிந்தனையும் தனிநபர்களின் பிரத்தியேகமான உரித்தாக இருப்பதில்லை, அது வரலாற்றின் கூட்டு உழைப்பாகும். எனவே மனித கூட்டு உழைப்பின் பிறிதொரு பகுதியாகவே ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்கையும் இணைந்து கொள்கின்றது. ஏனெனில் இலக்கியம் அடிப்படையான அரசியல் மயப்படுத்தும் கருவி. சிந்தனையை, ஞாபகங்களை தொகுத்து தர்க்கத்திற்கு உட்படுத்தி ‘உண்மைகள்’ பற்றிய உலகக் கண்ணோட்டங்களின் வரலாற்றுப்பகுதிகளை கட்டிச்செல்கிறது. அது மனிதர்களின் சிந்திக்கும் பகுதியான மொழியினைக்கொண்டு ஞாபகம், அறிவு, கண்டடைவு, சிந்திப்பு , அழகுணர்வு என்பவற்றோடு இயங்குகின்றது.

அல்பர்டோ மங்குல் வாசிப்பின் வரலாறு என்ற நூலில், ‘வரலாறு முழுவதும் வந்து சென்ற சர்வாதிகாரிகள், இலக்கிய பரிச்சயமற்ற சமூகங்களை அதிகாரம் செலுத்துவதும் அடிமைப்படுத்துவதும் இலகுவானது என்பதனை அறிந்திருந்தனர்’ என்கிறார். மொத்த ஐரோப்பாவையும் பேய் பிடித்தது போல உலுக்கிய சர்வாதிகாரி நெப்போலியன் அரசனானதும் தன்னுடைய நாட்டில் வரலாறு, இலக்கியம், கலைகளை சாதாரண மக்கள் அறிந்துகொள்வதைத் தடை செய்தான். வாசிப்பின் தெரிவை மட்டுப்படுத்தினான். ஹிட்லர் போன்றோரும் இதையே செய்தார்கள். அவர்கள் இலக்கியத்திற்கும் வாசிப்பிற்கும் அஞ்சினார்கள் ஏனெனில் மனித விடுதலையை நோக்கிய மாபெரும் புரட்சிகளுக்கும் புரட்சியாளர்களும் அடிப்படையில் வாசகர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ள விரும்பினர். ஆகவே மானுட விடுதலையை சாதிக்க தக்க, கூட்டு உழைப்பை தனிநபர்கள் தங்கள் சொந்த வாழ்க்கைக்காக மட்டும் வைத்துக்கொள்ளும் கருவியாக சுருக்கி விட முடியாது. இலங்கை, இந்தியா போன்ற கீழைத்தேசங்களில் இன்றும் இனவாதம், சாதியம் போன்றவற்றிற்கு எதிராக கருத்தியல் – செயல்வாதங்களின் பின்னால் இயங்க கூடிய இலக்கியச் செயற்பாடுகள் முக்கியமானவை. அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசர் என்று வாசிப்பை தங்களின் அரசியல் கருத்துருவாக்கச் செயலின் அடிப்படையாக உருவாக்கிக் கொண்டவர்களை நாம் இதற்கு உதாரணப்படுத்தமுடியும்.

எழுத்து

படைப்பாளர், எழுத்தாளர் போன்ற சொற்களில் இதுவரைகாலமும் இருந்து வந்த உன்னதப்படுத்தல்கள் சமூக ஆபத்து மிகுந்தவை. இலக்கியத்தையும், எழுதும் வகையையும் அறிந்திருப்பதை ஓர் அதிமனித , அல்லது மனிதர்களுக்கு மேற்பட்டதாகக் கருதும் தனிநபர் வாதங்களைக் கொண்டவர்களாக தம்மைப் பாவித்துக்கொண்ட , கொள்கின்ற நபர்கள் சமூகத்தின் கூட்டு உழைப்பிலிருந்து தம்மைப் பிரித்துக்கொள்கின்றார்கள். அவர்கள் சமத்துவத்தை விரும்புவதில்லை. அவர்கள் இரண்டு படிகள் முன்னால் ஏறியிருந்து கொண்டு சாமானியர்கள் என்று மற்றவர்களை விழித்துக்கொண்டு அவர்களிடம் பேசத்தொடங்குகின்றார்கள். தரப்பட்ட அறிவு தங்களின் சொந்த உழைப்பினால் மட்டும் அடைந்ததாக நினைத்துக்கொள்வது ஓர் புரட்டாகும். ஆகவே எழுத்தும் ஓர் கலைவடிவமாக இருப்பதுடன் சமூகத்துடன் புரிந்த கருத்தியல் – செயல்வாத இடைவினைகளினாலேயே மேம்பட்டுச்செல்கின்றது என்பது அடிப்படையாகும். எழுத்தை சமூகத்தினுடைய நல்வாழ்க்கையை பற்றிய செயல்வாதமாக கருத வேண்டும். கதையும் கவிதையும் அதனளவில் எவ்வளவு அழகாக இருக்கின்றது என்பதை விடவும் அவை தமக்குள் புரிதலுடன் கூடிய புதிய விடயமொன்றை கண்டடைந்திருக்கின்றன என்பதே முக்கியமானது. அடிப்படை விடயங்கள் தொடர்பில் அவை கொண்டுள்ள சமூக அதிகாரங்கள் பற்றி அரசியல் மயப்படாமல் சொல்லை அழகுபடுத்துவதன் மூலம் ஆக்கப்பட்ட நல்ல இலக்கியம் என்ற ஒன்று கிடையாது.

பதிப்பு

பதிப்பித்தல் என்பது வரலாற்று நெடுகிலும் வெறுமனே தாள், மை, அச்சு கட்டுதல், வினியோகித்தல் என்ற தொழில்நுட்பம் சார்ந்த செயற்பாடாக இருக்கவில்லை. எழுத்து, வாசிப்பு இரண்டினதும் செயல் மற்றும் விளைவினுடைய கருத்தியல் நடைமுறையில் பதிப்பாளர்கள் முக்கிய இடம் எடுக்கின்றனர். புத்தகங்கள், சஞ்சிகைகள் என்று வெளியிடப்படும் நல்ல பிரதிகளில் ஓர் நல்ல பதிப்பாளரின் பணி என்பது முக்கியமானது. ஒரு சமூகம் ஆரோக்கியமான இலக்கியச்சூழலை கொண்டிருக்கின்றது என்றால் அச்சமூகத்தின் பதிப்புச்சூழல் ஓர் ஆரோக்கியமான வரலாற்றைக் கொண்டிருக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். தமிழ்ச் சூழலின் பதிப்பு துறை ஈழத்தில் இருந்தே தன்னுடைய கருத்தியல், செயல்வாத போக்குகளை உருவாக்கி வளர்த்தது. ஆனால் போர்காலமும் நவீன தாராளவாத வாழ்வியலும் வாசிப்பு, எழுத்து, இரண்டையையும் போலவே நல்ல பதிப்பின் இயல்புகளை அரிதாக்கியது. இந்தியச்சூழலுடன் ஒப்பிடும் போது பதிப்புக்குரிய பொருளாதாரச் செலவு அதிகரித்து சந்தைக் கேள்வி குறைந்து சென்றது. அதனால் தொழில் முறையான பதிப்பாளர்கள் குறைந்து சென்றனர். இதழ்கள் வருவது குறைந்தது, நின்றுபோனது. ஈழத்திலும் புலம்பெயர்விலும் உள்ள எழுத்தாளர்கள் ஈழப்பிரச்சினையை தமிழ்நாட்டில் எழுதி விற்க கூடிய சந்தைகளையும் பதிப்பாளர்களையும் தேடிச்சென்றனர். ஈழத்து இலக்கியம் பேசக்கூடிய அரசியலையோ வாழ்க்கையையோ ஆயிரத்துக்கும் குறைவான ஈழ வாசகர்களே வாசிக்கின்றனர். ஈழத்தமிழ்ச்சூழலில் பதிப்பாளர்கள் அரசியல் மயப்படுவதும் ஒன்றாக இணைந்து இச்சூழலுக்கு முகம் கொடுக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. பதிப்பாளர்கள் தங்களை அமைப்பாக மாற்ற வேண்டும். பதிப்பை செயல்வாதமாக நல்ல விடயங்களை கொண்டு சேர்க்கும் அதே நேரம் வாழ்க்கைச் செலவையும் சமாளிக்கும் சந்தையை கட்ட வேண்டும். ஈழத்துச்சூழலில் எழுத்து, வாசிப்பு, பதிப்பு இவை மூன்றும் சிக்கலான தொடர்புகளுடனும் விடுபடல்களுடனும் இருப்பது அவை இன்னும் அமைப்பாக மாறாமலும், கூட்டு உழைப்புடன் கூடிய அரசியல் மயப்பாட்டை எட்டாமலும் இருப்பதனாலாகும். எழுத்து, வாசிப்பு சூழலை விடவும் அரசியல் மயப்படவும் அமைப்பாகச் சிந்திக்கவும் வேண்டிய தேவை பதிப்புத்துறைக்கே இப்பொழுது அதிகமாக உள்ளது.

-யதார்த்தன்
(எங்கட புத்தகங்கள் இதழில் பிரசுரமான குறிப்பு)

Related posts

தேர்ந்தெடுக்கப்பட்ட அநீதி

vithai

தாய்மையை ஏன் பால் நீக்கம் செய்ய வேண்டும்?

vithai

செயற்பாட்டுத்தளங்களில் நிகழக்கூடிய பாலியல் சுரண்டல்கள் குறித்த நிலைப்பாடு

vithai

குழந்தைகள் சாதியத்தை எவ்வாறு அறிகிறார்கள் ?

vithai

புற்றுநோய் மருத்துவம்

vithai

கோயிலில் சாதியும் எதிர்ப்பின் குரல்களும்

vithai

Leave a Comment