விதை குழுமம் உருப்பெறுகின்ற சமகாலத்தில் நிலவிய கலை இலக்கியமும், சமூக அரசியல் செயற்பாடுகளும் நேரடித் தொடர்பற்றனவாக இருந்ததையும் சமூக அரசியல் புரிதல்களின் வழி செயல்வாதமாக முன்னெடுப்பதில் பெரும்பான்மையினருக்கு இருந்த தயக்கத்தையும் கருத்திற்கொண்டு அதிலிருந்து விலத்தி சிந்தனைக்கும் செயற்பாட்டிற்குமான ஒரு கூட்டிணைவாக விதை குழுமம் ஆரம்பிக்கப்பட்டது.
சமூகம் நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது அந்த நெருக்கடிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்ற பரிந்துரைகளை அறிவார்ந்த சமூகம் வழங்குவதும் தான் கொண்டியங்குகின்ற அறிவுமுறைகளுக்கு ஏற்ப சமூகம் அதனை உள்வாங்கும், நிராகரிக்கும் அல்லது தனக்கேயுரிய வடிவங்களை உற்பத்தி செய்யும் வழக்கமே நடைமுறையில் உள்ளது. கருத்தியல்களின் அடிப்படையில் அறிவார்ந்த சமூகம் வழங்குகின்ற பரிந்துரைகளையும் நடைமுறையையும் இணைப்பதில் இருக்கின்ற சவாலே இங்கு இனங்காணப்படுகின்றது.கருத்தியலையும் நடைமுறையையும் கவனத்திற்கொண்ட செயற்பாடே நீண்டகால அடிப்படையில் பயனளிக்கக்கூடியது.
இந்தப் பின்னணியில் ஆரம்பிக்கப்பட்ட விதை குழுமம், அதன் முதலாவது செயற்பாடாக சுன்னாகம் நிலத்தடி நீரில் கலந்த மாசு தொடர்பிலான போராட்டத்தில் தன்னாலியன்ற பணிகளை ஆற்றியது.இந்தப்போராட்டத்தில் விதைகுழுமம் வலியதான அனுபவங்களைப் பெற்றுக்கொண்டது.விதை குழுமம் ஒருங்கிணைத்த போராட்டத்தின் பகுதியாக நல்லூர்க் கந்தசாமி கோயில் முன்றலில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைப்பின் சார்பில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்த முறை பொதுவெளியில் கடும் எதிர்வினைகளைத் தோற்றுவித்தது. குறிப்பாக தமிழ் அரசியல் தரப்பிடம் அல்லாமல் சிங்கள ஆளுனர் ஒருவரின் வாய்மொழி வாக்குறுதியுடன் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது என்பது. குறித்த விமர்சனங்கள் பற்றி உரையாடும் பொதுவெளிக் கலந்துரையாடல் அதன் பின்னர் இடம்பெற்றது. அமைப்பு ரீதியிலான ஆரம்பகட்ட அறிவுடன் இயங்கிய குழுவிற்கு, முதலாவது செயற்பாடு பிரமாண்டமாகவும் பல்வேறு தரப்பினரை இணைத்துச் செய்யவேண்டியதுமாக இருந்தது. இப்பாரிய பொறுப்பைக் கையாளமுடியாமல் அமைப்பு பல நெருக்கடிகளை எதிர்கொண்டதுடன் மிகக் கடுமையான எதிர்வினைகளினது அழுத்தங்களினதும் காரணமாக அதன் இயக்கம் சற்றுத் தடைப்பட்டது.
அந்த அனுபவங்களின் துணைகொண்டு விதை குழுமம் பின்வரும் செயற்பாடுகளை முன்னெடுத்தது
இங்குள்ள இனமுரண்பாட்டைக் கற்பதற்கும் பிரதான முரண்பாடுகளை அடையாளம் காணவும் “இலங்கை இனமுரண்பாட்டை விளங்கிக் கொள்ளல்” என்ற கற்கை வட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதர கலை இலக்கியச் செயற்பாடுகளுடனும் சமூகம் சார் இயங்குதல்களுடனும் தொடர்ந்து பயணித்தது.
மின்னஞ்சல் – tovithaikulumam@gmail.comமுக
நூல் பக்கம் -https://www.facebook.com/ourwings13