vithaikulumam.com
ஒளிப்படம் கட்டுரைகள் செயற்பாடுகள்

இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம் ?

ஒருவகையில் பார்த்தால் இந்த மாதிரியான பிரச்சினைகள் நமக்குத் தேவைதான். ஆம்; நாம் அப்படிப்பட்டவர்கள் தான்; நமது சூழல் தொடர்பில் எவ்வித அக்கறையுமற்ற சமூகம் தான். சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைதல் பிரச்சினை தற்போது ஒரு தீவிர தளத்திற்குச் செல்வது போல் உள்ளது. அதற்குரிய தரவுகளை உரிய மட்டங்கள் வழங்கிவருகின்றன. இந்நிலையில் சில கேள்விகளை நாம் எல்லோரும் சேர்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது. அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்துகிறேன்.

சூழல் தொடர்பான நமது அக்கறை என்பது என்ன?
நாம் இன்னமும் பொலிதீன்களை எங்கும் வீசிக்கொண்டு திரிபவர்கள்; குப்பைகளை வீதியில் யாரும் பார்ப்பதற்கு முன் எறிந்து விட்டு பின்னர் வீதி நாறுகிறது என்று அடுத்தவர்களைத் திட்டுபவர்கள்; வீதியெங்கும் எச்சில் துப்புபவர்கள்; இப்படியாக ஒரு நீண்ட பட்டியலையே உருவாக்கலாம். ஆனால் என்ன பயன்? இதைப் படித்துவிட்டு தங்களை யார் மாற்றிக் கொள்வார்கள்?

நமது சமூகம் எப்படிப்பட்டது?
காக்கைதீவு போன்ற நகர எல்லையில் அமைந்துள்ள பிரதேசங்களில் குப்பைமலைகளின் நடுவில் இன்னமும் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. நாங்களும் குப்பைகளுக்கு பக்கத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். அந்த மக்கள் ஏன் போராடவில்லை? அந்த மக்களுக்காக ஏன் யாரும் போராடவில்லை? இப்போது எழுந்திருக்கும் குரலாது எந்த வர்க்கத்தின் குரலாக இருக்கின்றது? பார்க்கப் போனால் இயலக் கூடியவர்களின் குரலே சமூகத்தில் எதிரொலிகளை ஏற்படுத்துகிறது.

நமது கடந்த காலம் எதையெல்லாம் கையளித்திருக்கிறது?
கீரிமலையை அண்டிய பிரதேசங்களில் கடந்த காலங்களில் முறையற்ற மண் அகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. அது கூட இந்த நீர்ப்பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம். ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பிலிருந்து சூறாவளி தோன்ற முடியும் என்கிறது கேயாஸ் என்கிற தியரி. அப்படி இருக்க, நிலத்தைச் சுரண்டி வாழ்ந்தவர்களாகிய நாம் தான் இதற்குப் பொறுப்பாளிகள். இப்பொழுதும் கூட கழிவு எண்ணெய் புகுந்தவர்கள் போராடக் காரணம் பொதுநோக்கம் என்பதெல்லாம் கிடையாது; அவர்கள் தங்கள் சுயதேவைகளுக்காகவே திரளுகிறார்கள்.
ஆனால் இது ஒட்டுமொத்தமாக முழுநாட்டிற்குமே ஒரு முக்கியமான எச்சரிக்கை! இயற்கை என்ற அமைப்பை எவ்வளவு கலைக்கிறோமோ அவ்வளவுக்கு அது ஆபத்தனாதாக மாறிவிடும். எமக்கு சூழல் தொடர்பில் சுரணை வருவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இதைக் கருதிக் கொள்ளலாம். நமது நிலம், நீர், காற்று எல்லாவற்றிலும் நமது அக்கறை மேம்படவேண்டும். எல்லாவற்றிலும் முடிந்தவரை அக்கறை செலுத்த முயற்சிப்போம். விடுபட்ட குறைகளை நிவர்த்திக்க ஒன்றிணைத்து செயற்படுவோம்.
இந்த மாதிரியொரு நிலை முன்னொருபோதும் ஏற்பட்டதுமில்லை, நாம் இது போன்ற ஒரு நிகழ்விற்கு ஆயத்தமாயிருக்கவுமில்லை. நமது சிந்தனைக் குழாம்களோ சூழலியல் தொடர்பிலோ பண்பாட்டு அரசியல் தொடர்பிலோ பெரிதாக அக்கறை செலுத்துவதுமில்லை. அந்தக் குறையையும் நாம் கருத்திற் கொள்ளவேண்டும். பல்வேறு மட்டங்களிலும் தளங்களிலும் செயற்படும், சிந்திக்கும் நபர்கள் இணைந்து கருத்தியற் பரிமாற்றங்களைச் செய்வதன் மூலம் ஆரோக்கியமான ஒரு எதிர்காலத்தை நமது சந்ததிக்கு இந்த நிலத்தில் விட்டுச்செல்லலாம். அதுவே நாம் செய்யக் கூடியதும் செய்ய வேண்டியதும்.

கிரிசாந்
(2015)

Related posts

அண்மைக்கால புலம்பெயர் நாவல்களின் பொதுப் போக்குகள் மற்றும் சில அவதானங்கள் –

vithai

அகமண முறையும் சாதியை அழித்தொழித்தலும்

vithai

தொன்ம யாத்திரை – 6 இற்கான அழைப்பு

vithai

பாராளுமன்ற தேர்தல் நிலவரங்கள் தொடர்பான உரையாடல்

vithai

காட்டுப்புலம் ஒரு சமூக உரையாடல்- 4

vithai

இன்னும் எவரெவர் கால்களில் விழ வேண்டுமோ?

vithai

Leave a Comment