vithaikulumam.com
கட்டுரைகள்

எந்தச் சாமிகளின் பக்கம் நிற்கப் போகிறோம்?

யாழ்ப்பாணத்தின் சிறுதெய்வ வழிபாட்டுமுறையில் நிலவிவந்த ‘ பலியிடும் ‘ வழக்கத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பலியிடும் வழக்கம் தொடர்பாகவும், அதன் வரலாற்றுப் பின்புலங்கள், சமூக நம்பிக்கைகள் பற்றியும், மேலும் இந்த எதிர்ப்பின் பின்னாலுள்ள நியாயங்களையும் அரசியலையும் பற்றி விவாதிக்கும் பத்தியே இது .

நிறுவனச் சமயம் (பெருந் தெய்வங்கள்)

இயற்கைச் சக்திகளின் ஆற்றலைப் புரிந்துகொள்ள இயலாத நிலையிலும் ஆவிகளைக் குறித்த அச்ச உணர்வின் அடிப்படையிலும் குலக்குறி குறித்த நம்பிக்கையின் அடிப்படையிலும் உருவான தொல் சமயமானது சற்று விலகி சில விதி முறைகளையும் இறையியற் கோட்பாடுகளையும் புனித நூல்களையும் வரையறுக்கப்பட்ட வழிபாட்டு முறைகளையும், நிரந்தரமான கட்டடங்களையும் கொண்ட ஒரு நிறுவனமாக காலப்போக்கில் உருப்பெற்றது. இது நிறுவனச் சமயம் என்று அழைக்கப்படுகின்றது. இறுக்கமான விதி முறைகளையும் சமயத் தலைவர்களையும் கொண்ட நிறுவனச்சமயம் தொன்மைச் சமயத்தின் சில கூறுகளை உள்வாங்கிக் கொண்டது. அதே நேரத்தில் தொன்மைச் சமயத்தின் அடிப்படை இயல்புகளிலிருந்து விலகி நிற்பது.

நாட்டார் சமயம் (சிறு தெய்வங்கள்)

தொன்மைச் சமயத்தின் முக்கிய கூறுகளை உள்ளடக்கிக் கொண்டு பெருவாரியான பொதுமக்களால் பின்பற்றப்படும் சமயம் நாட்டார் சமயம் ஆகும். ஆவிகள் குறித்த நம்பிக்கை, மூதாதையர் வழிபாடு, குலக்குறி வழிபாடு போன்றவற்றின் தாக்கம் நாட்டார் சமயத்தில் மிகுந்திருக்கும். நிறுவன சமயங்களைப் பின்பற்றுபவர்களிடம் கூட நாட்டார் சமயத்தின் தாக்கம் காணப்படும்.

(கோபுரத் தற்கொலைகள் – ஆ . சிவசுப்பிரமணியம்)

இந்த இரண்டு விளக்கத்திற்கும் இடையில் ஆதிக்க மனோநிலை கொண்ட சமூகக் குழுக்களின் தெய்வங்களாக பெருந்தெய்வங்களான சிவன், விஷ்ணு, அம்மன், முருகன், பிள்ளையார் போன்றோர் உருவானமையும் அதையொட்டிய சமய ‘மேன் நிலையாக்கம்’ பற்றிய கருத்துநிலை வலுவடைந்தமையையும் தமிழ்ச் சமூக பண்பாட்டு நகர்வில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதன்மூலம் ‘தூய்மைவாதம்‘, ‘ புனிதப் படுத்தல்’ போன்றன நிகழும்.

அதனூடான சமூக அதிகாரக் கட்டமைப்பில் குறித்த பெருந்தெய்வங்களின் பக்தர்கள் மேனிலை பெறுவர். உதாரணம் – முருகனின் வேலைத் தாங்கியபடியும், கிரீடங்கள் சூடியபடியும் உள்ள அரசியல் தலைவர்களை தமிழ்ச் சமூகம் வழிபாட்டு மனநிலையுடன் அணுகுதல்.

இதற்கு மாறாக வைரவரையும் நரசிங்கரையும் காளிகளையும் தமது காவல் தெய்வங்களாகவும் குலதெய்வங்களுமாகக் கொண்ட சமூகக்குழுக்கள் அதிகார மட்டத்தில் கீழ்நிலையிலும் அதிகாரத்தில் உள்ள சமூகக் குழுக்களின் பார்வையில் ‘தீண்டப்படாதவர்களாகவும்’, ‘காட்டு மிராண்டிகளாகவும்’ உள்ளமை தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு மற்றும் வரலாறு தொடர்பான அறிதல் பற்றியுள்ள குறைபாடுகளாகும்.

2

‘வேள்வி – பலியிடல்‘ கருகம்பனை கவுனாவத்தை நரசிங்க வைரவரை முன் வைத்து…

இந்த வழிபாட்டிடம் பண்டத்தரிப்பில் உள்ளது. ஒதுக்குப்புறமான பெரிய வளவில் பெருத்த ஓர் ஆலமரத்தின் முன்னால் அமைந்துள்ளது. வைகாசி விசாகத்திற்கு அடுத்த சனிக்கிழமை இங்கே வேள்விப் பொங்கல் திருவிழா இடம்பெறும். ஆடுகளை வெட்டி பலியிடும் வழக்கம் 300 வருடத்திற்கு மேலாக இங்கே இருப்பதாக கோயிலின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். கோயிலின் முன்னே உள்ள அந்த ஆலமரத்தின் கீழேதான் வைரவர் சூலம் இருந்தது. பின்னர் இப்பொழுதுள்ள கோயில் வடிவமைக்கப்பட்டது. இங்கே பூசாரிகள்,’ வீரசைவர்கள்‘. கோயில் அமைந்திருக்கும் இடம் அந்திரானை மற்றும் கருகம்பனையின் பிரிப்பில் உள்ள ஒரு எல்லை என்று ஊரவர்கள் சொல்கிறார்கள்.

* வன்னியிலிருந்து கோழிச் சாவலுடன் வந்து வேள்வி விழாச் செய்ய வைரவர் கனவில் சொன்னதாகவும் அதனைச் செய்யாமல் மனிதர் தவிர்த்து வந்ததும் பின்னர் பிள்ளைகளை அது காவெடுக்கத் தொடங்கியதாகவும் அதன் பின்னரே இத் திருவிழா ஆரம்பிக்கப்பட்டதாகவும் ஒரு வாய்வழிக் கதை உள்ளது.

இந்த கோயில் சார்ந்த சுற்றாடலில் உள்ள மக்களை இந்தக் கட்டுரையின் பொருட்டு சந்திக்கச் சென்றிருந்தோம்.

அதன்போது மக்களின் மனதில் இந்த வழக்கும் அதன் தீர்ப்பும் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஜனநாயக பூர்வமாக தங்களின் கருத்துக்களும் இதன் பொருட்டு கேட்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அவர்களின் வாதம். மேலும் தமது வழிபாட்டிடத்தை ‘இறைச்சிக் கடை‘ என நீதிமன்றம் விழித்தமையும் தங்களை புண்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர்.

“இறைச்சிக்கடை ” – சொல்லாடலும் பண்பாட்டு வரலாற்றின் புரிதலும்

முன்னூறு வருடங்களுக்கு மேற்பட்டதாக சொல்லப்படும் ஒரு பண்பாட்டு நடவடிக்கை ”தொட்டுணர முடியாத மரபுரிமை” எனும் மரபுரிமை பிரிப்பின் கீழ் வரக் கூடியது. சமூகக் குழுக்களில் உள்ள சில பரம்பரைகளின் வழிபாட்டு முறையையும் அவர்களின் முன்னோர்களின் செயற்பாட்டையும் “இறைச்சிக் கடை” நடத்துபவர்களாக சித்தரிப்பது அல்லது வர்ணிப்பது சரியானதாகுமா?

ஆடு வளர்ப்பில் சாதாரணமாக உள்ள நிலைமைகளிலும் பார்க்க வேள்விக்கென தயாராக்கப்படும் போது அதில் மேற்கொள்ளப்படும் சிரத்தையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .

” கைத்தீன்” வழங்கல் – ஆட்டின் வளர்ப்பு முறையில் ஆட்டிற்கு உணவூட்டும் முறையை இவ்வாறு அழைப்பர். இது கோயில் சார்ந்த அல்லது சாமி சார்ந்த நம்பிக்கையில் வேர் கொண்டுள்ளது. தமது சாமிகளுக்குப் படைக்கும் படையல் என்ற மனநிலையை வைத்தே அவர்களின் இச்செயற்பாடு நிகழ்கிறது.

மேலும் கிராமியப் பொருளாதாரம் சார்ந்த ஒரு சூழலும் இங்கே கவனிப்பிற்கு உரியது. இந்த ஆடுவளர்க்கும் முறையில் உள்ள கொழுத்த சத்துள்ள ஆடுகள் இனச் சேர்கையில் ஈடுபடும்போது ஆரோக்கியமான, வளமான குட்டிகள் கொண்ட ஆட்டுப் பரம்பரையை உருவாக்கும். வேள்வியில் பலியிடும் ஆடுகள் பரிசோதனைக்கு உட்படுத்தியே பலியிடப்படுகின்றன. ஆகவே மருத்துவரீதியிலும் குறைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

அரசியல் மற்றும் விவாதங்கள்

நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்கு என்பதால் வழக்காடிகள் தொடர்பில் அல்லாமல், பொதுவாக தமிழகம் மற்றும் இலங்கைச் சூழலில் உள்ள மதத் தூய்மைவாத அமைப்புக்களின் நடவடிக்கைகள் சிறுதெய்வ வழிபாடுகளை எப்படி கையாளுகின்றன என்பது பற்றிப் பார்ப்போம் .

நிறுவனமயப்பட்ட சமயங்களில் ஆகம விதிமீறல் உள்ளது.

உதாரணத்திற்கு ஒன்று மட்டும், “பூசகர் ஊதியம் பெறுவது கூடாது, அதனால் தேவலோகத்து தோஷம் வரும், ஆலயத்தின் புனிதம் கெடும் என்று ஆகமங்கள் விதித்திருக்க (காரணாகமம், பூர்வபாகம், புண்ணியாபிஷேக விதிப்படலம் , பக் 309 ) பெரும்பான்மையான பெருங்கோயில்களில் பூசை செய்பவர் சம்பளம் பெறுகிறார். அவை பெரிதாக கண்டு கொள்ளப்படுவதில்லை.

குறித்த சுற்றாடலில் வாழும் மக்களில் யாரும் இது தொடர்பில் தம் சுகாதாரம் கெடுவதாகவும் நிம்மதி கெடுவதாகவும் முறைப்பாடுகள் தெரிவித்திருந்தால் அவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால், பொதுவாக இந்த வழிபாட்டு முறையுடன் தொடர்புபடாத ஒருவர் இதைப் பற்றி பேசினால், அதாவது இதன் மூலம் என் மனம் புண்படுகிறது என்றால், நாங்கள் இப்படிக் கேள்வி கேட்டுப் பார்க்கலாம்;
“அலகு குத்துதல், தூக்குக் காவடி, தீ மிதித்தல் ” போன்றவை மனதை துன்புறுத்தாதா?

நேர்த்திகளை வெளிப்படுத்தவும் ஆற்றவும் மதங்களில் பல வழிகள் உண்டு. சில வகையான முறைகள் மனித அறிதலின் மேம்பாட்டில் காலப்போக்கில் மாற வேண்டும் என்றால் அவை தானாகவே இயல்பில் மாற்றமடையும். சமூகக் குழுக்களின் புரிதல் மாறுபட வழிமுறைகளும் மாறும். அதை தடை செய்வதென்பது, ஒடுக்குதல் போல் இருக்கக் கூடாது.

இந்த நிலையில் இணையத்தளங்களில் மற்றும் சமூகவலைத் தளங்களில் இதற்கான உரையாடலை நிகழ்த்துபவர்களின் கருத்துக்கள் பெரும்பாலும் “இந்தக் காட்டுமிராண்டித்தனம் ஒழிய வேண்டும்”. ”மதம் நாகரீகமடைய வேண்டும்” என்பது தான்.

சரி, எது காட்டு மிராண்டித் தனம் என்பதன் மட்டுப்பாடுகள் என்ன? அதை யார் உருவாக்குவது? யாரின் பெயரால் உருவாக்குவது? போன்ற கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலை நாம் உரையாடலாம்.

நானும் உயிர்களைக் கொல்வதற்கு எதிரானவன் தான். ஆனால் நான் அசைவ உணவை உண்ணக் கூடியவன். என்னை நோக்கி ”நீ ஒரு காட்டு மிராண்டி இன்னமும் அசைவம் சாபிடுகிறாய்? நாங்கள் எவ்வளவு நாகரீகம் அடைந்து விட்டோம்? ” என்று கேட்பது போல் உள்ளது இவர்களின் குரல்.

இவர்களின் பலியெதிர்ப்பு உண்மையான அக்கறையாக இருக்குமா என்பதும் சந்தேகம் தான். அவ்வளவு காருண்யம் கொண்டவர்கள் கோயிலில் வெட்டுவததைத் தான் தடுக்க நினைக்கிறார்கள். இறைச்சிக் கடைகளில் அல்ல!

தமிழ்நாட்டில் ஒரு தடைச் சட்டம் வந்த போது, ஆ.சிவசுப்பிரமணியம் எழுதிய கட்டுரை ஒன்றின் வரிகளை பார்க்கலாம்.

“மனித மாண்புகளைச் சிதைக்கும் மனித உரிமைகளைப் பறிக்கும் சடங்குகளை மரபு என்ற பெயரால் அல்லது மண்ணின் பாரம்பரியம் என்ற பெயரால் ஆதரிக்க முடியாது. இதனால்த் தான் உடன்கட்டை ஏறலும் குழந்தை மணமும் தீண்டாமையும் சட்டத்தின் வாயிலாகத் தடை செய்யப்பட்டன. இத்தடையை மரபு என்ற பெயரால் சனாதினிகள் மீறாது பார்த்துக் கொள்வது மனிதநேயச் சிந்தனையாளர்களின் கடமை. அதே நேரத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு என்ற பெயரால் மக்களின் பாரம்பரிய உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் ஓர் ஆணையின் மூலம் பறிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.”

ஆகவே பெருந் தெய்வங்களுக்கும் சிறு தெய்வங்களுக்கும் இடையில் நடக்கும் இந்த வழிபாட்டு முறைச் சிக்கலில், இப்பொழுது நாம் எந்தச் சாமிகளின் பக்கம் நிற்கப் போகிறோம்?
அதற்கொரு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பதில் ஒன்றும் ஒவ்வொருவரிடமும் உண்டு.

கிரிஷாந்த்

உசாத்துணை நூல்கள்:

பண்பாட்டு மானிடவியல் – பக்தவச்சல பாரதி
கோபுரத் தற்கொலைகள் – ஆ .சிவசுப்பிரமணியம்
பின்நவீனத்துவ நிலை – அ . மார்க்ஸ்
மாயையும் யதார்த்தமும் -டி .டி .கோசாம்பி

Related posts

அரசியலற்ற கலையை வணங்குதல் : கட்டட மரபுரிமைகளும் ஒடுக்குதல் வடிவங்களும்

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி 07 – நவாலியூர் தாமா

vithai

ஆகாயத்தில் ஒரு வாக்கு

vithai

”கடவுள் இருக்கான் குமாரு – மோட்டார் –சைக்கிள் குறிப்புக்கள் 02

vithai

நீர் என்பதும் ஒரு உயிர் வார்த்தை -மோட்டார் சைக்கிள் குறிப்புகள் – 3

vithai

ஆசிரியர் தினம் – யாழ்ப்பாண புதிய நடுத்தர வர்க்க சிந்தனைகளின் எழுச்சியும் வித்தியாசங்களை விளங்கி கொள்ளுதலின் முரண்பாடும்

vithai

Leave a Comment