vithaikulumam.com
கட்டுரைகள் செயற்பாடுகள்

போராடுவது என்றால் என்ன?

(இந்தக் கட்டுரை கோப்பாபிலவில் உள்ள மக்களுக்கும் இன்னும் இன்னும் ஆயிரம் பிரச்சினைகளுடன் இருக்கும் சமூகத்துக்குமாக)

நமக்கு இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க ஆச்சரியமாயிருக்கிறது. அடுத்தடுத்து ஜனநாயக வழிப் போராட்டங்கள் ஊக்குவிக்கப்பட்டோ அல்லது தன்னெழுச்சியாகவோ உருவாகியோ நீண்ட நாட்களிற்குப் பின்னர் சமூக உரையாடல் ஒன்றை வயது வேறுபாடின்றி மெய்வாழ்க்கையிலும் இணையவெளியிலும் உருவாக்கி விட்டிருக்கிறது. எனது கடந்த ஏழுவருட அவதானிப்பில் இவ்வளவு வைரலாக இந்த விடயங்கள் உரையாடப்பட்டதில்லை, புதிய தலைமுறையின் நேர்மையையும் சமூக அக்கறையையும் சீண்டியதில்லை. இது ஒரு தொடக்கம்.

இதனை நாம் விளங்கிக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்வதென்பது சிக்கலான ஒரு விடயம். நேற்றுவரை மீம்ஸ் போட்டுக் கொண்டிருந்தவர்களும் நயன்தாராவுக்குக் கல்யாணம் நடக்குமா நடக்காதா என்று தலையிலடித்துக் கொண்டிருந்தவர்களும், காணாமல் ஆக்கப்பட்டோருக்குக் குரல் கொடுங்கள், இழந்த காணிகளினை மீளக் கொடுங்கள் என்று அரசியல்வாதிகள், அரசின் மேலான கோபத்தை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். அதனை வீதியில் இறங்கி வெளிப்படுத்தவும் தொடங்கிவிட்டனர். ஆனால் இந்த வளர்ச்சிகள் மேல் உருவாகக்கூடிய சந்தேகம் என்னவென்றால்,

இது நீடித்து நிலைக்குமா?
நிச்சயமாக ஆம். என்னுடைய கேள்வி என்னவென்றால் அதனை நீடித்து நிலைக்கச் செய்ய எமது பங்களிப்பு அல்லது உள்ளீடு என்பது என்ன? என்பது தான்.

ஏனென்றால் இந்த வகையான போராட்டங்களுக்கு அதிகம் பேர் வருவதோ அதனை தொடர்ந்து உரையாடுவது மட்டும் முக்கியமல்ல. இங்குள்ள பிரச்சினை இந்த பல்வேறு பட்ட பிரச்சினைகளின் மூலவேர் எது? அதனைத் தீர்ப்பதற்கு நமது தலைமுறையிடமுள்ள அறிவும் அனுபவமும் என்ன? அதனை நாம் எப்படி பெற்றுக்கொள்வது, வளர்த்துக் கொள்வது, உபயோகிப்பது?

பிரதான கேள்வி – அரசியலற்ற அரசியல் செய்யும் நமது தலைமுறை தனது சக்தியை ஒரு பலம் வாய்ந்த அழுத்தக் குழுவுக்குரிய அரசியல் சக்தியாக எப்படி மாற்றப் போகிறது என்பதே.

கடந்த மூன்று வருடங்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை நான் கடுமையாக விமர்சனம் செய்து வந்திருக்கிறேன். இப்பொழுது நான் செய்த விமர்சனங்கள் சரி என்று நிரூபித்தும் விட்டேன். கடந்த ஆறு வருடத்தில் பல்கலைக்கழகத்தில் எந்த முக்கியமான அரசியல் பற்றிய உரையாடலும் தானாக உருவாகவில்லை. பல்கலைக்கழகம், “இது படிக்கும் இடம், இதில் அரசியலுக்கு இடமில்லை” எனும் மந்திரத்தை மாணவர்களுக்கு போதித்திருக்கிறது, அதனையே மாணவர்களும் பல இடங்களில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவோ உதாரணங்களை எடுத்துக் காட்டி விளக்கியிருக்கிறேன், இன்னும் பலரும் இவை தொடர்பில் எழுதியிருக்கிறார்கள், ஆனால் யாருக்கும் அக்கறையில்லை.

இன்று உருவாகியிருக்கும் முக்கியமான அழுத்த சக்தியாக “‘சமூக வலைத்தள இளைஞர்கள்” என்ற தொகுதி செயல்படுகிறது, இதனுடைய பலம் அதன் சுதந்திரமும் தலைமையற்ற ஒருங்கிணைவும். அதேநேரத்தில் நாம் அவதானிக்க வேண்டியது அதன் தளம் ஆதரவு என்ற அடிப்படையிலானதாகவே இப்பொழுது வரை இருக்கிறது. அது எதனையும் புதிதாக முன்னெடுக்கவில்லை அல்லது போராடவில்லை.

இங்கே நாம் வலிமை பெறச் செய்யக்கூடிய இன்னொரு அழுத்த சக்தி பல்கலைக் கழகம். அதற்கு மாணவர்கள் கொஞ்சமாவது பொறுப்புடன் செயல்பட வேண்டும். வவுனியா உண்ணாவிரதப் போராட்ட நேரத்தில் நான்காவது நாள் ஒரு ஐம்பது மாணவர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களது அக்கறை நல்லது. ஆனால் மாணவர், அரசியல்வாதிகள் வந்து சென்ற பின், ஊரில் உள்ள மக்களெல்லாம் வந்து சென்ற பின் இறுதியிலா வருவது? மாணவர்சக்தி மாபெரும் சக்தி என்பதெல்லாம் வெறும் கோஷம் தானா? முதல்நாளில் நின்றிருக்க வேண்டிய ஆட்கள் அல்லவா? இதற்கான வரலாற்றுப் பின்புலம், சட்ட நுணுக்கங்கள், ஊடகம், ஆவணம், விழிப்புணர்வு என்று தலையில் தூக்கிவைத்து நகர்த்தியிருக்க வேண்டியவர்கள் இவர்களே. இவர்களிடம் அத்தகையதொரு சமூக அங்கீகாரம் நம்பிக்கை என்பன இருக்கிறது.

ஆனால், மதியம் பன்னிரண்டு மணிக்கு வந்துவிட்டு மாலை நான்கு மணிக்குச் செல்வதா மாணவர் சக்தி? அமிர்தலிங்கத்திற்கு அடுத்தது சம்பந்தன் ஐயா தான் மேதை என்று சொல்வதா அரசியல் பேச்சு? மக்களுடன் உரையாடுவது எப்படி என்று தெரியவில்லை, மீடியாக்களுக்கு எப்படி விடயங்களை சொல்ல வேண்டுமென்று தெரியவில்லை.

இதையெல்லாம் பார்த்த பின், ”யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது?” என்கிற எனது முன்னைய கட்டுரையொன்றின் பகுதியை மீளப்பகிர்வதே பொருத்தமென்று கருதுகின்றேன்.

// ஏனென்றால் இந்த சமூகத்திற்கு அவ்வளவு தூரம் நீங்கள் முக்கியமானவர்கள்.. விலைமதிப்பற்றவர்கள். உங்கள் ஒவ்வொருவரையும் அவ்வளவு நம்புகிறது இந்தச் சமூகம். அவ்வளவு மதிக்கிறது. அதன் வெளிப்பாட்டைத் தான் கடந்த தினங்களில் நாம் பார்த்தோம்.

சரி, இப்படிப்பட்ட மதிப்பையும் நம்பிக்கையும் உங்கள் மீது கொண்டிருக்கும் சமூகத்திற்கு பல்கலைக்கழகம் யுத்தத்திற்குப் பின் செய்தது என்ன? அனர்த்த நிவாரணங்கள், சில பெரும் பிரச்சினைகளில் கவனயீர்ப்பு, கண்டனம்…

மலையகத் தொழிலாளர் தொடர்பில் செய்தது எல்லாம் தமிழ் சினிமாவில் இறுதிக் காட்சியில் வரும் பொலிஸ் போன்ற காட்சி. இவைதானா உங்களால் முடிந்தது. இதற்காகத் தானா சமூகம் உங்கள் மேல் இவ்வளவு நம்பிக்கையை வைத்திருக்கிறது. இல்லை. இல்லவே இல்லை.

நீங்கள் அவர்களை வழிநடத்த வேண்டியவர்கள். நீங்கள் அவர்களின் பிரச்சினைகளை ஆராயவேண்டியவர்கள். நீங்கள் அவர்களின் பொருட்டு யாரையும் எதிர்த்துப் போராட வேண்டியவர்கள், சுலக்சனைப் போல – அவர் தனது பல்கலைக்கழகத்தை எதிர்த்துத்தான் போராட்டத்திற்கு வந்தார்.

இதை நாம் எவ்வளவு தூரம் செய்கிறோம் என்பதை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள், அசைன்மென்ட் செய்வதற்கும், ராகிங் செய்வதற்கும், மற்ற எல்லாம் செய்வதற்கும் எமக்கிருக்கும் நேரம் நம்மை நம்பும் சமூகத்திற்காக செலவளிக்க இருக்கிறதா? சுலக்சனிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. தான் நம்புவதற்காக உண்மையில் களத்தில் நிற்பது. அப்படித் தான் அவர் பிரச்சாரம் செய்ததையும் வீதி நாடகங்கள் போட்டு மக்களை மகிழ்வித்ததையும் பல்வேறு போராட்டங்களில் பங்கு பற்றியதையும் பார்க்கிறேன்.

நாம் செய்யும் ஆய்வுகளில் எத்தனை சமூகத்திற்கு பயன்படுகின்றன. நம்மிடமிருக்கும் சட்டத்துறை எவ்வளவு தூரம் சட்டம் பற்றிய அறிவை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. நமது சமூகவியல் துறை? வரலாறுத் துறை?

எவ்வளவு தூரம் மக்களை அறிவு மயப்படுத்தியிருக்கிறோம்? எவ்வளவு நேரம் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக உரையாடியிருக்கிறோம்? அனைத்துப் பீட மாணவர்களும் (வெறும் வகுப்பு பிரதிநிதிகளோ, தலைவர்களோ மட்டுமல்ல) ஒன்றாக இருந்து பொதுப்பிரச்சினைகளை ஆராய்ந்து பொதுமுடிவுகளையும் பொதுவேலைத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியிருக்கிறோம்?

அதிகம் வேண்டாம். நாங்கள் படிக்கின்ற கல்வி முறையிலிருந்து பொருளாதாரம் வரை திட்டமிட்டு இனஒடுக்குதல் நடந்துகொண்டிருக்கின்றபோது எந்தத் திட்டமிடலும் எந்த முன்னாயத்தமுமின்றி வெறும் கோஷங்களால் இவற்றை எதிர்த்துவிட முடியும், மாற்றிவிட முடியும் என்று எதிர்பார்கிறீர்களா? இல்லவே இல்லை.

உதாரணத்திற்கு, இந்த வாள்வெட்டு கும்பலின் வருகை தொடர்பில் சமூகமட்ட ஆய்வு என்ன? இதற்கு அளிக்கப்பட்ட விசேட பொலிஸ் அதிகாரம் தொடர்பான சட்ட வரையறைகள் என்ன? இது தொடர்பில் நமது சமூகவியல் துறையினதோ சட்டத் துறையினதோ நிலைப்பாடுகள் என்ன? இதற்கு எதிர்வினையாற்ற வேண்டியது போலீசோ நீதிமன்றமோ மட்டுமல்ல; நீங்கள்தான். உங்களின் துறை சார்ந்து மக்கள் மட்டத்தில் நடைபெறும் மாற்றங்கள் என்ன?

ஏன் நம்முடைய போராட்டங்கள் பலவீனமானதாக தொடர்ச்சியற்றதாக இருக்கின்றன என்பதற்கு பல்கலைக்கழகம் மிகப் பெரிய பொறுப்பை எடுக்கவேண்டும். உதாரணம், சுன்னாகம் குடிநீர் பிரச்சினை தொடர்பாக எமது நிலைப்பாடுகள் தவறு என்றால் பல்கலைக் கழகம் அதற்கு எதிர்வினையாற்றியிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? ஒருவரின் மீது பழியைப் போட்டுவிட்டு ஒதுங்கிவிடுவது.

நாங்கள் வந்தது படிப்பதற்கு என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். நீங்கள் வந்தது இந்த சமூகத்தின் அனைத்து ஒடுக்குமுறைகளையும் இல்லாதொழிக்க. நீங்கள் வந்தது இந்த சமூக சமமின்மைகளை கேள்வி கேட்க, எதிர்க்க, மாற்ற. அப்படி நம்பித்தான் இதையெல்லாம் எழுதுகிறோம். நண்பன் இறந்தால் மட்டுந்தான் போராடுவோம். நமது எல்லைக்குள் புத்தர் சிலை வந்தால்தான் எதிர்ப்போம். நமது கம்பஸில் கண்டிய நடனம் ஆடினால்தான் அடிபடுவோம் என்றால் இந்த இனத்தின் தலைவிதி அதன் சந்ததிகளின் போக்கினாலேயே அழிந்து விடும் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல.

நண்பர்களே, இவர்களின் படுகொலையின் பின்னராவது நமது உட்கட்டுமானங்களை. அகவிடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள். நாம் இன்னும் வலிமையாக வேண்டிய காலமிது. வெறும் “தமிழன்டா” கோஷம் எங்களைக் காப்பாற்றாது.

உதாரணத்திற்கு. நமது பல்கலைக்கழகம் முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய பல்கலைக்கழகமென்று நான் கருதுவது JNU பல்கலைக்கழகத்தை. உதாரணத்திற்கு ரோஹித் வெமுலாவின் மரணத்தை தேசிய பேசுபொருளாக்கி அவர்கள் சிலவாரங்கள் நடத்திய போராட்டங்கள் அற்புதமானவை. அந்த வழிமுறைகளும் அவர்கள் போராடியபோது இருந்த ஒற்றுமையுணர்வும் ஒரு நாளில் வந்ததில்லை. அது ஒரு அரசியல்மயப்படுத்தப்பட்ட பல்கலைக் கழகம், அங்கே அரசியல் பேசலாம், அவர்கள் “புரட்சி ஓங்குக ” என்பதை சொல்வதற்குப் பின்னலொரு வாழ்க்கை இருக்கிறது, அரசியல் சித்தாந்தம் இருக்கிறது, தொடர்ச்சி இருக்கிறது. அவர்கள் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கு குரலாயிருக்கிறார்கள். நாம் நமது வீட்டிற்குள் வரும் பிரச்சினைகளுக்கே பெரும்பாலும் குரலாயிருக்கிறோம். அவர்கள் போடுவது வெறும் கோஷமல்ல. அவர்கள் அதை வாழ்கிறார்கள். நம்மைப்போல படித்து முடித்ததும் வெளிநாட்டுக்கோ அல்லது வேலையில் அமர்ந்துகொண்டு பேப்பரில் வரும் அரசியல்களைப் பற்றி அரட்டை அடிப்பது மட்டுமல்ல அவர்கள் செய்வது. அவர்கள் இந்திய அரசை எதிர்க்குமளவு வளர்ந்ததற்கு வெறும் கோஷம் காரணமல்ல, அவர்களின் உரையாடல்களும் செயற்பாடுகளுந்தான் அவர்களை மாற்றியது.
(http://kirisanthworks.blogspot.com/2016/10/blog-post_25.html)
//

இவை தவிர இன்று சமூகவலைத்தளத்தில் இயங்கக் கூடியவர்களுக்கிருக்கும் பெரியபலம் அவர்களின் பல்வேறுபட்ட அறிவுத் திறன்களையும் துறைகளையும் இணைத்த பெருந்தொகுதி, அதனை நாம் சரியாகப் பயன்படுத்தவேண்டும்.

இறுதியாக ஒன்று, பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் போராட்டம் நியாயமானது தான். மற்றவற்றிற்கு போராடுவதற்கு அவர்களுக்கு நேரமில்லைத்தான். ஆனால் நண்பர்களே எர்னஸ்ட் சேகுவாரா என்ற மருத்துவனைத் தான் நான் மதிக்கிறேன். போராடுவது என்றால் அவர் செய்தது தான்.

இப்பொழுது தமது நிலமெனும் உரிமைக்காக கார்பெற் வீதியில் உறங்கிக் கொண்டும் ஓங்கிக் குரலெழுப்பிக் கொண்டுமிருக்கும் அந்தப் பெண்களின் தைரியத்திற்கும் வாழும் உரிமைக்கும் இவர்களில் யார் தமது முதலாவது காலை எடுத்து வைத்து போராடப் போகிறார்கள்? யாரிடம் அந்தக் கண்ணியம் மிக்க இதயமிருக்கிறது?

https://kirisanthworks.blogspot.com/2017/02/blog-post.html?m=1&fbclid=IwAR2ksXTEV2XyIqCmexZyNgpj20gK7IQpeCxlBElddwhGpRBQ7-wqW490_HM

Related posts

சுன்னாகம், மல்லாகம், பிரதேசத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்றமை- களப்பயணம்

vithai

இலங்கை இன முரண்பாட்டை விளங்கிக் கொள்ளுதல் – நிகழ்வு 2

vithai

காட்டுப்புலம் ஒரு சமூக உரையாடல்- 4 பாலியல் வன்முறைகளுக்கெதிரான அமைப்புகளின் வகிபாகம் -2

vithai

தொன்ம யாத்திரை – 4

vithai

வாசிப்பும் உரையாடலும் : நிகழ்வு 03

vithai

புதிய சொல் – கலை இலக்கிய எழுத்துச்செயற்பாட்டிற்கான இதழ் பிரசுரம்

vithai

Leave a Comment