(தற்போதைய நிலைவரத்தை வேறுதிசையில் கொண்டு செல்வதற்கான எத்தனிப்பாக இதைக் கருதவேண்டாம். அநேகமாக அனைவரும் தமது நிலைப்பாடுகளை முன்வைத்துவிட்ட நிலையில் தான் இதனைப் பதிவிடுகிறேன். சுலக்சனுக்கும் கஜனுக்கும் நிகழ்ந்தது இனி யாருக்கும் நிகழ்ந்துவிடக்கூடாது. அதேநேரத்தில் அவர்களுக்காக நாம் பெற்றுக்கொடுக்க வேண்டிய நீதியை கண்டிப்பாக பெற்றுக்கொடுக்கவும் வேண்டும். ஆனால் அதற்கு நாம் எவ்வளவு தூரம் தயாராய் உள்ளோம், தயார்ப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை கவனிக்க வேண்டும். இப்பொழுது கூட அவற்றை திருத்த முடியும். அவற்றை ஆராய்வதற்காகவே இங்குள்ள நிலவரங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.)
படுகொலை செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரான சுலக்சனை புரிந்து கொள்ள சில நிகழ்வுகள்
* சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சினை தொடர்பான உண்ணாவிரதத்தில் அவர் பங்கேற்றிருந்தார். சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரத்தில் பல்கலைக் கழகத்தின் பிற பீடங்கள் பங்கு பற்றாதபோது மருத்துவபீடம் பங்குபற்றியது. அவர் தனது கலைப் பீடத்தை மீறித்தான் அந்தப் போராட்டத்தில் பங்குபற்றினார். அப்பொழுது அவர் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தார்.
* பின்னர் “ராகிங்”இல் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நான் எழுதியும் இயங்கியும் வந்த காலத்தில் அவரையும் அவரது நண்பர்களையும் சந்தித்து உரையாடினேன். “ராகிங் தவறான ஒரு விஷயம். ஏனென்றால் இவர்களுக்கு ராகிங் செய்யத் தெரியாது. நல்ல வகையில் ராகிங் செய்யலாம்” என்றார். “கத்தியை வைத்து வெங்காயமும் வெட்டலாம், ஆளையும் வெட்டலாம்” என்றார், நீ சரியானதாக செய்யும் நடைமுறையொன்று தொடர்ந்து கைமாறும் போது ஆபத்தானதாக மாறும் என்றேன். சிரித்துவிட்டுச் சென்றார்.
* சமீபத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டுவதற்கு சிலவாரங்கள் முன்னர் தான் தனது ஜுனியர் மாணவர்களை அடித்த செயலுக்காக தண்டனைக் காலம் முடிந்து திரும்பியிருந்தார். (இதனை நான் ஒரு குற்றமாகச் சொல்லவில்லை. இது அவரின் குற்றமில்லை. இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை பல்கலைக்கழகம் எவ்வித கூச்சமுமில்லாமல் செய்துகொண்டுதானிருக்கிறது, அது இவரை விட அவை சரியென்று வாதாடும் கும்பல்களையே சேரும் பழி.)
* அவருக்கு அரசியலில், சமூக செயற்பாடுகளில் பொதுவான பல்கலைக்கழக மாணவர்களை விட ஈடுபாடு அதிகம், கடந்த தேர்தல் காலத்தில் ஒரு கட்சி சார்பில் எங்கள் ஊர்ப்பக்கம் இவர் பிரச்சாரம் செய்துகொண்டு வந்தார். துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த இவரிடம் நண்பரொருவர் “உனக்கெதுக்கடா இந்த விசர் வேலைகள், இவங்களுக்கு வால் பிடிச்சுக் கொண்டு திரியிற” என்று சொன்னார். அவர் வழமைபோல் சிரித்து விட்டு, பம்பல் அடித்து விட்டுச் சென்றார்.
இதையெல்லாம் அவரின் படுகொலை நினைவுகளுக்கு எதிரான சாட்சியமாக முன்வைக்க விரும்பவில்லை. பல்கலைக்கழகம் இது போன்ற படுகொலைகளை, அடக்குமுறைகளை கையாளும் தகுதி பெற்றுவிட்டதா? அதன் பொருட்டு சிந்திக்கவும் செயற்படவும் தயாராகி விட்டதா? என்பதை உரையாடவே இவரது முரண்பட்ட அம்சங்களை விவரித்தேன்.
பல்கலைக் கழகத்தின் மீது தொடர்ந்தும் வைக்கப்படும் விமர்சனங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் பல்கலைக்கழக நண்பர்கள் தம்மிடமிருக்கும் பொறுப்புக்களும் எதிர்பார்ப்பும் எவ்வளவு அதிகம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு இதே படுகொலையை யாரவது சாதாரண இரண்டு இளைஞர்கள் மேல் நடத்தப்பட்டிருந்தால் நாடு இவ்வளவு கலங்கியிருக்குமா? எழுந்திருக்குமா? எதிர்த்திருக்குமா?
பதில் “இல்லையென்று” தான் வந்திருக்கும். அடையாள ஈர்ப்புக்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால் இவ்வளவு துயரம், இவ்வளவு எதிர்ப்பு நிகழ்ந்திருக்காது. இது ஏன்?
ஏனென்றால் இந்த சமூகத்திற்கு அவ்வளவு தூரம் நீங்கள் முக்கியமானவர்கள்.. விலைமதிப்பற்றவர்கள். உங்கள் ஒவ்வொருவரையும் அவ்வளவு நம்புகிறது இந்தச் சமூகம். அவ்வளவு மதிக்கிறது. அதன் வெளிப்பாட்டைத் தான் கடந்த தினங்களில் நாம் பார்த்தோம்.
சரி, இப்படிப்பட்ட மதிப்பையும் நம்பிக்கையும் உங்கள் மீது கொண்டிருக்கும் சமூகத்திற்கு பல்கலைக்கழகம் யுத்தத்திற்குப் பின் செய்தது என்ன? அனர்த்த நிவாரணங்கள், சில பெரும் பிரச்சினைகளில் கவனயீர்ப்பு, கண்டனம்…
மலையகத் தொழிலாளர் தொடர்பில் செய்தது எல்லாம் தமிழ் சினிமாவில் இறுதிக் காட்சியில் வரும் பொலிஸ் போன்ற காட்சி. இவைதானா உங்களால் முடிந்தது. இதற்காகத் தானா சமூகம் உங்கள் மேல் இவ்வளவு நம்பிக்கையை வைத்திருக்கிறது. இல்லை. இல்லவே இல்லை.
நீங்கள் அவர்களை வழிநடத்த வேண்டியவர்கள். நீங்கள் அவர்களின் பிரச்சினைகளை ஆராயவேண்டியவர்கள். நீங்கள் அவர்களின் பொருட்டு யாரையும் எதிர்த்துப் போராட வேண்டியவர்கள், சுலக்சனைப் போல – அவர் தனது பல்கலைக்கழகத்தை எதிர்த்துத்தான் போராட்டத்திற்கு வந்தார்.
இதை நாம் எவ்வளவு தூரம் செய்கிறோம் என்பதை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள், அசைன்மென்ட் செய்வதற்கும், ராகிங் செய்வதற்கும், மற்ற எல்லாம் செய்வதற்கும் எமக்கிருக்கும் நேரம் நம்மை நம்பும் சமூகத்திற்காக செலவளிக்க இருக்கிறதா? சுலக்சனிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. தான் நம்புவதற்காக உண்மையில் களத்தில் நிற்பது. அப்படித் தான் அவர் பிரச்சாரம் செய்ததையும் வீதி நாடகங்கள் போட்டு மக்களை மகிழ்வித்ததையும் பல்வேறு போராட்டங்களில் பங்கு பற்றியதையும் பார்க்கிறேன்.
நாம் செய்யும் ஆய்வுகளில் எத்தனை சமூகத்திற்கு பயன்படுகின்றன. நம்மிடமிருக்கும் சட்டத்துறை எவ்வளவு தூரம் சட்டம் பற்றிய அறிவை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. நமது சமூகவியல் துறை? வரலாறுத் துறை?
எவ்வளவு தூரம் மக்களை அறிவு மயப்படுத்தியிருக்கிறோம்? எவ்வளவு நேரம் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக உரையாடியிருக்கிறோம்? அனைத்துப் பீட மாணவர்களும் (வெறும் வகுப்பு பிரதிநிதிகளோ, தலைவர்களோ மட்டுமல்ல) ஒன்றாக இருந்து பொதுப்பிரச்சினைகளை ஆராய்ந்து பொதுமுடிவுகளையும் பொதுவேலைத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியிருக்கிறோம்?
அதிகம் வேண்டாம். நாங்கள் படிக்கின்ற கல்வி முறையிலிருந்து பொருளாதாரம் வரை திட்டமிட்டு இனஒடுக்குதல் நடந்துகொண்டிருக்கின்றபோது எந்தத் திட்டமிடலும் எந்த முன்னாயத்தமுமின்றி வெறும் கோஷங்களால் இவற்றை எதிர்த்துவிட முடியும், மாற்றிவிட முடியும் என்று எதிர்பார்கிறீர்களா? இல்லவே இல்லை.
உதாரணத்திற்கு, இந்த வாள்வெட்டு கும்பலின் வருகை தொடர்பில் சமூகமட்ட ஆய்வு என்ன? இதற்கு அளிக்கப்பட்ட விசேட பொலிஸ் அதிகாரம் தொடர்பான சட்ட வரையறைகள் என்ன? இது தொடர்பில் நமது சமூகவியல் துறையினதோ சட்டத் துறையினதோ நிலைப்பாடுகள் என்ன? இதற்கு எதிர்வினையாற்ற வேண்டியது போலீசோ நீதிமன்றமோ மட்டுமல்ல; நீங்கள்தான். உங்களின் துறை சார்ந்து மக்கள் மட்டத்தில் நடைபெறும் மாற்றங்கள் என்ன?
ஏன் நம்முடைய போராட்டங்கள் பலவீனமானதாக தொடர்ச்சியற்றதாக இருக்கின்றன என்பதற்கு பல்கலைக்கழகம் மிகப் பெரிய பொறுப்பை எடுக்கவேண்டும். உதாரணம், சுன்னாகம் குடிநீர் பிரச்சினை தொடர்பாக எமது நிலைப்பாடுகள் தவறு என்றால் பல்கலைக் கழகம் அதற்கு எதிர்வினையாற்றியிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? ஒருவரின் மீது பழியைப் போட்டுவிட்டு ஒதுங்கிவிடுவது.
நாங்கள் வந்தது படிப்பதற்கு என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். நீங்கள் வந்தது இந்த சமூகத்தின் அனைத்து ஒடுக்குமுறைகளையும் இல்லாதொழிக்க. நீங்கள் வந்தது இந்த சமூக சமமின்மைகளை கேள்வி கேட்க, எதிர்க்க, மாற்ற. அப்படி நம்பித்தான் இதையெல்லாம் எழுதுகிறோம். நண்பன் இறந்தால் மட்டுந்தான் போராடுவோம். நமது எல்லைக்குள் புத்தர் சிலை வந்தால்தான் எதிர்ப்போம். நமது கம்பஸில் கண்டிய நடனம் ஆடினால்தான் அடிபடுவோம் என்றால் இந்த இனத்தின் தலைவிதி அதன் சந்ததிகளின் போக்கினாலேயே அழிந்து விடும் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல.
நண்பர்களே, இவர்களின் படுகொலையின் பின்னராவது நமது உட்கட்டுமானங்களை. அகவிடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள். நாம் இன்னும் வலிமையாக வேண்டிய காலமிது. வெறும் “தமிழன்டா” கோஷம் எங்களைக் காப்பாற்றாது.
உதாரணத்திற்கு. நமது பல்கலைக்கழகம் முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய பல்கலைக்கழகமென்று நான் கருதுவது JNU பல்கலைக்கழகத்தை. உதாரணத்திற்கு ரோஹித் வெமுலாவின் மரணத்தை தேசிய பேசுபொருளாக்கி அவர்கள் சிலவாரங்கள் நடத்திய போராட்டங்கள் அற்புதமானவை. அந்த வழிமுறைகளும் அவர்கள் போராடியபோது இருந்த ஒற்றுமையுணர்வும் ஒரு நாளில் வந்ததில்லை. அது ஒரு அரசியல்மயப்படுத்தப்பட்ட பல்கலைக் கழகம், அங்கே அரசியல் பேசலாம், அவர்கள் “புரட்சி ஓங்குக ” என்பதை சொல்வதற்குப் பின்னலொரு வாழ்க்கை இருக்கிறது, அரசியல் சித்தாந்தம் இருக்கிறது, தொடர்ச்சி இருக்கிறது. அவர்கள் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கு குரலாயிருக்கிறார்கள். நாம் நமது வீட்டிற்குள் வரும் பிரச்சினைகளுக்கே பெரும்பாலும் குரலாயிருக்கிறோம். அவர்கள் போடுவது வெறும் கோஷமல்ல. அவர்கள் அதை வாழ்கிறார்கள். நம்மைப்போல படித்து முடித்ததும் வெளிநாட்டுக்கோ அல்லது வேலையில் அமர்ந்துகொண்டு பேப்பரில் வரும் அரசியல்களைப் பற்றி அரட்டையடிப்பது மட்டுமல்ல அவர்கள் செய்வது. அவர்கள் இந்திய அரசை எதிர்க்குமளவு வளர்ந்ததற்கு வெறும் கோஷம் காரணமல்ல, அவர்களின் உரையாடல்களும் செயற்பாடுகளுந்தான் அவர்களை மாற்றியது.
மேலும், நான் சாதாரணமான ஒருவன். பல்கலைக்கழகத்திற்கு நான் தேர்வு செய்யப்படவில்லை. இவை எனக்குத் தோன்றிய கருத்துக்கள். நீங்கள் இவற்றை பொருட்படுத்தலாம், அல்லது விட்டுவிட்டுப் போகலாம். ஆனால் சுலக்சனுக்கும் கஜனுக்கும் நீங்கள் செய்ய விரும்பும், வாங்கிக்கொடுக்க விரும்பும் நீதி கிடைக்க வில்லையென்றால் அது ஏன் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே இதனை எழுதினேன்.
https://kirisanthworks.blogspot.com/2016/10/blog-post_25.html?m=1&fbclid=IwAR3FPYecOrlPmUMQvPFOpg3HnwoEVbkX8JKEjU03uDUlc5F2DSb01n48tIo