vithaikulumam.com
சமகாலகுறிப்புகள்

சுயமரியாதையை இழந்துவிட்ட யாழ் பல்கலைக்கழகம்

குமாரவடிவேல் குருபரனின் பதவி விலகல் குறித்த முடிவு வருத்தமளிக்கிறது. இவ்வளவு கால நீடிப்பும் இழுத்தடிப்பும் அவரது சுயமரியாதையை சீண்டியிருக்கிறது. இந்தச் சமூகத்தில் குரல் கொடுக்க வேண்டியவர்களின் மவுனம் அவருக்குக் கேட்டிருக்கும்.

இவரது விலகலால் யாருக்கு லாபம், வெளிப்படையாக இலங்கை அரசுக்கு. அடுத்தது பல்கலைக்கழகத்தில் சும்மா இருந்து கதிரை தேய்த்துக் கொண்டிருக்கும் விரிவுரையாளர்கள் பலருக்கும்.

குருபரன் சட்டத்துறையின் தலைவராக இருந்த போது சட்டத்துறை மாணவர்கள் ஒழுங்கமைத்த பல உரையாடல்களுக்குச் சென்றிருக்கிறேன். இந்தப் பல்கலைக்கழகத்தில் திறக்கபட வேண்டியிருந்த அரசியல் வெளியின் முதற் கதவுகள் அவை.
அவை திறக்கப்பட்டிருந்தன. வெகு சில துறைகளே பொது உரையாடல்களை நடாத்துபவை. வெகு சிலரே அரசியல் ரீதியில் வெளிப்படையாக நிலைப்பாடுகள் எடுப்பவர்கள். மற்றப் பெரும்பான்மையாய் இருக்கும் கதிரை தேய்ப்பவர்களுக்கு குருபரன் போன்றவர்களின் செயல்கள் எரிச்சலைத் தான் உண்டு பண்ணியிருக்கும். சும்மாயிருக்காமல் மாணவர்களை அரசியல்மயப்படுத்த முயற்சி செய்தால் நாளை அது அவர்கள் தலையில் தானே வந்து விடியும். கதிரை தேய்க்கேலாமல் போய் விடும். ஆகவே அவர்கள் மவுனமாயிருப்பார்கள்.

கள்ள மவுனம் என்றால் என்ன?

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், தனது அரசியல் பேசும், இயங்கும் உரிமை தொடர்பில் ஒரு குரலையும் எழுப்பாமல் காப்பதற்குப் பெயர் தான் கள்ள மவுனம்.

மாணவர் ஒன்றியம், எதுக்கு இருக்கிறோமென்றே தெரியாமல், யாரை காக்க வேண்டும், அவரை அகற்றுவதன் மூலமாக அவர்கள் அழிக்க நினைக்கும் அரசியல் வெளியை ஏன் காக்க வேண்டும் என்ற எந்த அறிவும் இல்லாமல் இருக்கிறார்களே, அவர்கள் காப்பதற்குப் பெயர் தான் கள்ள மவுனம்.

இந்த இரண்டு அமைப்புகளையும் விட, பல்கலைக்கழக நிர்வாகம் தன்னுடைய அரசியல் பேசும் வெளியை இழப்பதையிட்டு எந்த கூச்சமோ அவமானமோ இன்றி தான் நிர்வகிக்கும் பல்கலைக்கழகத்திற்கொரு சுயமரியாதை உண்டென்பதை மறந்திருக்கிறது.

இவர்கள் ஒருவருக்கொருவர் தாங்கள் இயங்கக் கூடிய அரசியல் பேசும் வெளியை, செயற்படும் ஒன்றாக மாற்றுவதற்கு குருபரனின் பக்கம் நின்று வாயைத் திறந்து பேசுவது அரசியல் அறம். அதுவே நாம் காக்க வேண்டிய வெளி மற்றும் அரசியல்.

கேக் வெட்டி, கொக்ககோலாவும் படைச்சு வீர வசனங்கள் எழுதுவதல்ல மாணவர்களின் வேலை, அல்லது ஒன்றியத்தினது. அவர்கள் வாயைத் திறந்து தம் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

மவுனமாக இருக்கும் ஒவ்வொரு விரிவுரையாளரும் நிகழும் அநீதிக்கு எதிராகத் தம் வாய்களைத் திறக்காமல் இருப்பது அயோக்கியத்தனம். வெகு சிலரே அவரிற்கான ஆதரவைப் பொது வெளியில் முன்வைத்திருக்கிறார்கள். பலருக்கும் கம்பஸ் லீவு போல்த் தெரிகிறது. இல்லையென்றால் எவ்வளவு அக்கறையாய் இருப்பார்கள் என்பது நாம் அறிந்த உண்மை.

மாணவர்களே, விரிவுரையாளர்களே நீங்கள் பல்கலைக்கழகம் என்ற அமைப்பு. அதன் அரசியல் வெளியைக் காப்பாற்ற உழைக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பு. அதை இழந்து விட்டு சுயமரியாதையற்று நிற்பது மோசமானது. கொஞ்சமாவது கோபப்படுங்கள், கொஞ்சமாவது.

-கிரிசாந்

Related posts

தனிமனிதரும் அமைப்புகளும்

vithai

குமாரவடிவேல் குருபரனின் மீதான் தடை தொடர்பில் மாணவர் ஒன்றியம்

vithai

சமூக சேவையும் சமூக செயற்பாடும்

vithai

செயற்பாட்டுத்தளங்களில் நிகழக்கூடிய பாலியல் சுரண்டல்கள் குறித்த நிலைப்பாடு

vithai

குழந்தைகளும் தண்டனைகளும்

vithai

மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள்

vithai

Leave a Comment