vithaikulumam.com
சமகாலகுறிப்புகள்

ஏன் பெரியாரும் வேண்டும்?

ஈழத்திற்கு பெரியார் தேவையில்லை. அம்பேத்கர் தேவையில்லை என்ற குரல்கள் மிகவும் பதட்டமாகவும் வேகமாகவும் எழுகின்றன. இருவரின் பெயரைச் சொன்னாலே பதட்டமடைகின்றன ஒடுக்குதலின் மனங்கள். குறிப்பாக ஈழத்து தமிழ்ச் சூழலில் பெரியார் என்றதும், எழும் அந்தப்பதட்டத்தைப் பார்க்க வேண்டுமே! ஒரு குரூப் பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்தார், பிள்ளையார் சிலையை உடைத்தார் என்று வழமையான நொண்டிச்சாட்டுகளோடு வந்துவிடுகிறது. அவை பற்றிய தெளிவுகளை கொஞ்சம் தேடினாலே புரிந்து கொண்டுவிடலாம். ஆனால் ஏதேனுமொன்றை பிடித்துத் தொங்க வேண்டும் என்று இருப்பவர்கள் இவர்கள்.

இரண்டாவது குரூப் ஒன்று இருக்கிறது.
‘இப்போது என்ன கெட்டு விட்டது இங்கே ஆணவக் கொலை நடக்கிறதா? வேறு அறிஞர் பெருமக்கள் இருக்கும் போது படிக்காத ஈ.வே.ரா வில் என்னத்தைக் கண்டீர்கள் என்று தூக்கி வருகிறீர்கள். ஏனென்றால் ஈழத்தில் தத்துவமும் அறமும் சமூக நீதியும் கரை புரண்டு ஓடுகிறது பாருங்கள். தவிர சாதிக்கும், மதத்திற்கும், பண்பாட்டுக்கும், வரலாற்றுப் உன்னதப்படுத்தல்களுக்கும் , வீண் தமிழ்ப் பெருமைக்கும் தொப்புள் கொடியை இணைத்து தமிழ் நாட்டில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் தேவையே இல்லாத குப்பைகளை இறக்கும் இச்சமூகம், பெரியார் என்றதும் மட்டும் பதட்டம். ஏனென்றால் பெரியார் ஈழத்தின் ஆதிக்க வர்க்கத்தின் அடிப்படை டாம்பீகங்களான ஆணாதிக்கம், மதம், சாதி மூன்றிலும் கை வைக்கிறார். அப்படியென்றால் நாபிக்கமலம் பதறும் தானே.

குறிப்பாகப்பார்த்தால் ஒடுக்கப்படுகிறோம் என்ற சிந்தனையோ அரசியல் விழிப்புணர்ச்சியற்றிருக்கும் மக்களை விட, ஆதிக்க சாதி, இடை நிலைச்சாதிகளை பின் பற்றக்கூடிய, சைவத்தமிழ் மரபில் படித்து விட்டு பணமும் வெட்டிக் கெளரவமும் கொண்ட கும்பலுக்கு பெரியார் பெரிய பிரச்சினையாக இருக்கிறார்.

அவருடைய கலகம் அவரைக்கண்டு அச்சமுறச்செய்கிறது. பொதுவாக ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் ஆதிக்க வர்க்கமும், சாதியும் தன்னுடையதை, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள யார் காலிலும் விழும், எந்தச் சமரசத்தையும் செய்யும்; உதாரணம் நாவலர். நல்லை நகர் ஆறுமுக நாவலர் எப்படி மொத்த ஈழத்தின் ஆதிக்க சமூகத்தின் கூட்டு மனநிலையின் உருவாக்கமாக இருந்தாரோ எந்தச் சமரசங்களை எல்லாம் செய்தாரோ. சாதி சமயம் இரண்டையும் பாதுகாக்க எதையெல்லாம் செய்யத்துணிந்தாரோ அது அவருடைய தன்னிலை மட்டுமில்லை. அது ஆதிக்க சமூகத்தின் கூட்டு மொத்தமும் கூட. அதைத்தான் இன்றும் பயில்வில் வைத்திருக்கிறது ஆதிக்க மனநிலை.

பெரியாரும் தனிமனிதர் என்பதைத் தாண்டியவர். அவர் கருத்தாக இயக்கமாக மாற்றப்பட்டவர். அவருடையது தமிழ்ச் சமூகத்தின் ஒடுக்குமுறையின் முகமன்று, அவர் வெறும் கலக மரபின் தனி ஆளுமை மட்டுமில்லை. தமிழ்ச் சூழலில் பெரியார் சிந்தனை மரபின் முக்கியமான நிலைமை (condition) ஏனெனில் பெரியாருடைய காலமும் சரி அவருக்கு பிறகான காலமும் சரி சில ஆயிரம் வருடங்கள் தொடர்ந்து நடைமுறையிலும் மனதிலும் இருந்து வந்த ஒடுக்குமுறை மரபுகள் மீது தொடுத்த தாக்குதல் அத்தகையது. அவர் உருவாக்கிய கருத்தியல் பலமானது. பெரியார் அதன் முகம். எப்படி மார்க்ஸ் இருபதாம் நூற்றாண்டின் முன்னேறிய தத்துவ மரபொன்றின், சிந்தனை நிலைமை ஒன்றின் முகமாக மாறினாரோ பெரியாரும் அப்படியே.

குறிப்பாக மார்க்சியத்தின் போதாமைகளாகச் சொல்லப்பட்ட பெண் விடுதலை பற்றிய விரிந்த பரப்பையும் சரி, கீழைத்தேசங்களை உலுக்கிக்கொண்டிருக்கும் சாதியப் பூதத்தை ஒழிக்கும் பெரும் பணியையும் சரி எடுத்துக் கொண்டவர்களில் பெரியாரும், அம்பேத்கரும் முக்கியமானவர்கள். அவர்கள் இன்று மார்க்ஸ்சின் அருகில் இருத்தப்பட்டமை தமிழ்ச்சூழலின் சிந்தனை மரபின் மகத்தான காலத்தைச் செய்தது. அதாவது கீழைச்சூழலுக்கு மார்க்ஸை, பெரியாரை , அம்பேத்கரை சேர்த்து அளிப்பதன் மூலமே ‘அரசியல் விழிப்புணர்ச்சியை’ உண்டு பண்ணவும் இறுகிய இவ் ஒடுக்கும் கட்டமைபைப் கொண்ட சமூகத்தை அசைக்க முடியும்.

இந்த இடத்தில், ஈழத்தின் பண்பாட்டுச் சூழலில் பெரியாரின் இடம் அவரோடு முகிழ்ந்தெழுந்த கருத்தியலின் பரப்பு ஏன் முக்கியம் என்று பார்க்க வேண்டும்.

ஈழத்துச் சூழலில் முன்னேறிய சிந்தனை மரபொன்றின் மகத்தான பயணம் ஒன்று இருக்குமென்றால் அது 1930 களின் பின்னர் ஐரோப்பாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இடதுசாரிச் சிந்தனைகள் அதில் முக்கியமானவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் இலங்கையின் நவீன ஆன்மா காலனிய ஐரோப்பிய தன்மையுள்ளது. அது ஐரோப்பாவிடம்; அதன் காலனிய த்திடம் தன்னை ஒப்படைத்தது. இன்று வரை மொத்த இலங்கைச் சமூகமும் இணைந்து செய்த புரட்சி என்றோ விடுதலைப் போர் என்றோ, வரலாற்றில் எதுவும் இல்லை. உள் நாட்டுப்போரும் தயாதிச் சண்டைகளுமே இலங்கையின் வரலாறு.

காலனியர்கள் இலங்கையில் பெரிதாகப் பிரயத்தனப்பட வேண்டி இருந்ததில்லை. ஐரோப்பியர் கைப்பற்றிய, நாடுகளில் மிக இலகுவாக ஐரோப்பியருடன் பொருந்திப் போய்விட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. அதில் ஆரோக்கியமும் உண்டு இழப்பும் உண்டு.

அதனாலேயே ஐரோப்பிய பண்பாடும் அதன் சிந்தனை மரபும் இலகுவாக வந்து சேர்ந்தன. இடதுசாரியமும் கூட. ஆனால் இலங்கையின் இடதுசாரிகளின் பிளவு பெரியளவில் தொடர்ந்து நிகழ்ந்தது. சிங்கள இடதுசாரியம் இனவாதத்திற்கு துணைபோனது. தமிழ் இடதுசாரியம் பாராமுகமாய் கடக்க நினைத்தது.

எனினும் அறுபதுகளில் தமிழ் இடதுசாரிகள் சாதியை ஒழிக்க எடுத்த முயற்சிகளின் போராட்டங்களின் விளைவே ‘இங்கே என்ன ஆணவப் படுகொலையா நடக்கிறது? ‘ என்று பூசும் கேள்விகளுக்கும் காரணம். இந்தியச்சூழலைப் பொறுத்த வரையில் ஈழத்துக்கு பண்பாட்டு பகிர்வுகள் பலமாக இருந்தாலும் இடதுசாரிகள் நடத்திய போராட்டங்கள் ‘தீண்டாமை’ முதலானவற்றைக் கொழுத்தின. தமிழ்நாட்டுச்சூழலை விட முன்னேற்றமான அடிகளை எடுத்து வைத்தது.

ஆனால் பின் நாளில் மையத்திற்கு வந்த விடுதலைப் போராட்டம் இனப்பிரச்சினை என்ற உள்நாட்டு போராட்டங்களின்பால் செல்ல, சாதிய ஒழிப்பும் பெண் விடுதலையும் தயக்கத்துடன் பின் வாங்கின. இதில் சாதிய ஒழிப்பு அமைப்பார்ந்து கருத்தியல் சார்ந்து போராடிய அளவு பெண் விடுதலைக் கருத்தியல்கள் தொண்ணூறு வரையும் கூட பின் தங்கியே இருந்தன.

போரின் முடிவின் பிறகு இலங்கையின் ஐரோப்பிய ஆன்மா மீண்டும் ஒடுக்குதல் கருவிகளான சாதி, மதம், ஆணாதிக்கம் மூன்றையும் வெளிப்படையாக வேகமாக பயிற்சி செய்கின்றது. இடது சாரியமோ பிளவுண்டு பலவீனமடைந்தது. உள்நாட்டு யுத்தம் என்ற வரலாற்று மரபு முன்னேறிய கோட்பாடுகளால் கைவிடப்பட்டே இருந்தது. தமிழ்ச் சூழலைப் பொறுத்த வரையில் தேசிய இனப்பிரச்சினை உள்ளிட்ட முரண்பாடுகள் தொடர்பில் இடது சாரிகள் பெற்றிருக்க வேண்டிய கருத்தியல் தலைமையை, போராட்டத் தலைமையை சாதியக் கூறுகளும் மதமும் கொண்ட ‘தேசியமே’ பெற்றது. அதனால் எண்பதுகளின் பின்னர் இடதுசாரிகளின் அரசியல் போராட்டம், பண்பாட்டு எழுச்சி, சிந்தனை மரபு படிப்படியாகச் சரிந்தது. அதற்கு வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும். உலகின் முன்னேறிய சிந்தனை ஒன்றின் வீழ்சிக்கும் போதாமைக்குமான நிரப்புதலை நாம் காண வேண்டும். அல்லது அவற்றைக் காண்பதன் ஊடாக அவற்றை மீள ஒருங்கேற்றலாம்.

பெரியாரும் அம்பேத்கரும் இலங்கையில் இடது சாரியமும் வளர்ந்த சூழலின் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள், ஈழத்துச் தமிழ்ச் சூழலில் சாதிய ஒழிப்பு போராட்டங்கள் முன்னெடுத்த காலத்திற்கு முற்பட்டவர்கள். ஆனால் இலங்கைக்குள் இருந்த ஐரோப்பிய ஆன்மா மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்ராலின், மாவோ என்றே இடதுசாரிகளை இயக்கிச் சென்றது. பெரியாருடன் அச்சந்தர்ப்பத்தில் சித்தாந்த இறுக்கங்களால் பொருந்திப் போக முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் சாதியம், பெண்விடுதலை தொடர்பில் பெரியாரும் அம்பேத்கரும் மேற்கொண்ட கருத்தியலும் செயற்பாடுகளும் சித்தாந்த அளவிலும் சரி செயற்பாட்டு அளவிலும் சரி முன்னேறியவையாகவே இருந்தன.

இச்சூழலில் ஏன் பெரியாரும் அம்பேத்கரும் முக்கியம் என்றால்
பெரும்பாலும் ஒத்த பண்பாட்டின் பின்புலத்தில் நின்று இவற்று எதிராக போராடிக் கொண்டிருந்த பெரியாரையும் அம்பேத்கரையும் அப்போதே நாம் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இந்துமதம், அது பாதுகாத்துவந்த சாதியம், இந்திய- தமிழ்நாட்டுச்சூழலில் விரவி இருந்த ஆணாதிக்கம் என்பன ஈழத்தின் பண்பாட்டோடு ஒத்த தன்மைகளையே கொண்டிருந்தன. ஆகவே பெரியாரும் அம்பேத்கரும் நமக்கு மிகக்கிட்டியவர்கள். அவர்கள் எதிர்கொண்ட சமூக ஒடுக்குதல்கள் நமக்கும் நன்கு பரிச்சயமானவை இந்த இடத்தில்தான் இருவரும் முக்கியமானவர்கள்.

உண்மையில் ஈழத்தின் சிந்தனை மரபின், முன்னேறிய சித்தாந்தங்களின் தவறிய சங்கிலிகள் அம்பேத்கரும் பெரியாரும்.தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் சிந்தனையால் மிகவும் முன்னேறிய கலகக்காரர்கள்.

ஆகவே இதுவே தாமதமாகிவிட்டது.

-யதார்த்தன்

Related posts

குட்மோர்னிங் டீச்சர்

vithai

குழந்தைகளும் தண்டனைகளும்

vithai

சமூக சேவையும் சமூக செயற்பாடும்

vithai

மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள்

vithai

குழந்தைகள் சாதியத்தை எவ்வாறு அறிகிறார்கள் ?

vithai

செய்த நன்மையும் தொண்டுத் தேசியமும்

vithai

Leave a Comment