vithaikulumam.com
சமகாலகுறிப்புகள்

தனிமனிதரும் அமைப்புகளும்

உமாகரன் இராசைய்யா ஆபத்தானவரா என்று கேட்டால், ஓம் ஆபத்தானவர்தான். இங்கே மக்களின் நம்பிக்கைகள் மீது யாரும் தாக்குதல் தொடுக்கும்போது அதனைத் தட்டிக்கேட்க முடியாதா என்று பொங்கும் குரல்களைக் கேட்க முடிகிறது. உண்மையில் அவருடையது மக்களின் நம்பிக்கைகள் மீதான அக்கறையா? மதமோ அது சார்ந்த எதிர்க்கதையாடல்களோ சமூகக் குற்றங்களா? அவை உண்மையில் மனதைப் புண்படுத்துகின்றனவா? போன்ற கேள்விகள் இருக்கின்றன.

மக்கள் விரும்பிய மதத்தையும் அதுசார் நம்பிக்கையையும் பின்பற்றும் உரிமையை பெற்றவர்கள், அதேபோல எந்த சித்தாந்தங்களின் மீதோ, அமைப்புக்கள் மீதோ விமர்சனத்தையோ கதையாடல்களையோ வைக்க விரும்புபவர்களும் அதேபோன்று உரித்துள்ளவர்களே. தவிர இந்து மதமும் அதில் இருந்து இலாபம் பெறும் பிஜேபி , இந்துதுவா போன்ற தீவிரவாத அமைப்புக்களும் தீவிரமாக இருக்கும் நிலையில் இலங்கையிலும் மதம் ஒரு நெறியாகவோ சித்தாந்தமாகவோ அன்றி ‘செருக்காக’ ஒடுக்குமுறைக்கருவியாகவும் தீவிரமாகி இருக்கிறது. சிவசேனை போன்ற இந்து கடும்போக்கு அமைப்புக்கள், தமது போசகர்களாக இந்திய இந்துத்துவ தீவிரவாத அமைப்புக்களை உட்கொண்டு வரவும் அவர்களிடமிருந்து எல்லா உதவிகளையும் வெளிப்படையாகப் பெறுகின்றன. அவை அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு அதிகாரங்களைப் பெறத்துடிக்கின்றன. உமாகரனின் வீடியோ கொஞ்சம் மேம்பட்ட அறிவுச்சூழலில் வைத்துப்பார்த்தால் நேடியாக அது பகிடியாகவே தோன்றும். கல் தோன்றி மண்தோன்றா காலத்தில் என்று தொடங்கும் பள்ளிக்கூட மேடைப்பேச்சுக்களுக்கு பழக்கப்பட்ட, பண்பாட்டு பிறழ்வுகளாலும் பெருமிதங்களாலும் சூழப்பட்ட ஓர் இளைஞனின் பேச்சாகத்தோன்றும். ஆனால் உமாகரன் ஒரு பகிடி மட்டும் அல்ல. அவரின் மீதான பகிடியையும் நாம் ஒரு எதிர்ப்பு வடிவமாகக் கையாள்கிறோம்.

பிஜேபியின் தமிழ்நாட்டு ஊதுகுழல்களில் ஒன்றான எச் . ராசா உமாகரனின் வீடியோவைப் பகிர்ந்துவிட்டார் என்பதற்காக மட்டுமில்லை, உமாகரன் பிரபல அரசியல் கட்சிஒன்றின் வேட்பாளர் ஒருவருக்காக தீவிரமாக வேலை செய்கிறார். சமூகப்பணி செய்வதாக காட்டிக்கொள்கிறார். உமாகரனின் இந்த இந்துக் கடும்போக்குவாதப் பேச்சையும் அவர் செயலையும், தமிழ் அரசியல் பண்பாட்டுச்சூழலுக்குள் உள்ளே விடுவது இப்போதும் எதிர்காலத்திலும் ஆபத்தானது. சும்மா இருந்தவரைப் பெரியாள் ஆக்காதீர்கள், அவர் வெறும் நகைச்சுவைத் துண்டு என்று வருகின்ற நண்பர்களுக்கு ஒன்றுதான் சொல்ல வேண்டும், நம் பண்பாட்டுச்சூழலுக்குள் வந்த அத்தனை ஆபத்துக்களும் இப்படித்தான் நுழைந்தன, இது வெறும் தனிநபர் பற்றியது அல்ல, இந்துத்துவம், சிவசேனா போன்ற மதத்தீவிரவாத அமைப்புக்களின் பெரிய கரங்கள் அத்தனை சாதாரணமானவை அல்ல, அவர்கள் பண்பாட்டுச்சூழலை வன்முறைக்குள் தள்ள, சுரண்ட பயன்படுத்தும் நபர்களை தனிநபர்களாக அன்றி, அவர்கள் சார்ந்து இயங்கும் ஒவ்வொரு அமைப்பின் பகுதியாகவும் பார்க்கவேண்டும். அவர்கள் எந்தப்பாடசாலையில் படித்தார்கள், எந்தக்கட்சிக்கு வேலை செய்கிறார்கள், எந்த அமைப்பு அவர்களைக் கொண்டாடுகிறது, என்பது தொடங்கி ஒவ்வொன்றிலும் விழிப்பாக இருக்க வேண்டியிருக்கும். நாங்கள் இந்துக்கள் இல்லை சைவர்கள், என்றெல்லாம் கிளம்பி வருவார்கள். விஞ்ஞானம் போன்ற பகட்டுகளை எடுத்துவருவார்கள். இங்கே யாரும் தனித்துவிடப்பட்டவர்களோ அரசியலற்றவர்களோ கிடையாது. எவை ஆரோக்கியமான அமைப்புக்கள் எவை மோசமான அமைப்புக்கள் என்பதைப்புரிந்து கொள்வதும் அடிப்படையில் அரசியல் மயப்படுதலின் ஒரு பகுதியாகும். அமைப்புக்களை தனிநபர்களாகச் சுருக்கும் போது நாம் அவர்களைப் புரிந்துகொள்ளவோ எதிர்க்கவோ முடிவதில்லை.

-யதார்த்தன்

Related posts

மெய்நிகர் வெளியில் பாலியல் வசைகள்

vithai

நானும் கூட என்னும் பெண்ணியப் பகிர்வுக் குறியீட்டுச் செயற்பாட்டியக்கம் #MeToo

vithai

கபன் சீலைப் போராட்டம்

vithai

சுயமரியாதையை இழந்துவிட்ட யாழ் பல்கலைக்கழகம்

vithai

மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள்

vithai

ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம்

vithai

Leave a Comment