vithaikulumam.com
செயற்பாடுகள் பிரசுரங்கள்

ஒரு நிலவுருவில் மூன்று மொழியுடல்கள்

ஒரு நிலவுருவில் மூன்று மொழியுடல்கள் – தன்னிலை / முன்னிலை / படர்க்கை என்கிற பொருளில் இடம்பெற்ற உரையாடல் நிகழ்வொன்று செப்ரம்பர், 2019 இல் 23.25.27 ஆகிய திகதிகளில் கோதே நிறுவனமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீடமும் புதிய சொல்லும் இணைந்த பங்களிப்பில் நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக விசேட பதிப்பொன்று செப்ரம்பர் 6, 2020 அன்று மாலை ‘கலம்’ (பண்பாடுகளின் சந்திப்பு வெளி) நிறுவனத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது.

இந்தப் பதிப்பில் வெளிவந்திருக்கும் புதிய சொல்லின் குறிப்பு

புதிய சொல் இதழ், கலை இலக்கிய சமூகச் செயற்பாட்டுக்கான இதழ் என்பதை அடிப்படையாகக் கொண்டு தனது பயணத்தினை ஆரம்பித்திருந்தது. அத்துடன், கலை இலக்கிய எழுத்து முயற்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் என்கிற நோக்குடனேயே புதிய சொல் தொடர்ந்து இயங்கிவருகின்றது. கலை இலக்கிய முயற்சிகள் – அதாவது புனையப்படுவதும் ஆக்கப்படுவதும் தொகுக்கப்படுவதும் ஆகிய அனைத்துமே சமூகத்துடன் மேற்கொள்ளப்படுகின்ற உரையாடல்களுக்கான திறவுகோலாகவோ, நிகழ்ந்துகொண்டிருக்கின்ற உரையாடல்களின் தொடர்ச்சியாகவோ இருக்கும் என்பதே எமது நம்பிக்கை. அவற்றுள் ஓரம்சமாக, ஒரேதளத்தில் இயங்குகின்ற ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் நிறைந்த பின்னணியுடன் கூடியவர்கள் உரையாடுவதும், ஒரே நிகழ்வு குறித்த வெவ்வேறு பின்னணிகளும் நோக்குநிலைகளும் கொண்டவர்கள் உரையாடுவதுமான உரையாடல்களை புதிய சொல் தனது இதழ்களூடாகவும் இதழுக்கு அப்பாலான செயற்பாடுகளூடாகவும் நிகழ்த்தியே வருகின்றது. அந்த வகையில் கோதே நிறுவனத்துடன் இணைந்து காலி இலக்கிய விழாவில் புதிய சொல் சார்பாக பங்கேற்றதும் அதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற Three Language Bodies from One Landscape என்கிற உரையாடலும் முக்கியமான அம்சம் என்றே கருதுகின்றோம்.

ஒரே நிலப்பரப்பில் பிறந்து மூன்று வெவ்வேறு நாடுகளில், மூன்று வெவ்வேறு மொழிகளில் இயங்கிக்கொண்டிருக்கின்ற ஐந்து எழுத்தாளர்கள் மூன்று நாட்களில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு அமர்வுகளில் இந்த உரையாடல்களில் பங்கேற்றிருந்தனர். இவர்களில் செந்தூரன் வரதராஜன் ஜேர்மனியை இருப்பிடமாகக் கொண்டு ஜெர்மன் மொழியிலும், அனுக் அருட்பிரகாசம் புது டெல்லியை இருப்பிடமாகக் கொண்டு ஆங்கிலத்திலும் யதார்த்தன், கிரிசாந், பிருந்தன் ஆகிய மூவரும் ஈழத்தை இருப்பிடமாகக்கொண்டு தமிழிலும் எழுதியும் இயங்கியும் வருகிறார்கள். தன்னிலை, முன்னிலை, படர்க்கை என்ற பெயர்களில் ஒருங்கமைக்கப்பட்ட அமர்வுகளில் தத்தமது கருத்துநிலை தொடர்பான பார்வைகளை ஐவரும் வெளிப்படுத்தியிருந்தனர். தமது எழுத்துகளிலான வடிவங்கள், உள்ளடக்கங்கள் பற்றியதாகவும், இந்த உள்ளடக்கங்கள் எழுதப்படும் பிரதியின் இறுதிவடிவில் உணர்வுநிலைத்தாக்கமாக எப்படி வெளிப்படுகின்றன என்பது குறித்தும், எழுதுபவரின் சுய அனுபவத்திற்கும் அவர் எழுதுகின்ற பிரதிக்குமான தொடர்பு, எழுதுபவருக்கும் அவர் தனது எழுத்துச் செயற்பாடுகளை மேற்கொள்கின்ற நாட்டிற்குமான உறவு, எழுதுபவர் யாருக்காக எழுதுகிறார், எழுதுபவருக்கும் வாசகருக்குமான இடையீடு ஆகியன அவரது பிரதிகளில் செலுத்துகின்ற தாக்கம், தமிழ், ஜெர்மன், ஆங்கில மொழிகளில் மொழியாக்கங்கள் செய்யப்படுகிறபோது எதிர்கொள்ளக்கூடிய சவால்களும் அவற்றுக்கான வெளியும் ஆகிய புள்ளிகளில் இந்த உரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த உரையாடல்களின் ஊடாக நிலத்தையும் மொழியையும் வடிவங்களையும் உணர்வு நிலைகளையும் கருத்துநிலைகளையும் சுய அனுபவங்களையும் கடந்து அவை உருவாக்கிய மிகப் பரந்த வெளியிலானதோர் உரையாடலையும் அதேநேரத்தில் அடிப்படைகள் பற்றிய ஆழமானதோர் புரிதலையும் இந்த உரையாடல்கள் உருவாக்கியிருக்கின்றன.

தொடர்ச்சியாக நிகழவிருக்கின்ற இந்த உரையாடல்களின் முதலாவது கட்டமான இந்தச் சந்திப்பு காத்திரமானதோர் பயணத்திற்கு வழிசமைக்கும் என்ற நம்பிக்கை புதிய சொல்லுக்கு இருக்கின்றது.

தோழமையுடன்
புதிய சொல்

ஒளிப்படம் : தர்மபாலன் ரிலக்சன்

Related posts

பள்ளிப்பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை

vithai

கரும்பாவளி – ஆவணப்பட வெளியீடு

vithai

கடந்த வருடச்செயற்பாடுகள் மற்றும் இந்தவருடத்திற்கான செயற்பாடுகள் மீதான மீள்பார்வை (2016))

vithai

உண்ணாவிரதப்போராட்டத்தின் முடிவு

vithai

ஆயிஷா – குழந்தைகளுடனான உரையாடல்

vithai

இலங்கையின் இன முரண்பாட்டை விளங்கிக் கொள்ளுதல் – கூட்டத் தொடர் 4

vithai

Leave a Comment