சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் பல்வேறு கருத்தியல்களின் அடிப்படையிலான உரையாடல்களில் அல்லது பிரச்சினைகளில் கருத்துகள் தீரும்போது தேர்ந்தெடுக்கும் உபாயம் தனிநபர் மேல் தாக்குதல் தொடுப்பதாக மாறிவிடுகின்றது. சுருக்கமாக வசைபாடுவது என்று சொல்லலாம். குறித்த தாக்குதலில் ஈடுபடுபவர்கள் பேசும் கருத்தியலுக்கும் அவர்களது நடைமுறைக்குமான முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே இந்தக் கருத்தியல் வறுமைகள் பெருமளவு இருக்கின்றன என்பது எனது அவதானம். ஓர் ஒடுக்குமுறையில் ஈடுபடுபவர் அதே ஒடுக்குமுறையை ஆதரிக்கவே செய்வார்; மனிதர்களின் உளவியல் பின்னணி அவர்கள் அறிந்த கருத்துக்களில் இருந்து மாத்திரம் உருவாகுவதில்லை, அவர்கள் உண்மையாக எதனால் ஆக்கப்பட்டிருக்கிறார்களோ அவற்றிலிருந்தே உருவாவது. நமது சமூக அமைப்பு இவ்வாறான வசையாளர்களுக்கெதிராக நீண்டதும் பெரியதுமானதொரு மவுனத்தைக் காத்துவருகிறது. அதுவே வசையாளர்களின் பலம். நடைமுறையில் வன்முறையை மற்றவர்கள் மேல் நிகழ்த்தும் பலருக்கும் ஆதரவான வாதங்களை உருவாக்குபவர்கள் இந்த வசையாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களுமே.
அண்மையில் பொதுவெளியிலும் ஊடகங்களிலும் நளினி ரட்ணராஜா, அம்பிகா சற்குணராஜா, மோகன தர்சினி ஆகிய மூன்று அரசியல் செயற்பாட்டாளர்கள் மேல் வசையாளர்களால் கும்பலாக நிகழ்த்தப்பட்ட எதிர்த்தலை / தாக்குதலைப் பார்த்தால் பாலியல் வசைகளுக்கு வெளியே எதையும் எதிர்வாதமாக வைக்கத் தெரியாத சமூகமாக நம் பெரும்பான்மை மக்கள் இருப்பது வெளிப்படுகிறது. இந்தப் பாலியல் வசைகளுக்கு எதிராகப் பேசியவர்கள் சிறிய எண்ணிக்கையானவர்களே. இந்த மூவரும் வசைகளை எதிர்கொண்ட விதம் மாறுபட்டது என்பதால் இவகளைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன். நளினி தன்னுடைய கருத்துக்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி ஒரு விவாதச் சூழலை கடந்த தேர்தல் காலத்தில் உருவாக்கியிருந்தார். அம்பிகா தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சியை வெளியிட்ட ஐபிசி தமிழ் என்ற ஊடகத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார், மோகன தர்சினி தன் மேல் இணையத்தில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் பாலியல் வசைகளை உருவாக்கி அளித்துக்கொண்டிருக்கும் வவுனியாவைச் சேர்ந்த கிராம சேவையாளரான சுயாந்தன் என்பவருக்கு அவரது தொழில்சார் உயர் மட்டங்களிற்கு குற்றச்சாற்றுக் கடிதமொன்றை உத்தியோகபூர்வமாக அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தை அவர் முகநூலில் வெளியிட்ட பின் அதை முகநூல் விதிகளுக்கு எதிரானதாக ‘ரிப்போர்ட்’ செய்வதன் மூலம் பலரும் அதனை அழிக்க உதவி வருகின்றனர், பாலியல் வசையாளர்களின் பின்பலமான இந்த நலன்விரும்பிகள் ரகசியமான தங்கள் ஆதரவை இவற்றின் மூலம் வெளிப்படுத்துவார்கள், அப்பொழுது தான் அவர்கள் தொடர்பில் எழக்கூடிய குற்றச்சாற்றுகளிலிருந்தெல்லாம் தப்பிக்கும் வாய்ப்புத் தொடரும். ஆகவே நாங்கள் இங்கே கவனத்தைக் குவிக்கவேண்டியது வசைகளையும் அவதூறுகளையும் செய்யும் குறித்த தனிமனிதர் சார்ந்து மட்டுமல்ல, அவர்களிற்கான ஆதரவுத் தளங்களை உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள் பற்றியும் தான். அவர்களை வெளிப்படுத்துவதும் இந்த உரையாடலில் முக்கியமானதே.
தோழர் மோகன தர்சினியின் மேல் நிகழும் முகநூல் பாலியல் வசைகள் சமகாலத்தில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் அதனைச் சற்று விரிவாகப் பார்ப்போம். மோகன தர்சினியை பற்றி சுயாந்தன் என்பவர் பாலியல் வசைகளுள்ள பதிலொன்றை அண்மையில் போட்டிருந்தார், அதற்கெதிராக அவர் நடவடிக்கைகளில் ஈடுபடவும் “முடிந்தால் நீங்கள் இப்படி நான் பேசுவதைத் தடுத்துப் பாருங்கள்” என்று சவால் விட்டிருந்தார். குறித்த நபர் தன்னை ஓர் இந்துத்துவவாதியாகவும் ராஜபக்ஷக்களின் ஆதரவாளனாகவும் வெளிப்படுத்திக் கொள்பவர், அதனை வைத்து தன்னை அதிகாரங்களுக்கு நெருக்கமான, அச்சுறுத்தலான ஆளாக முன்வைக்கிறார். இந்த நிலையில் நமது சமூகங்களுக்கிடையில் இந்த உரையாடல் பொதுவெளிக்கு வரும்போது, வழக்கம் போல் ஒரு சிறு தொகையினர் தோழர் மோகன தர்சினிக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். சிலர் மவுனம், பலர் கள்ள மவுனம், வேறு சிலருக்கு அக்கறையில்லை.
ஆனால் நாம் ஏன் பேசியே ஆக வேண்டியிருக்கிறது. மோகன தர்சினி மேல் நிகழும் இந்தப் பாலியல் வசைகளுக்கெதிரான நம் கண்டனங்களையும், அவருக்கான தோழமையையும் வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை நாம் சரியாக விளங்கிக் கொள்ளவேண்டும். அது வெறுமனே ஒரு பெண்ணுக்கான குரல் அல்ல. பொதுவெளியில் தமது கருத்துகளைப் பேசும் பலர் மீது இப்படியான வசைகளை உருவாக்குபவர்கள் நேரடியாக அவர்கள் மேல் இந்தத் தாக்குதல்களை நிகழ்த்த முடிவதில்லை. அரசியல் பேசும் பெண்களை அவ்வளவு விரைவில் இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் நின்று எதிர்க்கும் வல்லமையும் போராட்ட உணர்வும் உள்ளவர்கள். இவர்கள் குறி வைப்பது அல்லது இப்படியான செயல்களால் உண்டாக்க விரும்பும் சமூக விளைவென்பது மிச்சமிருக்கும் பெரும்பான்மைப் பெண்களின் துணிச்சலை சிதைப்பது, பொதுவெளிக்குள் அவர்கள் நுழையும் முன்பே அச்சத்தை உருவாக்கிவிடுவது; அவர்களுக்கான குரல்களை வசைகளால் நசுக்குவது. உண்மையில் மேலே குறிப்பிட்ட அரசியல் செயற்பாட்டாளர்களின் மீது நேரடியாக நிகழ்த்தப்பட்ட பாலியல் வசைத் தாக்குதல்களின் போது மவுனமாக இருந்த மற்றும் இருக்கும் பலரையும் பாருங்கள், இவர்கள் பெண்களின் அரசியல் பேசும் வெளியை இல்லாமலாக்கவே முயல்வதுடன் துணிச்சலாக அரசியல் பேசும் பெண்கள் மீதான அச்சத்தால் அவர்களின் துணிச்சலை உடைக்கவும் முனைகின்றார்கள். இப்பிரச்சினைகளை அறிந்தும் நிலைப்பாடுகளை எடுக்காதவர்களின் கயமையானது சுயாந்தனை விட மோசமானது. இவர்களிற்குப் பின்னால் இந்த ஆணாதிக்க ஒழுங்கின் வால் இன்னமும் தெரிகிறது.
பெண்கள் அரசியல் பேசுவதைப் பொறுத்தவரையில் நாம் அவர்களின் ஒவ்வொரு குரலையும் பாதுகாக்க வேண்டுமென்பது பெண் என்பதற்காகவே அவர்களை ஏற்றுக்கொள்வதென்பதல்ல; பெண்களில் அரசியல் பேசுபவர்கள் மிகவும் சிறிய அளவான தொகையினரே, அதன் பின்னாலுள்ள சமூக மனநிலை எவ்வளவு மோசமான ஆண் ஆதிக்கம் கொண்டதென்பது நாம் அறிந்ததே, ஆகவே அவர்களும் பேசட்டும். ஆண்களைப் போலவே, அவர்கள் சொல்வது தவறென்றால் அதை உரையாடுவதில் எந்தப் பிழையும் இல்லை, எதிர்க்கலாம், ஆதரிக்கலாம், முரண் உரையாடல்களை நிகழ்த்தலாம். அது அவரவர் உரிமை. ஆனால் பாலியல் வசைகளை அள்ளி இறைக்கும்போதும் அதிகாரங்களைக் கொண்டு அவர்களை அடக்க நினைக்கும்போதும் அறிவும் சுயமரியாதையும் சமூகநீதி பற்றிய புரிதலும் உள்ளவர்கள் அதற்கெதிராகவே நிற்பார்கள். அதுவொரு கூட்டு அறம். அதை நாம் காப்பாற்றியே ஆக வேண்டும். தோழர் மோகன தர்சினி இவ்வசைகளின் மூலமும் அதிகாரத்தின் மூலமும் அடக்கப்பட நாம் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது, அனுமதிக்க மாட்டோம். சுயாந்தன் தனது செயலுக்கான வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவிப்பது மட்டும் தான் இதற்கான முதற்படியான தீர்வும் அறமும்.
ஆகவே எந்தப் பக்கம் நிற்கப்போகிறீர்கள் என்பது பற்றி நிலைப்பாடு எடுங்கள். உரக்கப் பேசுங்கள். யார் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறோம் என்பதை வைத்தே நம் அரசியல் புரிதலை மதிப்பிட்டுக்கொள்ள இதுவும் ஒரு தருணம். பெண்கள் அழுது பலவீனமாகப் பொதுவெளியில் தம்மை முன் வைத்தால் பெரியளவான ஆதரவை வழங்கும் நம் சமூகம், அவர்கள் துணிச்சலான முகத்துடன் வரும்போது அதனை வெறுக்கிறது, பதற்றமடைகின்றது. அதுவே நம் சமூகம் பெண்களின் முன்னால் வைத்திருக்கும் நிலைக்கண்ணாடி. ஆகவே தான், தோழர் மோகன தர்சினியைப் போன்றவர்கள் பாலியல் வசையாளர்களுக்கெதிராக உண்டாக்கும் வெளியிலிருந்து இன்னும் ஆயிரமாயிரம் பெண்களின் குரல்கள் துணிச்சலாய் வெளிப்பட இந்த வெளிச்சத்தைக் காப்பாற்றுவோம்.
கிரிசாந்
குறிப்பு – இங்கே பகிரப்பட்டுள்ள புகைப்படம் இந்தியாவில் CAB இற்கு எதிராக நடந்த போராட்டத்தில் எடுக்கப்பட்டது.