vithaikulumam.com
செயற்பாடுகள்

கொட்டகை : 01

விதை குழுமத்தின் செயற்திட்டங்களில் ஒன்றான “கொட்டகை” என்கிற, திரையிடலுக்கும் கலந்துரையாடலுக்குமான வெளியின் முதலாவது நிகழ்வு பாலிநகரில் உள்ள விதை குழும நூலகத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. காட்சி ஊடகங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களது ரசனை மற்றும் கருத்தியல் மாற்றங்களை உரையாடுவதும் அதன் வழி அக்காட்சிகள் மீதான மாறுபட்ட பார்வைகளை வழங்குவதும் இந்த உரையாடலின் நோக்கம். பார்ப்பவற்றை எப்படி விளங்கிக் கொள்வது, விளங்கியவற்றை எப்படிப் பகிர்ந்து கொள்வது, பகிர்வுகளை எப்படி உரையாடலாக்குவது, அதனூடகத் தன்னுடைய சொந்தப் பார்வையை எப்படி விரித்துக் கொள்வது என்பது வழிமுறை.

முதலாவது திரையிடலில் நார்னியா என்ற திரைப்படத்தின் முதற்பாகம் திரையிடப்பட்டது. காட்சியிடலின் போது அவர்களின் ஆர்வங்கள் செல்லும் திசையையும், ரசிக்கும் பகுதிகளையும், விழி திறந்து ஆச்சரியத்துடன் தொடரும் சந்தர்ப்பங்களையும் அவதானித்து, அவற்றைத் தூண்டுகிற அக உலகை விளங்கிக் கொள்ள முயற்சி செய்தோம். திரையிடலின் பின் அவர்களின் கருத்துக்களைக் கேட்டு உரையாடல்களை முன்னெடுத்தோம்.

இந்தத் திரையிடல்களை விதை குழும நூலகத்தின் சிறுவர்கள் ஒழுங்கமைக்கும் ஒரு நிகழ்வாகவே தீர்மானித்திருந்தோம். அவர்களே ஏற்பாடுகளைச் செய்தனர். துணிகளைக் கட்டி கொட்டகையை உண்டாக்கினர், கதிரைகளை அடுக்கினர். நீருக்கு வழி செய்தனர். கருவிகளை இணைத்துத் திரையிடலைத் தொடக்கினர். நாங்கள் சில உதவிகளை மட்டும் செய்தோம்.

திரையிடலின் பின்னர் அடுத்த நிகழ்வை எங்கு ஒழுங்கமைப்பது, இன்றைய நிகழ்வில் இருந்த குறைபாடுகள் எவை, அடுத்த முறை அவற்றைச் சரி செய்வது எப்படி, திரைப்படங்களை எப்படித் தேர்வு செய்வது என்பது பற்றிக் கதைத்தோம். அந்த உரையாடலின் வழி விதை குழும நூலகத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் அதன் ஒவ்வொரு அங்கத்தவர் வீட்டிலும் சுழற்சி முறையில் ஒழுங்கமைப்பது என்றும் அவற்றிற்கான பணிகளைத் தாமே கூட்டாக ஒழுங்கு செய்வது என்று முடிவானது.

எமது நண்பர்களிடமுள்ள புத்தகங்களில் சிறுவர்களுக்கு ஆர்வமுள்ள புத்தகங்களை மாதத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் வழங்குவது என்று முன்னர் தீர்மானித்திருந்தோம். அதன்படி ஒரு தொகை நூல்களைக் கொண்டு சென்றிருந்தோம். அவற்றை வாங்கிப் பார்த்தார்கள். முறையாகப் பதிவேடுகளில் பதிவு செய்த பின் வீடுகளுக்குக் கொண்டு சென்றார்கள். இப்படியாகச் சுழற்சி முறை மூலம் நாம் எப்படிப் புத்தகங்களைப் பரிமாறப் போகிறோம் என்றும் அதனை எதற்காகச் செய்கிறோம் என்பதையும் சொன்னோம்.

சிறுவர்கள் இயல்பாகவே கூட்டுழைப்பில் ஆர்வமிக்கவர்கள். ஆனால் போட்டியை அடிப்படையாகக் கொண்ட நம் கல்வி முறைமை, அவர்களை ஒன்றாக்குவற்கு மாறாக, ஒருவருக்கெதிர் இன்னொருவராக ஆக்குகிறது. அதனூடாக அவர்களின் உள்ளாற்றலை இணைய விடாமல் தடுக்கிறது. இதனை மாற்றுவதும் உரையாடல்கள், செயல்கள் வழி அவர்களை இணைப்பதுமே இந்நிகழ்வுகளின் அடிப்படை. போட்டி என்பதற்கு மாற்றீடாக விளையாட்டையும், விவாதம் என்பதற்கு மாற்றாக உரையாடல் என்பதையும் கொண்டதே கல்வியின் அடிப்படை என்பதை இயல்பாக நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுவே அவர்களை அவர்களாகவே உருவாக்கும் வழி.

தோழமையுடன்
விதை குழுமம்

Related posts

அண்மைக்கால புலம்பெயர் நாவல்களின் பொதுப் போக்குகள் மற்றும் சில அவதானங்கள் –

vithai

ஒரு நிலவுருவில் மூன்று மொழியுடல்கள்

vithai

தொன்ம யாத்திரை 01 முன்கள ஆய்வு

vithai

தொன்ம யாத்திரை – 3 நெடுந்தீவு முன்கள ஆய்வு

vithai

ரெஜினா ஞாபகார்த்த நூலகம் திறப்பு

vithai

வாசிப்பும் உரையாடலும் : நிகழ்வு 03

vithai

Leave a Comment