vithaikulumam.com
செயற்பாடுகள்

விளையாட்டும் காயமும்

விளையாட்டின் மூலம் குழந்தைகளும் சிறுவர்களும் தங்களது உடலையும் மனதையும் இணைக்கிறார்கள். உடலின் ஒவ்வொரு அசைவும் மனதுடன் இணக்கமாகி அதனை நுட்பமாகக் கையாளும் பயிற்சியை விளையாட்டு அவர்களுக்கு அளிக்கின்றது. மேலும் அவர்கள் குழுவாக இயங்குவதன் தேவையும், அதற்கான விட்டுக்கொடுப்புகளும் விளையாட்டின் வழி பழக்கமாகின்றன. குழந்தைகள் சுற்றியிருக்கும் உலகை முதலில் கண்களின் வழியும் ஏனைய புலன்களின் வழியும் அறிகிறார்கள். அதுவொரு விளையாட்டு, அதே நேரம் அறிதலும் கூட. அதன் வழி தான் கற்றல் என்பது அறிதலுக்கான ஒரு விளையாட்டாக ஆகின்றது.

நாம் சிறுவர்களிற்குள் உள்ள ஆற்றலை விளையாட்டின் வழி பெருக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் விளையாட்டின் அடிப்படையாக மாற்றிக் கொண்டுள்ள போட்டி எனும் தன்மை அவர்களின் அறிதலை மட்டுப்படுத்துகிறது. போட்டி என்பது வெற்றி தோல்வியுடன் சம்பந்தப்பட்ட ஒரு முறைமை. அதன் வழி வெற்றியடைபவர்கள் பெருமிதம் அடைவதும், தோற்றவர்களைத் தாழ்வாகக் கருதுவதுமே பெரும்பாலான இடங்களில் நடக்கின்றது. அதனூடாக அவர்களின் தன்முனைப்பு உரமூட்டப்படுகிறது. எல்லோருக்கும் எப்பொழுதும் தேவையான ஒரு செயற்பாட்டில் தன்முனைப்பு, கூட்டு மனங்களின் இணைவிற்கு எதிரானதாக மாறும். அதுவொரு தவறான விளைவு. அதற்குப் பதில் விளையாட்டை விளையாட்டாகவே நிகழ்த்தும் தன்மையை ஊக்குவிக்க வேண்டும். வெற்றி தோல்வியென்பது சாதாரணமென்று திரும்பத் திரும்பச் சொன்னாலும் போட்டியை அடிப்படையாகக் கொண்டே கல்வி மற்றும் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்ட நம் சமூகங்கள், விளையாட்டை விளையாட்டாக அணுகும் அடிப்படைகளைச் சிறுவர்களுக்கு வழங்குவதில்லை.

எல்லா அடிப்படைகளிலுமிருந்தும் போட்டித் தன்மையை விலக்கி அதற்குப் பதில் விளையாட்டின் இயல்பை உண்மையாக வழங்குவதன் மூலமே வெற்றி தோல்வியென்ற இருமை நிலையிலிருந்து சிறுவர்களைக் காப்பற்ற முடியும். விளையாட்டில் யாரும் தோற்பதுமில்லை வெல்வதுமில்லை. ஒரு சிறிய நேரத்திற்கு ஒன்றாக முயற்சி செய்வது, கூடுவது, உடலை அல்லது மனத்தைப் பயன்படுத்தி அதன் விதிகளுக்குள் விளையாடிப் பார்ப்பது, அதனூடாக அந்த நேரத்தை மகிழ்ச்சியானதாக ஆக்கிக் கொள்வது என்பவையே விளையாட்டின் அடிப்படைகள்.

குடத்தனை மேற்கு, வலிக்கண்டியில் உள்ள சிறுவர்களுடன் விதை குழுமமும் எமது தோழமை அமைப்பாகிய பசுமைச் சுவடுகளும் இணைந்து ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளைத் தொடர்ந்து நடாத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக விளையாடுவதும் கதைப்பதுமான நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்திருந்தோம். முதலில் “கிளித்தட்டு” விளையாடினோம், பின்னர் ஆட்கள் அதிகரிக்கவே கிளித்தட்டு விளையாடுவதைக் கூட ஆட்கள் கூடிவிட்டார்கள் என்று “முள்ளி” என்ற ஓடிப் பிடிக்கும் விளையாட்டை விளையாடினோம். வெவ்வேறு வயதுச் சிறுவர்கள் சேர்ந்து விளையாட அவ்விளையாட்டை அவர்களே தேர்வு செய்தார்கள். இரண்டு குழுக்களாகப் பிரிந்து விளையாடினோம். வியர்வையும் புழுதியும் பறக்க ஓடி விளையாடியவர்கள், திடீரென்று விளையாட்டை நிறுத்தினார்கள். கவனித்த போது, விளையாடிக்கொண்டிருந்த எமது அமைப்பின் தோழரொருவர் தடுக்கி விழுந்து விட்டார். கையில் பலமான அடி. உடலில் புழுதி. விழுந்த நோவில் அவர் இருப்பதும் படுப்பதுமாகத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார். சிறுவர்கள் திகைத்து என்ன செய்வதென்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். விளையாட்டின் உற்சாகம் சட்டென்று நின்றது. அவரின் காயத்திற்கு ஆறுதலாயிருக்க நின்றார்கள், இரக்கத்துடன் அவரை அணுகினார்கள். அவருடைய நிலமையைப் பார்த்த பின் விளையாட்டை முடித்துக் கொள்வோம், வேண்டுமென்றால் நீங்கள் விளையாடுங்கள் என்று சொன்னோம். தாங்களும் விளையாடவில்லையென்று சொல்லி விட்டு வீடுகளுக்குத் திரும்பினர்.

விளையாட்டின் போதான காயங்கள் சிறுவர்களின் உள்ளத்தை அதிர வைக்கின்றன. தனக்கு நடப்பதை விட இன்னொருவருக்கு நடக்கும் போது அது அவர்களை மிகவும் பாதிக்கின்றது. இந்த ஆதார இயல்பே சக உயிர்கள் மீதான நம் கனிவின் தொடக்கங்கள். சிறிய காயங்கள் நல்லவை, அவை நம் உள்ளங்களை மற்றவர்களுக்காகத் துடிக்க வைக்கும் தொடக்கங்களாக இருப்பதால்.

தோழமையுடன்
விதை குழுமம்

Related posts

இலங்கை இன முரண்பாட்டை விளங்கிக்கொள்ளுதல் –நிகழ்வு 03

vithai

குழந்தைகள் | பெண்கள் | ஆண்கள்

vithai

கிட்டிப்புள் விளையாடின கதை – நிலத்தில் விளையாடுதல் பற்றிய குறிப்பு

vithai

சமத்துவத்தின் இசை

vithai

குழந்தைகளின் கதைகள்

vithai

பால்ய கால கவிதை அனுபவங்கள் – பகிர்வு 1

vithai

Leave a Comment