vithaikulumam.com
செயற்பாடுகள் தொன்ம யாத்திரை

மழைத் தெய்வம்

சிங்கள பெளத்த பேரினவாதமும், அதன் அரசியல் நடைமுறைகளும் சிறுபான்மை மக்களின் மரபுரிமைகளை அழிக்கவும், கைக்கொள்ளவும் மாற்றியமைக்கவும் செய்கின்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மரபுரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் சமகாலத்தின் எரியும் பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கின்றது. இச்சூழமைவின் பின்னணியிலேயே தொன்ம யாத்திரை தொடங்கி நடந்து வருகின்றது.

மரபுரிமைகளை அறிதல், ஆவணப்படுத்தல், அவற்றைக் கொண்டாடுதல் என்ற அடிப்படைகளைக் கொண்ட ‘மரபுரிமை நடையான’ தொன்மயாத்திரை ஐந்து நடைகளை நிறைவு செய்து ஆறாவது நடையை செய்திருக்கிறது. இவ்விடத்தில் மரபுரிமைகளைத் தெரிவு செய்யும் போது அவற்றின் மீது செல்வாக்குடன் இருக்கக்கூடிய இனவாதம், சாதியவாதம், மதவாதம், ஆணாதிக்கம் போன்ற பிற்போக்குத் தன்மைகளை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்ற தெளிவுபடுத்தல் அவசியமாகவிருக்கின்றது. ஏற்கனவே தேவாலயங்களின் நகரம் என்ற தொன்ம யாத்திரை ஊர்காவற்துறையின் காலனிய காலத்து தேவாலயங்களை மற்றும் கட்டடங்களை அறியவும், ஆவணமாக்கவும் முயன்றது. ஆறாவது தொன்ம யாத்திரை உள்ளூர்ப் பண்பாட்டு நிலவரங்களுடன் இணைந்திருக்கும் ‘மழைத்தெய்வமான’ கண்ணகையின் தொன்மத்தன்மை, வரலாறு, வழிபாட்டு முறைகள், சடங்குகள், கலைகள் பற்றி அறிந்து கொள்ளவும் ஆவணப்படுத்தவும் கொண்டாடவும் செய்கிறது.

அந்த வகையில் மரபுரிமைகளைப் பற்றிப் பேசும்போதும், ஆவணப்படுத்தும் போதும் அதனுடன் பங்கெடுக்கும் மேற்சொன்ன சமூக அசமத்துவங்கள் அந்த அசமத்துவங்களின் பிற்போக்குதன்மை, அவற்றின் சமூக வகிபங்கு, அவற்றின் அபாயங்கள், என அவை கொண்டுள்ள அரசியல் சூழமைவைப் புரிந்து கொள்வது மிக அவசியமானது. அவ்வகையில் உள்ளூர் வழிபாட்டு முறைகளும் அவை சார்ந்த விடயங்களும் ஏன் சமகாலத்தில் முக்கியமானவை? அவை என்ன வகையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன என்பது பற்றி நாம் இவ்விடத்தில் உரையாட வேண்டும்.

முதலாவது, உள்ளூர்ப் பண்பாடுகளின் முக்கிய கூறாக இருக்கக் கூடிய சுதேச தெய்வ வழிபாடுகளும் அவை சார்ந்த பண்பாடுகளும். இவை அடிப்படையில் தொன்மம், வரலாறு போன்றவற்றின் கதைகளால் ஒழுங்குபடுத்தப்பட்டு வந்திருக்கின்றன. நாம் வரலாறு, தொன்மம் இரண்டையும் புரிந்துகொள்வதோடு அவற்றை சமகால முன்னேறிய சிந்தனைகளால் அணுக வேண்டும். பிரதேசம், வாழ்க்கைமுறை, நம்பிக்கைகள், சடங்குகள் என்று உள்ளூர்ப் பண்பாட்டு முறைகள் கொண்டிருக்கக் கூடிய வரலாற்றுணர்வு, அடையாளம் போன்றவற்றின் மீதான அரசியல் சரிநிலைகள் பற்றி அறிதல் முக்கியமானது. இன்று வரலாறு, அடையாளம் என்பன வெறும் பெருமையாக கோசமாக மட்டும் உள்ளீடற்று விளங்கிக் கொள்ளப்படுகின்றன. மேம்பட்ட சிந்தனைகளின் பின்னணிகள் அற்றுப் போய் சமூகத்தைச் சிந்திக்கவும் அரசியல் மயப்படவும் விடாமல் இப் பெருமிதங்கள் தடைசெய்கின்றன. இவை ஒரு அடாத்தான புத்தர்சிலைக்கு எதிராக ஒரு அடாத்தான சிவலிங்கத்தை இரவோடு இரவாக நிறுவி அதற்கு ஒரு உடனடியான வரலாற்றையும் புனைந்து விடுகின்றன. வரலாறு மற்றும் மரபுரிமைகள் பற்றிய புரிதல் இன்மை சமூகத்தைத் தொடர்ந்தும் ஒடுக்கக்கூடிய சக்திகளுக்கு மக்களின் வரலாற்றைத் தாரைவார்க்கும் அபாயங்கள் சமகாலத்திலே நிகழ்ந்தபடியுள்ளன. இவற்றுக்கு எதிரான சிந்திக்கும் பண்பாட்டில் நாம் சுதேச வாழ்க்கை முறையை மரபுரிமைகளின் சூழலை நம்முடைய இருப்பின் உறுதிப்பாடு கருதிப் பேண வேண்டும்.

உள்ளூர் வழிபாட்டு முறைகள் கொண்டிருக்கக் கூடிய சில பண்பாட்டுக் கூறுகள் சமூக ஆரோக்கியத்தினுடைய பங்காளிகளாகவுள்ளமையை நாம் புரிதலோடு காணவேண்டும். உணவுப் பண்பாடு, கலைகள், இலக்கியங்கள், உடைகள் ,மொழி என்று அது சார்ந்திருக்கக் கூடிய கலாசார மரபுரிமைகளைப் பேணக்கூடிய பொறிமுறையை நாம் உள்ளூர்ப் பண்பாட்டுக்குள்ளே உருவாக்கவும் பாதுகாக்கவும் வேண்டும். உதாரணமாக யாழ்ப்பாணத்தில் கண்ணகை மரபோடு இணைந்திருக்கக் கூடிய வசந்தன் கூத்து மற்றும் வசந்தன் அடி போன்றவை முக்கியமான சுதேசக் கலையாகவுள்ளன. அதே போல உள்ளூர் இலக்கிய வடிவங்களான நாடகம், பள்ளு, அம்மானை, சிந்து கூறல் போன்ற வடிவங்கள் இன்னும் உள்ளூர் வழிபாட்டு முறைக்குள் பயில்வில் உள்ளதாலேயே நிலைத்திருக்கின்றன.

உள்ளூர் வழிபாட்டு முறை பற்றிப் பேசக்கூடியவர்கள் அது கொண்டுள்ள இயற்கையோடு இணைந்த சடங்குகளும், முக்கியமானவை என்கின்றனர். உதாரணத்திற்குப் பொங்கல், குளிர்த்தி போன்ற சடங்குகள், மாரி, கோடை போன்ற காலநிலைகளுடன் தொடர்புபடுகின்றன. இயற்கை வழிபாட்டு முறையின் தொடர்ச்சியினையும் அதனுடனான மனிதர்களின் பண்பாட்டு இடைத் தொடர்பையும், இயற்கை பற்றிய உள்ளூர் அறிதலையும் இங்கே காணலாம்.

நாட்டுப்புற அல்லது உள்ளூர் தெய்வங்களிடம் இருக்கக் கூடிய வெளியில் சமூக புழக்கமும் பகிர்வும் அதிகமாகவும் நெருக்கமாகவும் இருக்கின்றது. சாமியைத் தொட்டு வணங்கவோ முறையிடவோ கூடிய, மனிதர்களுக்கு நெருக்கமான தன்மையை அவை கொண்டிருப்பதும், சடங்குகளைச் செய்வதில் சாதாரண மக்களுக்கு உரித்தைக் கொடுத்திருப்பதும் முக்கியமானதாகும். மேலும் வைதீக அமைப்பைப் போல் அல்லாமல் பெண்களும் பூசாரிகளாக இருக்கக் கூடிய தன்மையையும் சுதேச வழிபாட்டு முறைகளில் கவனிக்கிறோம்.

நிறுவனமயப்பட்ட மதங்களின் பெருந்தெய்வ வழிபாடுகள் கொண்டிருக்கக் கூடிய புனிதநூல், புனிதஇடம், போன்றவை ஒழுங்குபடுத்தக் கூடிய அதிகாரப் படிநிலைகள் இருப்பவை. உள்ளூர்ப் பண்பாட்டைச் சேர்ந்த வழிபாட்டு முறைகள் ஆரோக்கியமான சமய அமைப்புக்களாக அம்பேத்கர் குறிப்பிடும் தொல்சமயங்கள், அறவழிச் சமயங்களோடு ஒத்த பண்பாட்டைக் கொண்டவை. அவை மானுடர்களால் மானுடர்களுக்குத் தரப்பட்டவையாகவும், சமூக உறவு, பங்கு பற்றும் பகிர்ந்து கொள்ளும் வெளிகளையும் கொண்டிருக்கின்றன. பொருளாதாரம், பெளதீக விருத்தி என்பன பெரிய இடத்தை எடுத்துக் கொள்ளாமல் மக்களின் புழங்கு வெளிக்குள் இருந்தபடியே அவர்களுடன் கலந்துள்ளன. இங்கே வைதீக / ஆகம முறைகளை விட உள்ளூர் வழிபாட்டு முறைகள் பிறிதொரு உள ஆற்றுப்படுத்தல் வெளியாக இயங்குவதில் சமூகப் பிறழ்வேதும் இருந்துவிடாது.

இவற்றோடு சேர்த்து, உள்ளூர் வழிபாட்டு முறைகள் கொண்டிருக்கக் கூடிய அசமத்துவங்களையும் நாம் உரையாடுவதும் அவற்றை விமர்சன பூர்வமாக அணுகுவதும் அவற்றுக்கான மரபுரிமைத்தன்மையை உறுதிப்படுத்த உதவும். குறிப்பாக உள்ளூர்த் தெய்வங்கள் சாதிய அடையாளங்களைக் காலம் காலமாகப் பூண்டு வருகின்றன. பெரும்பான்மையான வைதீகக் கோவில்கள் போல கடும் இறுக்கமான சாதிய வேறுபடுத்தல்கள், தடைகள் இல்லாவிட்டாலும் உள்ளூர்த் தெய்வ வழிபாடுகளில் சாதிய நிலைமைகள் தொடர்ந்தும் கையளிக்கப்பட்டுவருகின்றன. மேலும் பெரிய கோவில்களுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட ஒடுக்கப்படும் மக்கள் தங்களுக்கென சுதேச வழிபாட்டு முறைகளைப் பின்பற்றினாலும் தொடர்ச்சியாகப் பெருங்கோவில் நடைமுறைக்கு ‘தம்மை’ அறியாமலேயே பின் செல்கிறார்கள். அப்பெரும் பண்பாட்டு ஆக்கிரமிப்புக்களை இயல்பாக ஏற்றுக் கொள்வதன் ஊடாகச் சுதேசப் பண்பாட்டின் வாழ்க்கை முறைகள் ஒடுக்கப்படும் போது நாம் ஒடுக்குமுறைக்கு எதிராகச் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும். மாறாக நமக்கொரு கோயிலைக் கட்டிவிட்டால் நம்மீதான ஒடுக்குமுறை இல்லாது போய் விடாதல்லவா? அதன் மனநிலை எதோ ஒருவடிவத்தில் வேறொரு சந்தர்ப்பத்தில் நம்மை எதிர்கொள்ளத்தான் போகிறது. எனவே ஒடுக்கும் முறைகளை அவற்றின் கருத்தியல் வலிமையை ஒழிக்கவே கூட்டாக உழைக்கவும் சிந்திக்கவும் வேண்டியுள்ளது.

சுதேச வழிபாட்டு முறையிருந்த ஏராளமான இடங்கள் இன்று பெயர் மாற்றப்பட்டு வைதீகக் கோயில்களாக்கப் பட்டிருக்கின்றன. உதாரணத்திற்குப் புங்குடுதீவு தொடக்கம் வற்றாப்பளைவரை, அதற்கும் அப்பால் இவை மேல்நிலையாக்கத்தின் மூலம் ஆகம நெறிப்பட்டவையாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. வற்றாப்பளை போன்ற கண்ணகை வழிபாட்டுக்குரிய உள்ளூர்ப் பண்பாட்டு வழிபாட்டிடங்கள் ஆகம முறைக்குள் கொண்டு செல்லப்பட்டு மக்களின் புழக்கமான நெருக்கமான இடங்கள் அவர்களிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டு கட்டடங்களாகவும் கோபுரங்களாகவும் ஒழுங்கமைக்கப்பட்டு கண்ணகை, புவனேஸ்வரி அல்லது இராஜ ராஜேஸ்வரியாக இருத்தப்பட்டு, கண்ணகையும் ஆகம விதிகளின் படி வெளியேற்றப் பட்டிருக்கிறார்.

இவ்வாறு மாற்றுதல், இல்லாது செய்தல் போன்றவை அவ்வழிபாட்டு முறையுடன் சேர்ந்து வந்த எல்லாவித பண்பாட்டுக் விடயங்களையும் சேர்த்தே அகற்றிவிடுகிறது.

உள்ளூர் வழிபாட்டு முறைகளில் உள்ள பண்பாட்டுக் கூறுகளை இல்லாதொழித்து ஆதிக்க ஒழுங்குள்ள இறக்குமதி செய்யப் பட்ட மரபுகளைத், தொன்மங்களை, வரலாற்றை மக்களின் வாழ்க்கை முறைக்குள் அவர்களையே நம்பச் செய்து திணிக்கக் கூடிய பெருந் தெய்வப் பண்பாடுகள் இன்று நம்முடைய சுதேச வழிபாட்டு முறையின் ஏராளம் விடயங்களை இல்லாது செய்துள்ளன.

பன்றித்தலைச்சிக் கண்ணகை பற்றி அக்கிராமத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுடன் உரையாடும்போது அதை அம்மன் கோவிலாகவே அறிந்திருந்தனர். அது ஒரு கண்ணகை கோவில் என்பதோ அடிப்படையில் அது தொல்கதைகள் நிலவும் ஒரு வழிபாட்டு வெளியாகவோ அறியப்பட்டிருக்கவில்லை. அதை அம்மன் கோவிலாக மாற்றும் போது தொல்கதைகள், சடங்குகள், போன்றவையும் கைவிடப்படுகின்றன.

சுதேசப் பண்பாடுகள் மூடநம்பிக்கைகள் உள்ளவை என்று சொல்லக் கூடிய பெருங்கோவில் பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் முன்வைக்கக் கூடிய குருதிப்பலி பற்றிய மூடநம்பிக்கை, என்ற வாதத்தை எடுத்துக்கொள்வோம் .மக்களின் உணவுப் பண்பாட்டைச் சேர்ந்த விலங்குப் பலியைத் தடைசெய்வது இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி இந்துத்துவத்தைப் பின்பற்றத்தக்க மதவாத அமைப்புக்களால் முன்னெடுக்கப்படுகின்றன, இலங்கையில் எல்லாச் சிறுபான்மையினங்களையும் ஒடுக்கும் நிறுவன பெளத்தத்துடன் இணைந்து நின்றும் செல்லத்தக்க இத்தரப்புகள் மக்களின் உணவுப் பண்பாட்டை மூட நம்பிக்கை, புனிதம் என்பவற்றைச் சொல்லி அழிக்கக் கூடிய தந்திரங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டியதும் எதிராகச் செயற்பட வேண்டியதும் முக்கியம். கவுணாவத்தை வேள்வி தடை செய்யப்பட்ட போதும் அத்தடைகளுக்கு எதிராகப் போராடிய போதும் நாம் ஒடுக்கப்படக்கூடிய மக்களின் பக்கமே நின்றோம்.

அவர்களிடம் உள்ள உணவுப் பண்பாட்டில் இருந்து பலியை நீக்குவதா இல்லையா என்பதை அவர்களே சிந்திக்க வேண்டும், அவர்களின் அரசியல்மயப்படலே அதனை முடிவெடுக்க வைக்க வேண்டும் .ஆனால் அவர்களை ஒடுக்குவதைச் சுரண்டுவதை உள்நோக்கங்களாக் கொண்ட அமைப்புகள், சித்தாந்தங்கள், பலி போன்றவற்றைச் சாட்டாகவைத்துக் கொண்டு விளிம்பு நிலைமக்களின் பண்பாட்டை ஒழிக்க முற்படும் போதும் நாம் அம்மக்களோடு நிற்கவேண்டும்.

உள்ளூர்ப் பண்பாடுகள் மரபுரிமைகளாகக் கருதப்படுவதும் ஆவணப்படுத்தப்படுவதும் அரசியல்மயப்படுதலின் பின்னணியினைச் சேர்ந்தவையாக இருக்க வேண்டும். நாம் ஒடுக்கு முறையற்ற மரபுகளை மரபுரிமைகளாகப் பேணவும் ஆவணமாக்கிக் கொண்டு கடத்தவும் வேண்டியிருக்கும் அதேவேளை, அசமத்துவங்களும் பிற்போக்கும் கொண்ட மரபுகளை விமர்சன பூர்வமாக அணுகி அவ் அசமத்துவங்களை நீக்கும் அல்லது வலுவிழக்கச் செய்துவிடும் சிந்தனைப் புலத்தை உருவாக்க வேண்டும்.

(அங்கணாமக்கடவையில் நடந்த தொன்ம யாத்திரை 6 இல் விதை குழுமச் செயற்பாட்டாளர் யதார்த்தனால் நிகழ்த்தப்பட்ட உரையின் விரிவாக்கப்பட்ட வடிவம்)

*

கண்ணகை வழிபாட்டு மரபையும் அதனோடு இணைந்த பண்பாட்டுக்கூறுகளையும் அறிவதையும் ஆவணப்படுத்துவதையும் அதன் மரபுரிமைத்தன்மையினைப் பகிர்ந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்ட இந்தத் தொன்ம யாத்திரை, செப்ரம்பர் 27, 2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10. 30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அங்கணாமக்கடவையில் இடம்பெற்றது.

தோழமையுடன்
விதை குழுமம்

Related posts

சமத்துவத்தின் இசை

vithai

கதையும் பாட்டும் கதையும்

vithai

தொன்ம யாத்திரை- 2 குருவிக்காடு

vithai

மோட்டார் – சைக்கிள் குறிப்புக்கள் -01

vithai

கடந்த வருடச்செயற்பாடுகள் மற்றும் இந்தவருடத்திற்கான செயற்பாடுகள் மீதான மீள்பார்வை (2016))

vithai

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது ?

vithai

Leave a Comment