vithaikulumam.com
செயற்பாடுகள் தொன்ம யாத்திரை

சமத்துவத்தின் இசை

பறை வாத்தியம் மனிதர்களுடன் நெடுங் காலம் சேர்ந்து வாழும் ஓர் இசைக்கருவி. ஆதியில் விலங்கு விரட்டவும், செய்தி சொல்லவும் தொடங்கி, பின்னர் மகிழ்ச்சியின் இசையாகவும் துயரத்தின் வலி போக்கியாகவும் இன்று வரை தொடர்ந்து வருகிறது. எல்லா இசைக்கருவிகளையும் போல் அல்லாது பறையிசையை துயரத்திற்கானதொரு இசையாகச் சாதி ஆதிக்கம் மாற்றியது. ஆனால் அதன் வாழும் தன்மையென்பது மக்கள் தெய்வங்களுடன் அதற்கிருக்கும் உறவினால் நிலை பெற்றிருப்பது. மக்கள் தெய்வங்களின் இசை பறை. அவர்களை உருவேற்றுவது, சாந்தப்படுத்துவது, களிப்பேற்றுவது, தன்னிலை மறந்து ஆட வைப்பது பறையிசையின் குணங்கள்.

சாதி ஆதிக்க மனநிலைகளால் மகிழ்ச்சியின் பகுதியாகவிருந்த இசை, துயரத்திற்கும் இழப்பிற்கானதுமாகவே பொதுச் சமூகம் பயன்படுத்தி வருகிறது. பறை வாத்தியக் கலைஞர்களின் இசைப் பங்களிப்பு மற்றும் அறிவை அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தவும், புதிய இசை வடிவங்களை உண்டாக்கவும் இந்தச் சமூக மனநிலை ஒரு தடையாகவே நமது காலத்திலும் நீடிக்கிறது. தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால், சமூக நீதி பற்றிய உரையாடலின் விரிவாக்கத்தினால் பறை ஒரு பொதுச் சமூகத்தின் எல்லா நிகழ்வுகளுக்குமான கருவியாக மாறி வருகின்றது. அங்கு அது தனியே இழப்பிற்கானது மட்டுமல்ல, மக்கள் தெய்வங்களிற்குள்ளும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. பறை நமது காலத்தில் விடுதலையின் கருவி, அதன் இசை சமூக நீதிக்காக ஒலிக்கும் அனைவரினதும் குரல். பறை வாத்தியத்தை சாதிய அடுக்குகளுக்குள் கட்டுப்படுத்த நினைத்தவர்களிற்கு எதிரான கலகம்.

ஈழத்துச் சூழலில் பறை பல்வேறு வகையான பயில்வுகளுக்குள் சென்று கொண்டிருக்கிறது. கூத்தின் வடிவங்களும், சில செயல்வாதக் குழுக்களும், சில தன்னார்வலர்களும், சில பொது நிகழ்வுகளும் அதன் தன்மையை சாதிய நிலவரத்திற்குள் இருந்து விடுவிக்க முயற்சி செய்கிறார்கள். அதுவொரு முக்கியமான முன்னெடுப்பு. ஒரு கருவியை அதன் எல்லைகளுக்குள் இருந்து பொதுவானதாக மாற்றும் போதே அதன் நிலைத்திருப்பு நீண்ட காலத்திற்கானதாய் மாறும். உதாரணத்திற்கு, மரணத்திற்கு மட்டுமானதாகவும், மக்கள் தெய்வங்களுக்கு மட்டுமானதாகவும் இருக்கும் பறையை பிறப்பிற்கும் இணையேற்புக்கும், பொது நிகழ்வுகளிற்கும், கொண்டாட்டத்திற்குமானதாக மாற்றும் போது பறை வாத்தியக் கலைஞர்களின் பொருளாதாரம் மேம்படும், சமத்துவமும் சுயமரியாதையும் பெருகும். அதன் வழி நாம் பறையிசையை சமத்துவத்தின் குறியீடாக ஆக்கிக் கொள்ள முடியும். எல்லா இசைக் கருவிகளும் உயிர்களிற்கு ஈர்ப்பையும் அசைவையும் உண்டாக்கக் கூடியவை. அவற்றில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. அவை ஒன்றாக இசைக்கப்படக் கூடியவை என்ற நிலைமையை நாம் உருவாக்க வேண்டும்.

தொன்ம யாத்திரையின் ஆறாவது நிகழ்வு, அங்கணாமக்கடவை என்ற கண்ணகை கோயிலையும் அதனைச் சார்ந்த மரபுரிமைகளைப் பற்றிய உரையாடலையும் நோக்கமாகக் கொண்டது. அதன் தொடக்க இசையாக பறையிசையை வழங்கியிருந்தனர் கின்னரம் குழுவினர். ஈழத்தின் இருமுகப் பறையும், மலையகத்திலும் தமிழகத்திலும் பயன்படுத்தும் ஒருமுகப் பறையையும் இணைத்து வாசிக்கும் போது உண்டாகும் இசையின் கோர்ப்பை கின்னரம் குழுவினர் நிகழ்த்தினர். ஒருமுகப்பறை ஈழத்துச் சூழலுக்கு வருவதென்பது பண்பாட்டுத்திணிப்போ அல்லது அடக்குமுறையின் வடிவமோ அல்ல. அது அடக்குமுறைக்கு எதிரான பண்பாட்டுப் பரிமாற்றம். அதற்குச் சமூக நீதியின் அரசியல் உண்டு. எந்தக் கருவிகளும் மனிதர்களுக்குள் பரிமாறிக் கொள்ளப்படத் தக்கவை. அதன் இசையும் அரசியலும் சேர்த்தே இங்கு பரிமாறப்படுகின்றது. அதன் வழியே தான் மனிதர்கள் தங்களின் அசமத்துவங்களில் இருந்தும் பிற்போக்கான பார்வைகளில் இருந்தும் மீறி, சமத்துவத்தையும் சுயமரியாதையையும் நோக்கி அரசியல்மயப்பட முடியும்.

இங்கு நிகழும் இணைப்புப் பல்லாயிரம் கைகளில் வலியுடன் ஒலித்த பறைகளின் இசை. நமது காலத்தில் அவை கொண்டாட்டத்தின் இசையாகவும் சமூக நீதிக்காகவும் ஓங்கி ஒலிக்கட்டும்.

தோழமையுடன்
விதை குழுமம்

Related posts

தொன்ம யாத்திரை 01 முன்கள ஆய்வு

vithai

”கடவுள் இருக்கான் குமாரு – மோட்டார் –சைக்கிள் குறிப்புக்கள் 02

vithai

விளையாட்டும் காயமும்

vithai

குழந்தைகளின் கதைகள்

vithai

மழைத் தெய்வம்

vithai

கொட்டகை : 01

vithai

Leave a Comment