vithaikulumam.com
செயற்பாடுகள்

ஆணும் பெண்ணும் சிறுவர் உரிமைகளும்

சிறுவர்கள் அவர்களின் கொண்டாட்டத்தை எப்போதும் பகிர்வின் வழியே பெருக்கிக் கொள்வதையே விரும்புவார்கள். ஆனால் வளர வளர அந்தப் பகிர்வின் எல்லையை நம் அன்றாட வட்டமொன்றிற்குள் சுருக்கிக் கொள்கிறோம். தனித்திருக்கும் மகிழ்ச்சியென்று ஒன்றில்லை. இந்த வாழ்வை அதன் பொழுதுகளைப் பகிர்ந்திருப்பதே மகிழ்ச்சி. மனிதம் குழுவினரின் அழைப்பின் பெயரில் கிளிநொச்சியில் உள்ள கோணாவில் மகா வித்தியாலயம் என்ற பாடசாலையின் சிறுவர் தினக் கொண்டாட்டத்திற்கு விதை குழுமம் சார்பில் எமது செயற்பாட்டாளர்களும் பங்குபற்றினர். மேலும் இந்த நிகழ்வில் சிறகுகள் அமையத்தின் செயற்பாட்டாளர்களும் சமூக ஆர்வலர்களும், உள்ளூர் மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டனர். ஏராளமான மாணவர்கள் என்றபடியால், ஒவ்வொரு அமைப்பினரும் ஒவ்வொரு பிரிவான மாணவர்களோடு இணைந்து செயற்படுவது என்று முன்னரே திட்டமிட்டிருந்தோம். அதன் படி விதை குழுமம் உயர்தர மாணவர்களுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தது.

சிறுவர்கள் வளர வளர அவர்கள் தமது பாலின அடிப்படையில் பிரிந்து கொண்டே செல்வது போல் நமது சமூகச் சூழ்நிலை அமைந்திருக்கிறது. ஆணும் பெண்ணும் எதிர்த் தரப்பாகவே தங்களை நம்பிக்கொள்கிறார்கள். அதன் வழி உண்டாகும் அசமத்துவமான பார்வைகளும் விலகல்களும் அவர்களைத் தாம் ஒன்றென்பதை உணர விடாது தடுக்கின்றது. தாம் சமமானவர்கள் என்பதையும் அவர்களுக்கே உரிய விசேட பிரச்சினைகள் எப்படி உருவாக்கி வருகின்றன என்பதையும் அவை எப்படி ஒருவரை ஒருவர் அறிய விடாமல் செய்கின்றன என்பது பற்றியும் அறியாதுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில், பெண்களிடம், ஆண்களுக்கு சமூகத்தில் உள்ள பத்துப் பிரச்சினைகள் பற்றியும், ஆண்களிடம் பெண்களுக்குள்ள பத்துப் பிரச்சினைகள் எவை என்பதையும் அவர்களுக்குள்ளால் கலந்துரையாடிச் சொல்லச் சொன்னோம். பெண்கள், ” ஆண்கள் வேகமாக பைக் ஓடுகிறார்கள், தற்கொலை செய்து கொள்கிறார்கள், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகுகிறார்கள், சண்டை பிடிக்கிறார்கள், படிப்பை இடையில் விட்டு வேலைக்குப் போகிறார்கள்.. என்று தமது அவதானங்களைச் சொன்னார்கள். ஆண்கள், பெண்கள் தொடர்பில், அடிப்படையில் அவர்களின் அழகின் மீதே அதிக கவனம் செல்வதாகவும், காதலிப்பது தொடர்பில் நம்பிக்கையின்மைகள் பற்றியும் சொன்னார்கள். இப்படியாக அவர்களின் புரிதல்கள் இருந்தன. நாம் அவர்களுக்கு வேறு சில உதாரணங்களையும் பிரச்சினைகளையும் சொன்னோம், சிறுவர்கள் எதிர்கொள்ளும் துஷ்பிரயோகங்களைப் பற்றியும் வேறு என்ன வகையில் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றியும் சிறிது விளக்கினோம். பிறகு பெண்களும் ஆண்களும் தங்களுக்கு நேரும் ஐந்து பிரச்சினைகளைப் பற்றிச் சொல்லுங்கள் என்று சொன்னோம். எமது செயற்பாட்டாளரொருவர் தனக்குச் சிறுவயதில் இடம்பெற்ற துஷ்பிரயோகச் சம்பவம் ஒன்றை விபரித்து அதை அந்த நேரத்தில் தன்னால் ஏன் வெளிப்படுத்த முடியவில்லை என்ற காரணங்களையும் சொல்ல, மாணவர்கள் அமைதியாகினார்கள், சிலர் முகங்கள் சோகமாகி மவுனமாகி விட இடைவேளை ஒன்றை எடுத்தோம். பின்னர் அவர்கள் பதிலளித்த போது ஆண்கள் சில பிரச்சினைகளைக் கூறினார்கள். பெண்கள், பஸ்ஸில் போக முடியவில்லை, ரோட்டில் போக முடியவில்லை, சிறு வயதுத் திருமணங்கள், ஆண்களை நம்ப முடியவில்லை என்று தாம் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்குள் வந்து சேர்ந்தார்கள். அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் சிறிது நேரம் உரையாடலை நடாத்திச் சென்று, ஒருவரின் பிரச்சினையை இன்னொருவர் அறிய வேண்டியதன் தேவையைப் பற்றி விளக்கினோம். பின்னர் சில பாடல்களைப் பாடினோம். ஒரு சிறிய நடிப்பையும் மாணவர்களுடன் சேர்ந்து செய்தோம். ஆர்வமுடன் பங்குபற்றினார்கள்.

பின்னர் காதல் என்றால் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் என்று கேட்டோம். ஆரம்பத்திலிருந்தே அவர்களின் உரையாடலில் தம்மை எதிர்பாலினத்தவராக மட்டுமே விளங்கிக் கொள்ளும் போக்கை அவதானித்தபடியால் இந்தக் கேள்வியை அவர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்று பார்த்தோம். முழுவதும் சினிமா வசனங்களைச் சொன்னார்கள். உதாரணத்திற்குப், பெண்கள், காதலிற்குக் கண்கள் இல்லையென்று சொன்னால் ஆண்கள் காதுகளில்லையென்று சொன்னார்கள். நீங்கள் காதல் பற்றி எப்படி அறிகிறீர்கள் என்பதற்கும் பதில்களை எங்கிருந்து பெறுகிறீர்கள் என்பதற்கும் வந்த ஒரே பதில் “படம் பார்த்துத் தான்” என்பதாகவிருந்தது. நாம் சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களிடம் உரையாடும் பொழுதெல்லாம் எல்லா இடங்களிலும் எழும் ஆதாரமான கேள்விகளில் ஒன்று “காதல் என்றால் என்ன?” என்பது. நாம் அவதானித்தால் இன்னும் சிறிய வயதுள்ள சிறுவர்களுக்கே காதல் என்பதின் மீது ஆர்வம் உண்டு. காதலைப் பற்றி அவர்கள் அறிவதன் ஆர்வமென்பது அவர்களின் வயதிற்குரியது. அதே நேரம் காதலைப் பற்றி அறியும் உரிமையும் அவர்களுக்கிருக்கிறது. அந்தக் கேள்வியை நாம் விலக்கக் கூடாது. ஆசிரியர்களும் பெற்றோரும் அக் கேள்விகளை விலக்கும் போது சினிமாவே அவர்களுக்குக் காதலைக் கற்பிக்கிறது. எவ்வளவு மோசமான ஆசிரியர் நமது சினிமா? அதன் வழி அவர்கள் அறிபவற்றை அவர்களது நேரடி வாழ்க்கையில் பிரயோகிக்கிறார்கள். அதனால் அவர்கள் பல நேரங்களில் தவறான புரிதல்களுக்கே சென்று சேர்க்கிறார்கள். இது அவர்களின் இளவயதின் இயல்புகளைத் தீர்மானிக்கும் கருத்தாக மாறுகின்றது. ஆகவே இந்தக் கேள்விகளுக்கான சரியான, அவர்களுக்கு விளங்கும் வகையிலான பதில்களைப் பெற்றோரும் ஆசிரியர்களும் சமூகமும் சொல்ல வேண்டும். அவர்கள் கொண்டு வரும் எந்தக் கேள்வியையும் விலக்கத் தேவையில்லை. அப்படி நாம் விலக்கும் போது அவர்கள் கேள்வியைக் கைவிடுவதில்லை. அதற்கான பதிலை எங்கெல்லாம் காண்கிறார்களோ அங்கிருந்தெல்லாம் எடுத்துக் கொள்கிறார்கள், நம்புகிறார்கள். மேலும் அப்படித்தான் அதை ஒரு ரகசியமாக ஆக்கிக் கொள்கிறார்கள்.

சிறிது நேரத்தின் பின்னர், அவர்களின் தேவைகள் என்ன, ஆண்களும் பெண்களும் ஒன்றாகச் சேர்ந்திருப்பதன் முக்கியம் என்ன, அதை எப்படிச் செய்வது, சிறுவர்களின் உரிமைகள் என்றால் என்ன, அவற்றை அடைய ஒன்றாயிருப்பதன் அவசியம் என்ன, பொதுத் தேவைகளின் பொருட்டு எமக்குள் உள்ள பிரச்சினைகளைக் கைவிட்டு இணைய வேண்டியதன் அவசியம் என்பன பற்றி அவர்கள் சொன்ன தமது பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு உதாரணங்களைச் சொல்லி விளக்கினோம். பின்னர் கரம் போர்ட், கிரிக்கெட் மற்றும் கொடி எடுத்தல் போன்ற விளையாட்டுகளை விளையாடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டோம்.

சிறுவர்களுக்கான உரிமைகள் வீடு, பள்ளிக்கூடம், சமூகம் ஆகிய எல்லாத் தளங்களிலும் தொடர்ந்தும் பெருமளவில் மறுக்கப்பட்டே வருகின்றன. அவர்களை சுயமரியாதையுடனும் சமத்துவத்துடனும் நாம் அணுகுவதில்லை. அதையே சிறுவர்களும் பார்த்து வளர்கிறார்கள். மறுவளமாக நாம் அவர்களைச் சமமாக மதிக்க வேண்டும். அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளை அறியவும் அவற்றைத் தீர்ப்பதற்கான உரையாடல்களை வளர்ப்பதும் அவர்களது உரிமைகளுக்காகப் போராடக் கற்றுக் கொடுப்பதும் சிறுவர்களுக்கான நாளில் அவர்களுக்கு நாம் செய்யக் கூடியது. அவர்கள் விரைவில் விளங்கிக் கொள்ளக் கூடியவர்கள், தம்மை மாற்றிக் கொள்ளக் கூடியவர்கள், அச்சம் குறைந்தவர்கள். அவர்களின் கற்றலில் விடுபடுதல்கள் இருக்கின்றன. அவற்றை நாம் இட்டு நிரப்ப வேண்டியிருக்கிறது. ஆனால் அது ஒரு நாள் விசயமல்ல. தொடர்ச்சியான உரையாடலும் உண்மையான அவர்களின் பிரச்சினைகள் பற்றிய உண்மையான தீர்வுகளுமே அவர்களை ஆழமான வகையில் சமூகமாக உணரச் செய்யும். அப்பொழுதே தமது பிரச்சினைகளை சமூகத்தின் பொதுப் பிரச்சினைகளுடன் இணைத்து விளங்கிக் கொள்ளும் கற்றல் நிகழும்.

தோழமையுடன்
விதை குழுமம்

ஒளிப்படம் – கிரிஷா சுரேந்திரன்

Related posts

பாராளுமன்ற தேர்தல் நிலவரங்கள் தொடர்பான உரையாடல்

vithai

போராடுவது என்றால் என்ன?

vithai

கோரானா பெருந்தொற்றுக்கால உதவிகள்

vithai

நிலத்தடி நீர் மாசுபடல் தொடர்பில் தமிழ் சிங்கள முஸ்லீம் இளைஞர்கள் இணைந்து விழிப்புணர்வுச் செயற்பாடு

vithai

தொன்ம யாத்திரை -6 பெண் நடந்த பாதை – முன்கள ஆய்வு

vithai

குழந்தைகளின் கதைகள்

vithai

Leave a Comment