vithaikulumam.com
செயற்பாடுகள் தொன்ம யாத்திரை

கிட்டிப்புள் விளையாடின கதை – நிலத்தில் விளையாடுதல் பற்றிய குறிப்பு

“புளியங்காணிக்கை, றாம் வீட்டை, வயலுக்கை, எங்கடை வீட்டை எண்டு கிட்டிப்புள்ளு விளையாடின இடங்களை இப்ப யோசிச்சுப் பாக்கிறன்; விருப்பமான கிட்டியும் புள்ளும், சொந்தக் கிட்டியும் புள்ளும் எண்டு கடும் விளையாட்டுதான் விளையாடி இருக்கிறம் எண்டு இருந்திச்சு. ஆனால் ‘அங்கணாமக்கடவையில கிட்டிப்புள்ளு விளையாடுவன் எண்டு நான் நினைச்சே பாக்கேல்லை’.

*முதலாமாட்டம் கச்செண்டால் எல்லாரும் அவுட்
*மறுத்தான் பிடிச்சால் எல்லாம் கூழ்
*கால்ல பட்டா இரண்டு அளக்கோணும்
*பின்னுக்கடிக்கேலா
*கணக்கு பிழையாச்சொன்னா சேப்பில்லை
*கிளப்பம் இருக்கோ-இல்லையோ
(குறிப்பிட்ட அளவு தொகை எடுத்திருந்தால் அவுட்டான ஒருவரை திரும்ப எடுக்கலாம்).

கிட்டிப்புள்ளு மாத்திரமல்ல கொஞ்சக்காலத்துக்கு ஒரு விளையாட்டு என வெவ்வேறு இடங்களில் விதவிதமாக விளையாடி இருக்கிறோம் என நினைக்கையில் பால்யத்தின் கூட்டுணர்வும் உயிர்த்திருத்தலும் யுத்த காலங்களிலும் நம்மைத் துவண்டு விடாதிருக்க உதவியிருக்கிறது என்பதை உணர முடிகிறது. கூடியிருத்தலும் பகிர்தலும் மாறுதலுக்கும் ஆறுதலுக்கும் கருவியாய் இருந்திருக்கிறது என்பதுதான் உண்மையானதும் முக்கியமானதுமாகும்.

கிட்டத்தட்டப் பதினைந்து வருடங்களுக்கு பிறகு கிட்டிப்புள் விளையாடியிருக்கிறேன்; வயது வித்தியாசமில்லாமல் எல்லோரும் மைதானத்தில் இருக்கையில் அவ்வளவு உற்சாகம் தொற்றிக்கொள்கிறது மனதில். கொய்யாத்தடியில் கிட்டியும் புள்ளும் செய்துகொண்டு வந்திருந்தார்கள் நண்பர்கள்; தரமான தயாரிப்பு. கொஞ்சப்பேர் பறை வாசிக்க இங்கால கொஞ்சப்பேர் விளையாட அங்கால கொஞ்சப்பேர் உரையாட என அந்த இடமே கலவையான மகிழ்வால் நிரம்பியிருந்தது. பெரும்பாலானவர்கள் இதுவரையும் கிட்டிப்புள் விளையாடியே இருக்காதவர்களாக இருந்தார்கள் “நானும், நானும்” என்று ஆசைக்கு எல்லோரும் வெயிலைப் பாராமல் உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் கலந்துகொண்டார்கள்.

நாங்கள் கிட்டிப்புள் விளையாடும் போது வீட்டிலிருந்து ‘யன்னலுக்குள்ளாலயோ’, எங்களை கடந்து போகும் பொழுதோ ‘கவனமடா, கவனமா அடியுங்கோடா’ ‘வெயிலுக்க நிண்டு விளையாட வேண்டாம்’ என்றோ அனிச்சையாக அம்மாவோ, மாமாவோ, அம்மம்மாவோ, ஊரில இருக்கிற வயதான ஒருவரோ ஒரு நினைவூட்டலை செய்து கொண்டிருப்பார்கள். விளையாட்டு ஆகக்கூடினால், குழுக்கள் குழம்புகிற நிலை வந்தால் ‘உதெல்லோ விளையாட வேண்டாம் எண்டு சொன்னாங்கள்’ என்று தொடர்ச்சியாகக்கூறி எங்களை இன்னொரு விளையாட்டுக்கு மாற்றி விடுகிற தந்திரமும் அவர்களிடம் இருந்தது. ஒற்றுமையும் கூட்டுணர்வும்தான் அவர்களுக்கு தேவையே ஒழிய அங்கே அவர்கள் விளையாட்டை மறுக்கவில்லை என்பதை மீண்டும் அடுத்த சுழற்சியில் கிட்டிப்புள்ளுக்கு ‘தும்புத்தடி கொட்டன்’ வெட்டுவதில் உதவும் பொழுது நாம் உணர்வோம்.

‘அராத்துறது’ எண்டொரு நுணுக்கமிருக்கிறது. தடுப்பில் ஈடுபடுகிறவர் மிக அருகிலிருந்து புள்ளைப் போடும் பொழுது கிடங்குங்குப் பக்கத்தில் விழாமல் தடுப்பதற்காகப் பயன்படுத்தும் ஒரு தடுப்பு முறை; கிட்டியால் தொடர்ச்சியாகக் கிடங்கு இருக்குமிடத்தில் அங்குமிங்குமாய் அசைத்துத் தடுத்தல்.

புள்ளை நிலத்தில் விழாமல் இரண்டு தரம் தட்டி அடித்தால் அல்லது எத்தனை முறை தட்டி அடிக்கிறோமோ அது எங்களுடைய புள்ளியை அத்தனை மடங்காக பெருக்கித்தரும் அடித்தல் முறை.

புள்ளை அடிக்கும் பொழுது மறுத்துப்பிடித்தலே மறுத்தான் என்கிற ஒரு லாவகமானதும் விரைவானதூன தடுப்பு முறை.

குழுவில் திறமையானவர்களாக கிட்டியைக் குறுக்காக வைக்கும் பொழுது இலக்காக எறிபவர்கள், அடி முறைகளில் தனித்திறமை இருப்பவர்கள், நன்றாக மறுத்தான் பிடிக்கக்கூடியவர்கள் போன்றவர்கள் இருப்பார்கள். கன்னை பிரிக்கும் பொழுது அப்படித்தான் சமன் செய்து பிரிந்து விளையாடுவோம். விளையாட்டிலும் பார்க்க விளையாட்டுக்குத் தயாராகும் படிமுறைகள் சுவாரசியமானவை. முதல் நாளே கிட்டியும் புள்ளும் தயாரித்தல், இடம் தீர்மானித்தல், அதனை தயார்படுத்தல், நேரம் முடிவு செய்தல் என சேர்ந்தியங்குதலின் அடிப்படையான கூறுகளைக்கொண்டவை அவை.

நாம் கூட்டாக நிலத்தில் இறங்கி விளையாடுவதைத் தவிர்த்துத் திரையில் விளையாடும் காலத்தில் இருக்கிறோம் நேரே வியர்வையும் புழுதியும் சேர்ந்து நிகழ வேண்டிய ஒரு சமூக நேசத்தின் வெளியை நீங்கிக்கொண்டிருக்கிறோம் என்பது சமூக கூட்டிணைவில் சரிவைத் தருகிற துயரம். விளையாடப்போனால் படிப்பைக் கவனிக்கேலாது என்று ஐந்தாம் ஆண்டுப் பிள்ளைக்கே நாள் முழுக்க ரியுசனுக்கு விடுகிற பெற்றவர்களை உருவாக்கியிருக்கிறது நமது சமூகமும் கற்பித்தல் முறைமையும். பிள்ளைகளைப் பழக விடுங்கள். நிலத்தில் இறங்காத குழந்தைக்கு இந்த உலகம் கால்களுக்கு அடியிலிருப்பதை நம்ப முடிவதில்லை.

(அங்கணாமக்கடவையில் இடம்பெற்ற தொன்ம யாத்திரை 6 இன் பின்னர் எழுதப்பட்டது)

பாலசுப்பிரமணியம் காண்டீபராஜ்

Related posts

தொன்ம யாத்திரை 01 முன்கள ஆய்வு

vithai

காட்டுப்புலம் – ஓரு சமூக உரையாடல் – 1

vithai

சமத்துவத்தின் இசை

vithai

பள்ளிப்பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை

vithai

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது ?

vithai

சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஓயில் கலந்தமை தொடர்பான பொதுவெளிக் கலந்துரையாடல்.

vithai

Leave a Comment