vithaikulumam.com
செயற்பாடுகள்

குழப்படி, களவு மற்றும் தண்டனைகள்

முதற் பொய்யை, முதற் களவை, முதற் தண்டனையை நாம் ஞாபகம் கொள்வது குறைவு. அது நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மிகச் சிறிய வயதிலேயே நடந்து விடுகிறது. சொல்லப்படுகின்ற உண்மையை ஏற்றுக்கொள்ளாத போது, பொய் பிறக்கிறது. ஆசையின் தொடக்கம் களவு. இவற்றின் வழி எதன் போதோ தண்டனை பெற்று விடுகிறோம். இது போக மனிதக் குட்டியொன்றாக உருண்டு, தவழ்ந்து, நடந்து, பாய்ந்து, துள்ளி, ஓடிப் புலன்கள் விரிந்து உடலால் உலகை அறியும் போது உலகில் ஒட்டியுள்ள அனைத்தும் நம் மீது படியும். பொய், தந்திரம், ரகசியம், தன்முனைப்பு எல்லாமும் நம் மீது படரும்.

குழந்தையாய் இருக்கும் போது நிகழ்பவை ‘தவறுகள்’. அவை குற்றமல்ல. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள், அவற்றைக் குற்றமாகக் கருதி அவற்றுக்குத் தண்டனைகளை வழங்கிறார்கள். அதன்படி தான் செய்வது குற்றம் என்று கருதும் குழந்தைகள் அதனைச் செய்வதன் காரணமாக குற்றவுணர்ச்சியடையத் தொடங்குகிறார்கள். தவறுகள் திருத்தம் செய்யப்படக் கூடியவை என்ற அறிதல் பெற்றோருக்குத் தேவை. தண்டனைகள் தேவையற்றவை. நாம் நமது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர, தண்டனைகளை வழங்கக் கூடாது. அந்த இடத்தில் நாம் குற்றவுணர்ச்சிக்குப் பதில் அறவுணர்சியைத் தூண்ட வேண்டும். குழந்தைகளுக்கு அவற்றை அறம் தொடர்பான பிரச்சினைகளாகச் சொல்ல வேண்டும். நமது ஆதாரமான இச்சைகளை இல்லாமல் செய்வது கடினம். ஆனால் அவற்றை அறங்களால் காக்கலாம். நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் அறங்கள் காலத்தால், அறிதலால் மாறுபடக் கூடியவை. அந்த நெகிழ்வும் குழந்தைகள் அறிய வேண்டியவையே.

தொட்டிலடி, கண்ணன் முன்பள்ளியில் கதை சொல்லலும் கலந்துரையாடலும் விளையாடலுமான, குழந்தைகளுக்கும் சிறுவர்களிற்குமான நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் போது கதையுடன் சேர்த்தே அவர்களிடம் அவர்களுடைய களவுகள் பற்றிய அனுபவங்களைக் கேட்டோம். பெரும்பாலானவர்கள், பேனா, பென்சில், அழி றப்பர், சாப்பாட்டுச் சாமான்கள் களவெடுத்ததாகச் சொன்னார்கள். களவெடுக்க எது அவர்களைத் தூண்டியது என்று கேட்டோம். முதலில் தேவையென்று சொன்னவர்கள் பின்னர் கொஞ்சம் யோசித்து ‘ஆசை’ என்று சொன்னார்கள்.

பிறகு “வீட்டில் இல்லாட்டிப் படிக்கிற இடங்களில அடி வாங்கிறனியளா?” என்று கேட்டோம். ஒரு சிலரைத் தவிர அனேகமானவர்கள் எல்லா இடங்களிலும் தண்டனைகளைப் பெறுகிறார்கள். குழப்படி செய்தால், மார்க்ஸ் குறைஞ்சால், பபிள்கம் சாப்பிட்டால், போன்ல கேம் விளையாடினால், யூடியூப்ல கதை பார்த்தால், வகுப்பில் சாய்ந்திருந்தால், வாய் பார்த்தால், கதிரையில் செங்குத்தாய் நேராய் இருக்காமலிருந்தால் என்று பல்வேறு சந்தர்ப்பங்களைச் சொன்னார்கள், “குழப்படி செய்யிறதெண்டா என்ன?” என்று கேட்டோம். அடிபடுறது, ஓடுறது, பாயிறது, ரொக்கெட் விடுறது என்று ஒரு பட்டியலைச் சொன்னார்கள். அவர்கள் தண்டனைகளால் தம் இயலாமையை அறிகிறார்கள். யாருக்குப் பயப்பட வேண்டுமென்பதை கண்டுணர்கிறார்கள். நிகழ்வு தொடங்க முதல் ஒரு குழந்தை அமைதியாக இருந்தார். அவருக்குத் தயக்கமிருக்கும் என்று அவரிடம் கதைத்துப் பார்த்தோம். அவர் திரும்பக் கதைக்கவில்லை. தன்னைக் கொண்டு வந்து விட்ட ஒரு வயதானவர் செல்வதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் சென்று மறைந்ததும், நிகழ்ச்சி முடியும் வரை கத்திப் பாய்ந்து மகிழ்ந்து திரிந்தார். பிறகு செல்லும் போது மறுபடியும் அமைதியாகி விட்டார். அந்தக் குழந்தைக்கு நாம் அளித்திருக்கும் பண்பும் அறிவும் என்ன. அவர்களின் இயல்பான குணங்களை அறியாமல் அவர்களை நாம் கட்டுப்படுத்துகிறோம். மாறாக நாம் செய்ய வேண்டியது அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது.

குழந்தைகள் கற்பதற்கு நாம் உணர வேண்டிய அவர்களின் அடிப்படையான உரிமை ‘கற்கும் சுதந்திரம்’. கற்கும் சுதந்திரமென்பது அவர்கள் தானாகத் தங்களை ஆக்கிக் கொள்வதற்கானது. வேறு எதுவுமாகவோ தன்னை ஆக்கிக் கொள்ளாத சுயம் அனைவருக்கும் இருக்கிறது. அதற்கான சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். நாம் அவர்களிடமிருந்து, வாழக் கற்றுக் கொள்ளத் தேவையான சுதந்திரத்தையும் வாய்ப்பையும் பறிக்கக் கூடாது. அவர்கள் எதுவாக மலர்ந்தாலும் அது அவர்களின் தேர்வாக இருக்க விடுவோம்.

தோழமையுடன்
விதை குழுமம்

Related posts

தொன்மயாத்திரை -5 தேவாலயங்களின் நகரம் – முன்கள ஆய்வு

vithai

ஒரு நிலவுருவில் மூன்று மொழியுடல்கள்

vithai

ஆயிஷா – குழந்தைகளுடனான உரையாடல்

vithai

இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம் ?

vithai

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவி வழங்கல்

vithai

காட்டுப்புலம் ஒரு சமூக உரையாடல்- 4

vithai

Leave a Comment