vithaikulumam.com
செயற்பாடுகள்

குழந்தைகள் | பெண்கள் | ஆண்கள்

“என்ர மகளிட்ட மூண்டு வெள்ளைச் சீருடையள் இருக்கு, இரண்டு நாளுக்கு ஒண்டு எண்டு பாவிச்சாலும் கிழமைக்கு வடிவா காணும், ஆனால் ஒவ்வொரு நாளும் அவள் அதைத் தோய்க்க வேண்டியிருக்கு. ஒவ்வொரு நாள் காலமையும் பிள்ளை வெள்ளைச் சட்டையோட போறாள், ஆனால் வரும்போது ஊத்தையாகி இருக்கு; அது ஏன் எண்டு நினைக்கிறீங்கள்?”

“பள்ளிக்கூடத்திலை விளையாட்டுப்போட்டி; நான் சைக்கிள்ளை மகளை இறக்கப் போறன். என்னைப் போல மற்றப் பிள்ளையளின்ர பெற்றாரும் அங்க நிக்கினம். அப்ப அதிபர் என்னை கூப்பிடுறார், ‘ஒருக்கா கொடிக்கம்பத்துக்கு கிடங்கு தோண்டி நட்டு விடுறீங்களோ?’ எனக்கு ஒன்றுமில்லை, நான் நடுவேன், ஆனால் மகள் யோசிப்பாள்தானே, ஏன் எல்லாற்ற தகப்பனும் நிக்க என்ரை அப்பாவை மட்டும் கூப்பிட்டு இந்த வேலை செய்யச் சொல்லவேணும் எண்டு.’’

சமூகத்தில் அடிப்படை உரிமையாகக் கிடைக்க வேண்டிய சுயமரியாதை மற்றும் சமத்துவத்தில் இருந்து தள்ளி வைக்கப்படும் ஒடுக்கப்படும் கிராமங்களின் குழந்தைகளுக்கு இழைக்கப்படுகின்ற அடிப்படை உரிமை மீறல்களும் அநீதியும் கல்விமட்டத்தில் அவர்களைப் பாதிக்கக்கூடிய நடைமுறைகளைக் கொண்டிருக்கின்றன. காட்டுப்புலத்தில் உள்ள பாண்டவெட்டை கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகளையும் பெண்களையும் ஆண்களையும் சந்தித்தோம். அவர்களிடம் ‘நீங்கள் அறிந்திருக்கக் கூடிய சமூகப் பிரச்சினைகள் பற்றிச் சொல்லுங்கள்?’ என்று கேட்டோம். தண்ணீர்ப் பிரச்சனை, போக்குவரத்துப் பிரச்சனை, குழந்தைகளுக்கு வீட்டிலும் பாடசாலையிலும் கிடைக்கும் தண்டனைகள், நூலகம் இன்மை, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை, சண்டை- வாள் வெட்டு, கிராமத்தில் விளையாட மைதானம் இல்லை என்பதான பட்டியலைச் சொன்னார்கள். பிறகு அவர்களிடம் நீங்கள் ஒன்றாகச் சேர்ந்து கிராமத்திற்காக செய்த பொதுச் செயற்பாடு ஒன்றைப் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்டோம்? ஊரில் என்ன பிரச்சினையிருக்கிறது, பாடசாலையில் பிள்ளைகளுக்கு என்ன பிரச்சினையிருக்கிறது என்பதையெல்லாம் தனிப்பட்ட பொதுப்புத்தி அபிப்பிராயங்களாக அவர்கள் தெரிந்தே வைத்திருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் ஒன்றிணைந்து, அமைப்பாக தங்களுடைய சமூகப்பிரச்சினைகளைப் பேசுகின்ற, தீர்க்கின்ற மனநிலை எழுவதற்கும் அரசியல்மயப்படுவதற்கும் இடையூறாக அவர்களை ஒடுக்கக் கூடிய பொருளாதாரம், சாதி போன்ற பின்னணிகள் இருந்து வருகின்றன.

சிறுவர்களைப் பொருத்தவரையில் நான்கைந்து தலைமுறைகளாக பாடசாலை இடைவிலகல்கள் அதிகமாக இருப்பதற்கு முதன்மைக்காரணமாக அவர்களின் கிராமத்திற்கு அருகாமையில் உள்ள சுழிபுரம் போன்ற சிறு நகரப் பாடசாலைகளில் காட்டப்படும் சாதிய, வர்க்க ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. இக்குறிப்பின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள தந்தையொருவரின் கூற்றுக்களில் அவருடைய மகளைப் போன்ற ஒடுக்கப்படும் சாதிய சமூகங்களில் இருந்து செல்கின்ற பிள்ளைகளிடம் கூட்டுதல், குப்பை அள்ளுதல் போன்ற வேலைகளைக் கொடுக்கும் சூழ்நிலைகளே நகரப்பாடசாலைகளில் இருக்கின்றன. அதனாலேயே அவருடைய மகள் தினமும் ஊத்தை படிந்த சீருடையுடன் திரும்புகிறார். அதனைப்போல சாதிப் பெயர் சொல்லி ஏசுவது, பிள்ளைகளிடையே ஏற்றத்தாழ்வுகளைக் காட்டுவது என்று பாடசாலைச்சூழல் பிள்ளைகளின் சுயமரியதையையும் அடிப்படை உரிமையையும் மீறும் அநீதியைச் சாதாரணமான மனநிலையாக மாற்றியிருக்கின்றது. சமீபத்தில் சுழிபுரத்தின் பிரபல பாடசாலை ஒன்றில் இருந்து இடை விலகிய மாணவன் ஒருவன் ‘எங்களுக்கு பஸ் இப்ப வாறேல்ல, முதல் வாறது, அண்டைக்குப் பெப்ரவரி 14 ஆம் திகதி நான் பஸ்ஸ விட்டிட்டன். பிந்தீட்டு எண்டு வீட்ட திரும்பி வந்திட்டன். அடுத்த நாள் பள்ளிக்கூடம் போக, பெப்ரவரி 14 கொண்டாட்டிட்டு வந்தனையோ எண்டு கேட்டு சேர் பேசினார், உன்னை வகுப்பு இறக்கி இருக்கிறம் இனி பத்தாம் வகுப்பிலைதான் படிக்கோணும் எண்டார், நான் கெஞ்சிப் பாத்தன், அம்மாவைக் கூட்டிக்கொண்டு போய் கதச்சுப் பார்த்தன் அம்மாவும் கெஞ்சி பாத்தா. அவர் மாட்டன் எண்டு சொல்லிட்டார்’ என்றார். இப்படி அங்கே மூன்று தலைமுறையினர் பாடசாலையில் இருந்து இடைவிலகிய கதைகளைச் சொல்கிறார்கள். அவற்றுக்கு நியாயம் கேட்கப்போனால் தாங்களோ தங்களைச் சார்ந்தவர்களோ பழிவாங்கப்படுவோம் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்.

இலங்கையில் பிள்ளைகளை அடிப்படைக் கல்வியில் இருந்து விலக நிர்ப்பந்தித்தல், வகுப்பு இறக்குதல் முதலானவை குற்றங்கள், அடிப்படை உரிமை மீறல்கள். ஆனால் ஒடுக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு அவை அன்றாடம் இயல்பாக்கி விடப்பட்டிருக்கும் ஒன்று, பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலகி ஏதேனும் குடும்பத் தொழிலுக்கோ வேறு உடலுழைப்பு சார் தொழில்களுக்கோ செல்ல வேண்டும் என்ற மனநிலை இயல்பானதாக மாற்றப்பட்டிருப்பது எவ்வளவு பெரிய சமூக அநீதி? அவர்களுக்கு நிகழ்வது அநீதி என்பதை உணர்ந்தாலும் அதை எப்படி எதிர்ப்பது என்று அறியாதவர்களாக இருக்கின்றார்கள்.

பயணத்திற்கு மோட்டார் சைக்கிளோ பேருந்தோ இருக்கும் போது உண்மையில் இடைநிலை, உயர்தர வகுப்புகள் காணப்படும் சிறுநகரப்பாடசாலைகள் பெரிய தூரமாக இருக்காது, ஆனால் இம்மக்களுக்கு அப்பாடசாலைகள் தூரத்திலேயே இருக்கின்றன. அது போக்குவரத்து வசதிகள் எனப்படும் பெளதீகத்தில் மட்டுமில்லை, அவர்களுடைய மனதளவிலும் பாடசாலைகள் தூரமாகத்தான் இருக்கின்றன.

தோழமையுடன்
விதை குழுமம்
பசுமைச் சுவடுகள்
மனிதம்

Related posts

மாற்றுக் குரல்

vithai

தூய நீருக்காகத் திரண்ட யாழ்ப்பாணம் – பேரணி அறிவிப்பு

vithai

குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்வு

vithai

ஆசிரியர் தினம் – யாழ்ப்பாண புதிய நடுத்தர வர்க்க சிந்தனைகளின் எழுச்சியும் வித்தியாசங்களை விளங்கி கொள்ளுதலின் முரண்பாடும்

vithai

ஒரு நிலவுருவில் மூன்று மொழியுடல்கள்

vithai

உண்ணாவிரதப்போராட்டத்தின் முடிவு

vithai

Leave a Comment