vithaikulumam.com
கட்டுரைகள்

தண்டித்தல் எனும் அறமற்ற செயல்

எமது சமூகம் ‘அடித்தால் தான் பிள்ளை படிக்கும்‘, ‘அடியாத மாடு படியாது‘ போன்ற பிற்போக்குத்தனமான வாதங்களால் நிறைந்தது; அவை உண்மை எனவும் நம்புகின்றது; தண்டனைகளால் குழந்தைகளின் இயல்பான சிந்தனையை, அணுகுமுறையை, நடத்தையைச் சிதைக்கின்றது. உடல், உள ரீதியில் வன்முறை செய்து தமது பிற்போக்குத்தனமான நம்பிக்கைகளை குழந்தைகளின் மேல் திணிக்க முயற்சிசெய்கின்றது. இவை அனைத்தினதும் கூட்டுவிளைவாக பிற்போக்குத்தனங்களால் நிறைந்த, தண்டனைகளின் மேல் நம்பிக்கை கொண்ட, சுயமரியாதையும் சமதர்மமும் அற்ற, சமூகமாய்ச் சிந்திக்கமுடியாத, தான், தனது குடும்பம் என மிகக்குறுகிய சிந்தனைவெளியைக் கொண்ட, அடக்குமுறைகளுக்கு எதிர்வினையாற்றத்தெரியாத ஒரு பிரதிசெய்யப்பட்ட சமூகத்தையே உருவாக்குகின்றது. இக்கட்டுரை கல்வி நிறுவனங்களில் நடாத்தப்படும் சிறுவர்கள் மீதான உடல், உள ரீதியான வன்முறைகளையும் அவற்றால் ஏற்படக்கூடிய அகச்சிக்கல்களையும் எனது அனுபவங்கள் வழியாக உரையாடுகிறது.

இங்கு விரிபவை நான் தரம் ஐந்தில் கல்வி கற்ற தனியார் கல்வி நிலையத்தில் நிகழ்ந்தவை. எங்கள் ஆசிரியர் மிகவும் இறுக்கமானவர். மோசமாக அடிப்பார். பெற்றோர்கள் மத்தியில் அவருக்கு நல்ல மதிப்பு. அங்கு நுழையும் போது மிகவும் இறுக்கமான மனநிலையுடனே செல்வேன். என்னால் ஒரு சிறுவனாய் உணரமுடிந்ததேயில்லை. எப்போதும் என் உடலிலும், மூளையிலும் மிகப்பெரியதொரு பாரத்தைச் சுமந்துகொண்டே இருப்பேன். பின்னேர வகுப்பில் கணக்கு பிழை விட்டால் அடிவிழும் என்ற பயத்தில் எனது பத்தாவது வயதில் பெற்றோரின் உந்துதல் இல்லாமல் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து கணிதம் பயிற்சி செய்வேன். அவர் என் வாழ்வில் ஏற்படுத்தியது சரியான புரிதலுடனான பண்பு மாற்றம் இல்லை. என் மேல் அவரால் திணிக்கப்பட்ட வன்முறை. ஏன் படிக்க வேண்டும், கணிதம் ஏன் தேவை என்பது பற்றிய எந்தவித புரிதலும் இல்லாமல் பிழை விட்டால் அடிவிழும் என்பதற்காக அவற்றைச் செய்துகொண்டிருந்தேன். என் நினைவின்படி ஆசிரியர் சொல்வதைப் பிழைவிடாமல் செய்வதற்கே ஒரு சிறுவர்கூட்டம் அங்கு சென்றுகொண்டிருந்தது. அங்கு எந்தவித உரையாடலுமே இல்லை. சிறுவர்களும் சிந்திப்பார்கள், அவர்களுக்கென்று கருத்துக்கள் இருக்கும், அவர்கள் சொல்வதையும் நாம் கேட்க வேண்டும் என வளர்ந்தவர்கள் யாரும் சிந்தித்ததாய் நான் உணர்ந்திருக்கவில்லை.

ஒரு வளர்ந்தவரின் அல்லது அதிகாரத்தில் இருப்பவரின் கட்டளையை நிறைவேற்ற சிறுவர்களாக நாம் அங்கு செல்கிறோம். கட்டளையை நிறைவேற்றத் தவறினாலோ, ஒழுங்காக நிறைவேற்றுவதில் தவறேதும் நேர்ந்தாலோ தண்டனை கிடைக்கும். தண்டனைக்குப் பயந்து அனைவரும் தனித்தனியே, கூட்டாகச் சேராமல் அவரின் கட்டளையை நிறைவேற்ற உழைத்துக்கொண்டிருப்போம். சிந்தித்துப்பார்த்தால் நான் தரம் ஐந்தில் கற்ற கல்வி நிலையத்தில் எங்களைக் கட்டுப்படுத்தப் பயன்பட்ட பொறிமுறையையே தற்போது நாம் அனைவரும் கடைப்பிடித்து வருகிறோம்.

ஒரு நிறுவனத்திடமோ முதலாளியிடமோ அரசிடமோ இருந்து கட்டளைகள் எமக்குக் கிடைக்கின்றன. அவற்றை நிறைவேற்றுவதற்காக நாம் உழைத்துக்கொண்டிருக்கிறோம். அக்கட்டளைகள் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளாக இருக்கலாம், மனித உரிமை மீறல்களாக இருக்கலாம், ஒரு சமூகத்தின் இருப்பை, வரலாற்றைச் சிதைப்பதாக இருக்கலாம், ஒரு உயிர்ச்சூழலை, பல்வேறு வகையான உலகத்தின் நிலைத்திருப்பிற்கு அவசியமான உயிரினங்களை அழிப்பதாக இருக்கலாம் ஆனாலும் நாம் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து அக்கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டே இருக்கிறோம். சுயமரியாதை, சமதர்மம், உயிர்நேயம் குறித்துச் சிந்திக்க எம்மால் முடியவில்லை. அனைத்து உயிர்களிற்கும் பாதுகாப்பான, அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய ஒரு வாழ்க்கைமுறை குறித்து அக்கறை உருவாகவில்லை. ஏனெனில் நாம் தண்டனைகளால் வளர்க்கப்பட்ட சமூகம். எம்மால் தண்டிப்பவரை அல்லது அதிகாரத்தில் இருப்பவரைக் கேள்வி கேட்க முடியாது, சொந்தக் குரலில் பேசமுடியாது. கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும், அதிகாரத்தில் இருப்பவர்களை புனிதப்படுத்தி போற்றவுமே நாம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம்.

இந்நிலமை மாற வேண்டும். சமூகத்தின் அனைத்து வெளிகளையும் தண்டனைகள் அற்ற உரையாடலிலும், உயிர்நேயத்திலும் நம்பிக்கை கொண்டதாக மாற்ற வேண்டும். அடக்குமுறை எனும் பெருவிருட்சத்தின் ஆதார வேர்கள் தண்டனைகள் அதனை இல்லாது ஒழிக்க நாம் அனைவரும் கூட்டாக உழைக்க வேண்டும்.

வசிகரன்

Related posts

சிறுவர் உளநலம் : சில அவதானங்கள்

vithai

துஷ்பிரயோக சாட்சி : வெளிப்படுத்துகையின் சமூகத் தேவை

vithai

பிணமெரியும் வாசல்

vithai

புற்றுநோய் மருத்துவம்

vithai

இன்னும் எவரெவர் கால்களில் விழ வேண்டுமோ?

vithai

எந்தச் சாமிகளின் பக்கம் நிற்கப் போகிறோம்?

vithai

Leave a Comment