vithaikulumam.com
Uncategorized கட்டுரைகள்

அரசியல் கிரிக்கெட்

அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். பாடசாலையில் மதிய இடைவேளையில் பக்கத்து வகுப்பு மாணவர்களுடன் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவது வழக்கம். வழமையான போட்டிகளின்போது ஸ்கோர் பதிவுகளைச் செய்கின்ற மாணவன் வராத நாளொன்றில் என்னை ஸ்கோர் பண்ணுமாறு கேட்டார்கள். நானும் கொப்பி ஒன்றின் பின்பக்கத்தில், விளையாடுகின்ற ஒவ்வொருவரது பெயரையும் எழுதி பந்துவீச்சில் கொடுத்த ஓட்டங்கள், துடுப்பாட்ட வீரர்கள் எடுத்துக்கொண்ட ஓட்டங்கள் என்று பதிவுசெய்தேன். ஒவ்வொரு வீரரும் எப்படி ஆட்டமிழந்தார்கள், யாரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்கள் என்கிற விபரங்களை எல்லாம் குறித்தேன். ஒவ்வொரு பந்துவீச்சாளர்களும் எத்தனை ஓவர்கள் பந்து வீசினார்கள், எத்தனை மெய்டன் ஓவர்கள் வீசினார்கள், எத்தனை ஓட்டங்களைக் கொடுத்து எத்தனை விக்கட்டுகளைக் கைப்பற்றினார்கள் என்று குறித்துவைத்தேன். மைதானச் சுவரில் மூன்று கோடுகளைக் கீறி விக்கட்டுகளாக வைத்துக்கொண்டு மறுமுனையில் காலில் போட்டிருக்கும் செருப்புகளைக் கழட்டி வைத்து ஸ்டம்புகளாகப் பாவித்துக்கொண்டு பை, லெக்பை என்ற எதுவும் இல்லாது விளையாடிய வகுப்புகளுக்கு இடையில் விளையாடப்படும் கிரிக்கெட்டில் போட்டிகளில் ஸ்கோர் பதிவதென்பது வெறுமனே அணியின் ஓட்டங்களை மட்டுமே எழுதிச்செல்வதாக இருந்தது; அதனால் நான் ஸ்கோர் பண்ணிய விதம் புதியதாக இருந்தது.

அப்பா இறந்துவிட்ட பின்னர் கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பது பற்றிய நினைவுகள் அப்பாவினுடனான நனவிடை தோய்தலின் ஒரு கீற்றாக அமைவதுண்டு. இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின்போது பெரியம்மா ஒருவரின் வீட்டில் இடம்பெயர்ந்திருந்தபோது எட்டு வயதாகியிருந்த எனக்கு அங்கிருந்த பழைய ஸ்போர்ட்ஸ் ஸ்ரார் ஒன்றைக் காட்டி கிரிக்கெட் ஸ்கோரை எப்படி வாசிப்பது என்று அப்பா காட்டித்தந்தார். விருப்பமான பாடமொன்றினை, விருப்பமான ஆசிரியர் ஒருவரிடம் கேட்டுக் கேட்டுப் படிக்கின்ற மாணவன் போன்ற தீராக்காதலுடன் கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பது பற்றியும் கிரிக்கெட் புள்ளிவிபரங்களை எப்படிப் பார்ப்பது என்பது பற்றியும் அப்பாவிடம் கேட்டுக் கேட்டுப் படித்துக்கொண்டேன். பின்னர் வெவ்வேறு பாடசாலைகளுக்கு இடையிலும் கழகங்களுக்கு இடையிலும் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது ஆட்டங்களைப் பார்ப்பதுபோலவே ஸ்கோர் பதிபவர்கள் ஸ்கோர் பதிவதை சில நிமிடங்களாவது வேடிக்கை பார்ப்பதிலும் ஆர்வம் இருந்தது. 1992 ஆம் ஆண்டு நானும் இரண்டு நண்பர்களும் சேர்ந்து காசு சேர்த்து ஒரு ஸ்கோர் பதிகின்ற கொப்பியினை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு முன்னர் இருந்த கடையொன்றில் வாங்கி, கழகங்களுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும்போது நாமும் மைதானத்தின் இன்னோர் மூலையில் இருந்து ஸ்கோர் பதிவதை மிகவும் ஆர்வத்துடன் செய்தோம்.

எனது சிறுவயதில் விளையாட்டுகளில் அதிகளவு ஆர்வம் காட்டியிராத எனக்கு விளையாட்டுக்களுடனான அறிமுகம் கிரிக்கெட்டின் ஊடாகவே நடந்தது என்றே சொல்லவேண்டும். எனது ஆரம்பக் கல்வியை சுதுமலையிலும் நவாலியிலும் இருந்த சிறு பாடசாலைகளிலேயே கற்றிருந்தேன். 1990 ஆம் ஆண்டில் நான் யாழ் நகருக்குக் கல்விகற்கச் செல்லும் வரை எமது கிராமங்களில் எம் வயதினை ஒத்தவர்களிடம் கிரிக்கெட் விளையாடுவது பெரிதாக அறிமுகமாகவில்லை. எனவே கிரிக்கெட் பற்றிய எனது அறிமுகமும் ஆர்வமும் அதனை நேரடியாக விளையாடி ஏற்பட்டதல்ல, மாறாக கிரிக்கெட் பற்றிய வாசித்த செய்திகளின் ஊடாகவே உருவானது.

அப்போது கல்கண்டு, ஆனந்த விகடன், குமுதம் போன்ற தமிழக இதழ்களில் கிரிக்கெட் பற்றி செய்திகளும் கட்டுரைகளும் வரும். அதுபோல 80களின் இறுதியில் ஈழத்தில் நியூ உதயன் பப்ளிஷேர்ஸ் (உதயன் பத்திரிகை) அர்ச்சுனா என்கிற சிறுவர் இதழ் ஒன்றினையும் நடத்தி வந்தனர். அந்த இதழிலும் கிரிக்கெட் பற்றிய கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. தி. தவபாலன் என்பவர் அடிக்கடி கட்டுரைகளை எழுதி வந்தார். வாசிப்பில் இருந்த ஆர்வம், கிரிக்கெட்டினை வாசிப்பின் ஊடாக இன்னும் நெருங்கச் செய்தது. அப்போது என்னைவிட எட்டு வயது பெரியவராக என் ஒன்று விட்ட சகோதரர் ஒருவரிடம் இருந்து சில பழைய ஸ்போர்ட்ஸ்ரார் இதழ்கள் கிடைத்தன. இந்துப் பத்திரிகைக் குழும வெளியீடுகளில் ஒன்றான ஸ்போர்ட்ஸ்ரார் அனேகம் கிரிக்கெட்டிற்கே முக்கியத்துவம் கொடுத்தது என்று சொல்லலாம். எனக்குக் கிடைத்த இந்த ஸ்போர்ட்ஸ்ரார் இதழ்கள்1987/88 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்தவை. அவற்றின் அட்டைகளும் முன் மற்றும் கடைசி இரண்டு பக்கங்களும் பளபளப்பான அட்டைகளில் வெளியாகுவது வழமையாக இருந்தது. அந்த இதழ்கள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு எனக்குக் கிரிக்கெட் மீதான ஈர்ப்பாக வளர்ந்தது என்று சொல்லலாம்.

1990ம் ஆண்டுக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் மின்சாரம் இல்லாததால் தொலைக்காட்சி பார்க்கின்ற வாய்ப்பு எமக்கு இருக்கவில்லை. மின்கலங்களும் தடை செய்யப்பட்டிருந்ததால் வானொலி கேட்பதும் கூட மட்டுப்படுத்தப்பட்ட அளவே இருந்தது என்று சொல்லலாம். இப்படியான சூழலில் அச்சு ஊடகங்களூடாகவே கிரிக்கெட் பற்றிய தகவல்களும் போட்டி விபரங்களும் எமக்குக் கிடைத்துக்கொண்டிருந்தன. அன்றைய போர்க்கால சூழலில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளில் பின் பக்கத்தில் கிரிக்கெட் செய்திகள் சிறிதாக வரும். பத்திரிகைகளை கடைசிப் பக்கத்தில் இருந்து படிக்கின்ற வழக்கம் எனக்கு உருவாக இவ்விதம் கடைசிப்பக்கங்களில் இடம்பெற்ற கிரிக்கெட் செய்திகளே காரணமாயின எனலாம். அதுபோல தபால் மூலமாக கொழும்பிலிருந்து The Island, Sunday Times போன்ற பத்திரிகைகள் வெளிவரும். அவற்றிலும் விளையாட்டுப் பகுதியில் இருந்து கிரிக்கெட் பற்றிய செய்திகளை ஆர்வத்துடன் படிக்கின்ற வழக்கம் இருந்தது. இதற்கு அப்பால் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற பழைய புத்தகக் கடைகளைத் தேடித் தேடிப் போய் கிரிக்கெட் தொடர்பான சஞ்சிகைகளை வாங்கும் வழக்கமும் உருவானது. ஸ்போர்ட்ஸ்ரார், Wisden வெளியிடுகின்ற The Cricket, ஒவ்வோராண்டும் வெளிவருகின்ற Wisden Almanack என்பவற்றை தேடித்தேடி பழைய புத்தகக் கடைகளில் வாங்கிவந்தேன். அக்காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளுக்கு இடையிலும் கழகங்களுக்கு இடையிலும் பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்று வந்தன. இவற்றைப் பற்றிய விரிவான செய்திகளை யாழ்ப்பாணத்தில் இருந்து அப்போது வெளிவந்துகொண்டிருந்த பத்திரிகைகள் வெளியிட்டும் வந்தன. அவற்றுக்குக் கணிசமான வரவேற்பும் கிடைத்தது என்றே நினைக்கின்றேன். இந்த கிரிக்கெட் ஆர்வத்தால் நிறைய நண்பர்களும் கிடைத்தார்கள். அப்படி இரண்டு நண்பர்களுடன் இணைந்து எமது பன்னிரண்டாவது வயதில் கிட்டத்தட்ட கையெழுத்துப் பிரதியாக 320 பக்கங்கள் வரத்தக்க கிரிக்கெட், கிரிக்கெட் வீரர்கள் பற்றிய குறிப்புக்களுடனும் முக்கியமான ஆட்டங்களின் ஸ்கோர் விபரங்களுடனும் கூடிய ஒரு தொகுப்பினை எழுதினோம். வீரர்களின் சாதனைப்பட்டியலை இற்றைப்படுத்தி வைக்கவேண்டும் என்ற நோக்குடன் முக்கியமான வீரர்கள் ஒவ்வொரு ஆட்டங்களிலும் பெறுகின்ற ஓட்டங்கள், விக்கெட்டுகள் குறித்த விபரங்களைக் குறித்து வைத்து தொடர்ச்சியாக அந்த விபரங்களை இற்றைப்படுத்தியும் வந்தோம். ஒரு விதத்தில் பார்க்கின்றபோது எழுத்தின் மீதும் வாசிப்பின் மீதும் ஆய்வுகள், வெளியீடுகள் குறித்ததுமான எனது ஆர்வத்தின் ஊற்றாக கிரிக்கெட் மீது எனக்கு இருந்த ஈர்ப்பே காரணம் எனலாம்.

இக்காலப்பகுதியில் எனக்குத் தெரிந்த கிரிக்கெட் ரசிகர்களின் அவதானித்த சில பொதுத்தன்மைகளைக் குறிப்பிடுவது இந்தக் கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன். அப்போது நான் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்ததால் அந்த அவதானங்களின் அடிப்படையில் 1994ம் ஆண்டளவில் இருந்த அவதானங்களை வைத்துப் பார்த்தால், அனேகமான இளைஞர்கள் இந்திய அணி ஆதரவாளர்களாக இருந்தார்கள். கொழும்பு மற்றும் வடக்குக் கிழக்கு அப்பால் கல்வி கற்றவர்களும், அங்கே நெடுங்காலம் வசித்தவர்களும் அனேகமாக இலங்கை அணி மற்றிய நல்ல மதிப்பும் ஆதரவும் கொண்டவர்களாக இருந்தார்கள். அந்தக் காலப்பகுதியில் இலங்கை அணி மிகவும் பலவீனமான ஓர் அணியாகவே இருந்தது என்றபோதும் ரஞ்சன் மடுகல்ல, ரோய் டயஸ், அரவிந்த டி சில்வா ஆகிய இலங்கை அணி வீரர்களின் திறமை குறித்த பெருமிதம் அவர்களிடம் வெளிப்படையாகவே இருந்தது. அப்போது முத்தையா முரளிதரன் பிரகாசிக்கத் தொடங்கவில்லை, 1989 இல் ஒரு சகலதுறை ஆட்டக்காரராக அணியில் சேர்க்கப்பட்ட சனத் ஜெயசூரியா இந்தக் காலப்பகுதியில் தான் (1994) அணியில் தனது இடத்தினை திடப்படுத்திக் கொண்டார் என்று சொல்லாலாம். அதே நேரத்தில் அப்போது மத்திம வயதுகளில் இருந்தவர்களுக்கு மேற்கிந்திய கிரிக்கெட் அணி பற்றிய பெருமிதங்களின் தொடர்ச்சிய இருந்தது.

ஈழத்தமிழர்கள் இடையே தென்னிந்தியப் பத்திரிகைகள் அதிகம் புழக்கத்தில் இருப்பதும் அவற்றினூடாக தகவல் பரிமாற்றம் இடம்பெறுவதும் ஒரு விதத்தில் இந்தியக் கிரிக்கெட் அணி ரசிகர்களாக ஈழத்தமிழர்களை மாற்றியதில் பங்காற்றியது எனலாம். அன்றைய நிலையில் மிகச் சாதாரணமான ஓர் அணியாகவும், தொடர்ச்சியாக வெளிநாடுகளில் பலத்த தோல்விகளைச் சந்திக்கின்ற அணியாகவும் இருந்த இந்திய அணி பற்றி தமிழக ஊடகங்கள் அன்று சித்திகரித்த விதமானது நாயக விம்பங்களைக் கட்டியெழுப்பும் விதத்தில் இருந்தது. இந்திய அணியில் தனிப்பட்ட அளவில் சாதனைகளைப் புரிந்தவர்களாக கவாஸ்கர், கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர் போன்ற பலர் இருந்தபோதும் அதற்கும் அப்பால் தமிழகப் பத்திரிகைகள் ஊதிப் பெருப்பித்த விம்பம் பெரியது. குறிப்பாக ஸ்ரீகாந்த் குறித்து தொடர்ச்சியாக எழுதியவற்றையும் பல வீரர்களது ஆரம்ப காலகட்டங்களிலேயே அவர்களை மிகப்பெரிய சாதனையாளர்களாகவும் சிகரங்களாகவும் சித்திகரித்து எழுதியவற்றையும் குறிப்பிடலாம். இதற்கு முக்கிய காரணமாக இந்திய அணி 1983 உலகக் கிண்ணத்தினை வெற்றி பெற்றபோது இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு ஏற்பட்ட பரவலான வரவேற்பின் தாக்கம் இந்திய ஊடகங்களூடாக ஈழத்திற்கும் பரவியது எனலாம். இன்னொரு விதத்தில், இதே காலப் பகுதியில் இலங்கையில் இனப்பிரச்சனை கூர்மையடைந்து ஆயுதப் போராட்டமாக மாறியபோது ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட இந்தியா தமது தோழமை நாடு என்கிற உணர்வும் இந்த நிலைப்பாட்டில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும். மிக முக்கியமாக, அன்றைய காலப்பகுதியில் இலங்கைக்கும் இந்திய அணிக்கும் இடையிலான போட்டிகளின்போது மிகப் பெரும்பாலான யாழ்ப்பாணத்து இளைஞர்கள் இந்திய அணி ஆதரவாளர்களாகவே இருந்தார்கள். இதற்கு ஊடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றால் ஈழத்தமிழர்கள் இடையே வளர்த்தெடுக்கப்பட்ட இந்திய மோகமும் ஈழத்தமிழர்கள் “இலங்கை” அடையாளத்தைவிட்டு அந்நியபமாக உணர்வது அதிகரித்துச் சென்றது காரணமாக இருக்கலாம்.

நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும்
இந்தியக் கிரிக்கெட் வாரியம் தனியார் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்புக்கான அனுமதியை விற்கத் தொடங்கியது நேரடித் தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் கிரிக்கெட்டின் பரவலிலும் மிகப் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியதுடன் கிரிக்கெட் ஒளிபரப்பானது பொருளாதார ரீதியிலும் மிகப்பெரிய அளவில் உதவக்கூடியது என்பதையும் நிரூபிப்பதாக இருந்தது. இந்தியாவை எடுத்துக்கொண்டால் 1980 வரை கிரிக்கெட் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக கிரிக்கெட் வாரியம் தூர்தர்ஷனுக்கு கட்டணம் செலுத்துகின்ற நிலைமையே இருந்தது. மெல்ல மெல்ல இந்த நிலைமை மாறி 1992 இல் இடம்பெற்ற இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையில் இடம்பெற்ற தொடரினை கிரிக்கெட் வாரியம் Trans World International என்கிற தொலைக்காட்சிக்கு 600,000 டொலர்களுக்கு விற்றது. அன்றைய நிலைமையில் கிரிக்கெட் ஒளிபரப்பு லாபம் கொழிக்கின்ற ஒரு துறையாக மாறுவதற்காக தொடக்கமாக அமைந்தது. இதன் காரணமாக கிரிக்கெட் மிகப் பெரிய ஊடக கவனத்தைத் தொடர்ந்து பெற்றுக்கொள்கின்ற ஒரு விளையாட்டாக மாறியதுடன் அது நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரவத் தொடங்கியது. இந்தியாவில் சம காலத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் அப்போது ஈழத்தில் நிலவிய மின்சாரத் தடை மற்றும் போர்ச்சூழல் காரணமாக உடனடியாகப் பரவாமல் இருந்தது. இப்படியான ஒரு பின்னணியில் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெறுவதற்கான ஒழுங்குகளும் நடக்கின்றன.

1996 ஆம் ஆண்டிற்கு முன்னதாக, 1987 இல் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளை நடத்தியிருந்தன. முதல் முறையாக இங்கிலாந்துக்கு வெளியில் இடம்பெற்ற இந்த உலகக் கிண்ணப் போட்டிகள் சரியான திட்டமிடலுடனும் தொழில்முறையில் நேர்த்தியுடனும் இடம்பெற்றபோதும் பணரீதியாக நட்டமே ஏற்பட்டிருந்தது. இந்தப் போட்டிகளை நடத்தியதில் இந்தியக் கிரிக்கெட் வாரியம் 40,000 டொலர்கள் நட்டமடைந்திருந்தது. 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்த அனைத்து உலகக் கிண்ணப் போட்டிகளையும் நடத்திய நாடுகள் நட்டத்துடன் அல்லது மிகக் குறைந்த அளவு இலாபத்துடனேயே போட்டிகளை நடத்தின. அதுவரை போட்டிகளை நடத்தும் நாடுகளே அந்தப் போட்டிகளுக்குப் பொறுப்பாக இருந்தன, அதில் வரும் இலாப நட்டங்களையும் போட்டியை நடத்தும் நாடோ அல்லது நாடுகளோ பகிர்ந்துகொண்டன. சில சமயங்களில் போட்டி நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் உதவிப்பணம் கொடுக்கின்ற வழமையும் இருந்தது. ஆனால் இதனை முழுக்க முழுக்க மாற்றிப் போட்ட ஒரு நிகழ்வாக 1996 உலகக் கோப்பை அமைந்தது. இதற்கு முன்னைய உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடந்தபோது அதனை நடத்திய நாடுகள் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் போட்டிகளை நடத்திய நாடுகளில் ஒன்றான இலங்கை செலவுகளைப் பகிர்வதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தது. அதனால் இலாபத்திலும் இலங்கை பங்கேற்கமுடியாமல் போக, இந்தியாவும் பாகிஸ்தானும் 50 மில்லியன் டொலர்களை இலாபமாகப் பெற்றுக்கொண்டனர். ஆனால் போட்டிகளில் வெற்றிபெற்று உலகக் கிண்ணத்தை இலங்கை அணி வெற்றி பெற்றதுடன் அந்த வெற்றியானது இலங்கை அணிக்கு பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகவும் சாதகமான ஓர் அம்சமாக மாறியது. அதைப் பற்றிப் பேசமுன்னர் அந்த உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது இலங்கையில் வடபகுதியில் நிலவிய அரசியல் சூழல் பற்றிப் பேசுவது அவசியமாகும்.

போர்ச்சூழல் நிலவிய அன்றைய காலத்தில் வடக்கில் பல்வேறு கிரிக்கெட் தொடர்களும் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெற்றுவந்தன. பல கிலோமீற்றர்கள் தொலைவில் இருந்தும் சைக்கிள் ஓடி, கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதற்காக தொடர்ச்சியாக வந்துபோன பலரை நான் அவதானித்திருக்கின்றேன். ஆயினும் மின்சாரம் இல்லாத அன்றைய சூழலில் கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை. அதேநேரம், கிரிக்கெட் போட்டிகளை வானொலி வர்ணனைகளூடாக தொடர்ந்து கேட்டு வந்தவர்கள் பலர் இருந்தபோதும். இந்தியாவிலும் இலங்கையிலும் இடம்பெறும் போட்டிகளைத் தவிர ஏனைய போட்டிகளுக்கான வானொலி வர்ணனைகள் இலங்கையில் கேட்பது என்பது மிக சிரமமானது. அத்துடன் மொழியும் ஒரு தடையாக இருந்தது. இது தவிர இன்னொரு முக்கிய காரணமாக, வானொலி வர்ணனைகள் நேரடி காட்சி அனுபவத்தை தராதமையால் வானொலி வர்ணனைகளைக் கேட்டு ரசிகர்களானவர்கள் என்பது மிகச் மிகச் சொற்பமானவர்களே.

இதே காலப்பகுதியில், தனியார் கல்வி நிலையங்களில் வளர்ச்சியும் மிகவேகமாக இருந்தது. கிட்டத்தட்ட அன்றைய காலப்பகுதியில் தனியார் கல்விநிலையங்களுக்குச் செல்லாதவர்கள் என்று எவருமே இருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் இருந்த பகுதிகளில் தனியார் கல்வி நிலைய ஒன்றியத்தின் ஊடாக தனியார் வகுப்புகளை நடத்துவதற்கான நேர வரையறைகள் இருந்தபோதும் கிட்டத்தட்ட ஒருநாளின் முழு நேரத்தையும் பாடசாலை நேரமும் தனியார் கல்விநிலைய நேரமுமாக சேர்த்து ஆக்கிரமித்துக் கொண்டன என்றே சொல்லவேண்டும். இப்படியான சூழலில் 1995 ஒக்ரோபர் இறுதியில் இடம்பெற்ற யாழ்ப்பாண இடப்பெயர்வு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த இடப்பெயர்வு இடம்பெற்றது முதல் வடமராட்சி, தென்மராட்சி பிரதேசங்களும் இராணுவத்தால் கைப்பற்றப்படும் வரையான ஆறுமாத காலமும் பாடசாலைகள் எதுவும் நடைபெறவில்லை. தற்காலிகமாக மாலை நேர பாடசாலைகள் சில தொடங்கப்பட்டபோதும் கூட அவற்றுக்கு மாணவர் தொகை மிகக் குறைவாகவே இருந்தது. இந்தக் காலப்பகுதிகள் தென்னிந்தியத் திரைப்படங்கள் விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனால் மக்கள் மாலை நேரங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மின்பிறப்பாக்கிகள் (ஜெனரேற்றர்) மூலம் மின்சாரத்தைப் பாவித்துக் பார்க்கத் தொடங்கினர். ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் சேர்ந்து குழுமமாக வாழ்ந்ததால். இது பலருக்கு பொழுது போக்காக மாறியது. அதேநேரம் கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்புகளையும் பார்க்கத் தொடங்கினர். 1996 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமான போது பலரது வீடுகளில் காலை முதல் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டன. தெரிந்தவர்கள் எல்லாரும் வந்து ஆட்டங்களைப் பார்க்க அனுமதிக்கப்பட்டன. எனக்குத் தெரிந்து சாவகச்சேரியில் அப்போது இருந்த சண்முகம் உணவகத்தின் உரிமையாளர் சண்முகம் அவர்கள் இருந்த வீட்டில் தனியாக ஒரு கொட்டில் ஒன்று போடப்பட்டு கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பினார். மிகக் கூர்மையான கிரிக்கெட் ரசிகரான அவருக்குத் தெரிந்த இன்னும் சில ஆர்வலர்களும் அவருடன் இணைந்து இதனைச் செய்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன். நிறைய கிரிக்கெட் ஆர்வலர்கள் அங்கு வந்து கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்தனர். பல சந்தர்ப்பங்களில் தொலைக்காட்சியை அவர் இயக்கிவிட்டு வேலைக்குச் சென்றுவிடுவார். அதற்கும் முன்னால் அவருடன் பெரிய அறிமுகம் இல்லாத நானும் இன்னும் நிறைய நண்பர்களும் அங்கு சென்று போட்டிகளைப் பார்த்தோம். இப்படியாக வடமராட்சியிலும் தென்மராட்சியிலும் பல இடங்களில் நடைபெற்றன. இளவயதினரான – அதற்கு முன்னர் எந்தக் கிரிக்கெட் நேரடி ஓளிபரப்புகளையும் பார்த்திராதவர்களும், அதற்கு முன்னர் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்புகளை பார்த்தவர்களுமாக கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவருக்கும் வர்ண ஆடைகளுடனும் கவர்ச்சியான விளம்பரங்களுடனும் கூடிய அந்த கிரிக்கெட் போட்டிகள் மிகவும் ரசனைக்குரியதாக இருந்தன. அந்த ஈர்ப்பும் கவர்ச்சியும் கிரிக்கெட் ரசிகர்களாக அதற்கு முன்னர் இருக்காதவர்களையும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைப் பற்றியோ, கிர்க்கெட் பற்றியோ பெரிய அறிவில்லாதவர்களையும் கிரிக்கெட் போட்டிகளை நோக்கி ஈர்த்தது. பெரிதாக எந்தப் பொழுது போக்குகளும் இல்லாத நிலையில் பாடசாலைகளும் இயங்காத ஒரு சூழலில் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்புகளைப் பார்ப்பது என்பது மிக மிக வேகமாக பலரிடையே பரவியது. அந்த ஒளிபரப்புகளில் கிரிக்கெட் பார்த்து கிரிக்கெட் ரசிகர்களாகவும் தீவிர ரசிகர்களாகவும் மாறியவர்கள் என்று பலர் உருவானார்கள்.

இதற்குச் சமாந்தரமாக இலங்கை கிரிக்கெட் அணியின் எழுச்சியும் புதிய உத்திகளுடன் கிரிக்கெட் ஆடுவதும் அமைந்தது. 1996 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக இலங்கை ஆடிய கிரிக்கெட் தொடராக அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற அவுஸ்திரேலியா, மேற்கிந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர் அமைந்திருந்தது. இந்தத் தொடரில் முதல் முறையாக களுவிதாரனவும் ஜெயசூரியாவும் ஆரம்ப ஆட்டக்காரர்களாக இலங்கை அணியால் களம் இறக்கப்பட்டார்கள். டிசம்பரில் தொடங்கிய இந்தத் தொடருக்கு முன்னதாக சார்ஜாவில் இடம்பெற்ற தொடரில் இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மேற்கிந்திய அணியும் மோதி இருந்தன. அதில் இலங்கை தொடரை வென்றபோதும் அதன் ஆரம்ப ஆட்டக்காரர்களாக சனத் ஜெயசூரியாவுடன் ஹத்துருசிங்கவும் மஹாநாமவுமே இறங்கினார்கள். களுவிதாரன கீழ் இடைநிலை ஆட்டக்காரராக விளையாடினார். அந்தத் தொடரில் இலங்கை, அதற்கு முன்னர் இருந்த ஒருநாள் போட்டிகளின் போக்கிலேயே விளையாடியது. சனத் ஜெயசூரியா கூட அதிரடியாக ஆடவில்லை. களுவிதாரன குறைவான ஓட்டங்களை எடுத்தபோதும் வேகமாக அவற்றைப் பெற்றிருந்தார். அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தொடரில் ஆரம்ப ஆட்டக்காரர்களாக களுவிதாரணவும் ஜெயசூரியாவும் ஆடுவது என்றும் அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பிப்பது என்று இலங்கை அணி வியூகம் அமைத்திருந்தது. அந்தத் தொடரில் களுவிதாரண வேகமாக ஆடி கவனத்தை ஈர்த்தபோதும் ஜெயசூரியா சிறப்பாக ஆடவில்லை. பத்துப் போட்டிகளைக் கொண்ட அந்தத் தொடரில் ஜெயசூரியா வெறும் 173 ஓட்டங்களை மாத்திரம் 61.13 என்ற ஸ்ரைக் ரேட்டில் பெற்றிருந்தார். களுவிதாரனவின் ஸ்ரைக்ரேட் 91.24 ஆக இருந்தபோதும் அவர் பத்து போட்டிகளில் 250 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தார். எனவே இந்த ஆரம்ப இணையப் பற்றிய பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பிக்கும்வரை இருக்கவில்லை.

ஆனால் 1996 உலகக் கிண்ணம் தொடங்கியபோது இலங்கை அணி முதலாவது ஆட்டத்திலேயே புத்துணர்ச்சியுடனும் வித்தியாசமான வியூகங்களுடனும் விளையாடியது. சிம்பாப்வே அணியுடனான முதலாவது போட்டியில் ஆரம்ப ஆட்டக்காரர்கள் இருவரும் பெரிதாக ஓட்டங்கள் எதையும் பெறாதபோதும் இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு இந்தியாவுடன் இலங்கை மோதியது. இந்தப் போட்டி இலங்கை அணி, அதற்கு முன்னர் இருந்த இலங்கை அணி அல்ல என்பதை பிரகடனம் செய்த போட்டி போல அமைந்தது என்றே சொல்லவேண்டும். அன்றைய காலத்தில் நல்ல ஓட்டங்கள் என்று சொல்லக்கூடிய 271 ஓட்டங்களை இந்திய அணி குவித்திருந்தது. இலங்கை அணி பதிலுக்கு ஆடியபோது ஜெயசூரியாவும் களுவிதாரனவும் ஆடிய விதம் உருத்திர தாண்டவம் என்றே சொல்லவேண்டும். இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக்கொள்ளாமல் ஆடியது போலவே இலங்கையின் அன்றைய துடுப்பாட்டம் இருந்தது. அந்தப் போக்கு அந்தத் தொடர் முழுவதும் தொடர்ந்தது. முதல் பதினைந்து ஓவர்களில் 60 ஓட்டங்கள் எடுத்தால் நல்லநிலை என்பது பொதுக்கருத்தாக இருந்த அந்நேரத்தில் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக 117 ஓட்டங்களையும் கென்யாவுக்கு எதிராக 123 ஓட்டங்களையும் இங்கிலாந்துக்கு எதிராக 121 ஓட்டங்களையும் இந்தியாவுடனான அரை இறுதியில் 86 ஓட்டங்களையும் அவுஸ்திரேலியாவுடனான இறுதி ஆட்டத்தில் 71 ஓட்டங்களையும் பெற்றது. சில போட்டிகளில் ஆரம்ப விக்கெட்டுகள் விழுந்தாலும் பின்னர் வந்தவர்களும் அதிரடியாகவே விளையாடினார். அரை இறுதி ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை 17 ஓட்டங்களுக்கு இழந்திருந்தபோதும் அதே அதிரடி ஆட்டத்தையே அரவிந்த டி சில்வா ஆடினார். பந்துவீச்சில் முத்தையா முரளிதரனைக் கையாளவே துடுப்பாட்ட வீரர்கள் திணறினார்கள். திரைப்படங்களில் வருகின்ற எத்தனை பேர் வந்தாலும் அடித்துத் துவம்சம் செய்கின்ற கதாநாயகன் போல இலங்கை அணி துடுப்பாட்ட வீரகள் அமைந்தார்கள். ஒரு புதிய கிரிக்கெட் கலாசாரமே தொடங்கியது எனலாம். World Beaters என்று சொல்லக் கூடிய, தோற்கடிக்கவே முடியாத ஓர் அணிபோல இலங்கை அணி தோற்றம் காட்டியது. சற்றே மத்திம வயதைக் கடந்தவர்களுக்கு, எண்பதுகளில் கோலோச்சிய மேற்கிந்தத் தீவுகள் அணியை ஓரளவேனும் நினைவூட்டும்படி இலங்கை அணியின் அதிரடி இருந்தது. அதற்குமுன்னர் கிரிக்கெட் போட்டிகளை பார்க்காத, கிரிக்கெட் பற்றி அதிகம் ஆர்வம் காட்டியிராத பலர் தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் ஆனார்கள். அவர்களுக்கான நாயகனாக ஜெயசூரியாவும், அரவிந்தா டி சில்வாவும் களுவிதாரனவும் மாறினார்கள். இடம்பெயர்ந்து தென்மராட்சியிலும் வடமராட்சியிலும் இருந்த இளைஞர்கள் இடையே களுவிதாரன “கட்” என்கிற களுவிதாரண பாணியிலான முடிவெட்டும் பாணியும் அப்போது உருவானது.

இலங்கை அணியின் இந்த அதிரடியும் ஆதிக்கமும் அத்துடன் நிற்கவில்லை. உலகக் கிண்ணத்தை வென்ற இரண்டாவது வாரத்தில் பாகிஸ்தானுடன் சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டி ஒன்றில் சனத் ஜெயசூரிய 48 பந்துகளில் சதமடித்து (அப்போதைய) அதி வேகமான சதத்தினை நிறைவுசெய்தார். அதிலிருந்து ஐந்தாவது நாள் 17 பந்துகளில் அரைச் சதமடித்து அப்போதைய வேகமான அரைச் சதத்தையும் அடித்தார். கிரிக்கெட் போட்டிகள் பார்க்க நேரம் தாராளமாகக் கிடைத்தமை, புதிதாக நேரடி ஒளிபரப்புகளின் வளர்ச்சி, இலங்கை அணி ஆடிய ஆட்டங்களில் தெரிந்த அதிரடியான பாணியின் காரணமாகக் கிடைத்த கவர்ச்சி என்பன இணைந்து கிரிக்கெட்டிற்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் போர்ச்சூழலில் வாழ்ந்துகொண்டிருந்த தமிழர்கள் பலர் தீவிர ரசிகர்கள் ஆனார்கள்.

1996 ஆம் ஆண்டு ஏப்ரலில் யாழ்ப்பாணம் முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மெல்ல மெல்ல பாடசாலைகள் இயங்கத் தொடங்கின. பொருளாதாரத் தடை பகுதியாக நீக்கப்பட்டது. மின்சாரம் வர சிறிதுகாலம் எடுத்தாலும் நிறைய மினி தியேட்டர்கள் உருவாகின. அவற்றில் எல்லாம் திரைப்படங்கள் போடப்படுவது போல கிரிக்கெட் போட்டிகளும் ஒளிபரப்பப்பட்டன. இலங்கை அணியைப் பொறுத்தவரை களுவிதாரண களை இழந்தாலும் சனத் ஜெயசூரியா, அரவிந்த டி சில்வா போன்ற வீரர்கள் தொடர்ந்து சாதித்தார்கள். அவர்களது அந்த ஆக்ரோஷமான விளையாட்டு முறையால் தொடர்ந்து ஈர்க்கவே செய்தார்கள். இதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் சொக்லெற்றுகள் வரத் தொடங்கின, அவற்றில் ஸ்ரிக்கர்களாக கிரிக்கெட் வீரர்களின் படங்கள் வந்தன. வண்ணப்படங்களாக கிரிக்கெட் வீரர்களின் படங்கள் வீடுகளின் ஒட்டப்படுகின்ற கலாசாரம் பரவலானது. அதற்கு முன்னர் ஸ்போர்ட்ஸ்ரார் இதழில் மட்டும் வந்த போஸ்ரரிற்காக காத்திருக்காமல் கடைகளிலேயே போஸ்ரர்களை வாங்கமுடிந்தது. இராணுவத்தினரின் சோதனைச் சாவடிகளை ஒட்டிய இடங்களில் எல்லாம் பரவலாக கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பாகின. சுவாரசியமான ஒரு விடயம் என்னவென்றால், அப்போது மாணவர்களாக இருந்த எம்மில் பலரிடையே வீடுகளில் இராணுவம் சோதனைக்கு வரும்போது இலங்கை அணி கிரிக்கெட் வீரர்களின் படங்கள் இருந்தால் பெரிதாக சோதிக்க மாட்டான் என்கிற நம்பிக்கை மெலிதாக பரவியது. இது எவ்வளவு தாக்கத்தைத் தந்தது என்று அறுதியாகக் கூட முடியாவிட்டாலும், இதை ஒட்டிய பல கதைகள் கூறப்பட்டுவந்தன. ஈழத்தமிழர்கள் பலர் தம்மையறியாமலேயே மெல்ல மெல்ல இலங்கையுடன் உணர்வுபூர்வமாக ஒன்றியும், அதனுடன் சேர்த்து தம்மை அடையாளப்படுத்துபவர்களாகவும் மாறினார்கள். இன்றுவரை தீவிர தமிழ் தேசியவாதம் பேசும் பலர் கூட, கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஸ்ரீலங்கன் என்று பூரிப்படைவதையும் வெளிப்படுவதையும் பார்க்கக் கூடியதாகவே இருக்கின்றது.

கிரிக்கெட் ஒரு விளையாட்டு, அதனை அரசியலுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பது தவறு என்கிற ஒரு வாதம் அண்மைக்காலமாக பலராலும் குறிப்பிடப்படுகின்றது. ஆனால் வரலாற்றுப் பூர்வமாகவே கிரிக்கெட் அரசியலுடன் மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டதோர் விளையாட்டாகவே இருந்துவருகின்றது. குறிப்பாக தேசக்கட்டுமானத்தில் கிரிக்கெட்டின் பங்களிப்பு மிக முக்கிய பாத்திரத்தினை வகித்துள்ளது. குறிப்பாக அவுஸ்திரேலியாவும், மேற்கிந்திய தீவுகளும் தேச அடையாளங்களை நோக்கி உறுதியடைந்ததிலும் காலனித்துவத்துக்கு எதிரான ஒருமித்த உணர்வினைக் கட்டியெழுப்பியதிலும் கிரிக்கெட்டிற்கு முக்கியமான பங்கிருக்கின்றது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருக்கின்ற மக்கள் பல்வேறு இனத்துவ அடையாளங்களைக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களை அவ்வவ் நாட்டவர்களாக ஒன்றிணைப்பதில் கிரிக்கெட் என்பது முக்கிய பங்காற்றுகின்றது. உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களை கிரிக்கெட்டில் பிரதிநிதித்துவப் படுத்துகின்றதான ஒரு தோற்றத்தை பாகிஸ்தான் தொடர்ச்சியாகச் செய்துவருகின்றது. 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானும் இந்தியாவும் T20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடின. இந்தியா இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் பரிசளிப்பின்போது பேசிய பாகிஸ்தான் அணித்தலைவர் ஷோயிப் மாலிக் “சொந்தநாட்டில் (Back home) இருக்கும் மக்களுக்கும் உலகெங்கும் வாழும் முஸ்லிம்களுக்கும் எமக்கு ஆதரவளித்ததற்காக நன்றி” என்று கூறியிருந்தார். ஆனால் அந்தப் போட்டியில் இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றவர் முஸ்லிமான இர்ஃபான் பதான். அதேபோல அரங்கில் இருந்து இந்திய அணிக்காக உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தவர் முஸ்லிமான நடிகர் ஷாருக் கான். இதற்கு முன்பாக 1999 இல் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வருவதற்கான அனுமதியளிக்கப்பட்ட போது அதனைக் கடுமையாக எதிர்த்த இந்துத்துவ மதவாதக் கட்சியான சிவசேனை, இந்தியாவில் இருக்கின்ற முஸ்லிம்கள் அனைவரும் இந்தியாவுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்பது அவர்களது கடமை என்று பரப்புரை செய்துவந்தது. அக்கட்சியின் தலைவரான பால் தாக்கரே, இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்கின்ற ஒவ்வொரு தடவையும் கண்ணீர் விடுவதன் மூலம் இந்தியாவில் இருக்கின்ற முஸ்லிம்கள் பாகிஸ்தானியர்கள் இல்லை என்பதை நிரூபிக்கவேண்டும் என்று கூறி இருந்தார். எனவே தேசக் கட்டுமானத்திலும் சர்வதேச அரசியலிலும் கிரிக்கெட்டிற்கு மிக முக்கியமான என்பதை மாத்திரம் இங்கே சொல்லிக்கொண்டு அதனை விரிவாக இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம். அதேநேரம் இலங்கை அணியின் அரசியல் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

இலங்கையைப் பொறுத்தவரை அதன் கிரிக்கெட் வீரர்கள் நேரடியாக அல்லது நெருக்கமாக அரசியல் சார்புகளைக் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். இலங்கை அணியின் முக்கிய வீரர்களாக இருந்த அர்ஜூனா ரணதுங்க, சனத் ஜெயசூரியா போன்றவர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் இனவாதக் கட்சிகளுடன் இணைந்து மிகத் திவீரமாக செயற்பட்டவர்கள். நாட்டில் இருக்கின்ற இனப்பிரச்சனை பற்றி இவர்கள் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்குச் சாதகமாக ஒருபோதும் கருத்துத் தெரிவித்ததில்லை. தவிர, இன்று இலங்கையில் பேரினவாதிகள் சொல்லுகின்ற இலங்கையர் என்கிற அடையாளமானது பௌத்த சிங்கள அடையாளமேயன்றி அங்கே சிறுபான்மையினருக்கு எந்த அங்கீகாரமும் இல்லை என்பதே உண்மை. சிறுபான்மையினரையும் உள்வாங்கி இலங்கையர் என்கிற அடையாளத்தைக் கட்டியெழுப்புவது குறித்த எந்த செயற்திட்டமோ அல்லது நோக்கமோ இவர்களிடம் இல்லை. இன்றுவரை இலங்கை அணியில் தமிழர் என்ற அடையாளத்துடன் விளையாடியவர்கள் என்று பார்த்தால் முத்தையா முரளிதரனையும் விநோதன் ஜோனையும் பிரதீப் ஜெயப்பிரகாஷ்தரனையும் தவிர எவருமே இல்லை. அஞ்சலோ மத்யூஸ், ரஸல் ஆர்னோல்ட் போன்றவர்கள் தமிழர்கள் என்று சொல்லப்பட்டாலும் அவர்கள் தமிழ் அடையாளத்துடன் பார்க்கப்பட்டவர்கள் அல்ல. இவர்களில் முரளிதரன் பேசிய அரசியல் கூட சிறுபான்மையினரின் நலனுக்கு எதிரானதாகவே அமைந்தது. குறிப்பாக போர்க் குற்ற விசாரணை குறித்தும் காணாமற்போனவர்கள் குறித்தும் அவர் பேசியது தமிழ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. பாகிஸ்தானில் இலங்கை அணியினர் சென்ற பேருந்து மீது இடம்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்துக் கருத்துத் தெரிவித்த இலங்கை அணி வீரர்கள் பலரும், தமக்கு இலங்கையில் இப்படியான தீவிரவாதத் தாக்குதல்கள் பழக்கமானது என்பதால் தாம் தம்மைத் தற்காத்துக்கொண்டோம் என்ற பொருள்பட கூறி இருந்தனர். விஜய் டீவியில் இடம்பெற்ற காஃபி வித் அனு நிகழ்ச்சியில் முரளிதரன் கலந்து கொண்டபோது இந்தச் சம்பவம் குறித்து அனுஹாசன் கேட்டபோதும் முரளிதரன், இலங்கையில் தாம் இப்படியான தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொண்டு பழகியதால் தமக்கு இந்தத் தாக்குதல் சமாளிக்கக் கூடியதாக இருந்தது என்றே கூறி இருந்தார். அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றது உண்மை என்றாலும், அதே நேரத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை பற்றி எதுவும் பேசாமல், அதற்கெதிராக மக்கள் போராட்டத்தைப் போலி என்று சொல்பவர்களாக, அதற்கான நீதியைக் கோராமல், ஒன்றுபட்ட இலங்கை என்று கிரிக்கெட் வீரர்கள், தமது கிரிக்கெட் பிரபலத்தை வைத்துக்கொண்டே பேசும்போது, அவர்களின் கிரிக்கெட் பிரபலத்துக்காகவே அவை பரவலாகும்போது எந்த அடிப்படையில் நாம் கிரிக்கெட்டையும் அரசியலையும் இலங்கையில் பிரித்துப் பார்க்க முடியும்? 2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றபோது அந்தப் போட்டிகள் இடம்பெறும் காலப்பகுதிக்கு யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர். இறுதிப் போட்டியில் ஆடிய இலங்கை அணியின் தலைவர் மகேல ஜெயவர்த்தன, இறுதிப் போட்டியில் வென்றால் பரிசுப்பணத்தை நாட்டில் நிலவும் பயங்கரவாதத்தை ஒழிக்கும்பொருட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்குவோம் என்று தெரிவித்திருந்தார். அதற்கான நெருக்கடிகள் அவருக்கு இருந்திருக்கலாம். ஆனால் கிரிக்கெட் தன் வரலாற்றில் மிக தீவிரமான அரசியல் நிலைப்பாடுகளை எதிர்த்த வீரர்களைப் பார்த்திருக்கின்றது; கொண்டாடியிருக்கின்றது. Fire in Babylon ஆவணப்படத்தில் எப்படி மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள், குறிப்பாக விவியன் ரிச்சர்ட்ஸ் எவ்வளவு அரசியல் தெளிவுடன் கிரிக்கெட்டை அணுகினார்கள் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அண்டி ஃப்ளவரும் ஹென்றி ஒலொங்காவும் 2003 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் சிம்பாப்வேயில் இறந்துவிட்ட ஜனநாயகத்துக்காக என்று கருப்புப் பட்டி அணிந்து நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடியது மிக தீவிரமான அரசியல் நிலைப்பாடு என்றே கருதவேண்டும். ஆனால் இலங்கை அணியைப் பொறுத்தவரை அதன் வீரர்கள் அனைவருமே பௌத்த சிங்கள அடையாளத்தையே இலங்கை அடையாளமாகக் ஏற்றவர்கள் அல்லது அது பற்றிய பிரக்ஞையில்லாமல் ஒன்றுபட்ட இலங்கை என்று கதைப்பவர்கள். அந்தவகையில் பௌத்த சிங்கள அடையாளத்தை இலங்கையர் என்கிற அடையாளமாக முன்னிறுத்த முற்படுகின்ற பேரினவாதத்தின் கருவிகளாகவே இலங்கை கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் அணியும் இருக்கின்றது. சிறுபான்மையினரையும் உள்வாங்கி பல்லின அடையாளத்துடனான இலங்கையர் என்கிற அடையாளத்தை செய்வதற்கான எந்த அறிகுறியும் கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் எந்த நகர்விலும் இல்லாமல் இருக்கின்றபோது கிரிக்கெட் அல்லது விளையாட்டு வேறு அரசியல் வேறு என்பது அரசியல் பிரக்ஞை இன்மை என்றே சொல்லமுடியும். குறிப்பாக சிங்கள பௌத்த அடையாளத்தினையே முன்வைத்து ஒற்றைப்படையான “இலங்கை” அடையாளத்தை உருவாக்குவதற்கான கருவிகளில் ஒன்றாகவே கிரிக்கெட்டும் இலங்கையில் உபயோகிக்கப்படுகின்றது என்றபோது தமிழ் தேசியவாதத்தை முன்னெடுப்பவர்களும், தமிழ் அடையாளைத்தை முன்வைப்பவர்களும் இலங்கை கிரிக்கெட் அணி ரசிகர்களாக இருப்பது என்பது ஒருவிதமான இரட்டைநிலை என்றே சொல்லவேண்டும். இதுபற்றிப் பேசுகின்றபோது அனேகமானவர்கள் 1996 இல் இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றியை விடுதலைப் புலிகளும் கொண்டாடினார்கள் என்பதையும் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்களாக இருந்தார்கள் என்றும் சொல்வது வழக்கம். அப்படி இருந்தால், அதனை அரசியல் பிரக்ஞையில் இருந்த குறைபாடென்றே கருதமுடியும். இந்த இடத்தில் விவியன் ரிச்சர்ட்ஸை மீண்டும் நினைவுகூர்வது பொருத்தம் என்று நினைக்கின்றேன். தனது மணிக்கட்டில் அணிகின்ற பட்டியில் இருந்த பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்கள் முறையே இயற்கையையும் தம்மிடமிருந்து களவாடப்பட்ட தங்கம் போன்ற வளங்களையும் மற்றவர்களுக்காகவும், ஆக்கிரமிப்பாலும் கொல்லப்பட்டவர்களின் இரத்தத்தையும் குறிப்பதாக ரஸ்தாபாரிகளின் நிறங்களை பிரக்ஞையுடன் அணிந்தவர் விவியன் ரிச்சர்ட்ஸ். தான் ஹெல்மெட் போடாமல் ஆடுவதில் இருந்து, தனக்கு ஆடச் சிரமமான பந்தொன்றினை வீசிய பந்துவீச்சாளரின் பார்வையை எதிர்கொள்வதில் இருந்து எல்லாவற்றையும் அரசியல் பிரக்ஞையுடன் எதிர்கொண்டார் விவியன் ரிச்சர்ட்ஸ். கிரிக்கெட்டினை தமது விடுதலைக்கான கருவியாகப் பாவித்து அரசியல் தெளிவுடன் இருந்த அன்றைய மேற்கிந்திய தீவுகள் அணியை உற்சாகப்படுத்துபவராக பொப் மார்லி இருந்தார். Fire in Babylon ஆவணப்படத்தில் கொலின் கிராஃப்ட், விவியன் ரிச்சர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங், அண்டி ரொபேர்ட்ஸ் ஆகியோர் எவ்வளவு அரசியல் தெளிவுடன் பேசுகின்றார்கள் என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே பார்க்கவேண்டும். இவைபற்றிய அறிதல்கள் இல்லாமல் சொல்லப்படுகின்ற அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கிரிக்கெட் என்பது உண்மையில் அரசியல் பிரக்ஞை இல்லாத அரசியல் அன்றி வேறில்லை.

உசாத்துணை நூல்கள்
1. Liberation Cricket – West Indies Cricket Culture
2. The Great Tamasha
3. The Cambridge Companion to Cricket
4. Fire in Babylon – Documentary
5. Beyond A Boundary

-அருண்மொழிவர்மன்

Related posts

துஷ்பிரயோகத்தின் சாட்சி – 09 -நவாலியூர் தாமா

vithai

புற்றுநோய் மருத்துவம்

vithai

ஆசிரியர் தினம் – யாழ்ப்பாண புதிய நடுத்தர வர்க்க சிந்தனைகளின் எழுச்சியும் வித்தியாசங்களை விளங்கி கொள்ளுதலின் முரண்பாடும்

vithai

சாதியும் மொழியும்

vithai

நானும் கூட என்னும் பெண்ணியப் பகிர்வுக் குறியீட்டுச் செயற்பாட்டியக்கம் #MeToo

vithai

போராடுவது என்றால் என்ன?

vithai

Leave a Comment