vithaikulumam.com
சமகாலகுறிப்புகள்

கோயிலில் சாதியும் எதிர்ப்பின் குரல்களும்

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோயில் ஒன்றில் சகலகலாவல்லி மாலை பாட முற்பட்ட உயர்தர வகுப்பில் கல்விகற்கும் இளைஞர் ஒருவரை அவ்வாறு பாடமுடியாது என்று சொல்லி ஆலய நிர்வாக சபையின் தலைவர் வெளியேற்றிய சம்பவம் ஒன்றினைக் குறித்த காணொலி ஒன்றினை ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சாதியத்தின் அடிப்படையிலான வன்கொடுமைகள் குறித்தும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்தும் பேச்சுகள் எழும்போதெல்லாம் சாதியம் இப்போது ஒழிந்துவிட்டது என்றும் இல்லாத விடயத்தை ஏன் பேசுகின்றீர்கள் என்றும் சொல்லித் தட்டிக்கழிக்கின்ற சாதியவாதிகளின் பொய்களை பொதுவெளியில் இவ்வாறான ஒடுக்குமுறைகளைக் கொண்டுவருவதன் மூலமே வெளிக்கொண்டுவர முடியும்.

இந்தக் காணொலியில் குறித்த இளைஞர் பின்வருமாறு தெரிவிக்கின்றார்:

”வணக்கம்,
நான் பிள்ளையார் கோயிலுக்கு வந்தனான். தேவாரம் பாடோனும் என்று ஆசையா வந்தனான். இன்றைக்கு சரஸ்வதி பூசை என்று எல்லோருக்கும் தெரியும். சகலகலாவல்லி மாலை பாடோனும் என்று ஆசையா வந்தனான். என்னைத் தேவாரம் பாட வேண்டாம், வெளியில போ என்று கலைச்சுவிட்டிட்டினம். உண்மையா சரியான கவலையாக் கிடக்கு. நாங்கள் தேவாரம் பாடிறதே ஒருத்தருக்கும் பிடிக்கிறேல்ல. எங்கட குடும்பத்தையே முழுசா புறக்கணிக்கிறது. என்ன பிரச்சனை என்று இதுவரைக்கும் தெரியாது. எல்லாரும் சாதி என்று தான் சொல்லினம், ஆனால் எனக்கு அது வடிவா தெரியேல்ல. ஆனால் அதோ முக்கிய பிரச்சனையோ வடிவா தெரியேல்ல. சில பேர் சொல்லினம் படிப்பில பொறாமையென்று, நல்லாப் படிக்கிறோமாம், அதால பொறாமையாம் என்று நிறையக் கதைகள் சொல்லிக்கொண்டிருக்கினம். உண்மையில எனக்கு மனவருத்தமா இருக்கிது. ஆனால் இவையள எதிர்த்துக் கதைக்கிறதுக்கு இங்க ஒருத்தரும் இல்லையெண்டுறதுதான் முக்கிய பிரச்சனை.

(ஊடகவியலாளர்: இன்றைக்கு என்ன காரணம் சொல்லி உங்களைத் திருப்பி அனுப்பிச்சினம்? என்ன சொல்லிச்சினம்)
நீ இதில் தேவாரம் பாடாதை, வெளியில போ, அவ்வளவுதான் தலைவர் சொன்னவர். அவர் சமாதான நீதவானும் கூட.

(ஊடகவியலாளர்: இதுக்கு முதல் எத்தனை தடவை இப்படியான சம்பவம் நடந்தது)
நாலைஞ்சு தரத்துக்கு மேல நடந்திருக்கு, ஆனா நான் ஊருக்குள்ள பிரச்சனை, வெளியில சொல்லக்கூடாது சொல்லக்கூடாது என்று இருந்தால் இப்படியே ஒதுக்கிக்கொண்டு தான் இருப்பினம்.

***

ஆலய நுழைவுப்போராட்டம், தீண்டாமை ஒழிப்பிற்கான வெகுஜனப் போராட்டம் போன்ற சமூக நீதிக்கான முக்கியமான போராட்டங்கள் தொடங்கி 50 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் கூட சாதியத்தைப் பேணிக்கொண்டே எமது சமூகம் இயங்கிவருகின்றது. அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபையால் மார்ச் 12, 2017 அன்று அப்போதையை இந்துக் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் திரு சுவாமிநாதன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்றில் ”சிறுபான்மைத் தமிழரின்” ஆலயப் பிரவேசத்தைத் தடுக்கின்ற ஆலயங்கள் என்று 102 ஆலயங்களின் பெயர்ப் பட்டியல், விலாசம், பதிவிலக்கம் என்பவற்றைப் பட்டியலிட்டு அனுப்பியதுடன் “எல்லாருக்கும் வழிபாட்டிற்காக திறந்துவிடப்பட்ட ஆலயங்களிலும் ஆதிக்க சாதியினர் கபடமாக, நுட்பமான முறையில் பிற்படுத்தப்பட்டவர்கள் இல்லாத திருப்பணிச் சபை அமைத்து அதனூடாக சுவாமி காவுதல், தேர் இழுத்தல் மற்றும் திருப்பணி வேலைகளிலும் எமது மக்கள் தடுக்கப்படுகிறார்கள். 1971 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட சமூக குறைபாட்டு ஒழிப்புச் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்குகிறார்கள்” என்பதைத் தெரிவித்திருந்தார்கள். அத்துடன் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய உரிமைகளைத் தடுக்கும் நோக்குடனேயே நிதிவளங்கள் இருந்தும் கூட பல ஆலயங்கள் இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன என்பதையும் அந்தக் கடிதம் கவனப்படுத்தியிருந்தது.

மேலே குறிப்பிடப்பட்டிருந்த பெரிய பரந்தனில் இடம்பெற்ற சம்பவத்தில், குறித்த இளைஞரின் குடும்பம் ஆலய நிர்வாகத்தினால் சாதிய ரீதியிலான பாகுபாட்டுக்கு உள்ளாகின்றது என்றே தெரிகின்றது. சுயமரியாதையும் சமத்துவமும் நிறைந்ததோர் சமூகம் ஒன்றைக்கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் செயற்படும் விதை குழுமம் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றது. இதுபோன்ற ஒடுக்குமுறைகள் பரவலாக நடைபெறுகின்றபோதும் மிக மிகச் சொற்பமான சந்தர்ப்பங்களிலேயே அவை குறித்து பொதுவெளியில் உரையாடல்கள் எழுகின்றன. எனவே அவற்றைச் சிறிதேனும் உதாசீனம் செய்துவிடாது சமூகநீதிக்காகக் போராடுபவர்கள் ஒன்றிணைந்து போராடவேண்டும். ஆலயங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கப்படுவது உறுதிசெய்யப்படவேண்டும். ஈழத்தைப் பொருத்தவரை பெரும்பாலான கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள், சாதியவாரியாக சிறுபான்மையினராகவே வசிக்கின்றார்கள். இந்தச் சம்பவம் நடந்த ஆலயச் சூழலிலும் மிகமிகக் குறைவானவர்களாகவே குறிக்கப்பட்ட இளைஞரின் சாதியப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றார்கள் என்றே தெரிகின்றது. இப்படியான சூழலும் சமூக அமைப்பும் ஒடுக்கப்படுபவர்கள் துணிந்து தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதைத் தடுத்துவிடும் காரணிகளில் ஒன்றாக இருக்கின்றது. சமூக நீதிக்காகவும், சாதிய ஒழிப்பிற்காகவும் போராடுபவர்கள் அமைப்பு ரீதியில் ஒன்றிணைவதும் உணர்வுத்தோழமையுடன் செயலாற்றுவதுமே இப்போதைய தேவை. சமூக நீதிக்கான முதலாவது அடியை எங்கள் குடும்பங்களில் இருந்து, நாம் வாழும் சூழலில் இருந்து, நாம் ஊடாடும் அமைப்புகள், சங்கங்கள், நிறுவனங்களில் இருந்து தொடங்குவோம்.

நன்றி – இந்தக் காணொலி ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது

Related posts

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதியும் ஒரே இலங்கைக்கான நீதியும்

vithai

ஏன் பெரியாரும் வேண்டும்?

vithai

குமாரவடிவேல் குருபரனின் மீதான் தடை தொடர்பில் மாணவர் ஒன்றியம்

vithai

பெரியபரந்தன் பிள்ளையாரும் சமூக நீதியும்

vithai

இன்னும் கிடைக்காத சமூகநீதி

vithai

சமூக சேவையும் சமூக செயற்பாடும்

vithai

Leave a Comment