vithaikulumam.com
அறிக்கைகள் சமகாலகுறிப்புகள்

பெரியபரந்தன் பிள்ளையாரும் சமூக நீதியும்

சாதிய ஒடுக்குமுறை இப்போதெல்லாம் வழக்கொழிந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருக்கும் நமது சமூகம் சாதிய ஒடுக்குமுறையை நவீன வடிவங்களூடாகவும் வெளித்தெரியாதபடி காத்து வருகிறது. தலைமுறைகளாகத் தொடரும் சாதிய அடுக்குகளின் விளைவுகளையும் அதன் மூலம் உண்டாகித் தொடரும் மனோநிலைகளையும் எதிர்ப்பதிலிருந்து நாம் விலகி ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்த ஒடுக்குமுறையை நாம் ஒரு ஒடுக்குமுறையாகப் பொது வெளியில் உரையாடுவதில்லை. அதை உள் வீட்டு அழுக்காகக் கணிக்கிறோம். அந்த மனோபாவமே, சாதியத்தின் வேர்களும் கிளைகளும் நீடித்து வளர்வதற்கான மண்ணாக அமைந்துவிடுகின்றது.

கிளிநொச்சி, பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோயில் ஒன்றில் சகலகலாவல்லி மாலை பாடச் சென்ற உயர்தர வகுப்பில் கல்விகற்கும் மாணவர் ஒருவரை அவ்வாறு பாடமுடியாது என்று சொல்லி ஆலய நிர்வாக சபையின் தலைவர் வெளியேற்றிய சம்பவம் ஒன்றினைக் குறித்த காணொலி ஒன்றினை ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது தொடர்பில் விதை குழுமம் “கோயிலில் சாதியும் எதிர்ப்பின் குரல்களும்” என்ற ஒரு அறிக்கையை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இதையடுத்து குறித்த பிரச்சினை தொடர்பாக அக்குடும்பத்தாரைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தோம்.

‘தோத்திரங்களைப்’ பாடக் கூடாது என்று அந்த மாணவருக்குச் சொல்லப்பட்ட குறித்த நாளுக்கு நீண்டகாலத்திற்கு முன்பிருந்தே அக் குடும்பம் சாதிய அடிப்படையில் ஒடுக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. அந்த நிகழ்வு அந்தக் குடும்பத்தினர் மீது பிரயோகிக்கப்படும் சாதிய ஒடுக்குறையை வெளிக்கொண்டு வந்த ஒரு சம்பவம் மட்டும் தான். அந்தக் குடும்பத்தில் இப்போதிருக்கும் அம்மம்மா காலத்திலும் அவருக்கு நினைவு தெரிந்த காலத்திலுமிருந்தே அவர்கள் சாதிய ஒடுக்குமுறைகளை அனுபவித்து வருகிறார்கள். நாம் காணொலியில் பார்த்த அந்த மாணவருடன் பேசிய பின்னர் அவரது குடும்பத்தினருடன் பேசினோம். அவருடைய அம்மாவும் அம்மம்மாவும் தங்களுக்கும் தங்களுடைய தலைமுறைகளுக்கும் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற சாதிய ஒடுக்குமுறையைப் பற்றிக் குறிப்பிட்ட விடயங்கள் முக்கியமானவை. தமது நினைவுகளில் இருந்தும், தொகுத்தும் அவர்கள் குறிப்பிடுகின்ற, தலைமுறைகளாகத் தொடர்கின்ற இந்த ஒடுக்குமுறைகள் குறித்துப் பொதுவெளியில் பேசுவதும், எதிர்க்குரலை எழுப்புவதும் மிக முக்கியமான சமகாலப்பிரச்சனைகளில் ஒன்றென்று கருதுகின்றோம். அவர்கள் சொல்கின்ற ஒவ்வொரு விடயங்களும் இன்றும் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளை ஓங்கி உரைப்பவை. ‘இப்ப ஆர் சாதி பாக்கினம்’ என்பதான புரட்டுக்களை ஓங்கி அறைபவை.

• கோயிலின் ‘நர்த்தன’ மண்டபத்தினுள் ‘பிள்ளையாருக்கான நேர்த்தியுடனும் மாலையுடனும் இவர்கள் நுழைகிறார்கள் என்பதற்காக ஒரு மேசையைப் போட்டு அதற்கு அப்பால் இவர்கள் வருவதைத் தடை செய்திருக்கிறார்கள்.

• ஒரு தடவை அந்த மாணவரின் தாயார் கோயிலில் இருந்த, எல்லோரும் பாவிக்கும் மணியொன்றை அடித்தமைக்காக அதைப் பாவிக்கக் கூடாதென்று மடப்பள்ளியில் கிடாரத்தால் மூடி வைத்திருந்திருக்கிறார்கள்.

• நேர்த்திக்காக மாலை கொண்டு சென்றால் “வேண்டுமென்றால் வாசலில் வைத்து விட்டுப் போ அல்லது வீட்ட கொண்டு போ” என்று ஏசியிருக்கிறார்கள். மாலையைக் கொண்டு சென்ற தன் மகன் அழுவாரைப் போல் நின்றதை அந்தத் தாய் நினைவுகூர்ந்தார்.

• கோயிலில் பூசைகள் நடந்து கொண்டிருக்கும் போதும், வேறு சந்தர்ப்பங்களின் போதும் பல்வேறு தடவைகள் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களை உச்சத் தொனியில் மரியாதைக்குறைவான வார்த்தைகளால் நிர்வாகத்தினர் ஏசியிருக்கின்றனர். அதை ஊரார் வாய் மூடிப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.

• ஒரு தடவை அந்த அம்மம்மாவை அடிக்குமாற் போல் ஏசிக் கொண்டு வந்ததையும் சொன்னார்கள்.

இப்படியாக இந்தக் குடும்பம் தொடர்பில் நிர்வாகத்தினர் நடந்து கொண்ட முறைகள் அப்பட்டமான சாதிய வன்மத்தினதும் தீண்டாமையினதும் வெளிப்பாடாகவே இருக்கின்றன. வெளிப்படையாகவே இந்த அநீதி இழைக்கப்பட்டபோதும் கூட அந்தக் குடும்பத்தினருக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகள் குறித்தும் அவர்கள் சமத்துவமாக நடத்தப்படவேண்டும் என்பது குறித்தும் எவருமே குரல் எழுப்பவில்லை என்பதே சாதியம் எப்படி சமூகத்துள் ஊடுருவியிருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது.

யுத்தத்தின் பின் ஆறு வருடங்களாக தன் மகன்களைப் படிக்க வைக்க மின்சாரமின்றி பட்டபாட்டைச் சொன்னார். தங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தின் பிள்ளைகள் ‘படிக்கிறார்கள்’ என்பதை ஊரின் ‘செல்வாக்கு மிக்க’ குடும்பங்கள் சிலவற்றால் சகிக்க முடியாத மனநிலையை வெளிப்படுத்தும் அப்பட்டமான சம்பவங்களை அப்பிள்ளைகள் மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்கிறார்கள். மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள அக்குடும்பம் எதிர்கொண்ட இடர்களும் அப்படியாக ஏற்படுத்தப்பட்ட தடைகள் என்றே தெரிகின்றது. (ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க விடாமல், காலம் தள்ளும் போக்கு இன்றும் பல இடங்களிலும் தொடர்கிறது)

இன்னும் நீண்ட பட்டியல்களுக்குட் செல்லாமல் இப்போதைய பிரச்சினையையும் அது எதிர்கொள்ளப்பட்டிருக்கும் முறையையும் பற்றி விளங்கிக் கொண்டால் இந்த ஒடுக்குமுறையைச் செய்யும் நிர்வாகத்தினரின் ஆதிக்க வெறியையும் சாதிய வன்மத்தையும் விளங்கிக் கொள்ளலாம். இப் பிரச்சினை வெளிக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் அரச பொறிமுறையும் மத அமைப்பொன்றும் இந்தப் பிரச்சினையை அணுகிய முறையைப் பார்ப்போம். அரச பொறிமுறையில் நிர்வாகம், கோயில் ஐயர், பாதிக்கப்பட்ட குடும்பம் ஆகியோரிடம் அறிக்கைகள் கேட்டிருக்கிறார்கள், அவற்றைக் கொண்டு இனிமேல் இப்படி நடக்கக்கூடாது என்பதாகச் சமரசம் பேசும் முயற்சியில் இறங்க வாய்ப்பிருக்கிறது. அவற்றின் விளைவுகள் இந்தக் குடும்பத்தினருக்கு நீதியைப் பெற்றுத்தருமா என்பதை இனிமேற்தான் பார்க்க வேண்டும்.

‘சின்மயா மிஷன்’ என்ற மத அமைப்பு இப்பிரச்சினையை இணக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டோம் என்று முகநூலில் தெரிவித்திருந்தார்கள். அவர்கள் நேரடியாகவே இந்த ஆலயத்துக்குச் சென்று இப்படிச் செய்வது தவறு என்று அப்படி ஒரு பிரட்டு, இப்படி ஒரு பிரட்டு என்று பாதிக்கப்பட்ட தரப்பின் குரலை அமர்த்தி ஆதிக்க சாதித் தரப்பின் பக்கத்தை வலுப்படுத்தி விட்டு வந்திருக்கிறார்கள். வெறும் வாய்ப்பேச்சால் பூசிமெழுகிவிட்டு, அவ்வளவுதான் பிரச்சனை முடிந்து விட்டது கை குலுக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி முடிக்கும் பிரச்சினையல்ல நிகழ்ந்து கொண்டிருப்பது என்பதைத் தெரியாதவர்கள் போல அந்தக் குடும்பத்திற்கு நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய நீதியை வாங்கிக்கொடுக்காமல், அநீதியின் பக்கம் நின்று மூடி மறைத்து விட்டு வந்திருக்கிறார்கள். சாதிய வன்கொடுமைகளையும் அடக்குமுறைகளையும் ஏவிவிட்டவர்களைக் கண்டிக்காமல், பாதிக்கப்பட்டவர்களிற்கு சமூகநீதி வேண்டும் என்று குரல்கொடுக்காமல் அன்பே சிவம் என்று சொன்னால் நடந்த, நடந்து கொண்டிருக்கிற ஒடுக்குமுறைகள் இல்லாமல் போய் விடுமா?

இக் குடும்பம் சாதிய மனநிலையால் மிக வெளிப்படையாகவும் நேரடியாகவும் புறக்கணிக்கப்பட்டும் தீண்டாமைக்குள்ளாக்கப்பட்டும் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டும் உள்ளது. அவர் பொது வெளியில் பேசியதையும் பேசியவற்றையும் திசைமாற்றவும், சமாளிக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. அவர்களது சொந்தங்களே ஒடுங்கிப்போகச் சொல்கின்றன. ‘ உங்களுக்கு ஏன் தேவையில்லாத பிரச்சினை?’ ‘வேறை கோயிலுக்குப் போங்கோவன்?’ உங்களுக்கெண்டு கோயிலொண்டு இருக்குத்தானே?’ போன்ற வாக்கியங்களில் இருக்க கூடிய அநீதிகளையும் அசமத்துவத்தையும் உருவாக்கி வைத்திருப்பதும் இதே சாதிய மனநிலைதானே.

இப்பொழுது இதைக் கையாண்ட, கையாண்டு கொண்டிருக்கிற அமைப்புகள் இரண்டும் ஆதிக்கசாதி வெறி கொண்ட நிர்வாகத்தினரின் பக்கத்தில் நின்று கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தின் குரல்வளையை நசித்துப் பிடிப்பதுபோல் கை குலுக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். அக் குடும்பத்திற்குத் தேவை நிரந்தரத் தீர்வு, ஒவ்வொரு முறையும் அரசுக்கும் மத அமைப்புகளுக்குமாக அலைந்து கொண்டிருக்கத் தேவையில்லை. நாம் அவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய சமூக நீதியென்பது அவர்களிற்கான சுயமரியாதையையும் தீண்டாமைகளற்ற சமத்துவத்தையும் தான். அதைத் தவிர மிச்சமெல்லாம் சாதிய வேருக்கு நாம் அமைத்துக் கொண்டிருக்கும் பாதுகாப்பு வேலிகளாகவே அமைய முடியும்.

ஆனால் சற்றுக் காலத்திற்கு முன் அந்தத் தாய் கோயில் நிர்வாக சபை உறுப்பினர் என்ற பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார், பெண்கள் நிர்வாகத்தில் இருக்கத் தேவையில்லை என்று நிர்வாகத்திலிருந்த ஒருவர் சத்தம் போட்டிருக்கிறார். (இரு பெண்கள் தற்போது நிர்வாகத்தில் இருப்பதாக அறிய முடிகிறது, ஆனால் இந்தத் தாய் நிர்வாகசபையில் இருந்து நீக்கப்பட்டபோது இந்த வார்த்தைகளை ஒருவர் சொல்லியிருக்கிறார்) குறித்த பிரச்சினை நடந்த தினத்தன்று அந்த மாணவர் வேட்டி அணியவில்லை என்பதற்காகத் தான் பாட விடவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். மேலும் பாடுவதற்கென்று நிர்வாகம் ஒருவரை நியமித்திருப்பதாகவும் சொல்லியிருந்தார்கள். ஆனால் முரண் என்னவென்றால் தன் வாழ்நாளில் ஒருமுறை கூட அம்மாணவர் ஆலயத்தில் பாட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்பதுதான். அன்று ஏன் பாடவிடவில்லை என்பதற்குச் சொல்லியிருப்பது அன்றைக்குரிய காரணம் மட்டுமே. இந்தப் பிரச்சினைக்குப் பின் அந்த மாணவரை ஆலயத்தில் பாட வைக்க ஒரு சிலர் முயற்சித்திருந்தார்கள், அந்த மாணவரை பாடவைக்கலாம் என்று முயற்சியெடுக்கப்பட்ட அன்று அம்மாணவர் கோயிலுக்குச் செல்லவில்லை. ஆனால், அன்று வழமையாகப் பாடுபவர் என்று சொல்லப்படுபவரும் பாடவில்லை. கோயில் அய்யரே பாடியிருக்கிறார். பின்னர் நடந்த பூசைகளில் அந்தந்தப் பூசைக்காரர்கள் பாடியிருக்கிறார்கள். நான் பாடவில்லையென்றாலும் பரவாயில்லை, நீ பாடக் கூடாதென்பது வெளிப்படையான சாதி வெறியன்றி வேறு என்ன? சாதிய ஒடுக்குமுறையாளர்கள் சாதியத்தை நேரடிக்காரணமாகச் சொல்லி ஒடுக்குமுறைகளை நிகழ்த்துவதில்லை. முறைகள் என்றும் ஒழுங்கு என்றும் சொல்லிக்கொண்டு நிறுவனரீதியில் மிகவும் தந்திரமாக ஒடுக்குமுறைகளை நிகழ்த்துவதன் தொடர்ச்சியாகவே இதனைப் பார்க்கமுடிகின்றது.

சாதிய ஒடுக்குமுறைகளைச் செய்யும் அந்த நிர்வாகத் தரப்பினரை எதிர்த்துக் கேள்வி கேட்க, அவர்கள் செய்வது அநீதியென்பதைச் சொல்லி, நியாயமான உரிமைகளை வாங்கிக் கொடுக்க ஏன் இந்த அமைப்புகளால் முடியவில்லை? இவர்கள் இயங்குவதே ஒடுக்குமுறையாளர்களின், ஆதிக்க சாதியினரின் நலன்களுக்காகத் தானா? மேலும், தமக்கான உரிமைகளுக்காகக் குரல் எழுப்புபவர்களைப் பார்த்து இதெல்லாம் பிரச்சினையாக்காத, சும்மா இரு, வேற கோயிலுக்குப் போ, இது பொய், வேண்டுமென்று சொல்கிறார்கள், இதற்குப் பின்னால் யாரோ இருக்கின்றார்கள் என்று ஆயிரக்கணக்கான காரணங்களைச் சொல்லி மூடி மறைக்க முன்னின்று உழைப்பது அந்த நிர்வாகத்தினர் மட்டுமல்ல; நமது சமூகத்தின் பெரும்பான்மைத் தரப்பினரும் அப்படித்தான் இருக்கின்றார்கள். அவர்களும்தான் சாதியத்தின் பாதுகாவலர்கள்; ஒடுக்குமுறையாளர்களின் முன்னணிப் படையினர். முதலில் பாதிக்கப்பட்ட தரப்பின் குரலைக் கேட்க வேண்டும். அவர்களுக்கான நியாயத்திலிருந்தே ஒடுக்குமுறையாளர்களை அணுகவேண்டும். கும்பல் மனநிலையில் உள்ள நம்மில் பெரும்பான்மையினர் “இதெல்லாம் ஒரு பிரச்சினையா?” என்று கேட்டுவிட்டு ஓய்வுநிலைக்குப் போய்விடுகின்றார்கள். இங்கு நிகழ்வது ஒரு நாளின், ஒரு பிரச்சினையல்ல தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பிரச்சினை. எனது மகன்களுக்கு அந்த நிலைமை வரக் கூடாது என்ற அந்தத் தாயின் குரலில் உள்ள ஓர்மம் அவரது குடும்பத்துகான உரிமைக்குரல் மாத்திரம் அல்ல. அது உரிமைகளுக்காக எழவேண்டிய ஒடுக்கப்படும் மக்களின் குரல்களின் தொடக்கங்களில் ஒன்று. சாதிய, பொருளாதார, பாலின அடிப்படையில் அந்தக் குடும்பத்தினருக்கு ஊரில் உள்ள ஆதிக்க சாதி நபர்களால் இழைக்கப்படுகின்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்துத், துணிச்சலுடன் எழுந்திருக்கின்ற முக்கியமான ஒரு உரிமைக்குரல் இது. அவர்களுக்கு நீதி கிடைக்க நாம் அனைவரும் போராடவேண்டும். அதுவே சமூக நீதி. இது வரை எந்தக் கட்சிகளோ, பத்திரிகைகளோ இதனை வெளிப்படையாகக் கண்டித்து நாம் அறியவில்லை. உண்மையில் நாம் யாருக்குத் துணைபோகிறோம் என்பதை நாம் உணர வேண்டும். ஆதிக்கத் தரப்பினருக்கு பெரும்பான்மையினரின் இந்த மௌனமும் கண்டுகொள்ளாமையும் தான் தைரியத்தை அளிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்தப் பிரச்சனையில் முதற்கட்டமாக ஆதிக்க சாதித் தரப்பை, அவர்களின் சாதிய மனோபாவத்தை எதிர்க்க வேண்டும். சமரசம் என்ற பெயரில் மூடிமறைப்பது தீர்வல்ல. நிர்வாகம் செய்திருக்கும் குற்றங்களுக்கும் இழைத்திருக்கும் அநீதிகளுக்காகவும் அந்தக் குடும்பத்திடம் அவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர்களுக்கு அக்கோயிலிலும் ஊரிலும் வாழ்விலும் கிடைக்க வேண்டிய சுயமரியாதைக்காகவும் சமூக நீதிக்காகவும் அனைவரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுப்போம். நம்மால் ஆனவற்றைச் செய்வோம். அம்மாணவர் அக்கோயிலில் பாட விரும்பினால் அவருக்குப் பாடும் உரிமை இருக்கிறது, சமத்துவமும் சுயமரியாதையும் அனைவருக்குமான உரிமை, எனவே அந்தக் குடும்பத்தினருக்கு ஆலய வழிபாட்டில் ஏனையவர்களுக்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளும் இருக்கின்றன. மேசை போட்டெல்லாம் அவர்களுக்கு மாத்திரம் எல்லை போடமுடியாது, அந்த மேசைக்கு அப்பாலும் அவர்களுக்கான வெளியிருக்கிறது.

ஆகவே இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?

தோழமையுடன்
விதை குழுமம்

Related posts

சுயமரியாதையை இழந்துவிட்ட யாழ் பல்கலைக்கழகம்

vithai

நினைவுத் தூபி இடித்தழிப்பு : கண்டன அறிக்கை

vithai

கபன் சீலைப் போராட்டம்

vithai

சமூக சேவையும் சமூக செயற்பாடும்

vithai

செயற்பாட்டுத்தளங்களில் நிகழக்கூடிய பாலியல் சுரண்டல்கள் குறித்த நிலைப்பாடு

vithai

நானும் கூட என்னும் பெண்ணியப் பகிர்வுக் குறியீட்டுச் செயற்பாட்டியக்கம் #MeToo

vithai

Leave a Comment