vithaikulumam.com
கட்டுரைகள்

குமாரசாமி குமாரதேவன்

சுய காதை

பதின்மூன்று வயதிலேயே பள்ளிக்கூடம் போவதை விடவேண்டியதாகிற்று. அப்பாவின் திடீர் மரணத்துடன் அப்பாவின் கடைக்குப் போகவேண்டிய சூழல் ஏற்பட்டது. தகப்பனார் மலையகத்தில் உள்ள நாவலப்பிட்டியாவில் வியாபாரம் செய்துவந்தார். அம்மா பிறந்தது மலாயாவில், பிறகு அவரது குடும்பத்தார் பென்சன் எடுத்துக்கொண்டு ஊரோடு வந்து இருந்துவிட்டனர். எனக்கு அப்ப யாழ்ப்பாணமே கூடத் தெரியாது, முதல் நகரம் என்றாலே நாவலப்பிட்டியா தான். நாவலப்பிட்டியாவிலும் ஒரு தமிழ்ச்சூழல் தான், பெரியதோட்டங்களும் தோட்டத்தொழிலாளர்களும் வாழ்ந்த பெருந்தமிழ்ப்பரப்பு.

ஏராளமான தமிழ்வாசிப்பு அங்கு தான் உருவாகியது. சிறுவயதிலேயே பத்திரிகைகளை வாசிப்பதில் ஆர்வம் கூட, அந்தக் காலத்தில் பொதுமக்கள் பத்திரிகை வாசிப்பது குறைவு, எனது வாசிப்பு ஆர்வத்தைப் பார்த்த எனது உறவினர் ஒருவர் – அவர் ஒரு மலாயன் பென்சனியர், அவருக்குத் தான் வீரகேசரிப் பேப்பர் வரும் – தான் வாசித்துவிட்டு பத்திரிகைகளை எனக்குத் தருவார். எனது ஆர்வத்தைப் பார்த்த தந்தையும், அவரது கடைக்கு வரும் பேப்பரை அவர் வாசித்தவுடன் தபாலில் போட்டுவிடுவார். அந்தக் காலத்தில் ரெண்டுநேரப்பாடசாலை தானே, மத்தியானம் சாப்பாட்டுக்கு சைக்கிளில் வரும்போதே பேப்பர் பார்த்துக்கொண்டுதான் வருவன், தபாலில் வந்த பேப்பரை உடைச்சு, அதையும் கையில் வைத்துப் பார்த்துகொண்டு தான் சாப்பாடே நடக்கும். பிறகு, எனது ஊரில் இருந்த முகவர் ஒருவர் எனக்கும் சேர்த்து ஒடரைச் செய்துவிட்டார்.

நா. முத்தையா மாஸ்ரர் என்பவரது ஆத்மஜோதி நிலையம் நாவலப்பிட்டியாவில் இயங்கியது. மலையகத்தின் பிரதான அச்சகமாக அது இருந்தது. அவர் திருமணம் முடிக்காதவர், சமய ஈடுபாடு நிறைய உள்ளவர். அந்தச் சூழல் பெரிய கேந்திரமாக அந்தக் காலத்தில் இருந்தது.

நாவலப்பிட்டியில் நிறைய உறவினர்கள் இருந்தார்கள், அங்கு அறுபது வீதத்திற்கு மேற்பட்ட கடைகள் தமிழ்க்கடைகள்தான், இந்திய வம்சாவளி செட்டிமார்கடைகள், யாழ்ப்பாணத்து ஆட்களின் கடைகள் என்று எல்லாம் இருக்கும். நாவலப்பிட்டிய ரெயில்வே ஸ்டேசன் பெரிய ஒரு நிலையம். இப்பொழுதும்கூட கொழும்பு, யாழ்ப்பணத்திற்கு அடுத்து பெரிய இடம் அதுதான்.

படிப்பை விட்டதாலேயோ என்னமோ தெரியவில்லை, எதையாவது வாசிக்கவேணும் என்ற ஆர்வம் இருந்தது, பேப்பர்கள் அதுகள் இதுகள் என்று வாசிப்பன், ஒருவேளை பள்ளிக்கூட படிப்பிற்குப் போயிருந்தால், வேறுமாதிரியும் போயிருக்கலாம். அந்தக் காலத்தில் பழையபத்திரிகைகள் விற்கும் நாடார்கடைகள் இருந்தன, அங்கே எஸ்டேட்டைச் சேர்ந்தவர்கள் வாசித்த ஏராளமான புத்தகங்கள் வரும். அவற்றை மிகக் குறைந்தவிலைக்கு நிறுத்துவாங்கலாம். நானும் கடைக்காரன் என்றபடியால் கேட்கும் விலைக்கு தருவினம். தீபம் இதழ்கள் மற்றும் அந்தக் காலத்தில் வந்த தரமான இதழ்கள் எல்லாமும் கூட எடுக்கக்கூடியதாக இருக்கும்.

அந்த நேரத்தில், எனக்கு முதலில் அறிமுகமாகியவர், நாவலப்பிட்டி உதவிதபாலதிபர் ரட்ணசபாபதி அய்யர். அவரும் நல்ல வாசிப்பாளர், கவிதைகளும் எழுதுவார். ஓய்வானநேரங்களில் கடையில்வந்து எங்களோடு கதைத்துக் கொண்டிருப்பார். ஒருநாள் அவர் கிராமப்பிறழ்வு என்ற மார்ட்டின் விக்கிரமசிங்கவின் நாவலான கம்பெரலியவைத் தந்தார். அது அந்தக் காலத்தைய எனது ஆர்வத்திற்குத் தீனிபோட்டது. அன்றைய சிறிமாவோ ஆட்சிக்காலத்தில்தான் இந்தியப் பிரசுரங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. வீரகேசரிப் பிரசுர வெளியீடுகள் நிறைய வந்தன. அப்போது எங்கள்கடைக்கு எதிரில்தான் வீரகேசரி முகவர்நிலையம் இருந்தது, புதியதாய் வரும் புத்தகங்களையே கூட வாசிக்கத்தருவார்கள். “நிலக்கிளி” தான் நான் அப்போது வாசித்தவற்றுள் நல்ல நாவல். பாலமனோகரன் என்பவரால் எழுதப்பட்டது. வன்னிப்பிரதேசத்தைச் சேர்ந்த தண்ணிமுறிப்பு, தண்ணீரூற்று போன்ற இடங்களை மையமாகவைத்து ஒரு காதல் கதை, சாதியத்தையும் அதன் நிலவியலையும் கூட அது விரிவாகப்பேசியது. சிறியவயதில் வாசித்ததால் தான் அவ்வளவு நன்றாக இருந்தது என்று நினைத்தேன், ஆனால் இரண்டாவது பதிப்பைச் சிலவருடங்களுக்கு முன் வாசித்தபோதும் அதே உணர்வையே தந்தது.

அதன் பிறகு மல்லிகை இதழை சேல்ஸ் ரெப்பாக இருந்த மகாலிங்கம் என்பவர் தந்தார். அவர் மலையகச் செய்திக்கட்டுரைகள் என்ற தொடரை மல்லிகையில் எழுதினார். சுதந்திரன், சுடர் போன்றவையும் வாசிக்கக்கூடிய அளவில் வெளிவந்தன. சுடர் ஒரு ரூபாய்க்கு, நிறைய வாசிக்கக் கூடியவிடயங்களுடன் வெளிவந்தது. அதே காலத்தில் சாகித்தியவிழாக்களும் கதிரேசன்மண்டபத்தில் நடந்தன.

1977 இல் ஆட்சிமாற்றம் போன்றன ஏற்பட்டு ஒரு கலவரமான சூழ்நிலை நிலவியது. மேலும் சிறு வயதில் ஓரளவு வெளிஉலகத்தைப் பார்க்க வெளிக்கிடேக்க யாழ்ப்பணத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், தமிழாராய்ச்சி மாநாட்டு சம்பவங்கள் என்பவற்றைத் தாங்கி செய்திகள் வந்தன. Trail at bar கேஸ் என்பன பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருந்த காலமது.

பொதுவாக தேர்தல் காலமென்றாலே தமிழர்களைத்தாக்கும் சூழ்நிலை ஒன்று இருந்தது. தேர்தலுக்கு முன்னமே கலவரம் உருவாகக்கூடிய சாத்தியங்கள் தெரிந்தன. யார் வென்றாலும் தமிழ்க்கடைகளைச் சூறையாடுவதும், வெற்றியடைந்தவர்கள் தமிழ்க்கடைகளில் அதைக் கொண்டாடும் மனோநிலையும் இருந்தது. ஆகவே 77 தேர்தலுக்கு முன்னமே, உறவினர்கள் என்னை ஊருக்கு அனுப்பிவிட்டார்கள்.

புதிய நகரத்தின் சருக்கம்

நான் யாழ்ப்பாணத்துக்கு வந்ததும், ஜே ஆர் ஆட்சிக்கு வந்ததும் 1977 ஆம் ஆண்டிலேயே நடந்தன. தொடர்ச்சியாக எதிர்பார்த்தவாறே நிகழ்வுகள் தொடர்ந்தன. கலவரங்கள் மூண்டன. அதில் ஆத்மஜோதி நிலையமும் எரிக்கப்பட்டது. பின்னர் நான் யாழ்ப்பாண சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாழத்தொடங்கினேன். அப்போதும் ஒரு ரெண்டுங்கெட்டான் நிலைதான் காணப்பட்டது. படிக்கமுடியவில்லை என்ற ஏக்கம் இருந்தது; அதைமாற்ற நிறையவாசிக்கவும் செய்தேன்.

1977 இற்குப் பிறகு யாழ்ப்பாணம் சிவன்கோயிலடி தான் வாழ்வு. “ஈழத்துச் சிதம்பரம்” என அழைக்கப்படும் சிவன்கோவில் அமைந்துள்ள காரைநகரில் இருந்து வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவில் என பெயர்பெற்ற யாழ்நகர சிவன் கோவிலடிக்கு வந்து சேர்ந்ததும் ஒரு புதினமான ஒற்றுமை தான். சிவபெருமானின் ஜென்மநட்சத்திரமான “ஆதிரையை” பெயராகக்கொண்டது சயந்தனின் பின்னாளில் வெளியான நாவல். அந்நாவலில் ஆதிரை களத்தில்நின்று சிவபெருமானை சப்போட்டுக்கு கூப்பிடும் வர்ணனை இடம்பெற்றிருக்கும். யாழ்நகர சிவன் கோயிலடி ஆறுமுகநாவலர் தனது தொடர்பிரசங்கங்களை நிகழ்த்திய இடம். பின்னர் நல்லை ஆதீனத்தை நிறுவிய மணி ஐய்யர் என ஆரம்பத்தில் அழைக்கப்பட்டவர் வசித்ததும் வெண்கலக் குரலில் கதாப்பிரசங்கங்களை நிகழ்த்தியதும் யாழ்நகர சிவன்கோயிலடியே. செட்டியார்களால் அமைக்கப்பட்டதால் இக்கோவில் செட்டியார் சிவன்கோவில் என்றும் அழைக்கப்படும்.

யுத்தத்திற்கு முதல் சொந்த தொழில் இருந்தது, பின்னர் நெருக்கடிச்சூழலில் அறிமுகரீதியிலும் பழக்கரீதியிலும் சண்முகம் உணவகத்தில் முதலில் பகுதிநேரமாகவும் பின்னர் கிட்டத்தட்ட முழு நேரமாகவும் வேலை செய்யக்கூடியதாயிருந்தது. சண்முகம் உணவகம் சைவ உணவுக்கு மாத்திரமல்ல உபசரிப்புக்கும் பெயர்பெற்றது. அதன் உரிமையாளர் ஊழியர்களை எதிர்பாராமல் தானே நின்று சகலவேலைகளையும் செய்வார். அவரது கையினால் ரீ குடிக்கவென தொலைவிலிருந்தும் வாடிக்கையாளர் வருவர். அயலில் அலுவலகம் வைத்திருந்த “மல்லிகை” ஜீவா அந்தக்கடையின் வாடிக்கையாளர். மல்லிகை ஆண்டுமலர் ஒன்றின் ஆசிரியர் தலையங்கத்தில் சண்முகம் அண்ணையைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதியிருப்பார். எழுத்தாளர் தெணியான் தனது நூலொன்றில் சண்முகம் உணவகத்தைப் பற்றி குறிப்பிட்டிருப்பார். 1995 இடப்பெயர்வுகாலத்தில் சங்கத்தானையில் இயங்கிய சண்முகம் உணவகம் குறித்து அருண்மொழிவர்மன் உதயனில் எழுதியிருந்தார். செட்டியார் அச்சக உரிமையாளர் திரு. சங்கர் உணவகத்தின் தினசரி வாடிக்கையாளர். அவர் சுதந்திரன் ஆசிரியராக இலக்கியப்பகுதிக்கும் பொறுப்பாளராக இருந்தபோதே எஸ்.பொ அவர்களின் “சடங்கு” நாவல் தொடராக வெளிவரத்தொடங்கியது. பின்னர் நூலுருப்பெற்றது. சடங்கு நாவலின் முன்னுரையில் எஸ்.பொ இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். உணவகம் பல இலக்கியவாதிகள் வந்து சந்தித்து உரையாடக்கூடிய ஓர் இடமாகவும் இருந்தது.

குடும்பத்தின் சருக்கம்

திருமணம் முடிக்கவில்லை. நாட்டுச் சூழலும் ஒரு காரணம்; இராணுவக் கெடுபிடிகளும் அதுகளும் இதுகளுமாய் இருந்த காலம். இன்னொரு பக்கத்தால், ஏன் திருமணம் முடிக்கவில்லை, இவன் ஏதேனும் இயக்கமாக இருக்குமோ என்றும் கூட அவர்களை அது யோசிக்க வைத்தது. பல தடவை இந்தக்கேள்விக்கு நான் பதிலளிக்க வேண்டியிருந்தது. உதாரணத்திற்கு, ஒரு தடவை ஓர் உயரதிகாரி கேட்டார், “நீர் ஏன் திருமணம் முடிக்கவில்லை?” நான் சொன்னேன், “இந்த உலகத்தில் எத்தனைபேர் திருமணம் முடிக்காமல் இருக்கினம், ஏன் இலங்கையிலே கூட திருமணம் முடிக்காதவர்கள் எத்தனைபேர் பிரதமர்களாக இருந்திருக்கினம்?” என்றேன்.
அவர் “டட்லி சேனநாயக்க” என்றார். “சேர். ஜோன். கொத்தலாவல, டபிள்யு. தகநாயக்க போன்றோரும் திருமணம் முடிக்கவில்லை” என்றேன். சிநேகமாகச் சிரித்தார். பிறகு கொஞ்சக் காலம், இந்தியப்பிரதமர் வாஜ்பாயும், பிறகு ஜனாதிபதி அப்துல் கலாமும் கூட அப்படித்தான் என்று கேட்போருக்குக்குச் சொல்லிக்கொண்டேன்.

திருமணம் முடிப்பதென்பது அவர் அவருடைய தனிப்பட்டமுடிவு, சூழ்நிலை போன்றன தொடர்பானது, அவ்வளவுதான்.

காரை தீவு நகராகிய சருக்கம்

வலிகாமம் நிலப்பகுதியுடன் தங்கள் ஊரைப்பிரித்து நிற்கும் நீர்ப்பகுதியை “வெள்ளக் கடற்கரை” என்றே காரைநகர்மக்கள் அழைப்பர். மிகவும் ஆழம் குறைந்த, வெள்ளம்போல் பரந்து கோடைகாலங்களில் நீர்வற்றி மணற்திடல் ஆக இப்பகுதி காணப்படும். மக்கள் பழையகாலங்களில் கால்நடையாகவே இப்பகுதியைக் கடந்து தங்கள் தேவைகளுக்குப் பிரயாணம் செய்துவந்தனர். 1878 இல் பிரித்தானிய ஆட்சியில் வடபகுதி கவர்னராக இருந்த துவைனம் (Twainam) அவர்களின் முயற்சியால் ஒன்பது நீரோட்ட மதகுகளுடன்கூடிய கற்தெரு (Cause way) அமைக்கப்பட்டு போக்குவரத்து இலகுவாகியது. பொன்னாலைச் சந்தியுடன் காரைநகரை இணைப்பதால் இத்தெரு பொன்னாலைப் பாலம் என அழைக்கப்படுகிறது.

மாரிகாலங்களில் இந்தப்பகுதி நீரோட்டம் அதிகரித்துக் காணப்படும். இந்தக் கற்தெருவில் செல்லும்போது மேகம் நீர் குடிக்கும் காட்சியை சயந்தன் ஆறாவடு நாவலில் விபரித்திருப்பார். கிழக்கு மாகாணத்திலும் காரைதீவு எனப் பெயர்கொண்ட பெரிய தமிழ்க்கிராமம் உள்ளது, சுவாமி விபுலானந்தர் பிறந்த ஊர் அது. முன்னர் வெளியிடங்களில் இருந்து இக்கிராமங்களுக்கு தபால் அனுப்புவதாயிருந்தால் ஊர்ப்பெயருடன் யாழ்ப்பாணம் அல்லது மட்டக்களப்பு என எழுதவேண்டும். இதைவிட அரச அலுவலகங்களின் பல பணிகளிலும் குளறுபடி ஏற்பட்டது. 1923 இல் காரைநகருக்குச் சென்ற சேர்.பொன். இராமநாதன் காரைதீவு இனி ‘காரைநகர் என அழைக்கப்படுவதாக’ என்று சொன்னதாகச் சொல்லப்படுவது உண்டு.

புதினங்கள்

1977 காலகட்டத்தில், வீரகேசரி பிரசுரம் மூலம் ஐம்பதுக்கும் மேற்பட்ட புதிய எழுத்தாளர்கள் வெளியே தெரியவந்தனர். அதற்கு வீரகேசரியினுடைய விநியோகபலமும் காரணம். ஆனால் அந்தக் காலப்பகுதி நூறுவீதம் நன்மை தந்தது என்று சொல்லமுடியாது. உள்ளூர்பிரசுரங்கள் வந்தன, அவ்வளவு தான். அதில் குறிப்பிடத்தக்க சில நாவல்களும் வெளிவந்திருக்கின்றன.

இயக்கங்களுக்கு முன்னதாகவே இந்தக் காலகட்டத்தில் மக்களைக் கவர்ந்த தலைவர் என்றால் அது அமிர்தலிங்கம் தான். நடத்தை, ஆளுமை, பேச்சாற்றல், துணிகரம் என்று எல்லாவிதத்திலேயும் அவர் ஒரு முன்னோடி. அந்தக் காலகட்டத்தில் தமிழீழக் கோரிக்கை தீவிரவாதமான கோரிக்கையாகக் கருதப்பட்டாலும் அதன் பின்னணியில் நிகழ்ந்த கலவரங்கள், சர்வதேசச் சூழல்கள் என்பவற்றின் காரணமாக அதன் பின்னரே ஆயுதப்போராட்டம் உருவாகத்தொடங்கியது. ஒவ்வொரு இயக்கங்களாக அவை உருவானநேரத்தில் எங்களுடைய வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது.

இக்காலப்பகுதியில் இடதுசாரிகளே ஆதிக்கம் செலுத்திவந்தனர், முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் கைலாசபதி, சிவத்தம்பி போன்றோரும் மிகவும் செல்வாக்குடன் இருந்தனர். அவர்கள் தேசிய இனப்பிரச்சினையை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அதை படுபிற்போக்குத்தனமான ஒன்றாகவே வர்ணித்தனர். இதன் மூலம் சிங்களப் பேரினவாதத்திற்கு வக்காலத்து வாங்கினர். பின்னர் சிவத்தம்பி தாங்கள் விட்டதவறை ஏற்றுக்கொண்டார்.

இந்தக் காலத்தில் இவர்களின் அங்கீகாரத்திற்கென்றே ஒருசாரார் எழுதிக்கொண்டிருந்தனர். கைலாசபதியோ சிவத்தம்பியோ “ஓகே” பண்ணினால் அதுதான் இலக்கியம் என்றபோக்கு இருந்தது. ஆனால் அவர்களால் சிறந்த இலக்கியப்படைப்புக்களை அடையாளம் காணமுடியவில்லை. தங்களை மெத்தப்படித்தவர்களாக நினைத்துக்கொண்டு மஹாகவி, மு.தளையசிங்கம் போன்ற இன்னும்பலரையும் தமது நிறுவனமயப்பட்ட சிந்தனையாலும் இசங்களாலும் நிராகரித்தனர். இதன்போது, இதற்கான எதிர்க்குரலாக எஸ்.பொ திகழ்ந்தார். அலை சஞ்சிகையும் தனித்துநின்று இவர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகக் கலகக்குரலாக ஒலித்தது. எங்களுக்குத் தெரிந்து, இப்படியும் ஒரு பார்வை இருப்பதை அலை சஞ்சிகை மூலம்தான் அறிந்தோம்.

அதே வேளை, 1977 களில் இருந்த கலவரச்சூழல் தமிழ்மக்களின் எழுச்சியுடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக படைப்பாளிகளைச் சிதறடித்தது.

நாடகத்துறையில் பேராசிரியர் வித்தியானந்தனின் பங்களிப்பு முக்கியமானது. சிங்களப்பகுதிகளில் தேசிய நாடகத்தின் உருவாக்கத்திற்குச் சமமாக தமிழ்த்தேசியநாடக உருவாக்கத்திற்காக ராவணேசன் போன்ற நாடகங்களை பயன்படுத்தினர். எமது கிராமங்களிலும் வெடியரசன், பூதத்தம்பி போன்ற நாடகங்கள் ஆடப்பட்டன. மக்களாலும் ரசிக்கப்படன.

உண்மையிலேயே ஆயுதப்போராட்டம் ஒன்றிற்கான பண்படுத்தப்பட்ட சூழல் இங்கே இருந்தது. ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பினர் பிரசாரத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை. ஆயிரம் கூட்டங்கள் கொண்டு சேர்க்காததை ஒரு தாக்குதல் செய்துவிடும் என்று சொன்னார்கள், அதையே கடைசி வரையும் செய்தார்கள்.

நிகழும் சருக்கம்

புதிதாக இப்பொழுது எழுதுகிறவர்கள் நல்லா எழுதுகிறார்கள். 1977 வரை பெரும்பாலும் பிரசாரப்படைப்புக்கள் தான் வெளிவந்தன. சரியான படைப்பு வறுமை. கிட்டத்தட்ட நல்ல படைப்புகள் மருந்துக்கும் இல்லாத நிலை தான் தொடர்ந்தது. இதற்கு இலங்கை இடதுசாரிகளும் ஒரு காரணம். அவர்கள் பெரும்பாலும் எரியும் பிரச்சினைகளைத் தவிர்த்தனர். கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றோரும் முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் கொங்கிரீட் மாதிரி எல்லாவற்றையும் கட்டுப்படுத்திவந்தனர். தற்போது யுத்தகளங்களிலிருந்து போனவர்கள் நனவிடை தோய்தல் எழுதுகிறார்கள் என்று விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் உண்மையாக அப்பிடி நினைவு உள்ளவர்கள் தான் அதை எழுதவேண்டும், அவர்களின் மன அவசத்தை அவர்கள் தான் வெளிப்படுத்தவேண்டும்.

உலகம் பூராவும் யுத்தகளங்களிலிருந்துதான் மகத்தான இலக்கியங்கள் பிறந்திருக்கின்றன. அதிலும் இது ஒரு சிறியசமூகம், சுயநலம்கொண்ட சமூகம், அதிகாரத்திற்கு ஒத்தோடும் சமூகம், இதிலிருந்து மாற்றாக சிந்திப்பவர்களையும் ஒத்தோடிகளாக்கவே பலர் விரும்புகிறார்கள்.

யோ.கர்ணனின் கொலம்பஸின் வரைபடம் கடைசிக்கட்ட வெளியேறலை மிகச்சிறப்பாக வெளிக்கொண்டுவந்த படைப்பு. அந்தக்காலத்து படைப்புக்களைவிட இப்ப இளம் ஆட்கள் எழுதுவது வேர்த் ஆனது.

எனது ஆதங்கம் போருக்கு முதலிலும் நடுவிலும் போனவர்கள் தான் இப்போது உபதேசம்செய்ய திரும்பி வருகினம், இவர்களின் ஒருபக்கக் கருத்துநிலையால் தமிழ்மக்களின் நியாயங்கள் பிழையாக பரப்பப்படுகின்றன.

00

வாசிப்பு உங்களை உருவாக்குவதில் என்ன பங்களிப்பு செய்திருக்கிறதென ஒருவர் கேட்டால், “வாசிப்பு என்னை உருவாக்கியதன் விளைவே என்னை நோக்கிய இந்த கேள்வி” என்பதே எனது பதிலாக இருக்குமோ தெரியவில்லை. ஆனாலும் நேர்கோட்டில் சொல்வதானால், நான் நானாக இருக்கவும் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் இருக்கவும், என்னில் மூழ்காமல் என்னிலிருந்து மீளவும் வாசிப்பு உதவுகிறது.

கடும் சுகவீனத்திலிருந்து மீண்டு தற்போதைய வாழ்க்கையை மேலதிக போனஸாக உணர்கையில், இசங்கள், கோட்பாடுகள், சுமைகள் எதுவுமின்றி வெள்ளைமனதுடன் நவீன இலக்கியத்திற்குள் பிரவேசிக்கும் புதிய இளந்தலைமுறையினருடன் சேர்ந்துபறக்க இறக்கைகளை என்னில் உருவாக்க முயற்சிசெய்கிறேன்.

பின்குறிப்பு:

குமாரதேவன் அவர்கள் இயற்கையெய்தி நவம்பர் 15 உடன் ஓராண்டு நிறைவடைகின்றது. அதனையொட்டி அவரது நினைவுகளை பகிர்ந்துகொள்ளுகின்றோம்.

புதிய சொல்லின் இரண்டாவது இதழில் இடம்பெற்ற இந்த உரையாடலை குமாரதேவன் அவர்களுடன் உரையாடித் தொகுத்தவர் கிரிசாந்.

Related posts

மாற்றுக் குரல்

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி -08 -மீராபாரதி

vithai

குழந்தைகள் சாதியத்தை எவ்வாறு அறிகிறார்கள் ?

vithai

சாதியும் மொழியும்

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி – 09 -நவாலியூர் தாமா

vithai

நானும் கூட என்னும் பெண்ணியப் பகிர்வுக் குறியீட்டுச் செயற்பாட்டியக்கம் #MeToo

vithai

Leave a Comment