vithaikulumam.com
கட்டுரைகள் பிரசுரங்கள்

”குமாரசாமி குமாரதேவன் – வாசிப்பும் அறிதலும்” மின்னூல் வெளியீடு

”குமாரசாமி குமாரதேவன் – வாசிப்பும் அறிதலும்” மின்னூல் வெளியீடு

குமாரசாமி குமாரதேவன் அவர்கள் இயற்கையெய்திய பின்னர் வெளியிடப்பட்ட ”குமாரசாமி குமாரதேவன் வாசிப்பும் அறிதலும் – வாசகரும் சக பயணியும்” என்கிற நூலின் மின்னூல் வடிவத்தை அவரது முதலாவது ஆண்டு நினைவுநாளான இன்று எண்ணிம வடிவில் கையளிக்கின்றோம்.

Kumarathevan Vasippum Arithalum

000

சமகாலத்தின் மிக முக்கியமான வாசகராகவும் நுண்ணுணர்வுடன் கூடிய விமர்சகராகவும் மிகக் கூர்மையான நினைவாற்றலுடன் அரசியல், இலக்கியம், சமூகம், திரைப்படம் என்று பல்வேறு தளங்களிலும் ஆழ்ந்தகன்ற அறிவும் புலமையும் கொண்டவருமான குமாரசாமி குமாரதேவன் அவர்கள் நவம்பர் 15, 2019 அன்று இயற்கையுடன் கலந்தார்.

டிசம்பர் 10, 1960 அன்று காரைநகரிலுள்ள கோவளத்தில் பிறந்த குமாரதேவன் அவர்கள் தனது சிறுவயதிலிருந்தே தீவிரமான வாசிப்பிலும் தேடலிலுமாக தன் வாழ்வை வரையமைத்துகொண்டவர். அண்மைக்காலமாக ஈழத்தில் நடந்த பல்வேறு சமூக, அரசியல், இலக்கியக் கூட்டங்களிலும் உரையாடல்களிலும் தன் வாசிப்பினாலும், புலமையினாலும், நேர்படப் பேசுகின்ற பண்பினாலும் அனைவராலும் மதிக்கப்பட்டு சமகால வாசகர் தரப்பின் முதன்மை அடையாளமாக விளங்கியவர் குமாரதேவன் அவர்கள். விதைகுழுமம், தொன்ம யாத்திரை, புதிய சொல் போன்றவற்றின் ஆரம்பம் முதலே உணர்வுத் தோழமையுடன் விளங்கிய தோழர்களில் ஒருவராகவும், வாசகராகவும், பங்கேற்பாளராகவும் செயற்பாட்டாளராகவும் சேர்ந்து பயணித்த குமாரதேவன் பல்வேறு சந்தர்ப்பங்களில் எமக்கான ஆலோசகராக இருந்தும் நெறிப்படுத்தியிருக்கின்றார்.

தொடர்ச்சியான வாசிப்பினாலும், வாசிப்பினதும் தனது அனுபவத்தினதும் நீட்சியாக அவர் நிகழ்த்திக்கொண்டிருந்த உரையாடல்களினாலும், தனது தேடல்களையும் அறிதல் பரப்புகளையும் நாளெல்லாம் கிளைவிரித்துப் பரப்பிக்கொண்டிருக்கின்ற ஒரு மாபெரும் ஆளுமையாகவே குமாரதேவன் அவர்கள் தன் சுவடுகளைப் பதிவுசெய்திவிட்டுப் போயிருக்கின்றார். அவரது மறைவிற்குப் பின்னர் அவருக்கான நினைவுமலரை கல்வெட்டுக்கான வழமையான அம்சங்களுடன் வெளியிடுவதைவிட குமாரதேவன் யாராக இருந்தார், எவ்வாறு நினைவுகூரப்படுகின்றார் என்பதை அவர் வாழ்ந்து உறவாடி உரையாடிய சமூகத்தினரின் குரல்களூடாகப் பதிவுசெய்வதே பொருத்தமானதாகவும் பயன்பொதிந்ததாகவும் இருக்குமென்பதை அவரது குடும்பத்தினரும் உணர்ந்தே இருந்தனர். கலை, இலக்கிய, சமூகச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இருக்கின்ற தனது உறவுகள் குறித்த அறிமுகத்தையும் அவர்களுக்கும் தனக்குமான உணர்வும் தோழமையும் எத்தனை ஆத்மார்த்தமானது என்பதை குமாரதேவன் அவர்கள் தனது குடும்பத்தினருக்கு விளக்கமாகவே சொல்லியிருந்திருக்கின்றார். அந்த நேசமும் நம்பிக்கையுமே அவரது குடும்பத்தினரை குமாரதேவன் அவர்கள் நெருக்கமாகச் சேர்ந்தியங்கிய விதை குழுமம் மற்றும் புதிய சொல் தோழர்களிடம் இந்த நூலை உருவாக்குவதிலும் நிகழ்வை ஒருங்கிணைப்பதிலும் கூட்டாகச் சேர்த்திருக்கின்றது. இந்த முக்கியமான செயலுக்குத் தூண்டியாக இருந்ததன் மூலம் குமாரதேவன் அவர்கள் தனது மரணத்திலும் கூட ஒரு சேதியைப் பதிவுசெய்துபோயிருக்கின்றார்.

தன் வாழ்நாள் முழுவதையும் வாசிப்பிற்கும் தேடலிற்கும் அர்ப்பணித்த, ஜனநாயக பூர்வமான உரையாடல்கள் மற்றும் செயற்பாடுகளுக்கும் அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கிய கூட்டான சமூகச் செயற்பாடுகளை முன்னிலைப்படுத்துவதற்கும் நேர்மையான வெளிப்படையான பேச்சிற்கும் பற்றற்றதோர் வாழ்க்கை முறைக்கும் தன் வாழ்வையை சாட்சியாக முன்வைத்த குமாரதேவன் அவர்கள் குறித்து நாம் தொடர்ந்து உரையாடவும் எம்மை சுயமதிப்பீடு செய்யவும் அவரை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் இச்சிறுநூல் ஒரு தொடக்கமாக அமையும் என்று புதிய சொல் மிகுந்த நம்பிக்கைகொள்கின்றது.

Related posts

துஷ்பிரயோகத்தின் சாட்சி 06

vithai

நானும் கூட என்னும் பெண்ணியப் பகிர்வுக் குறியீட்டுச் செயற்பாட்டியக்கம் #MeToo

vithai

அரசியலற்ற கலையை வணங்குதல் : கட்டட மரபுரிமைகளும் ஒடுக்குதல் வடிவங்களும்

vithai

குழந்தைகள் சாதியத்தை எவ்வாறு அறிகிறார்கள் ?

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி -10- நவாலியூர் தாமா

vithai

தண்டித்தல் எனும் அறமற்ற செயல்

vithai

Leave a Comment