vithaikulumam.com
கட்டுரைகள்

சிறுவர் உளநலம் : சில அவதானங்கள்

சிறுவர்களிற்குக் கல்வியுரிமையும் வாழும் உரிமையும் மிக அடிப்படையானது. இரண்டிற்கும் அவர்களின் மனதின் நிலை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டியது அவசியம். சிறுவர்களின் உளவியல் சார்ந்து அவர்களின் உரிமைகள் சார்ந்து புத்தகங்களிலும் சட்டங்களிலும் முன்னேற்றகரமான திருத்தங்கள் உருவாகி வருகின்ற போதும் நடைமுறையில் இன்னமும் அவர்களை அந்த அறிதல்கள் சென்று சேரவில்லை அல்லது அதிலிருந்து கிடைக்க வேண்டிய பயன்களை அவர்களால் இன்னமும் அனுபவிக்க முடியவில்லை. இதற்கான அடிப்படைக் காரணம் அவர்களின் உரிமைகளை நம் சமூகம் மதிப்பதில்லை.

பெரும்பாலானவர்களுக்குத் தாம் ஏன் குழந்தை பெற்றுக்கொள்கிறோம் என்பது தெரிவதில்லை. சாதாரணமாக ஒருவரிடம் கேட்டுப் பாருங்கள், என்ன வகையான வினோதமான பதில்களைப் பெற்றுக் கொள்கிறீர்கள் என்று பாருங்கள். உங்கள் அப்பா, அம்மாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுப் பாருங்கள், பெரும்பாலானவர்களின் உடனடி பதில், “என்ன விசர்க் கதை கதைக்கிறாய்” என்ற அர்த்தம் பட வேறு வேறு வசனங்களாகவே இருக்கும். சிலர், “கல்யாணம் காட்டினால், பிள்ளை பெறத்தானே வேணும்”, ” சந்ததி பெருக வேணும்”, ” பிள்ளைப் பெறாட்டி ஆக்கள் என்ன நினைப்பினம்” என்று பதிலளிக்க முனைவார்கள். நமது சமூகத்தில் பெரும்பான்மையானவர்களுக்குப் பிள்ளை பெறுதல் என்பது ஒரு சடங்கு, ஒரு தலைமுறைக்கு முன், பத்துப் பிள்ளைகள் பெற்றவர்கள், படிப்படியாக இறங்கி தற்போது ஒரு பிள்ளைக்கு வந்து விட்டார்கள். ஆனால் விளக்கம் எந்தளவு மாறியிருக்கிறது என்பது சிக்கலான ஆய்வு. சுருக்கமாக, உயிர்களின் அடிப்படைச் செயற்பாடுகளில் ஒன்றாக ‘இனப்பெருக்கம்’ உள்ளது. ஆனால் அது எவ்வாறாக விளங்கி கொள்ளப்படுகிறது என்பது ஒவ்வொரு சமூகத்திலும் வேறு வேறானதே. இனப்பெருக்கம் என்ற செயற்பாட்டை கூட்டாக வாழும் இரு உயிர்களினதும் சமூகப்பங்களிப்பாகக் கொள்ள முடியும். குழந்தை என்ற உயிர் அவர்கள் வழியாக பூமிக்கு ஆற்றப்பட்டிருக்கும் இனப்பெருக்கத்திற்கான பங்களிப்பு என்பது எனது பார்வை. அந்த உயிரின் மேல் அவரைப் பெற்றவர்களுக்கு சமூக ரீதியில் அளிக்கப்பட்டிருக்கும் உரிமையென்பது அந்தக் குழந்தைக்கு அளிக்கப்பட்டிருக்கும் உரிமையே தவிர பெற்றோருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரமல்ல. வளர்வதற்குத் தேவையான பாதுகாப்பையும் தானே தனித்து இவ்வுலகில் உயிர்த்து இவ்வுலகின் கூட்டு வாழ்வை மேலும் பெருக்கிக்கொண்டு, தான் தனது வாழ்வை வாழத் தேவையான அறிவையும் அறிதலையும் பெறும் வரை அவர்களைப் பார்த்துக் கொள்வதற்கான பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.

ஆனால் மறுவளமாக நம் சமூகம் குழந்தைகளைத் தமது உடமைகளாகக் கருதுகிறது. இன்னும் சிலர் தமக்கு வாய்த்த அடிமைகளாகவும் கருதுகிறார்கள். பிள்ளை வளர்ப்பைப் பாரம்பரிய அறிவின் மூலம் மட்டுமே நாம் உள்வாங்கி விட முடியாது. பண்பாட்டில் உள்ள பிள்ளை வளர்ப்பில் ஏராளமான குறைபாடுகள் உண்டு. அவற்றைக் களையவும் மேம்பட்ட குழந்தைகளினதும் சிறுவர்களினதும் நலன் சார் அறிவையும் வாழ்வு முறையையும் ஆக்கிக்கொள்ள நாம் கடுமையாய் உழைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் துயரம் என்னவென்றால் நம்மில் பலர் அதற்குத் தயாராயில்லை. வீடு, சமூகம், பள்ளிக்கூடம் ஆகியன குழந்தைகளும் சிறுவர்களும் வாழும், கற்றுக்கொள்ளும் வெளிகள். இம்மூன்று வெளிகளிலும் குழந்தைகள் குறித்து இருக்கும் விளக்கங்களே குழந்தைகளின் வாழ்வைத் தீர்மானிக்கின்றன. எவ்வளவு தற்செயலான நிகழ்வு அது.

இலங்கையைப் பொறுத்த வரை ஆயுத வழிப் போராட்டங்கள் முடிவடைந்ததற்குப் பின்னர், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் போருக்குப் பிந்தைய காலத்தில் வாழ்கின்றனர். மொத்த சமூகமும் ஏதாவதொரு வகையில் யுத்தத்தின் நிழல் படிந்தே வாழ்க்கையைத் தொடர்கிறது. இன்றும் தொடரும் பல்வேறு வகையான அரச மற்றும் பண்பாட்டு ஒடுக்குமுறைகளை நாம் அனுபவித்தே வருகிறோம். இந்தப் பின்னணியில் சிறுவர்கள் உளநலம் சார்ந்து சிந்திப்பதும் அதற்கான கருத்துக்களை சமூக மட்டத்தில் வளர்த்தெடுப்பதும் மிகவும் அவசியமானது. குழந்தைகளிலும் சிறுவர்களிலும் அக்கறை கொள்ளும் சமூகமே தனது எதிர்காலத்தில் முதலீடு செய்கிறது. ஆனால் நம்மில் பலர் குழந்தைகளைத் தான் முதலீடுகளாகப் பார்க்கிறோம். குழந்தைகளின் எதிர்காலத்திற்குள் நாம் செல்ல முடியும். ஆனால் நமது கடந்த காலத்திற்குள் அவர்களை அழைத்துச் செல்ல முடியாது. மரபான அறிதல்களுக்கும் நவீனத்திற்குமிடையில் உள்ள பிணக்குகளைத் தீர்ப்பதும் உறுதியும் விரிவும் ஆழமும் கொண்ட பார்வைகளை உள்வாங்கி சமூகத்துடன் உரையாடுவதும் தேவையானது.

‘சிறுவர் உளநலம்’ என்ற ஆசிரியர்களுக்கான கைந்நூலொன்றை அண்மையில் வாசித்தேன். இந்தப் புத்தகம் சாந்திகம் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டிருக்கிறது. அறியப்பட்ட உளவியல் நிபுணர்களான சா. சிவயோகன், கோகிலா மகேந்திரன், தயா சோமசுந்தரம் ஆகியோர் பதிப்பாசிரியர்களாக இருந்துள்ளனர். 2017 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாகச் செம்மையாக்கப்பட்டு இந்தப் புத்தகம் வெளிவந்திருந்தது. பல ஆசிரியர்களினதும் துறை சார் நிபுணர்களால் சிறுவர் உளநலம் சார்ந்து அவர்கள் பார்வையில் முன்வைக்கப்பட்ட பல கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. இதனை இலங்கை அரசு மும்மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட்டிருப்பதாக புத்தகத்தில் ஒரு குறிப்பிருந்தது. மிக அவசியமான முயற்சி இது. பல்வேறு வகைகளிலும் அன்றாட நடைமுறையில் உள்ள பிள்ளை வளர்ப்பு, பள்ளிக்கூடக் கல்வி ஆகியவற்றிலிருந்து மேம்பட்ட முன்னெடுப்பு. குழந்தைகள், சிறுவர்கள் தொடர்பில் அக்கறையுடன் செயலாற்றுபவர்கள் இந்தப் புத்தகத்தை ஒருமுறை வாங்கி வாசிப்பது முக்கியமானது. பல்வேறு முக்கியமான அம்சங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றது, அதே நேரம் சில அடிப்படையான குறைபாடுகளும் இருக்கின்றன என்பது எனது கருத்து. புத்தகம் தொடர்பில் உள்ள அடிப்படையான மாறுபட்ட கருத்துக்களை இங்கு முன்வைக்கிறேன்.

ஆன்மிகம் பற்றி

புத்தகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் ஆன்மிகம், இறை வழிபாடு பற்றிய குறிப்புகள் வருகின்றன. உளநலத்தில் அவைக்கு முக்கியத்துவம் இருப்பதாக பலரும் கருதுகின்றனர். நமது பள்ளிக்கூடங்கள் மதச் சார்பற்று இருக்க வேண்டியவை. குழந்தைகளுக்கு மத நம்பிக்கையையோ அல்லது இறை நம்பிக்கையையோ ஒரு தேர்வாகத் தான் வழங்க வேண்டும். ஆனால் நாம் அதை அவர்களின் பிறப்பினடிப்படையில் திணிக்கிறோம். பின் அவர்கள் அதை ஒரு முழு நம்பிக்கையாக ஆக்கிக் கொள்கிறார்கள். பிரச்சினைகளுக்குத் தீர்வாக இறை நம்பிக்கை முன்வைக்கப் படுகிறது. பெரும்பாலானவர்கள் பொதுவாக ஒரு பிரச்சினை எழும் போது அதைக் கடவுள் பார்த்துக் கொள்ளுவார். நமக்கேன் தேவையில்லாத வேலை என்று ஒதுங்கி விடுகிறார்கள். பிரச்சினைகளிற்கான கரணங்களை அறியவும் அவற்றைத் தீர்ப்பதினூடாகவே பிரச்சினைகள் மறையும் என்ற அடிப்படை நிலையை விட்டு விடுகிறார்கள். அவர்களிற்கு, பூமியில் அவர்களின் இடம் பற்றிய விளக்கம் உருவாவதில்லை. அரூபமான ஒரு கருத்துடன் அவர்களின் மனம் பேசிக்கொண்டிருக்கிறது.

‘பக்தி’ போன்ற மனநிலை பற்றியும் புத்தகத்தில் முன் வைக்கிறார்கள். எந்த அடிப்படையில் பக்தி / விசுவாசம் போன்ற மனோநிலைகளைப் பரிந்துரைக்குள் எடுத்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. வழிபாட்டு மனநிலை அழிய வேண்டியது. வழிபாட்டு மனநிலை மேன்நிலையாக்கத்தை விரும்புகிறது. சமத்துவமான பார்வைக்கு அது எதிரானது.

இன்னும் ஒருபடி மேலே போய் ஒரு உதாரணம் வழங்கியிருந்தார்கள். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஒரு பொதுச் சடங்கை உருவாக்குவது நல்லது; அது ஒருவகையில் அவர்களின் மனோநிலைக்கு உதவும் என்றவாறாக, நல்ல விடயம், ஒரு சமூகமாக அதனிடம் உள்ள சடங்கின் கருவிகளை பயன்படுத்த முடியும். ஆனால் அது ஒரு தேர்வின் அடிப்படையிலானது. இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது பார்வை பார்த்தல், நூல் கட்டுதல், வாக்குச் சொல்லுதல் போன்றவை. இப்படியான சடங்குகளை பொதுச் சடங்காக்குவதற்கு எதற்கு அறிவு வேண்டும், பரிந்துரை வேண்டும். அது தான் ஏற்கெனவே இருக்கிறதே. ஒரு உளநல வழிகாட்டி அறிவார்ந்து அவர்களின் மனவடுவைக் குணமாக்குவதற்கு. அறிவார்ந்த அவர்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பொது நிகழ்வுகளையல்லவா கோர வேண்டும். நாம் அரசாங்கத்தைப் போல் மக்களின் நேரத்தை விரயமாக்கப் போகிறோமா? மூட நம்பிக்கையில் உழல வைக்கப் போகிறோமா?

மேலும் தியானம் பற்றிய விளக்கம் மற்றும் செயன்முறையும் மிகவும் மேலோட்டமாக இருக்கின்றது. தியானம் என்பது ஒருமுகப்படுத்தலுக்கானது என்ற கருத்து எளிமையான விளக்கம். முழு கவனம், முழு விழிப்பு, முழு மனது ஆகியவற்றுடன் ஆற்றும் எந்தச் செயலுமே தியானம் தான் என்ற ஓஷோவின் விளக்கம் இன்னும் தெளிவானது. பல்வேறு வகையான விளக்கங்கள் தியானத்திற்கு உண்டு. அவற்றை தொகுத்து முன்வைப்பது ஆரோக்கியமானது. இன்னும் உதவக் கூடியது.

எதிர்த்தல் பற்றி

மிகச் சில அரிதான இடங்களிலேயே அநீதிகளை எதிர்ப்பதைப் பற்றி வருகிறது. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ‘சாத்வீகமான’ வழியில் தீர்வு காணப் பழக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். நல்லது. ஆனால் அந்த வழியென்றால் என்ன? பேச்சு வார்த்தை தானே, மிக நல்லது. பேச்சு வார்த்தைக்கு ஒருவரை அல்லது அமைப்பை வர வைப்பதற்கே இங்கே போராட வேண்டியிருக்கிறதே. எதிர்த்தலும் போராடுதலும் உயிர்களின் ஆதார இயற்கை. அந்த உணர்ச்சியை அதன் வெளிப்பாட்டை குழந்தைகள் சரியாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.

எதிர்த்தல் என்பது ஒரு மண்புழுவிற்கும் இருக்கும் உணர்ச்சி தான். அதை என்னவாக மாற்றுகிறோம் என்பதே முக்கியம். ஜனநாயக வழியிலான போராட்டங்களை எப்படி செய்வது. அதற்கான அரசியற் கல்வி, செயல்வாதம் ஆகியன குழந்தைகளுக்குச் சிறுவயது முதல் அளிக்க வேண்டிய கல்வி.

‘சேவை’ போன்ற செயல்கள் அளிக்கும் உள அமைப்பில் தியாகம் / பெருமை போன்ற உணர்ச்சிகளின் கலவையும், ஏற்கனவே பண்பாட்டு உதாரணங்களும் உள்ளன. உதாரணத்திற்கு சமூகப் பெரியார்கள் என்று எடுத்தால் அன்னை தெரேசா, அப்துல் கலாம் என்று தொடங்குவது. இவர்கள் தான் நாம் குழந்தைகளுக்கு அளிக்க விரும்பும் ரோல் மொடல்கள். இவர்களின் செயல்களுக்கும் அவர்கள் தாங்கி நின்ற அரசியலுக்கும் தொடர்பும், அது எவ்வளவு ஏமாற்றானது என்பதையும் அறியாமல் நாம் அவர்களை முக்கியமானவர்கள் என்று தலையில் ஏற்றி விடுகிறார்கள்.

பதிலாக, செயல்வாதத்தை அவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். அரசியலுக்குக் நடைமுறைக்குமுள்ள தொடர்பை அவர்கள் அறிந்து கொள்ள வேணும். காந்தியை அறிந்து கொள்ளும் நம் குழந்தைகள் அம்பேத்கரை அறிந்து கொள்ளாமை அரசியல் இல்லையா?

காதல் பற்றி

கட்டிளமைப்பருவம் தொடர்பான பகுதியில் காதல் பற்றிய பகுதியில் அளிக்கப்பட்டிருந்த விளக்கங்கள் சலிப்பாய் இருந்ததன. காதல் என்பது உன்னதமான உணர்வு, அகராதி விளக்கங்கள், திருவள்ளுவர் என்று போட்டு வைத்திருக்கிறார்கள்.

அதிலும் கொடுமை ஒரு மோசமான கவிதையை உதாரணமாக வேறு போட்டிருந்தார்கள்.

” தினம் தினம் வந்து போயும்
தனக்குள்ள காதலை
கரையிடம் அலை
சொல்லவே இல்லை.
ஒரு நாளாவது சொல்லும்
என்று தான்
கரை இன்னும் எழுந்து
செல்லவே இல்லை”.

– யாரோ-

இப்படியொரு கவிதையையும். இப்படியான கருத்துக்களையும் தான் சொல்லியிருக்கிறார்கள்? இது தான் காதலா? உன்னதப்படுத்தும் அல்லது புனிதப்படுத்தப்படும் உணர்வுகள் எல்லாமே ஒடுக்குமுறையானதாய் மாற்றுவதற்கான தந்திரமே. நாம் ஒரு உணர்ச்சி தொடர்பான மிகை மதிப்பீடுகளை சிறுவர்களுக்கு வழங்குவது தவறு. அதை அவர்களுக்கு இயல்பான ஒன்றாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். காதல் என்பது ஒரு வளரும் உயிர் நிலை. நம் பருவங்கள் மாற அதன் விளக்கங்கள் மாறும். ஆழமாகும். காதலுணர்ச்சியை நாம் மாறக் கூடியதொன்றாக, நட்பார்ந்து உரையாடி, ஓரளவு தன்னும் அறிந்து வருவதே. பார்த்தவுடன் காதல் பற்றியெரியும் சினிமாக் காதல்களின் முன் நம் குழந்தைகளை அமர்த்தி விட்டு, காதலென்றால் அலை.. கரையென்று சொல்லி என்ன செய்ய முடியும்.

பாலியற் கல்வி பற்றி

சிறு வயது முதலே பாலியற் கல்வி அவசியமானது. ஆனால் அது ஏதோ கட்டிளமைக் கல்வி போலே சமூகத்தால் பார்க்கப்படுகிறது. இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் காமக் கல்வியென்றே பொதுப் புத்தியில் இருக்கிறது.

குட் டச், பாட் டச் முதற் கொண்டு ஆண் பெண் சமத்துவம் வரை எல்லாமே பாலியற் கல்வி தான் என்பதை நம் சமூகத்திற்கு யார் சொல்வது. காமம் பேசப்படக் கூடாத ரகசிய விசயமாக நாம் வகுத்து வைத்திருக்கிறோம். துஷ்பிரயோகங்கள், பாலியல் சீண்டல்கள் பெருகியிருக்கும் நம் காலத்தில் பாலியற் கல்வியை மறுப்பது காமம் என்ற ஆதார உணர்ச்சியை மிகத் தவறாகக் கற்றுக் கொள்ளும் இடத்திற்கு நம் குழந்தைகளிற்குக் கொண்டு செல்லும். இணையம் தான் இனிச் சிறுவர்களின் ஆசிரியர். ஒரு கீ வேர்ட்டில் அவர்கள் உள்நுழைந்து விடுவார்கள், எந்த வழிகாட்டலும் உரையாடலும் இன்றி.

அரசியற்படுத்தல் பற்றி

மொத்தமாக இந்தப் புத்தகத்தில் உள்ள அடிப்படையான சிக்கல் அதன் அரசியல் நீக்கம் தான். புறச் சூழல்கள் நம் அகத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. நாம் புறச் சூழலை எவ்விதம் பார்க்கிறோம், அதன் பிரச்சினைகளை எப்படிப் பார்க்கிறோம், அதற்கான நம் எதிர்வினை என்ன என்பது நம் கல்வியினால் வழங்கப்பட வேண்டியது.

உதாரணத்திற்கு வாழ்க்கை விருத்திப் பகுதியொன்றில் பருவ வயதில் பூப்பெய்தல் ஒரு தமிழர் சடங்காசாரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பருவமெய்தல் இயற்கையான செயல், பூப்பெய்தல் என்ற சடங்கின் நோக்கம் என்ன? என் பெண் திருமணத்திற்குத் தயார் என்று அறிவுக்கும் பழங்கால வழக்கு. இன்று அதுவொரு கவுரப் பிரச்சினை. ஆனால் பிரச்சினை இதை கண்டிக்காமல் புத்தகம் அதை ஒரு நிகழ்வாக எடுத்துக் கொள்வது என்பது பிற்போக்கானது. நாம் எந்த அரசியல் நிலைப்பாட்டிலிருந்து சமூகத்தை பார்க்கிறோம்? நம்பிக்கைகளை அனுமதிக்கிறோம்?

மேலும் எமது சமூகம் ஆண் பெண் சமத்துவம் மிக மோசமாகப் பயிலப்படும் சமூகங்களில் ஒன்று. அதில் குடும்பம் என்ற அமைப்பைப் பற்றி விளக்கும் போது குழந்தைகளுக்கு சிறு வயது முதல் ஆணோ பெண்ணோ சமத்துவமான மரியாதையே வழங்கப்பட வேண்டும். நாம் பெண் குழந்தை பிறந்து விட்டால் சீதனம் கொடுக்க வேண்டும் என்று புலம்பியே வாழும் சமூகம். ஆணுக்கு அதைக் கொடு இதைக்கொடு என்று ஓயாமல் ஆணாதிக்கத்தில் ஊறியுள்ள சமூகம். இதை மாற்ற நம் குடும்ப உளவியலில் எவற்றைப் பேசியிருக்கிறோம். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கப் பழக்க வேண்டும் என்று சில இடங்களில் சொல்லியிருந்தார்கள். எல்லோருக்கும் தானே மரியாதை கொடுக்க வேண்டும்? அந்தக் குழந்தைக்கும் கூட சுயமரியாதை இருக்கிறது தானே.

ஒடுக்குமுறைகளைக் இனங்காணக் கற்றுக் கொள்ளாமல் அதை எதிர்க்க முடியாது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளையும் இனங்காணுவதற்கு நாம் கற்பிக்க வேண்டும். அதிலிருந்து வெளியேறும் வழி கற்பதும், அமைப்பாவதும், போராடி மாற்றுவதும் தான். அதை விடுத்து குழந்தைகளை அப்படியே விட்டால் வளர்ந்ததும் அன்றைக்கு அவர்களுக்கு என்ன வழி கண்ணில் படுகிறதோ சரியாகப் படுகிறதோ, அதைத் தேர்ந்துவிட்டுப் போய் விடுவார்கள். அல்லது ஒடுக்குமுறைகளை உணராமல் தாமே ஒடுக்குமுறையாளர்களாய் இருப்பதை அறியாமலே வாழுவார்கள். உதாரணமாக சாதி, ஆணாதிக்கம் போன்ற சமூக ஒடுக்குமுறைக் கருத்துக்களைச் சொல்லலாம்.

நாம் வாழும் சமூக ஒழுங்கை மாற்றியாக வேண்டியதன் அவசியம் பல இடங்களிலும் எழுகிறது. நம் மனதினை ஆரோக்கியமாக வைத்திருப்பது முக்கியமானது தான். ஆனால் அது என்ன வகையிலான ஆரோக்கியம் என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மனங்கள் அடையும் உளநலம் போலியானது, சமூகத் தீங்கானது. இவற்றையும் கவனத்தில் கொண்டு மன ஆரோக்கியம் பற்றிய இத்தகைய உரையாடலை வெகுசன மயப்படுத்த இத்தகைய கூட்டு முயற்சிகளும் தொகுப்பாக்கங்களும் நம் காலத்தின் தேவை.

கிரிசாந்

இங்கே பாவிக்கப்பட்டிருக்கும் ஓவியம் https://www.innu.in/shop/art_details/326/Unknown-artist-Children-playing-in-rain-with-rainbow-canvas-prints-art என்கிற இணைப்பில் இருந்து பெறப்பட்டது.

Related posts

ஆமிக்காரனே! எயார்போஸெ! காணிய விட்டிட்டு வெளிய போவன்ரா

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி 05

vithai

போராடுவது என்றால் என்ன?

vithai

ஒழுங்குபடுத்தலின் வன்முறை

vithai

துஷ்பிரயோக சாட்சி : வெளிப்படுத்துகையின் சமூகத் தேவை

vithai

தாய்மையை ஏன் பால் நீக்கம் செய்ய வேண்டும்?

vithai

Leave a Comment