vithaikulumam.com
கட்டுரைகள்

தாய்மையை ஏன் பால் நீக்கம் செய்ய வேண்டும்?

இலங்கை அரசாங்கத்தின் முன்பள்ளிக் கல்வி தொடர்பான அரச கொள்கையின் 2017 ஆம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளின் படி இலங்கை முழுவதும் 578,160 குழந்தைகளுக்கு முன்பிள்ளைப்பராயக் கல்வி மற்றும் பராமரிப்பினை (Early Childhood Education Development and Care) வழங்குவதற்காக 28,449 முன்பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றுவதாகத் தகவல் கிடைக்கின்றது. இவ் ஆசிரியர்களில் 99% வீதமானவர்கள் பெண்களாக இருக்கிறார்கள். இதுவரை கிடைக்கின்ற தகவலின் படி கிழக்கு மாகாணத்தில் இருக்கும் கல்முனையில் மட்டுமே ஓர் ஆண் ஆசிரியர் இருக்கிறார். இங்கே ஏன் பெருவாரியாக முன்பிள்ளைப்பராயக் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பராமரிப்பில் ஆண்கள் பங்கெடுப்பதில்லை என்ற கேள்வி எழுகிறது. இக்கேள்விக்கு குறித்த துறையிலும் சரி பொதுப்புத்தியிலும் சரி, ‘ஆண்களால் பிள்ளைகளைப் பராமரிக்க இயலாது, அது அவர்களின் வேலை இல்லை’ என்பதையும் பிரதான வாதமாக முன் வைக்கிறார்கள்.

முன்பிள்ளைப்பராயம் என்பது தாயொருவருக்குரிய அம்சங்களுடன் கூடியது என்று விபரிக்கப்படுகின்றது. குழந்தை மீதான அக்கறை, நேசம், புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, பிள்ளைக்குரிய மொழி போன்றவற்றை தாய்மைப் பண்புடன் கூடிய பெண்ணினாலேயே வழங்க முடியும் என்கிறது அவ்வாதம். குழந்தையைப் பராமரிப்பது, கற்றற் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவது முதலான செயல்கள் பிள்ளை ஒன்றிற்கு முக்கியமானதே. சொல்லப்போனால் தாய்மைக்குரிய இயல்புகளால் பராமரிக்கப்படுவதும் வளர்க்கப்படுவதும் தங்கியிருப்பதும் குழந்தைக்கு அடிப்படையான உரிமையாகும். ஆனால் தாய்மை என்ற கருத்தாக்கம் பெண்ணிடம் மட்டும் மட்டுப்படுத்தப்படுவது பற்றி நாம் சமகால மேம்பட்ட அறிவு நிலையில் வைத்துப் பார்க்க வேண்டும். ஆணாதிக்க மனோநிலையின், பெண்ணை ஒடுக்குவதன் இன்னொரு பகுதியாக தாய்மை பற்றிய கருத்தாக்கமும் நடைமுறையும் இணைந்திருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பெண்களை ஒடுக்கும் பழமைவாத வேர்களைக்கொண்ட இச்சமூகக் கட்டமைப்பு பெண்களுக்குரிய வேலைகளாகப் பிள்ளை பெற்றுக்கொள்வது, பிள்ளை பாரமரிப்பது என்பதான விடயங்களை ‘தாய்மையை’ உன்னதப்படுத்துவதன் மூலம் ஒரு கட்டுப்பாடாக பெண்ணுக்குரிய இலக்கணமாகத் திணித்திருக்கிறது. ஒரு பெண் இயற்கையில் மகவொன்றைப் பெற்றுக்கொள்ளும் உயிரியல் அமைப்பினைப் பெற்றுக்கொண்டிருப்பதைக் காட்டி அவர் அதற்கானவர் மட்டுமே என்ற மரபார்ந்த மூட நடைமுறைகளை பெண்கள் மீது திணிப்பது அறமன்று. பெண்ணிற்கு அடிப்படையில் பிள்ளை பெற்றுக்கொள்வது ஒரு தெரிவு மட்டுமே, அது அவருடைய விருப்பத்தோடு மட்டும் நடைபெற வேண்டும். தான் மகவொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவருடைய வாழ்வுக் கடமைகளில் ஒன்றாகவும் சமூக அங்கீகாரமாக கற்பிக்கப்பட்டிருப்பது அவளுடைய அடிப்படைச் சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் பறிப்பதாகும். எனவே அடிப்படையில் தாயாவது என்பது பெண்ணுடைய தெரிவே தவிர நிபந்தனை கிடையாது.

ஆணாதிக்க மனநிலையிடம் இல்லாத நல் இயல்புகள் தாய்மை (ப்பண்பிடம்) காணப்படுகின்றன ஆனால் ஆணாதிக்கத்திடம் செறிந்திருக்க கூடிய ஒடுக்கும் இயல்பு, அதிகார விருப்பம், பலம் பற்றிய நோக்கம் முதலானவை ஆணுக்குரிய சமூக அங்கீகாரமாகப் பெருமெடுப்பில் நடைமுறையில் இருக்கும் போது ஒரு பெண்ணிடம் இருப்பதாகக் கற்பிதப்படுத்தப்பட்ட தாய்மையின் இயல்புகள் அவருக்கு இயற்கையில் இருந்து, அல்லது தாயாகக் கூடியவர் என்ற உயிர்ச் செயலில் இருந்து கொடுக்கப்பட்டடது என்று கருத முடியாது. சொல்லப்போனால் பெண்ணிடம் இருக்கக் கூடிய பெண்மை பற்றிய நல் இயல்புகள் கூட அவருடைய விழிப்புணர்வுடன் கூடிய தெரிவாக இல்லை. அவற்றைக் காலம் காலமாகப் பேண வேண்டும் என்பது பெண்களுக்குச் சமூகத் திணிப்பாகவே இருந்து வருகிறது. எனவே நற்பண்புகள் என்றாலும் அவை சுதந்திரமான விழிப்புணர்வுடன் கூடிய தெரிவாக இல்லாவிட்டால் அது அநீதி என்றே கருதப்பட வேண்டியதாகும். பிள்ளை பெற்றுக்கொள்வது, தாய்மைப் பண்பை தன்னில் ஏற்படுத்திக்கொள்வது போன்றவற்றை அவருடைய தாயோ தந்தையோ, காதலனோ, காதலியோ, கணவனோ, மனைவியோ, சமூகமோ யாரும் அவரிடம் அதை ஒரு நிபந்தனையாக விதிக்க முடியாது. எனவே தாய்மை என்பதன் மரபார்ந்த ஒடுக்குமுறையின் அடிப்படையில் இருந்து சுதந்திரமான, சுயமரியாதை கொண்ட பெண் தன்னை விடுவித்துக் கொள்ளும் உரிமையுள்ளவர். ஆகவே பெண்ணுக்கும் தாய்மை ஒரு சுதந்திரமான தெரிவாக மாறிவிடுகிறது.

எனவே தாய்மை என்பதை உன்னதப்படுத்துவதன் மூலம் ஆணாதிக்க மனநிலை கொண்டவர்கள் பெண்ணைத் ‘தெய்வமாக’ ஆக்குவதன் மூலமும் தாய்மை பற்றிய கற்பிதங்களை பெண்ணிடம் திணிப்பதன் மூலமும், ஒரு தாயும் தந்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டிய தாய்மையின் இயல்புகளை பெண்ணிடம் மட்டும் திணிக்கின்றது சமூகம். ஒவ்வொரு சமூகத்திலும் கருவளம், உற்பத்தி போன்றவற்றின் தெய்வமாக பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் அதே சமூகத்தில் அவர்கள் நடைமுறையில் கடுமையாக ஒடுக்கப்படுபவர்களாகவும் இருக்கின்றார்கள். எனவே அவர்கள் தெய்வமாக்கப்பட்டிருப்பதன், தாய்மையைச் சொல்லி வழிபடப்படுவதன் பின்னால் இருக்கும் பெண் மீதான அச்சம், குற்றவுணர்வு பற்றி உளவியல், மானுடவியலாளர்கள் விரிவாகப் பேசிச்செல்கின்றனர்.

தாய்மை என்பது குழந்தையைப் பிரசவிப்பதால் கிடைத்தது என்பதான உன்னதப்படுத்தல்கள் மூலம் ஆண்களின் நலன்களை, அதிகாரத்தைப் பாதுகாக்க கூடிய இக்கட்டமைப்பை தொடர்ந்தும் பேணுவதற்கு கற்பிதப்படுத்தப்படுகின்றது. யூடித் பட்லர் (Judith Butler) சொல்லவதைப்போல ஆண்மை, பெண்மை ஆகிய இரண்டு நிகழ்த்துகைகளும் உயிரியல் உருவாக்கம் கிடையாது; அது சமூகத்தினால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பாகும். அக்கட்டமைப்பினை உருவாக்கிக் கொள்வதற்கு ஆணாதிக்க சமூகத்திற்கு பெரும் துணை செய்தது அது தாய்மையை ஒரு தகுதிப்படுத்தப்பட்ட உன்னதமாக பெண்ணிடம் வழங்கி விட்டதுதான்.

ஆணாதிக்க மனநிலையின் கருத்தியல் அடிப்படையே பெண்ணை ஒடுக்குவதாகும். அதற்குரிய முக்கிய இடத்தினை தாய்மை பற்றிய பெருமிதங்களயும் கடமைத்திணிப்பையும் உருவாக்கிக்கொண்டுள்ளதையும் கைமாற்றி வந்துள்ளதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இன்னுமொரு உதாரணத்தைப் பார்க்கலாம், சமூகத்தில் தற்பாலீர்ப்பு இயல்பைக் கொண்ட ஆண்களோ பெண்களோ குடும்பமாக மாறும்போது செயற்கை கருத்தரிப்பின் மூலமோ, தத்தெடுத்துக்கொள்வதன் மூலமோ குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியும். அதாவது இரண்டு தந்தைகளுடனும், இரண்டு தாய்மாருடனும் வளரக்கூடிய குழந்தையர் காணப்படுவர். இங்கே நிலவக்கூடிய தாய்மை எத்தகையது என்று சிந்திக்க வேண்டும். இங்கே இரண்டு தந்தைகளும் சரி, இரண்டு தாய்களும் சரி குழந்தைக்கு ‘தாய்மையை’’ வழங்க வேண்டியிருக்கிறது. தவிர பால் என்பது தெரிவாகவே இருக்கிறது. ஒருவகையில், பிள்ளை பெறக்கூடியவர்களே பெண்கள் என்பதும், பிள்ளை பெற்றால் மட்டுமே தாய்மையின் இயல்பு வந்துசேரும் என்பதும் மாற்றுப்பாலினத் தெரிவுகளைக் கொண்டவர்கள் மீது நிகழ்த்தப்படும் சமூக அநீதியாகும். எனவே பால், பாலியல், தாய்மை இவை அனைத்துமே சுதந்திரமான தெரிவாக இருக்கின்றன. அவற்றின் மீது மரபார்ந்த மூட நம்பிக்கைகளைத் திணிப்பதை அனுமதிக்க இயலாது.

சமூகத்தில் காணப்படுகின்ற தந்தையின் இயல்பு, தாயின் இயல்பு இரண்டுமே மனிதர்களின் இயல்புகளாக பகிரப்பட வேண்டும். பிள்ளையைப் பராமரிப்பது என்பது ஆணும் பெண்ணும் பகிர்ந்துகொள்கின்ற ஏனைய வாழ்கை முறைகளைப் போன்ற ஒன்றாகவே இணைந்துகொள்ள வேண்டும். சமைப்பது, வீட்டைப் பராமரிப்பது, பிள்ளையைப் பராமரிப்பது போன்றன தாயின் – வேலை அதுவே தாய்மையின் இயல்பு என்பது சமூக அநீதி, அறமற்ற சமத்துவமற்ற வாழ்க்கையை வழங்குவதாகும்.

அதுவே சமத்துவமும் சுயமரியாதையும் கொண்ட வன்முறையற்ற தனிமனிதர்களையும் குடும்ப அமைப்பையும் உருவாக்குகின்றது. அதன் மூலம் சமூக விடுதலையில் பெரிய அடைவாக மாறுகிறது.

-யதார்த்தன்

Related posts

“எங்களைக் கொல்வது உங்களின் மௌனம்தான்”

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி – 09 -நவாலியூர் தாமா

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி -10- நவாலியூர் தாமா

vithai

தண்டித்தல் எனும் அறமற்ற செயல்

vithai

சிறுவர் உளநலம் : சில அவதானங்கள்

vithai

வெள்ளத்தனையது மலர் நீட்டம்

vithai

Leave a Comment