vithaikulumam.com
சமகாலகுறிப்புகள்

எரித்தலுக்கெதிராக ஒன்றுபடுவோம்!

இப்போது நடந்து கொண்டிருக்கும் விவாதம் கோவிட் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோரின் உடல்களை எரிப்பதா அல்லது புதைப்பதா நல்லது என்ற விவாதமோ அல்லது எது எமது பாரம்பரியம் என்பதோ அல்ல; உண்மையில் அது எம் ஒவ்வொருவரதும் தனிப்பட்ட தெரிவு. அந்தத் தெரிவை ஒருவர் தன் வாழ்நாளிலேயே முடிவு செய்ய முடியும். இறந்தபின் தனது உடலை காகங்களுக்கு இரையாக விட்டுவிடுமாறு வள்ளுவர் கூறியதாகவும், அவரது உடலை உண்ட காகங்கள் பொன்னிறமாக மாறியதாகவும் கதைகள் பேசப்பட்ட காலம் முதல், தமது உடலை முழுதாக வைத்திய பரிசோதனைக்காக ஒப்படைத்து விடுமாறு கூறுபவர்கள் வாழும் இந்நாள் வரை இது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாக இருந்து வருகிறது. அவ்வாறு முடிவுசெய்யாதவர்கள், தமது வழமை, பண்பாடு சார்ந்த முடிவை இயல்பாக ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் இன்றுவரை உலகெங்கும் வாழும் அனைத்து மக்களதும், இறப்புக்குப் பின்னான உடலை என்ன செய்வது என்ற விடயம் கையாளப்பட்டு வருகிறது. ஆக இது தனிப்பட்ட ஒவ்வொரு நபரதும், ஒவ்வொரு மக்கட் பிரிவினரதும் தெரிவு, நம்பிக்கை, பண்பாடு சம்பந்தப்பட்ட ஒன்றாக இருந்து வருகின்றது, அந்த வகையில் மண்ணுள் அடக்கம் செய்தலும், எரியூட்டுதலும் காலம் காலமாக உலகம் பூராக நடந்துவரும் ஒரு விடயம். நீண்ட காலமாக நிலவிவரும், விறகு மூட்டி அதன் மேல் உடலைக் கிடத்தி எரியூட்டுதலும் அதன் பின் அந்த உடலின் சாம்பரை எடுத்து கடலிலோ ஆற்றிலோ கரைக்கும் பாரம்பரிய சடங்கு போலவோ, மண்ணில் குழி தோண்டிப் புதைத்து அக்குழி மீது நடுகல் நாட்டுவதும் நீண்டகாலமான பாரம்பரிய சடங்காக இருந்து வருகிறது, விறகு மூட்டி எரித்தலுக்குப் பதில் இப்போது மின்சாரத்திலான சூளையிலிட்டு எரித்தல், புதைத்தலுக்கென பிரத்தியேக இடம் ஒதுக்கி இடுகாடு எனப் பெயரிட்டு அடக்கம் செய்தல் என மாறியிருக்கின்றபோதும் இந்த இரண்டு முறைகளும் உலகளாவிய ரீதியில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளாக இருந்து வருகின்றன. இவை இரண்டும் இறுதிச் சடங்குகள் பற்றிய மக்களின் நம்பிக்கைகள், இழப்பால் துயருறும் உறவுகளை ஆற்றுப்படுத்தல் என்ற விடயங்களோடு சம்பந்தப்பட்ட அவர்களது அடிப்படையான உரிமைகளாக கொள்ளப்பட்டுவரும் விடயங்கள். ஆகவேதான், இந்த இறுதிச் சடங்கு வகைகளில் எந்த ஒன்றையாவது நியாயமான காரணமின்றித் தடைசெய்வது அல்லது எதிர்ப்பது வன்மையான கண்டனத்துக்குரியது ஆகிறது.

இலங்கை அரசு இப்போது கோவிட்டின் பெயரால் புதைத்தலை அனுமதிக்க மறுப்பது, தனி நபர்களதும் மக்கள் குழுமங்களதும் காலங்காலமாக நிலவிவந்த ஜனநாயக உரிமையை மறுப்பதாகும். இது கண்டனத்துக்கும், எதிர்ப்புப் போராட்டத்துக்குமுரிய ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். அதிலும் குறிப்பாக, ஒரு சமூகப்பிரிவினர் மீதான காழ்ப்புணர்வு காரணமாகச் செய்யப்படும் இந்த நடவடிக்கை அனைத்து மக்களாலும் கூட்டாக எதிர்க்கப்படவேண்டிய ஒரு நடவடிக்கையாகும். கோவிட் தாக்குதலால் மரணமடைந்தோரை அடக்கம் செய்வதற்கான விதிகளை உலக சுகாதார அமைப்பு விரிவாகத் தெரிவித்திருக்கிறது; நோய்த் தொற்றலுக்கான வாய்ப்புகள் ஏற்படாத வண்ணம் எப்படி ஒரு உடலுக்கான இறுதிக் கருமங்களை ஆற்றவேண்டும் என தெளிவாக உலகம் முழுவதற்கும் அறிவித்திருக்கிறது; மண்ணுள் அடக்கம் செய்தல், தகனம் செய்தல் ஆகிய இரண்டுமே மக்கள் தமது நம்பிக்கைக்கும் தெரிவுகட்கும் ஏற்ற வகையில், கொடுக்கப்பட்ட வழிகாட்டலின் அடிப்படையில் செய்ய முடியும் என்று தனது அறிக்கைகளில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. மேலதிகமாக அதன் பிரதிநிதிகள் உலக நாடுகளுக்கு இவை தொடர்பான விளக்கங்களையும் தெளிவாகவும்,விரிவாகவும் கொடுத்துள்ளார்கள். இலங்கைக்கு, குறிப்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட ஒருங்கிணைப்பாளரான ஹனா சிங்கர் (Hanaa Singer) அவர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு, இறந்தோரைக் கவுரவிக்கும் விதத்தில் அவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கடிதமூலம் கேட்டும் உள்ளார். ஆனால், இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தை கொஞ்சமும் கணக்கிலெடுக்கத் தயாராக இல்லை என்பதை அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகள் காட்டுகின்றன. பிறந்து 20 நாட்கள் மட்டுமேயான குழந்தை மட்டுமல்லாது இதுவரை கிடைக்கும் தகவல்களின் படி 15 முஸ்லிகளின் சடலங்கள் அவர்களது நம்பிக்கைக்கும் பண்பாட்டுக்கும் எதிரான முறையில் தகனம் செய்யப்பட்டுள்ளன;, பல சந்தர்ப்பங்களில் உறவினர்கள் சடலத்தைப் பார்க்கக் கூட அனுமதிக்கப்படவில்லை, எரித்தலுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் அது சட்டத்தின் பாற்பட்டதே என்று, கூறி விசாரிக்காமலே தள்ளுபடி செய்திருக்கிறது.

இலங்கையில் இப்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சிகளை அவதானிப்பவர்கள் எவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த விடயம் அதன் தற்போதைய முக்கிய குறியாக இருப்பது இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் என்பது. இது ஒரு படு மோசமான, ஜனநாயக அடிப்படைகள் எதுவுமற்ற அராஜக நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. அனைத்து மக்களாலும், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் என்ற எந்தப் பாகுபாடுமின்றி எதிர்க்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான விடயம் இது. இந்த விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்துக் கருத்துத் தெரிவிக்கும்போது சில நண்பர்கள் என்னிடம் ஏன், எரிப்பதை முஸ்லிம் மக்கள் ஒப்புக் கொண்டால் என்ன என்று கேட்கிறார்கள். அவர்கள் நான் ஒருமுறை எழுதிய ஒரு வரலாற்றுக் குறிப்பை வைத்து என்னிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டிருந்தார்கள்; நான் குறிப்பிட்ட வரலாற்றுக் குறிப்பு இதுதான்:

”தமிழர் மரபு மண்ணில் புதைக்கும் மரபாக இருந்து பின்னர் வைதீக மங்களின் வருகை காரணமாக (அவை அக்கினியை தெய்வமாகக் கருதின) ஏற்பட்ட மதக்கலப்புகளால் எரித்தல் தமிழர் மரபில் பரவியது. ஆயினும், வயது முதிர்ந்து இறப்போரை எரித்தலும்,அகாலமரணம் அடைந்தோரையும், மரணித்த சிறுவர்களையும் புதைப்பது இன்னமும் தமிழர் மரபில் நடைமுறையில் இருக்கிறது.”

ஆனால் அவர்கள் இன்று புதைகுழியிலிட்டு அடக்கம் செய்யும் மரபைக் காலம் காலமாகப் பேணிவரும் முஸ்லிம் மக்களின் தெரிவுக்கு எதிராக இலங்கை அரசு எடுத்துள்ள அடாவடித்தனமான எரித்தல் நடவடிக்கை, ஜனநாயக விரோதமும், படுமோசமான இன மத வெறுப்பும் கொண்ட நடவடிக்கை என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. முஸ்லிம் மக்கள் இதற்கெதிராக எதிர்ப்புக் குரலெழுப்பும்போது ஆதரவு தெரிவிப்பதும், அவர்களது போராட்டத்துடன் இணைந்து பங்கேற்பதும் ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டுள்ள அனைத்து மக்கட் பிரிவினரதும் சமூகப் பொறுப்பு என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. மக்கள் பிரிவினரிடையே நிலவும் நம்பிக்கைகளும், பண்பாடுகளும் ஒன்றும் மாற்றமடையாமல் இருந்துவிடுவதில்லை என்பது உண்மைதான்.. ஆனால் அவை அந்த மக்களது தேவைகளுடனும் வாழ்வியல் மாற்றங்களுடனும் இணைந்து இயல்பாக அவர்களது சுய விருப்பின் பேரில் நடக்க வேண்டுமே ஒழிய அதிகாரத்தால் திணிக்கப்படுவதில்லை. அப்படித் திணிப்பதன் மூலமாக ஒரு பண்பாட்டை உருவாக்கவும் முடியாது. அத்தகைய முயற்சிகள் நாட்டை முற்றாகச் சீர்குலைத்து நாசமுறும் நிலைக்கே இட்டுச் செல்லும்.

எனவே நாம் அனைத்து மக்கட் பிரிவினரும் ஒன்றுபட்டு இந்த அராஜக நடவடிக்கைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். இது வெறும் ஜனாசா எரிப்புடன் முடியப்போகும் ஒன்றல்ல, அதற்கு மேலும் வளரக்கூடிய பெருந்தீ. அதற்குப் பின்னாலிருந்து கனன்று கொண்டிருப்பது வெளிப்படையான இனவெறி, அதனுடன் கூடவே மதவெறியும் இணைந்துள்ளது. இந்தத் தீக்குப் பசி ஆறுவதில்லை. இதுவரை தமிழ் மக்கள் மீதிருந்த வெறி இப்போது திசை மாறியிருக்கிறது. அவ்வளவுதான். அது எப்போதும் தேவைக்கும் சந்தர்ப்பத்துக்குமேற்பத் திசை மாறும். ஆகவே, முஸ்லிம் மக்களின் பண்பாட்டு உரிமைக்காக நடக்கும் அனைத்து ஜனநாயகப் போராட்டங்களுடனும் நாம் ஒவ்வொருவரும் கைகோர்த்து இயங்க வேண்டும்!, அது நம் ஒவ்வொருவரதும் வரலாற்றுக் கடமையும் கூட!

ஆகவே, எரித்தலுக்கு எதிராக ஒன்றுபடுவோம்!

-எஸ்.கே. விக்னேஸ்வரன்

Related posts

சுயமரியாதையை இழந்துவிட்ட யாழ் பல்கலைக்கழகம்

vithai

குமாரவடிவேல் குருபரனின் மீதான் தடை தொடர்பில் மாணவர் ஒன்றியம்

vithai

குழந்தைகள் சாதியத்தை எவ்வாறு அறிகிறார்கள் ?

vithai

இன்னும் கிடைக்காத சமூகநீதி

vithai

சமூக சேவையும் சமூக செயற்பாடும்

vithai

நினைவுத் தூபி இடித்தழிப்பு : கண்டன அறிக்கை

vithai

Leave a Comment