vithaikulumam.com
சமகாலகுறிப்புகள்

செய்த நன்மையும் தொண்டுத் தேசியமும்

“தமிழ்த் தேசிய பேரியக்கம் ஒன்றை கட்டமைப்பதனை எவ்வாறு சாத்தியமாக்கலாம்?”

இந்தக் கேள்வி நிமிர்வு யூடியூப் தளத்தில் அரசியல் பத்தி எழுத்தாளரும் கவிஞருமான நிலாந்தனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “தொண்டுத் தேசியம்” என்ற பதிலை வழங்கி பின்னர் அதை விரிவாக விளக்கியிருந்தார். அதில் அவர் கூறுவது, “ஒவ்வொருவரும் தமது துறைக்குரிய தொழிலை தொண்டாகவும் செய்ய வேண்டும். உதாரணமாக ஒரு ஆசிரியர், மருத்துவர் தங்கள் துறைசார் பங்களிப்பைத் தொண்டாகவும் செய்ய வேண்டும். தொண்டாகச் செய்யும்போது அவருக்கு அங்கே அங்கீகாரம் கிடைக்கும். அவர் அந்த மக்கள் மத்தியில் கதாநாயகனாக மாறுவார். அங்கீகரிக்கப்பட்ட அந்த ஆசிரியர், மருத்துவர் கதைக்கும் அரசியலுக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.” என்ற கருத்துப்படப் பேசியிருந்தார், குறித்த நேர்காணலில் அவர் கூறியிருக்கும் பல கருத்துக்கள் தவறானவை. அவை ஒரு மோசமான அரசியல் பார்வைத் தளத்தை உருவாக்கக் கூடியவை என்பதால் அக்கருத்துக்கள் குறித்த சில பார்வைகளை முன்வைக்கிறேன்.

முதலாவது, தொண்டுத் தேசியம் போன்ற அடிப்படையே இல்லாத காலாதிகாலப் பிற்போக்குக் கலாசாரத்தைப் புதியதொரு வழிமுறையாகச் முன்வைத்திருப்பதும் அதனை ஓர் உத்தியாகக் கையாளாச் சொல்வதும் தவறான சிந்தனை. “சமூக சேவகர்கள்” என்ற அடையாளத்துடனான அரசியலைத் தான் இவ்வளவு காலமும் பெரும்பாலானவர்கள் கையாண்டு வருகிறார்கள். அவர்கள் ஊருக்குச் சில சேவைகள் செய்துவிட்டு அவர்கள் பேசும் கருத்துக்கு மக்கள் செவி கொடுக்க வேண்டுமென்பது என்ன மாதிரியான கொண்டு – கொடுத்தல். ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்குவதென்பது அரசியல் விழிப்புணர்ச்சியிலிருந்து உருவாக்குவதா? அல்லது ஒன்றைக் கடமையாக / சடங்காக மாற்றுவதா?

தொண்டு போன்ற வார்த்தைகளுக்கு பண்பாட்டில் இருக்கும் அர்த்தங்கள் பிற்போக்கானவை. ஒரு உதவியைச் செய்பவர் தான் செய்வது தொண்டு அல்லது தியாகம் என்று கருதுவது தவறு. “தொண்டாகச் செய்யும் போது அவருக்கு அங்கே அங்கீகாரம் கிடைக்கும். அவர் அந்த மக்கள் மத்தியில் கதாநாயகனாக மாறுவார். அங்கீகரிக்கப்பட்ட அந்த ஆசிரியர், மருத்துவர் கதைக்கும் அரசியலுக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.” இந்தக் கருத்தின் மூலம் சொல்லப்படுவது என்ன? இங்கே கதாநாயகத்துவ அரசியலுக்கு என்ன வேலை? மக்கள் இயக்கம் என்பது கதாநாயகர்களின் இயக்கமல்ல, அது கருத்தியலின் இயக்கம் தானே. கதாநாயகத்துவ அரசியல் மரபுள்ள மக்கள் திரளிடமிருந்து அதற்கு மாற்றான ஒரு கருத்தியல் தலைமைத்துவ அமைப்பாக்கமே தேவை.

மேலும் “மக்களை நாங்கள் கிராமங்கள் தோறும் சந்தித்து, அங்கிருக்கும் பிரச்சினைகளை கண்டுபிடித்து ஆங்காங்கே கிராம மட்டங்களிலேயே குழுக்களை உருவாக்கி அதன் மூலம் செயற்பாட்டாளர்களை உருவாக்கி அந்த மக்களின் பிரச்சினைகளுடன் நாங்கள் எப்போதும் நிற்க வேண்டும். அது காலப்போக்கில் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று உள்ளூர் தலைவர்களை வளர்க்கும்.” மக்களை அரசியல்மயப்படுத்துவது தான் இதற்குத் தீர்வென்பதையே அவரும் சொல்கிறார் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் என்ன வகையான அரசியல்மயப்படுத்தல், எந்தக் கருத்துக்களை மக்களிடம் பேசுகிறோம் என்பதே இங்கு பிரச்சினை. மக்கள் இயக்கத்திற்கான வழி என்ன என்று கேட்டால் தேர்தல் கட்சிகள் பின்பற்றும் வழிமுறைகளைச் சொல்லியிருக்கிறார். “மக்களின் தேவைகளோடு நில்லுங்கள், அவர்கள் நன்மதிப்பை வெல்லுங்கள், பிறகு நீங்கள் சொல்வதை அங்கீகரிப்பார்கள்,” என்பதில் கிராம மக்களை, அவர்களின் அரசியல் அறியாமையை வைத்து அவர்களைத் தந்திரமாக வென்றெடுக்கச் சொல்கிறாரா?

இவற்றின் மூலம் வளர்க்கப்படுவது ஒரு மக்கள் இயக்கத்திற்குத் தேவையான தலைமைகள் இல்லை, அவர்கள் இணைப்பாளர்கள் மட்டுமே, இங்கு தேவை உள்ளூர்த் தலைமைத்துவம். அது கருத்தியலும் செயலும் இணைந்ததாக இருக்க வேண்டுமென்பதே சரியான பார்வை. அந்தக் கருத்தியலும் தெளிவானதாகவே இருக்க வேண்டும்.

இன்று பல தமிழ்க் கிராமங்கள் கிராமங்களாகவே இல்லை, கிராமியத் தன்மை இழந்துவிட்டன என்று சொல்லியிருந்தார். முதலில், கிராமங்கள் ஏன் கிராமங்களாக இருக்க வேண்டும்? இப்போது நகரம் எதிர் கிராமம் என்று மாறியிருப்பது பெருமளவில், ஆதிக்க சாதிகள் எதிர் ஒடுக்கப்பட்ட சாதிகள் என்பதான ஆதிக்க வேறுபாடே. அவை கிராமங்களாக ஏன் பேணப்படுகின்றன. நகரங்களிற்குத் தேவைப்படும் உடல் உழைப்பாளிகளைப் பெற்றுக்கொள்ளவா? விவசாயிகளைப் பெற்றுக்கொள்ளவா? கூலிக்கு ஆட்களைப் பெற்றுக்கொள்ளவா?

கருத்து சொல்வதற்கு மட்டும் நகரத்தின் மத்தியிலிருந்து ஆரம்பிக்கலாமா? கிராமங்கள் கிராமங்களாக இருக்கவேண்டுமென்று எந்த அவசியமும் இல்லை, பெரும்பாலான இடங்களில் கிராமங்கள் என்று இன்று எஞ்சியிருப்பவை ஒடுக்கப்பட்ட சாதிகள் உள்ள இடங்களே, ஆதிக்க சாதியினரின் குடியிருப்புக்களை நோக்கி நீளும் கார்பெற் வீதிகளும், விளக்குகளும், தண்ணீரும், உட்கட்டமைப்பு வசதிகளும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு நுழைவதே பெரும்பாடு. கிராமங்கள் என்பவை நகரங்களை விட்டு தனியே உள்ள பகுதிகள் அல்ல, நகரத்தின் இடுக்குகளில் வாழும் பல நூறு கிராமங்கள் இங்கு இருக்கின்றன. உதாரணத்திற்கு திருநெல்வேலியை ஒரு நகரமென்று எடுத்தால், அதன் அருகில் உள்ள பாற்பண்ணை என்று அழைக்கப்படும் இடம் ஒரு கிராமம், அதன் வீதிகளும் உள்ளடுக்குகளும் இருக்கின்ற நிலைமை மோசமானது. கிளிநொச்சியில் உள்ள மலையக மக்கள் வாழும் இடங்களின் உட்கட்டமைப்பு வளர்ச்சி என்ன? முல்லைத்தீவின் பிலக்குடியிருப்பில்?

கிராமங்கள் மாற வேண்டும், தனக்கான சுயசார்பைக் கொண்ட இடங்களாக அவை இருத்தலே முதற் தேவை. அரசியல் எப்படி நகர மையமானதோ, கிராமங்களும் அப்படியே. அவை பெருமளவிற்கு நகர இயக்கத்தின் உதிரிகளாகவே வாழ்கின்றன. இங்கிருக்கும் அப்பட்டமான அசமத்துவங்களிற்கு தமிழரின் காலாதிகால ஆதிக்கசாதி அரசியல் தலைமைகளே பொறுப்பு. அதன் உட்கட்டமைப்பை வளர்க்காமல் விட்டுவிட்டு, இப்போது அபிவிருத்தி சார்ந்த தேவைகளுக்காக மக்கள் வாக்குகளை வேறு கட்சிகளுக்கு வழங்கியிருக்கும் நிலையில் கிராமங்களை நோக்கித் திரும்புங்கள் என்று சொல்வது என்ன வகையான அரசியல்? தமிழருக்குத் தேவை தொண்டுத் தேசியம் அல்ல. சுயவிமர்சனம்.

இந்தச் சிக்கல் அவர் பார்வை சார்ந்தே இந்த நேர்காணல் முழுவதும் இருக்கிறது. கிராமங்களையும் நகரங்களையும் வேறுபடுத்தும்போது, அவர்கூறும் ஒவ்வொரு கருத்தும் அவை அடுக்கப்பட்டிருக்கும் பார்வைத் தளம் சார்ந்து தவறானது.

“கிராமங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று மட்டும் சொல்லவில்லை. அவற்றுக்குள்ளிருக்கும் அசமத்துவங்களைக் களைய வேண்டும், சாதி, பால் அசமத்துவம் எல்லாம் இருக்கிறது, நுண்கடன் நிறுவனங்கள் வருகின்றன, புலனாய்வாளர்கள் வருகிறார்கள், வாள் வெட்டுக் குழுக்கள் வருகின்றன, போதை பொருட் பிரயோகம் இருக்கிறது..” என்ற நீண்ட பட்டியலைச் சொல்கிறார், எல்லாம் சரி தான். ஆனால் இந்த விடயங்களில் எல்லாம் நகரம் எந்த விதத்தில் மாறுபட்டிருக்கிறது என்பதை பட்டியலிட்டு யோசிக்க முடிகிறதா? இந்த எல்லாமும் நகரத்திற்குள்ளும் இருக்கிறது, இந்தப் பார்வை முறையே தவறானது. நகரம் எதிர் கிராமம் என்ற இருமை நிலையிலிருந்து சிந்திக்கும் போது, நகரம் வாழ்வியல் அடிப்படையில் மாறுபட்டிருக்கிறதா? அல்லது இவற்றைக் கட்டிக்க காக்க இவ்வளவு காலமும் துணை நின்ற சாதிய அமைப்பு முறையை அப்படியே மறைத்து தொண்டு செய்ய வாருங்கள் என்று சொல்கிறாரா?

செய்த நன்மையை முதலிட்டு மக்களை இயக்கமாக்கலாம் என்ற சிந்தனையே தவறு. நாம் மக்களுக்குச் செய்யும் உதவிகளுக்குத் பதிலாக அடைய வேண்டியது எதுவுமே அல்ல. நாம் சொல்ல வேண்டிய கருத்துக்களைச் சொல்லி, என்ன வகையான கருத்தியலை நாம் முன்னெடுக்கிறோம், அதன் தேவை என்ன என்பதை நோக்கி மக்களை சிந்திக்க வைப்பதே மக்கள் இயக்கத்தை உருவாக்கக் கூடியது. அதுவே அரசியல் அறம். இல்லையென்றால் அதுவொரு சமூக சேவை அமைப்பு என்ற அளவில் இருக்குமே தவிர, அவர்கள் பேசும் அரசியலை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவது பிரச்சனைகளை மேலும் சிக்கலாகும். அரசியலைத் தொண்டாக்குபவர்களாலும் கடமையாக்குபவர்களால் ஒரு பயனுமில்லை, அவர்கள் மக்களுக்கானவர்கள் அல்ல. அவர்கள் அதன் விளைச்சலை தமது நன்மைகளுக்காகப் பயன்படுத்துவதே பெரும்பாலான இடங்களில் கள யதார்த்தம். மக்களின் தேவைகளையும் பார்க்க வேண்டும், அதே நேரம் பிற்போக்குத் தனங்களையும் உரையாடி, விமர்சித்து மாற்ற வேண்டும். அதற்குப் பிரச்சினையின் உள்ளீடுகளைத் தெளிவாகப் பேச வேண்டும்.

முக்கியமாக இப்படியொரு இயக்கத்தின் நோக்கம் என்ன? அது எதை அடைவதற்காக உருவாக்கபட வேண்டும். அதன் உள்ளடக்கம் எவை என்பது பற்றியும் கவனிக்கப்படவில்லை.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒன்றை உருவாக்க வேண்டுமென்று கருதினால் சகல அசமத்துவங்களையும் முதன்மைப்படுத்தி சுயவிமர்சனம் செய்வதே முதற் தேவை. அதை இணைப்பதற்கான எல்லா வழிகளையும் அப்படியே விட்டுவிட்டு, அவற்றைத் தீவிரமாகப் பேசாமல், மக்களைக் கருத்தியல் ரீதியில் வளர்க்காமல், தொண்டு செய்து எல்லாம் இயக்கம் வளர்க்க முடியாது. அப்படியே உருவாக்கினாலும், இப்பொழுதிருக்கும் பேரவை ஒரு மேட்டுக்குடிப் பேரவையென்றால், இப்படியான வழிகளைப் பின்பற்றி உருவாகும் இயக்கம் ஒரு சமூக சேவை இயக்கமாகவே உருவாகும். அதுவொரு அரசியல்மயப்பட்ட மக்கள் இயக்கமாகுவதற்கு வாய்ப்பே இல்லை.

-கிரிசாந்

குறிப்பு: இந்தக் கருத்துக்கள் விமர்சனத்துக்குரியவை. தனது தனிப்பட்ட கருத்துக்கள் என்றே நிலாந்தன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். ஆகவே அதன் பார்வைத் தளத்தில் உள்ள குறைபாடுகளென்று கருதுபவற்றை சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

மேலும் “இனப்படுகொலைக்கெதிரான ஓர் மக்கள் இயக்கம்” என்ற எனது கட்டுரையில் ஒரு மக்கள் இயக்கத்திற்கான சட்டகங்களை இரண்டு வருடங்களுக்கு முன் வரையறுக்க முயற்சி செய்தேன். அதற்கான இணைப்பும் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

இணைப்பு:

நிமிர்வு தளத்தில் வெளியாகிய நேர்காணல்

https://www.youtube.com/watch?v=NAzkSngnPmI&feature=share&fbclid=IwAR1CTsKnTgSzPxnPx2XL1f6mlD2BJtnay5p6nJe8SQ151g7TjloTQ6R4S0E

இனப்படுகொலைக்கெதிரான ஓர் மக்கள் இயக்கம்

https://www.remembermay2009.com/portfolio/a-peoples-movement-against-genocide

Related posts

கோயிலில் சாதியும் எதிர்ப்பின் குரல்களும்

vithai

ஏன் பெரியாரும் வேண்டும்?

vithai

பெரியபரந்தன் பிள்ளையாரும் சமூக நீதியும்

vithai

இயற்கையின் வானவில் கொடி – சமத்துவ அடையாளம்

vithai

கடல்களில் உருவாக்கப்படும் ”அமிழ்த்தப்படு வாகனச் சூழற்றொகுதி” சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?

vithai

சுயமரியாதையை இழந்துவிட்ட யாழ் பல்கலைக்கழகம்

vithai

Leave a Comment