vithaikulumam.com
சமகாலகுறிப்புகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதியும் ஒரே இலங்கைக்கான நீதியும்

பத்து வருடங்கள், மூன்று ஆட்சிமாற்றங்கள், நான்கு வருட தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டங்கள் எனத் தளர்ந்து போயிருந்த மக்கள் சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தில் (30.08.2020) வடக்கு மற்றும் கிழக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தார்கள்.

காலை பத்து முப்பது அளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை நாம் சென்றடைந்தபோது மக்கள் கொஞ்சங்கொஞ்சமாக வந்து சேரத்தொடங்கியிருந்தார்கள். பதினொரு மணியளவில் கணிசமானவர்கள் வந்து சேர்ந்திருக்க, அங்கிருந்து மாவட்டச்செயலகம் வரைக்குமான பேரணி தொடங்கியது. வந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தார்கள். தாய்மாரும் சகோதரிகளும் குழந்தைகளுமாக அந்த வெயிலிலும் களைப்பிலும் சோர்வடையாது நீதிக்கும் உரிமைக்குமான உரத்த கோசங்களுடன் ஒன்று திரண்டிருந்தார்கள்.

இந்த மக்களின் போராட்டத்தில் இலங்கை அரசிடம் தங்களுக்கான நீதியைக் கேட்பதற்கும் அப்பால் மக்களின் அரசியல் தெளிவையும் ஓர்மத்தையும் அவதானிக்கமுடிந்தது. பத்து வருடங்களாகத் தொடர்ந்து கேட்டும் தராத நீதியை, போர்க்குற்றத்துக்கான விசாரணைக்குட்பட்டவர்களின் அரசாங்கம் தந்துவிடப்போவதில்லை என்கிற எண்ணமிருந்தாலும் அந்த அரசே தமக்குரிய பதிலைச்சொல்லும் பொறுப்பிற்குரியது என்கிற தெளிவும் மக்களிடம் இருந்ததை நாம் உரையாடிய வகையில் கண்டுகொள்ள முடிந்தது. இதை ஒழுங்கமைக்கிறவர்கள் கூப்பிட்டார்கள், அரசியல்வாதிகள் வரச்சொன்னார்கள், பயண ஒழுங்கு கிடைக்கிறது என்பதையெல்லாம் தாண்டி அந்த மக்களிடம், அந்த தாய்மார்களிடம் அதற்கான ஓர்மம் இருந்ததை அவர்கள் ஒவ்வொருவரது குரலிலும் காணமுடிந்தது. ஏறக்குறைய நான்குவருடங்களை நெருங்கிவிட்ட அவர்களது தொடர்ச்சியான போராட்டத்தை இம்முறை பதவியேற்றுள்ள புதிய அரசாங்கத்துக்கு சர்வதேசரீதியில் அழுத்தமொன்றைக் கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பாக உணர்ந்து முன்னெடுத்திருந்தார்கள்.

எங்கடை உறவுகளுக்காக நாங்கள் எவ்வளவு காலம் வரைக்கும் எண்டாலும் வருவம் தம்பி என்பதுதான் அவர்களுடைய பதிலாக இருந்தது. கூட்டிக்கொண்டு போன தங்கள் உறவுகளைப் பற்றிய எந்தத் தகவல்களும் இல்லாமல் எப்படி அவர்களைப் பற்றிய முடிவுக்குத் தாங்கள் வரமுடியும் என்ற கேள்வியே அவர்களிடம் இருந்தது. அந்தக்கேள்விக்கான பதிலே அரசுக்கான சவாலாகவும் இருக்கிறது; அதற்கான முறையான பதிலைத்தர வேண்டிய பொறுப்பு அவர்களிடமே இருந்தாலும் அந்தப்பதிலே அவர்களின் போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களாக மாறிவிடும் என்கிற உண்மை இருப்பதனால் இதுவொரு மழுங்கடிக்கப்படும் விசாரணையாகவும் நழுவலான தீர்வுகளை முன்வைக்கிற விடயமாகவுமே எஞ்சக்கூடிய வாய்ப்பிருக்கிறது. நடக்கும் பௌத்த மயமாக்கல், ராணுவ மயமாக்கல் போன்ற வெளிப்படையான மற்றைய பிரச்சனைகளைப்போலவே துயரமான உண்மையாகவே இதுவும் இருக்கப்போகிறது.

நடந்து முடிந்த தேர்தலுக்குப்பின்னரான முதலாவது முக்கியமான போராட்டமாக இருந்தும் இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் சிலர் மக்களோடு கூடவே கலந்து கொண்டதையும் சிலர் வாகனங்களில் வந்து கலந்து கொண்டதையும் காணமுடிந்தது. அதேநேரம் வாக்குச்சீட்டுகளிலும் தேர்தல் விளம்பரங்களிலும் பார்த்த பல முகங்களை இங்கே காணவில்லை என்பது எப்பொழுதும் போல தேவையான காலங்களுக்கு மட்டுமே மக்கள் பிரச்சனைகள் கையிலெடுப்பார்கள் என்கிற அவர்கள் போக்கையே நிரூபிக்கிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்தாலும் இடைவெளிவிட்டு பகுதி பகுதியாக நடந்து வரும்பொழுதும் தேவையற்ற கோசங்கள் வசனங்கள் இல்லாமல் தங்களது உணர்வுகளையும் நீதியையும் மட்டுமே அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். வெயிலில் வழங்கப்பட்ட குடிபானங்கள் மற்றும் தண்ணீர்ப்போத்தல்களை கண்டபடி வீதியில் போடாமல் அத்தனை பிளாஸ்ரிக் பொருட்களையும் கலந்து கொண்டவர்களும் ஒழுங்கமைப்பாளர்களும் தாமாகவே சேகரித்து உரிய வகையில் அப்புறப்படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது. போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமலும் கட்டுப்பாட்டுடனும் வந்தவர்கள் எல்லோரும் பங்குபற்றியிருந்தனர். கொண்டு வந்த பதாகைகள், கொடிகள் என்பவற்றையெல்லாம் முறையாக சேகரித்து தம்முடனே எடுத்துச்சென்றதையும் காணமுடிந்தது. இந்த நிகழ்வை ஒழுங்கு செய்தவர்களிடமும் கலந்துகொள்ள வந்தவர்களிடமும் ஒரு நேர்த்தியும் நிதானமும் இருப்பதைக் கண்டு கொள்ளக்கூடியதாக இருந்தது. யுத்தத்துக்கு பிந்தைய இவ்வளவு காலப்பகுதியில் தொடர்ச்சியான போராட்டமாக இருக்கும் இந்தப் போராட்டம் வெறுமனே தன்னெழுச்சியானதும் அரசவெதிர்ப்பு மனோநிலையாகவும் மட்டுமல்லாது அனுபவங்கள், பழக்கங்கள் ஊடாக தமது நீதிக்காகவும் உரிமைக்காகவும் மேம்பட்ட வகையில் தங்கள் எதிர்ப்பையும் அழுத்தத்தையும் பதிவு செய்கிறார்கள். அதை குறிப்பிடப்படவேண்டிய விடயமாக நாம் கருதுகிறோம்.

ஒரே இலங்கை ஒரே நீதி என்கிற முழக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய அரசாங்கம், நீதியை தமது காலத்துக்குள் தர முயற்சிக்கும் என்பதை மக்கள் நம்புகிறார்கள் எனில் அது பெறுமதியான அரசாகவே தன்னை தக்கவைக்கும் என நம்புவோமாக. இந்த கவனயீர்ப்பில் பங்கு கொண்ட அந்தனை மக்களது சார்பிலும் அவர்களுக்கான நீதியை நாமும் வலியுறுத்துகிறோம்.

தோழமையுடன்
விதைகுழுமம்.

இதில் பாவிக்கப்பட்டுள்ள புகைப்படம் குமணன் கணபதிப்பிள்ளையால் எடுக்கப்பட்டது

Related posts

நினைவுத் தூபி இடித்தழிப்பு : கண்டன அறிக்கை

vithai

இன்னும் கிடைக்காத சமூகநீதி

vithai

செய்த நன்மையும் தொண்டுத் தேசியமும்

vithai

தேர்ந்தெடுக்கப்பட்ட அநீதி

vithai

குமாரவடிவேல் குருபரனின் மீதான் தடை தொடர்பில் மாணவர் ஒன்றியம்

vithai

பாற்புதுமையினர் பற்றிய அறிதலும் சமூக ஏற்பிற்கான பயணமும்

vithai

Leave a Comment