vithaikulumam.com
கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்

கதையும் பாட்டும் கதையும்

குழந்தைகளினதும் சிறுவர்களினதும் உலகம் அவர்கள் மீதான உலகின் அக்கறையின் மூலம் உருவாக வேண்டியது. நம் காலத்தின் குழந்தைகள் அதிகளவு தொழில்நுட்பத்துடனும் அதன் கைத்துணையுடனுமே வாழப் பழக்கப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாழும் உலகின் கதாபாத்திரங்களை அன்றாட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தீர்மானிப்பதாக மாறிவருகிறது. குழந்தைகள் காண்பிய ஊடகங்களினூடாக உலகை அறிவது ஒரு வகை அறிதலே, ஆனால் நிகர் வாழ்வின் எல்லையில்லா மனித முகங்களை அவற்றின் சுபாவங்களை, இயற்கையின் முடிவில்லா எழிலை அவற்றின் கோலங்களை அறியும் அறிதலே முதன்மையானது. அவற்றுடன் ஒரு குழந்தைக்கு உண்டாகும் தொடர்பும் பிணைப்புமே அடிப்படையான அவர்களின் இயல்புகளைத் தீர்மானிக்கும். நாம் குழந்தைகளின் அன்றாடத்திடம் அவர்களைக் கைவிடுகிறோம். அவர்கள் அதனுடன் மோதி மோதி ஏராளம் குழப்பங்களுடன் திரும்புகிறார்கள், அதன் சிக்கல்களை அவர்களால் இணைத்து விளங்கி கொள்வது கடினமாக இருக்கிறது. நாம் உருவாக்கி அளித்திருக்கும் சமூக அமைப்பு குழந்தைகளின் இயல்பான துணிச்சலை சுயமரியாதையை தொடர்ந்தும் அழுத்துவது. வீடு முதல் பள்ளிக் கூடங்கள் வரை மேலிருந்து கீழாக அழுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கும் தொடர் சங்கிலிகளை அவர்களுடன் பிணைத்து வைத்திருக்கிறோம்.

அவர்களுக்கு அறங்களைச் சொல்லித் தருபவர்களே, அவற்றை மீறவும் செய்கிறார்கள், அதன் போது அந்தந்த நேரத்து அறங்களை அவர்களால் உள்வாங்க முடிவதில்லை. மெல்ல மெல்ல இந்தச் சமூக ஆதிக்க ஒழுங்கைக் கற்றுத் தேறும் குழந்தைகளை மறைமுகமாக நாம் உருவாக்க விரும்புகிறோம். அவர்களுடைய சுயத்தின் மீதும் வாழ்வின் ஆதாரமான நம்பிக்கையின் மீதும் நிகழ்த்தப்படும் தொடர் வன்முறைகள் குழந்தைகளை வடிவமைக்கின்றன. இவற்றிலிருந்து மீறும் குழந்தைகளை இந்தச் சமூகம் தன் நம்பிக்கைகளின் எதிரியாகவே பார்க்கிறது. அவற்றினால் தொடர்ந்தும் அலைச்சலுறும் குழந்தைகள் ஒரு வகையான மவுனத்திற்குள் செல்கின்றனர். பெரியவர்களிடம் மறைந்து வாழும் ஒரு ரகசிய உலகை உருவாக்கிக் கொள்கின்றனர். சமூகத்தில் எப்படி வாழ வேண்டுமென்ற அதிகார ஒழுங்கின் முன்னாலுள்ள முதல் மவுனம் அது. முதல் அச்சமும்.

கொரானாவுக்கான ஊரடங்குக் காலத்திற்குப் பின் அதற்கு முதல் நாம் சந்தித்து உரையாடிய குழந்தைகளை மீளவும் சந்தித்து அவர்களின் அனுபவங்களை அறிய விரும்பினோம். அதன் ஒரு பகுதியாக குடத்தனை மேற்கு, வலிக்கண்டியில் உள்ள குழந்தைகளையும் சிறுவர்களையும் சந்தித்தோம். கடந்த காலங்களில் எமது தோழமை அமைப்பாகிய பசுமைச் சுவடுகள் அமைப்பினர் நடத்திய விதைப்பந்து தயாரித்தல், திரையிடலும் கலந்துரையாடலும், கதை சொல்லல் ஆகிய தொடர் செயற்பாடுகளில் நாமும் பங்குபற்றியிருந்தோம். இம்முறையும் கதை சொல்லலோடு பாட்டும் கதையுமாக அவர்களுடைய அனுபவங்களை அறியும் நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்திருந்தோம்.

ஏற்கனவே இருந்த அறிமுகத்தினால் அவர்கள் இயல்பாக இருப்பார்கள் என்றே நினைத்திருந்தோம். நாம் அவதானித்தவரை முதன்முறையாக அவர்களைச் சந்தித்த போதே அவர்கள் மிக நெருக்கமாகி வரக் கூடியவர்களாகவே இருந்தார்கள். அடுத்தடுத்த நிகழ்வுகளில் அவர்கள் மிகச் சாதாரணமாக உரையாடியும் கதைகளைக் குதூகலத்துடன் கொண்டாடியாமையையும் அவதானித்திருந்தோம். இம்முறை சற்று வித்தியாசமான அனுபவமே கிடைத்தது. முதலாவது, அவர்களில் பல துடுக்கான வாய்ப்பேச்சுக்காரர்கள் அவ்வளவாகக் கதைக்கவில்லை. பின்னர் பாடல்களின் போதும் கதையின் போதும் அவர்களின் கவனத்தை ஈர்ப்பதும் அவர்களின் ஆர்வத்தைப் பெருக்குவதும் சிரமமாகவிருந்தது. பெருமளவுக்கு மவுனமாக இருந்தார்கள். சிலர் ஆர்வத்துடன் பதில்களையளித்தாலும் அவர்களிடம் நாங்கள் கேட்ட சில நேரடியான கேள்விகளுக்கு அவர்களின் மவுனம் எங்களுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. முன்னர் அவர்கள் அப்படிப்பட்ட சிறுவர்களாக இருக்கவில்லை. எங்களால் முடிந்த அளவான உரையாடல்களைச் செய்தபடி சில பாடல்களையும் இசைத்துப் பின்னர் விளையாட்டுக்குச் சென்றார்கள்.

அவர்களுடனான உரையாடலில் விழுந்த சிலமாத இடைவெளிகள் அவர்களின் கூட்டுணர்வைக் கலைத்து விட்டிருந்தது. தொடர்ச்சியாக ஒரு வருடமாவது அவர்களுடன் பயணிக்க வேண்டுமென்றே முன்னர் தீர்மானித்திருந்தோம். இப்பொழுது அதை இன்னும் ஆழமாக உணர்கிறோம். அவர்களை இந்தச் சமூக ஒழுங்குகளின் முன் பணிய வைக்கும் வாழ்க்கையை கைவிடச் சொல்வதில் எந்தப் பயனுமில்லை என்பது நாம் இச் செயல்களின் ஆரம்பத்திலேயே அறிந்தது தான். ஒரு நாள் சென்று உரையாடிவிட்டு, நீங்கள் அப்படி வாழ வேண்டும் அல்லது இப்படியெல்லாம் வாழ வேண்டுமென்று அவர்களைத் துன்புறுத்துவதில்லை என்றே தீர்மானித்தோம். தொடர்ந்து பயணிப்பது, உரையாடுவது, அவர்களின் பிரச்சினைகளை இனங்காண்பது, முடிந்தவரை அவற்றிலிருந்து அவர்களை உண்மையாகவே காப்பாற்றுவது என்பது தான் படிமுறை. அவர்களது பிரச்சினைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்ற இந்த சமூகத்தில் யாரோ சிலர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை ஆதாரமானது. அவற்றை அவர்களிடம் விதைக்க நமக்கு இன்னமும் அதிகம் உழைப்பும் நேரமும் தேவைப்படுகிறது.

நமது சமூகம் ‘குழந்தை வளர்ப்பை’ ஒரு பாரம்பரிய அறிவாகவே கடத்த நினைப்பது. அல்லது அந்தந்தக் காலத்தின் பொதுப்போக்கிற்கு ஏற்ப சில மாறுதல்களை உள்வாங்குவது என்பதாகவே இருக்கிறது. குழந்தைகளை அறிவதென்பது ஒவ்வொரு சமூகத்திற்கும் மிக முக்கியமானது. அதைக் கற்க வேண்டும். அதுவொரு அறிவுத்துறை. நாமும் குழந்தைகளை வளர்ப்பது தொடர்பில் பயிற்றுவிக்கப்பட வேண்டிய சமூகம். நமது கடந்த கால ஒழுங்குகளிலிருந்து அவர்களை விடுவித்துச் சுதந்திரமாக இவ்வுலகைப் பார்க்கும் வாய்ப்பை நாம் அவர்களுக்காக உருவாக்க வேண்டும்.

தோழமையுடன்
விதை குழுமம்

Related posts

உண்ணாவிரதப்போராட்டத்தின் முடிவு

vithai

வாசிப்பும் அறிதலும் – அஞ்சலியும் பிரசுர வெளியீடும்

vithai

போராடுவது என்றால் என்ன?

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி 05

vithai

லண்டன்காரர் – வாசிப்பு அனுபவம்

vithai

பள்ளிப்பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை

vithai

Leave a Comment