vithaikulumam.com
செயற்பாடுகள்

குழந்தைகளின் கதைகள்

குழந்தைகளின் கதையுலகம் அவர்களினாலேயே வழிநடத்தப்பட வேண்டியது. அவர்கள் நினைத்ததையே உருவாக்கும், வெளிப்படுத்தும் சுதந்திரம் அவர்கள் கதைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும். ஒருமுறை காகம் பதிப்பகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஏ.பி.எம். இத்திரீஸுடன் கதைத்துக் கொண்டிருந்தபோது குழந்தைகளுக்கு நாம் வழங்கியிருக்கும் நீதிகளைப் பற்றியும் அவர்களுக்கென நாம் உருவாக்கிக்கொண்டிருக்கும் கதையுலகின் எதிர்த்தன்மை பற்றியும் சொன்னார். உதாரணத்திற்கு “பாட்டி வடை சுட்ட கதையை” நாம் எல்லாக் குழந்தைகளுக்கும் எமது மொழியில் சொல்கிறோம். பெரும்பான்மைக் குழந்தைகள் இக்கதையை அறிவார்கள். அவர்களுக்கு நாம் அதில் சொல்லிக்கொடுப்பது என்ன? அந்தக் கதைகள் சொல்லத் தவறியவற்றை பிறகு, கதைசொல்லல்களை மாற்றுவதன் மூலம் அவர்களைத் திறக்க முடியும் என்று சொன்னார். அவரே இந்த வழியை எங்களுக்குக் கற்றுத் தந்தார்.

ஒரு பாட்டியிடம் வடையை வாங்கி வந்த காகம் நரியிடம் ஏமாந்த கதை அல்லது நரியை ஏமாற்றித் தனது புத்திசாலித்தனத்தால் நரி தன்னிடமிருந்து பறிக்க இருந்த வடையைக் காகம் காப்பாற்றியமை. இது தான் நாம் சொல்லிக் கொடுப்பது. இந்தக் கதைகளில் கொடுக்கப்படும் சித்திரங்கள் குழந்தையிடம் இரண்டு வகையான சாத்தியங்களை மட்டுமே வழங்குகின்றன. ஒன்று, ஏமாளியாய் இருந்தால் ஏமாற்றப்படுவாய் அல்லது புத்திசாலித்தனமாக இருந்து தப்பிக்கொள். இந்தக் கதைகளை நாம் மாற்றக் கூடாதா? காகம் எப்படி வடையை வாங்கியதோ அதே நேர்மையான வழியில் நரிக்கும் ஏன் ஒரு வடையைக் காகம் வாங்கிக் கொடுக்க முடியாது? இந்தத் திருப்பத்தைக் குழந்தைகளுக்கு வழங்குவதில் இரண்டு முக்கியத்துவங்கள் உண்டு; ஒன்று, சொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்ற கதையொன்று எங்களால் மாற்றப்படக் கூடியது என்ற நம்பிக்கையைத் தருவது; மற்றது, ஒன்றைச் சரியாகச் செய்ய இன்னொரு வழி இருக்கின்றது என்ற நம்பிக்கையைத் தருவது. இது அளிக்கும் திறப்பு குழந்தைகளுக்கு ஏற்கனவே இருக்கும் நம்பிக்கைகளை மாற்றவும் அவற்றின் வழிகளை மாற்றவும் வாய்ப்பை அளிக்கின்றது. அவர்கள் கதையுலகில் ஏற்கனவே சொல்லப்பட்ட நீதிகளும் அவற்றுக்கான வழிகளும் இன்னும் சரியானதாக ஆக்கிக் கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையையும் வாய்ப்பையும் நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும். நாம் சொல்லும் கதைகளையே குழந்தைகள் திரும்பச் சொல்லவேண்டும் என்று அவர்களை வற்புறுத்தக் கூடாது.

சாவகச்சேரியில் உள்ள நாமகள் பாலர் பாடசாலையின் குழந்தைகளுக்கான ‘கதை சொல்லல்’ நிகழ்வினை பசுமை நிழல்கள் அமைப்பின் தோழமையுடன் விதை குழுமம் ஆரம்பித்திருக்கிறது. பசுமை நிழல்கள் அமைப்பினர் சூழலியல் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்கள். அவர்களின் கவனம் குழந்தைகளின் பக்கமும் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் திரும்பியிருக்கிறது. அவற்றின் தொடக்கமாக குழந்தைகளுக்கான இந்நிகழ்விலும் தொடர்ந்து அவர்களுக்கான செயற்பாடுகளிலும் இணைந்து பயணிக்கவுள்ளோம்.

முதலாவது கதை சொல்லல் நிகழ்வில் குழந்தைகள் ஆர்வமுடன் ஈடுபட்டார்கள். அவர்களுடைய ஊரில் டைனோசர்கள், ஒட்டகங்கள், அனகொண்டா பெரிய, கிணறளவுள்ள ஆமைகள் எல்லாம் வசிக்கின்றன. ஒரு சிறுவர் கதை சொல்லும்போது தன்னுடைய வீட்டின் கிணற்றில் பூதமிருப்பதாகச் சொன்னார். சொன்னவர், இன்னும் கொஞ்சம் விளக்கி தன் சித்தாச்சி தான் அப்பிடிச் சொன்னார், ஆனால் அது உண்மையிலேயே குரங்கு என்றார். அவர் கதையை முன்வைத்த விதம் அலாதியானது. சிறிய சிறிய தரவுகளைக் கூட நுணுக்கமாகச் சொன்னார்.

பிறகு ஆமையும் முயலும் கதை சொல்லத் தொடங்கிய போது ஆமை தான் வேகமாக ஓடும் என்றார். அதற்கும் அவருடைய கதையில் வாய்ப்பிருக்கிறதல்லவா. அவரின் சுதந்திரத்தை நாம் மதிக்கவேண்டும். அவரை யதார்த்தமானதை அறியச் செய்யும் வாய்ப்பல்ல கதை; அவரின் கற்பனையில் முளைக்கும் அவரின் சொந்த உலகம் அது.

பின்னர், பாட்டுப் பாடினோம், ரயில் ஓடினோம். அவர்களின் கதைகளை அவர்களே விரும்புவது போல் ஓவியங்களாக வரைந்தார்கள். இந்த நிகழ்வுகள் முடிந்ததும் அந்தச் சிறுவர்களே பசுமை நிழல்கள் அமைப்பின் தோழர்கள் வழங்கிய மரங்களை நட்டார்கள். “வெய்யிலா எல்லோ கிடக்கு, மரத்திற்குத் தண்ணி விடாய்க்கும்” என்று சொன்னோம். உடனடியாகப் போய், பெரிய பாத்திரங்கள் தான் தேவை என்று தேடாமல் அவர்கள் இரண்டு கைகளிலும் வழிய வழிய நீரை அள்ளிச் சென்று வார்த்தார்கள். நாம் அப்படிக் கேட்டபோது அவர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டிருக்கக் கூடாதென்பதல்ல. ஆனால் அதை விட முக்கியம் மரத்திற்கு தண்ணீர் விடாய்க்கும் என்றதும் தங்கள் கைகளில் நீரை ஏந்தி வார்க்கும் குழந்தை இதயம். குட்டி இளவரசன் நாவலில் ஒரு வாக்கியம் வரும் “இதயத்திற்குத் தான் பார்வையுண்டு, முக்கியமானது கண்களுக்குப் புலப்படாது”.

தோழமையுடன்
பசுமை நிழல்கள்
விதை குழுமம்

Related posts

கொட்டகை : 01

vithai

லண்டன்காரர் – வாசிப்பு அனுபவம்

vithai

காட்டுப்புலம் ஒரு சமூக உரையாடல்- 4 பாலியல் வன்முறைகளுக்கெதிரான அமைப்புகளின் வகிபாகம் -2

vithai

ஆயிஷா – குழந்தைகளுடனான உரையாடல்

vithai

ஆசிரியர் தினம் – யாழ்ப்பாண புதிய நடுத்தர வர்க்க சிந்தனைகளின் எழுச்சியும் வித்தியாசங்களை விளங்கி கொள்ளுதலின் முரண்பாடும்

vithai

பாரம்பரிய உணவுகளைப் பகிர்தல்

vithai

Leave a Comment