யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்து அகற்றியிருக்கின்ற செயலானது இலங்கையில் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து திணிக்கப்படுகின்ற ஒடுக்குமுறையின் இன்னொரு அம்சமாகவே இருக்கின்றது. இறந்தவர்களையும் இழப்புகளையும் நினைவுகூர்வதும் நினைவுகளை எழுதுவதும் நினைவுச் சின்னங்களை எழுப்புவதும் மரபுரீதியாகத் தொடர்கின்ற வழக்கம் என்பதுடன் மக்களின் உரிமையுமாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் நோக்குடன் கட்டப்பட்ட இந்த நினைவுத்தூபியானது இறந்த / கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்வது என்கிற அடிப்படை உரிமை என்பதுடன், அந்த இழப்புகளினால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற அஞருக்கான ஆற்றுப்படுத்தலுமாகும்.
இழைக்கப்பட்ட அநீதிக்குப் பொறுப்பேற்காது நிறுவன ரீதியான நியாயப்படுத்தல்களைக் கூறுவதும், பொய்ப்பிரச்சாரங்கள் மூலம் விடயத்தைத் திசை திருப்புவதும் போராடுவோரை மிரட்டுவதும் அபாய சமிக்ஞையாகவே தெரிகின்றது.
சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளையும் சம உரிமையையும் பறிக்கின்ற இந்தச் செயலினை விதை குழுமம் கண்டிப்பதோடு தமது உரிமைகளுக்காக அறிவிக்கப்பட்டிருக்கின்ற ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்குத் தனது உணர்வுத்தோழமையையும் தெரிவித்துக்கொள்கின்றது.
-ஓவியம் – ஜபார் ஹஸ்புல்லா