vithaikulumam.com
கட்டுரைகள் கலந்துரையாடல்கள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி

சமூகத்தில் அதிகாரம் மிக்கவர்கள் சிறுவர்களதும் குழந்தைகளதும் மேல் நிகழ்த்தும் துஷ்பிரயோகங்களுக்கும் வன்முறைகளுக்கும் எதிராகப் பேசுவதென்பது நமது காலத்திலும் மிகவும் நெருக்கடியானதே. அவர்களை வெளிப்படுத்தும் போதும் அவர்கள் செய்த துஷ்பிரயோகங்களைச் சொல்லும் போதும், பாதிக்கப்பட்டவரை விசாரணை செய்யவே நமது சமூகம் உடனடியாக முனைகிறது. அதிகாரத்திலிருப்பவர்களை நோக்கிக் கேள்வி கேட்க முடியாத சமூக அமைப்பாக நாம் அப்படித் தான் அடிப்படையிலிருந்து மாற்றப்படுகிறோம்.

எனக்கு நேர்ந்த ஓரு துஷ்பிரயோகம் பற்றி இங்கே சொல்கிறேன். நான் 2003 ஆம் ஆண்டு, தரம் ஐந்து படித்துக் கொண்டிருந்தேன், சென். ஜோன்ஸ் பொஸ்கோ கல்லூரியில். புலமைப்பரிசில் பரீட்சைக்கான தனியார் வகுப்புகள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தன. அப்போது நான் யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்திற்கு அருகில் உள்ள சிவன் அம்மன் கோயில் வீதியில் இருந்த ‘அன்பொளி’ எனும் தனியார் வகுப்பிற்குப் பெற்றோரால் அனுப்பப்பட்டேன். இப்பொழுதும் பிரபலமாய் இருக்கும் அந்தத் தனியார் கல்வி நிலையத்தின் ஆசிரியரின் பெயர் அன்பழகன், தற்போதும், பாடசாலையிலும் தனியார் வகுப்புகளிலும் கற்பிக்கிறார். அவருடைய கற்பித்தல் செயற்பாடுகளும் கடுமையான ஒழுங்குகளும் பிரபல்யமானவை. மாவட்ட மட்டத்தில் அதிக புள்ளிகள் பெறும் மாணவர்கள் பெரும்பாலும் அங்கு தான் படிப்பார்கள். பொதுவாக சென். ஜோன்ஸ், யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை, பொஸ்கோ ஆகிய பிரபல பாடசாலைகளின் மாணவர்கள் அங்கு வருவதுண்டு. பரீட்சை வைத்து அதிக புள்ளிகள் எடுப்பவர்களுக்குப் புதிய ஐம்பது ரூபாய், நூறு ரூபாய்த் தாள்களை ஒரு அஞ்சலுறையில் வைத்து வழங்குவார். புள்ளிகள் குறைவாய் எடுத்தால் சுவரைப் பார்க்க வைத்து விட்டுப் பிரம்பால் அடித்து விளாசுவார். ஒரு தடவை நான் வகுப்பிற்கான கட்டணத்தைச் செலுத்த தாமதமானமையால் என்னை வகுப்பிற்குள் நிர்வாகத்தினர் ஏற்கவில்லை, என்னுடைய அண்ணனொருவர் தான் என்னை வகுப்பிற்கு இறக்க வந்தவர், நான் அழுதுகொண்டு நடந்தும் ஓடியும், வந்த பாதையால் திரும்பிக்கொண்டிருந்தேன். வழியில் கண்ட என் அண்ணன், என்ன நடந்தது என்று விசாரித்துவிட்டு என்னைத் திரும்பக் கூட்டிக் கொண்டு போனார், நிர்வாகத்தினருடன் முரண்பட்டு தூசணங்களால் அவர்களைப் பேசி விட்டார். அதனால் கோபமடைந்த நிர்வாகத்தினர் எனது பெற்றோரை அழைத்து வரச் சொல்லி விட்டார்கள், நான் அம்மாவை அழைத்துச் சென்றேன். அம்மாவையும் பேசிய அவர்கள், அண்ணன் மன்னிப்புக் கேட்டால் தான் என்னை வகுப்பிற்குள் விடுவதாகச் சொன்னார்கள். பிறகு அண்ணனையும் வரவைத்த பின்னரே நான் அங்கு தொடர்ந்து படிக்கச் சென்றேன்.

இப்படியொரு பின்னணியில், ஒரு நாள் நான் வகுப்பிற்குப் போகப் பிந்தி விட்டது. அன்று பரீட்சை நடந்து கொண்டிருந்தது. நான் உள்ளே சென்று அமர்ந்ததும் கொஞ்ச நேரத்தில் அன்பழகன் வந்தார், சுற்றியும் வகுப்பு நண்பர்கள் பரீட்சை எழுதிக் கொண்டிருந்தார்கள், “ஏன் லேட்?” என்று கேட்டார். நான் “சைக்கிள் காத்துப் போய் விட்டது” என்றேன். அருகில் அமர்ந்த அவர் என்னுடைய ஆணுறுப்பைப் பிடித்துக் கசக்கத் தொடங்கி விட்டார். அப்போது எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வியர்த்து வழிந்தது. சிறுநீர் முட்டியது. கொஞ்ச நேரமிருந்து அப்படிச் செய்தவர் பிறகு சென்று விட்டார். அவர் அப்படிச் செய்துகொண்டிருந்த போது, அவரது கையைத் தட்டி விட்டு நான் அவரை அடிப்பதாகவும், கத்தி மற்றவர்களையும் பார்க்க வைப்பதாகவும் மனதிற்குள் கற்பனை செய்தேன். ஆனால் அவர் மிகச் சாதாரணமாக அத்தனை மாணவர்களும் அருகிருக்க, துஷ்பிரயோகம் செய்தார். அப்போது பத்து வயதான எனக்கு அது கடும் மனபயத்தை உண்டாக்கியது. அன்று வேக வேகமாக வீடு திரும்பியது இன்றும் நினைவிருக்கிறது. பின்னொரு நாளும் வகுப்பிற்கு அருகில் வைத்து அப்படிச் செய்தார்.

இதனை நான் யாரிடமும் சொல்லவில்லை. அவருடைய தண்டனைகள், பெற்றோர் இதைப் பற்றியெல்லாம் என்னிடம் எதுவும் கேட்காமை, முன்னர் அவர்கள் வகுப்பில் மன்னிப்புக் கேட்டது, அவர் ஒரு பெரிய ஆள் என்று என் மனதிலிருந்த பிம்பம் எல்லாம் சேர்ந்து அதை அப்போதே என்னால் வெளிப்படுத்த முடியாமல் ஆக்கியது. யாரும் இத்தகைய பாலியல் துஷ்பிரயோகங்களைப் பற்றிப் பொதுவில் பேசுவது குறைவு. அல்லது அந்த நேரத்தில் சிறுவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பதில்லை, “இண்டைக்கு என்ன படிச்சனி?” என்று கேட்கும் பெற்றோர்கள், உனக்குப் பிடிக்காத மாதிரி யாரும் உன்னைத் தொட்டார்களா? யாராவது உன்னை அடித்தார்களா? என்று கேட்பதில்லை. “நல்லாய் அடியுங்கோ, நாங்கள் ஒன்றும் கேட்க மாட்டோம்” என்பது பெற்றோரின் தரப்பு. அப்படியேதாவது கேட்டிருந்தால் நிச்சயமாக நான் அன்றே சொல்லியிருப்பேன். இந்த இடங்களில் தான் ‘நல்ல தொடுகை’ எது ‘கெட்ட தொடுகை’ எது என்பதனை சின்ன வயதிலிருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். குழந்தைகள் சொல்வதைக் கரிசனையுடன் கேட்க வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமாகப் ‘பாலியற் கல்வி’ எவ்வளவு முக்கியம் என்பதை உணர வேண்டும். அது பெற்றோருக்கும் சமூகத்திற்கும் கூடத் தேவையானதே. சிறு குழந்தைகளைப் பொறுத்தவரையில் பெற்றோருக்குக் ‘குழந்தை வளர்ப்பை’ ஒரு கல்வியாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோருக்குக் குழந்தைகளைப் பற்றி, அவர்களின் உலகைப் பற்றி அறிவே இருப்பதில்லை என்பது துயரமான உண்மை.

சில வருடங்கள் கழித்து, நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சாதாரணதரம் படித்துக் கொண்டிருந்த நேரம், பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்த போது, நான் எனக்கு இப்படியொன்று நடந்தது என்பதை முதன் முதலில் என் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அப்போது என்னுடனிருந்த சில நண்பர்கள் தங்களுக்கும் அவர் அப்படிச் செய்ததாகச் சொன்னார்கள். ஒரு நண்பனோ, “உங்களுக்காவது ஐந்தாம் ஆண்டில், நான் எட்டாம் வகுப்புப் படிக்கும் போது” என்றான். ஒரு நாள் அவனது வீட்டுக்கு அருகில் அவனைக் கண்டிருக்கிறார். அவனை விசாரிப்பது போல் கதைத்து வீட்டிற்குள் சென்றிருக்கிறார், அவனுடைய அம்மா தேநீர் போடச் சென்ற நேரம், இவனுக்கு ஆணுறுப்பைக் கசக்கியிருக்கிறார். தன்னால் அதைத் தடுக்க முடியவில்லை என்று அவன் கவலையாகச் சொன்னான். இன்னொரு நண்பன் தனக்கு இப்படி நடந்திருந்தால் அவரை அடித்திருப்பேன் என்றான். அதன் பின்னர் தான் அப்போது எங்களுடன் படித்த வேறு சில மாணவர்களையும் கேட்டேன். அவர்களில் சிலரும் தங்களுக்கும் அவர் அப்படிச் செய்திருக்கிறார் என்று சொன்னார்கள். அதன் பின்னர் அதை அப்படியே விட்டு விட்டேன்.

இப்படியானவர்கள் தற்பாலீர்ப்பின் மேல் உள்ள சமூக மனநிலையினை வடிவமைப்பதில் பங்காற்றுகின்றனர். துஷ்பிரயோகத்திற்கும் தற்பாலீர்ப்புக்கும் இடையில் நமது சமூகத்திற்கு வித்தியாசம் கிடையாது. இரண்டையும் ஒன்றாகவே பார்க்கிறார்கள், இப்படியான துஷ்பிரயோக அனுபவங்கள் தற்பாலீர்ப்பாளர்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள் என்ற தோற்றத்திற்குக் கொண்டு வந்து சேர்க்கிறது. அதைப் பிரித்துப் பார்க்க நம் சமூகம் பழக வேண்டும்.

விதை குழுமம் சார்ந்து, அமைப்பு ரீதியாகச் சிறுவர்களோடும் குழந்தைகளோடும் செயற்படத் தொடங்கிய பின்னர் அவர்களுடைய உளவியலையும் நெருக்கடிகளையும் நெருக்கமாக உணரும் போது, துஷ்பிரயோகங்களுக்கும் தண்டனைக்கும் உள்ள உறவுகளை விளங்கி கொண்டேன். ஏனென்றால் இங்கு சிறுவருக்கோ குழந்தைகளுக்கென்றோ தனியே குரல் இல்லை. அவர்களை யாரும் மதிப்பதில்லை. அவர்கள் மறைமுகமாகத் தமக்கு நேரும் சம்பவங்களை வெளிப்படுத்தவே செய்கிறார்கள், ஆனால் நாம் அவற்றை நேரடியாகவே விளங்கிக் கொள்கிறோம். அழுது கொண்டு வரும் பிள்ளையை, அதற்கு மேலும் அழ வைப்பதே பெரும்பாலான வளர்ந்தவர்கள் தான். அதே பெரியவர்கள் தான் குழந்தைகளதும் சிறுவர்களதும் சமூகக் குரலும் கூட. பின்னர் சிறுவர்கள் எப்படித் தங்களை வெளிப்படுத்துவார்கள் என்று நம்ப முடியும். குறித்த ஆசிரியர், யாழ்ப்பாணத்தில் இப்போதும் பிரபல ஆசிரியர், ஆனால் யாரும் ஏன் இதை வெளிப்படுத்தவில்லை? அவர் இன்று வரை இதற்காக ஏதாவதொரு வகையில் தண்டிக்கப்பட்டிருக்கிறாரா? இப்படிச் செய்பவர் என்பதைச் சமூகம் அறிந்திருக்கிறதா? அறிந்தவர்கள் ஏன் பேசவில்லை? இது உருவாக்கும் கூட்டு உளவியலை நாம் விளங்கி கொள்ள வேண்டும், அதற்காகத் தான் அவரின் பெயரிட்டு இந்தக் குறிப்பை எழுதுகிறேன். இத்தனைக்கும் நிறைய வசதி படைத்தவர்களினதும் கல்வி மட்டங்களில் வேலை செய்பவர்களின் பிள்ளைகளுமே அதிகமாக அவரிடம் கற்பவர்கள்.

முதலாவது, இப்படியான விசயங்கள் ஆண் குழந்தைகளுக்கு நடக்கும் பொழுது அவர்கள் அதனை வெளிப்படுத்துவதில்லை, ஏதோவொரு வயதிற்குப் பின்னர் அதைப் பற்றிப் பேசினாலும் அதைச் சாதாரணமாக எடுக்கும் போக்கே பெரும்பாலும் நிலவுகின்றது. அதற்கு மேலும் யாராவது வெளிப்படுத்த விரும்பும் போது, நம் சமூகம் உருவாக்கியிருக்கும் “ஆண்மை” பற்றிய கருத்தால், இது தனக்கு நேர்ந்த அவமானமாக, அல்லது வெளியில் சொல்ல வெட்கப்படும் ஒன்றாக ஆகிவிடுகிறது. பொதுவாகவே துஷ்பிரயோகத்திற்கு உட் படுத்தப்பட்டவர்களை, அவர்களே ஏதோ குற்றம் செய்தவர்கள் என்பது போல் சித்தரிப்பவர்களும் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். மறுவளமாக அதனைச் செய்தவர் மேல் எந்தவொரு விரலையும் நீட்டுவதில்லை, சாதாரணமானவர்களுக்கே இப்படியென்றால், நான் மேலே குறிப்பிட்ட உதாரணத்தைப் பாருங்கள், அவர் ஊரின் மிகவும் பிரபலமான தனியார் வகுப்பின் ஆசிரியர். அப்படியொரு அதிகாரத்திலிருப்பவர் ஒரு துஷ்பிரயோகம் செய்யும் போது எல்லா வழிகளிலும் அதனை மூடி மறைக்கவே பலர் முயல்வார்கள். அவர்கள் தான் இவர் என்ன தான் செய்தாலும் காப்பாற்றி விட்டு, துஷ்பிரயோகம் செய்ய அவர்களுக்கு நம்பிக்கையைத் தரும் ஆட்கள். இப்படியானவற்றை அறிந்தும் மவுனமாக இருப்பவர்கள் மற்றும் சாதாரணமாகக் கடந்து விடுபவர்கள் தான் இன்னும் ஆபத்தானவர்கள்.

பொதுவாகவே பாலியல் துஷ்பிரயோகங்களை வெளிப்படுத்துவதில் உள்ள பிரச்சினை, பாதிக்கப்பட்டவர் தன்னை வெளிப்படுத்த விரும்புவதில்லை என்பது தான், மேலும் சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர் அதனை விரும்புவதில்லை. இப்போது கூடப் பலர் அதனை மறைக்கவே விரும்புவார்கள், ஆனால் நான் ஏன் இதைப் பேசுகிறேன் என்றால், இந்தத் தயக்கங்கள் தான் இப்படியான பல வகையான ஆசிரியர்கள் நிகழ்த்தும் துஷ்பிரயோகங்களை அவர்கள் செய்வதற்குரிய துணிச்சலைக் கொடுக்கிறது, நான் பதினாறு வருடங்கள் கழித்து இதனை எழுதுகிறேன், இவ்வளவு நாளாய் நானும் இதனை ஒரு வெளிப்படுத்த வேண்டிய ஒரு பிரச்சினை என்பதை உணரவில்லை. ஆனால் நாளையும் இப்படியானவர்கள் வேலைக்குச் செல்வார்கள், அங்கும் யாரோ என்னைப் போலொரு குழந்தை அமர்ந்திருக்கப் போகிறது? அதற்கும் அப்படி நிகழாதென்பதற்கு என்ன நிச்சயம்? ஆகவே இந்த முறை
பாதிக்கப்பட்டவர் முன் வைத்த கூற்றிலிருந்து பின் வாங்கப் போவதில்லை. நானே சாட்சி என்பது மட்டும் தான் இப்போதைக்கு இதை வெளிப்படுத்தும் போது எனக்கிருக்கும் ஒரே துணிச்சல். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாரும் இதனை வெளிப்படையாகச் சொல்லத் தொடங்கினால் அதுவொரு முக்கியமான எதிர்வினை. எங்களை விட்டுவிடலாம். அது கடந்த காலம் என்று நாங்கள் நினைக்கலாம், நாங்கள் இவரைப் பற்றி மட்டுமல்ல, இப்படியாகப் பல வகைகளில் மாணவர்களைத் துஷ்பிரயோகம் செய்பவர்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதன் மூலமாகவே இன்றுள்ள மிச்சக் குழந்தைகளைக் காப்பாற்றலாம், அதற்காக மட்டுமாவது பேசுங்கள். உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பருக்கோ இத்தகைய அல்லது இதை விடப் பாரதூரமான துஷ்பிரயோகங்கள் நிகழ்ந்திருந்தால் வெளியில் எழுதுங்கள், பேசுங்கள். அதுவே இத்தகையவர்களைச் சமூகத்திற்கு வெளிப்படுத்த உதவும். இன்று துஷ்பிரயோகம் செய்யும் ஒவ்வொரு துறையினரும் என்றாவது தாம் செய்தது வெளியில் வந்தால் என்னவாகும் என்ற அச்சம் உருவாக வேண்டும். அதற்கு நாம் கருத்துச் சொன்னால் மட்டும் போதாது, ஆட்களை வெளிப்படுத்துவதே இதை உறுதியாக்கும்.

ஒரு ஆணாய் எனக்கிருந்த மனத் தடைகளை மீறி இதைச் சொல்வதற்கு, சமூகத்தில் இயங்குவதும், பொது வெளியில் செயற்படுவதும் அளித்த அனுபவங்களே முதற் காரணம். நாம் நமது அனுபவங்களை முன் வைப்பது மிகவும் அவசியம் இல்லையென்றால், நமது சமூகம் இவற்றை இப்படியே தொடரும். ஆனால் நாம் அப்படியே அதைத் தொடர விரும்புகிறோமா? நமது குழந்தைகளை சிறுவர்களை பெண்களை அவர்கள் மேல் நிகழ்த்தப்படும் துஷ்பிரயோகங்களை வெளிப்படையாகச் சொல்லும் துணிச்சலை வழங்குவதற்கு நாம் என்ன செய்வது? அதன் முதற் படி, துணிச்சலுள்ளவர்கள் அதனை முதலில் வெளிப்படுத்துவது, தனியர்களான மனிதர்கள் அமைப்பாய்த் திரள்வது, அதுவே அவர்களைப் பலம் உள்ளவர்கள் ஆக்கும், அதிகாரங்களை எதிர்க்கும் மனோபலத்தையும் சமூக பலத்தையும் வழங்கும்.

-கிரிசாந்

குறிப்பு

* இப்படியானவற்றை வெளிப்படுத்தும் போது குறித்த நபரை மாத்திரமின்றி அவரைச் சார்ந்திருப்பவர்களுக்கும் மன நெருக்கடிகளும் சமூக அவமானங்களும் நேரிடும். அவர்களையிட்டு நான் வருந்துகிறேன். ஆனால் அவர்கள் இதை நான் வெளிப்படுத்துவதற்கான எனது நியாயங்களை விளங்கிக் கொள்ள வேண்டும். ஏதேனுமொரு வகையான துஷ்பிரயோகத்தினை உங்களது குழந்தைகளுக்கு நீங்கள் அனுமதிப்பீர்களா? இல்லையல்லவா? சிறுவயதில் எனக்கு நேர்ந்தது என்னைக் கடுமையாகப் பாதித்திருந்தது. நீங்கள் அந்தச் சிறுவனின் இடத்திலிருந்து இதைப் பாருங்கள் என்பதே எனது வேண்டுகோள்.


* துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான உங்களுடைய அனுபவங்களை வெளிப்படுத்தினால் அவற்றை எமது மின்னஞ்சலுக்கும் அனுப்புங்கள், அவற்றை நீங்கள் விரும்பினால் வெளிப்படையாகவும் அல்லது நீங்கள் விரும்பும் வகையிலும் எமது தளத்தில் வெளிப்படுத்த முடியும்.

Related posts

வாசிப்பும் அறிதலும் – அஞ்சலியும் பிரசுர வெளியீடும்

vithai

தண்டித்தல் எனும் அறமற்ற செயல்

vithai

காட்டுப்புலம் – ஓரு சமூக உரையாடல் – 2

vithai

அரசியலற்ற கலையை வணங்குதல் : கட்டட மரபுரிமைகளும் ஒடுக்குதல் வடிவங்களும்

vithai

கதையும் பாட்டும் கதையும்

vithai

தொன்ம யாத்திரை – 1 தெருமூடிமடம்

vithai

Leave a Comment