vithaikulumam.com
கட்டுரைகள் கலந்துரையாடல்கள்

துஷ்பிரயோக சாட்சி : வெளிப்படுத்துகையின் சமூகத் தேவை

அடிப்படைச் சமூகக் கட்டமைப்புக்களான குடும்பம், பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்களில் அதிகாரப் படிநிலைகளில் மேலுள்ளவர்களினால், உறவினர்களினால், ஆசிரியர்களினால் சிறுவர்களும் குழந்தைகளும் அன்றாடம் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகிய வண்ணம்தான் உள்ளார்கள். எம்மில் அதிகமானவர்கள் துஷ்பிரயோகம் சார்ந்த அனுபவங்களைக் கொண்டிருப்போம். எமது பெற்றோரது காலத்திலிருந்து எமது சிறுவர் பராயம் வரை இவ் அனுபவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இத் தொடர்ச்சி நிலைக்கு நாம் உருவாக்கியுள்ள சமூகக் கட்டமைப்பும், அது சார்ந்து நாம் கொண்டுள்ள புரிதல்களும் முக்கிய பங்குவகிக்கின்றன.

நம்மில் எத்தனை பேர் எமது துஷ்பிரயோகம்சார் அனுபவங்களைப் பற்றியும், அது எமது சிறுவர்பராயத்தில் மனதளவில் ஏற்படுத்திய பாதிப்புக்கள் பற்றியும் பொதுவெளிகளில் பேசியிருக்கின்றோம்? “இதைப் பற்றிப் பேசி இனி என்னவாகப் போகின்றது” எனும் எமது மனப்பாங்கே துஷ்பிரயோகம் செய்பவர்களுக்குத் தைரியத்தை வழங்குகின்றது. இவ் அலட்சியத் தன்மையினாலும், இத் துஷ்பிரயோகங்களின் தொடர்ச்சி நிலையினாலும் எமது எதிர்காலச் சந்ததியினரே அதிகளவில் பாதிக்கப்படப் போகின்றார்கள்.

சமகாலத்தில் மிக அரிதாக வெளிப்படுத்தப்படும் துஷ்பிரயோகச் சாட்சிகளும் பாதிக்கப்பட்டவர்களைக் குற்றஞ்சாட்டல் (Victim blaming) மூலம் சமூகக் கட்டமைப்புக்களால் ஒடுக்கப்படுகின்றன. “நீ எதிர்ப்புத் தெரிவிக்காததால் தானே அவர் அவ்வாறு செய்தார்” என ஒரு சிறுவரைப் பார்த்துக் கேட்டல் எவ்வளவு அபத்தம்! எமது சமூகத்தில் பாலியல் துஷ்பிரயோகங்கள் சார்ந்த அடிப்படைப் புரிந்துணர்வு நிலை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அவற்றைப் பற்றிப் பேசாதிருப்பதன் மூலம் அவ்வாறான விடயங்கள் நடப்பதைத் தடுக்க முடியும் என்பதனை நம்பவைத்துள்ளது நமது சமூகக் கட்டமைப்பு. இந்த ஒடுக்குமுறை குடும்பங்களிலிருந்தே ஆரம்பிக்கின்றது. பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டில் அக்கறைகாட்டும் பெற்றோர்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலீர்ப்பு சார்ந்த புரிந்துணர்வாக்கத்தில் அதிகளவில் கவனம் செலுத்துவதில்லை. சிறுவர்களிடம் இவைசார்ந்த உரையாடல்களை பெற்றோரைத் தவிர யாராலும் இலகுவாக ஆரம்பிக்க முடியாது. சிறுவர்கள் பெற்றோர்களிடம் காட்டும் வெளிப்படைத் தன்மையினை நாம் வேறு எவரிடமும் எதிர்பார்க்க முடியாது.

எனது அனுபவம் சார்ந்த துஷ்பிரயோக சாட்சி ஒன்றினை முன்வைக்கின்றேன். 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எனது பத்தாவது வயதில் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகிக்கொண்டிருந்தேன். பிள்ளைகளின் படிப்பில் அதிக அக்கறையுள்ளவர்கள் என்ற வகையில் எனது பெற்றோர் பாடசாலைக் கல்வி போதாது என்று தனியார் கல்வி நிலையம் ஒன்றில் என்னைச் சேர்த்துவிட்டார்கள். ‘வளர்மதி’ எனும் பெயர் கொண்ட அந்தக் கல்வி நிலையம் சாவகச்சேரியில் அமைந்திருந்தது. அன்று முதல் இன்றுவரை யாழ்ப்பாணத்தில் புலமைப்பரிசில் பரீட்சை வகுப்புக்களில் பிரபலமாக இருக்கின்ற ஆசிரியர் அன்பழகன் அவர்கள் அங்கு படிப்பித்துக்கொண்டிருந்தார். அடிக்கடி பரீட்சைகள் வைத்து 150 புள்ளிகளுக்கு மேல் பெறும் பிள்ளைகளுக்குப் பரிசில்களும், அதற்குக் கீழே புள்ளிகள் பெறும் பிள்ளைகளுக்குத் தண்டனைகளும் வழங்கப்படும். அவரது தண்டனை வழங்கும் முறைகளினாலேயே அவரையும், அக் கல்வி நிலையத்தையும் அந்தக் காலகட்டங்களில் அதிகளவில் வெறுத்தேன். எனினும் எனது பெற்றோரின் கட்டாயத்தின் பெயரில் தொடர்ந்து அங்கு செல்லவேண்டியதாயிருந்தது.

ஒருமுறை நடந்த பரீட்சையில் முதன்முறையாக நான் 150 இற்குக் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். அன்றைய தினம் பரீட்சை வினாத்தாளினைப் பெற்றுக்கொண்ட பின்னர், எப்படியும் இன்று அடிவாங்கியாக வேண்டும் என்று அறிந்து பதற்றமாக அமர்ந்திருந்தேன். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்ட பின்னர், நான் எதிர்பார்த்தது போல் எனக்கும் குறைய மதிப்பெண்கள் பெற்ற மற்றைய பிள்ளைகளுக்கும் அடிகள் விழுந்தன. முதன்முதலில் அங்கு அடிவாங்கிய நான் வலி மற்றும் கவலை தாங்கமுடியாமல் அழ ஆரம்பித்துவிட்டேன். வகுப்பு முடிவடையும் நேரத்தில் வீட்டை ஓடிச் சென்று அம்மாவைக் கட்டியணைத்து அழலாம் என்ற எண்ணத்துடன் அழுகையினை வலிந்து அடக்கிக் கொண்டேன். நான் அழுததைக் கவனித்த அன்பழகன் அவர்கள் வகுப்பு முடிவடைந்து வெளியேற எத்தனித்த என்னைப் போகவிடாது கைகளைப் பிடித்துக்கொண்டார். அனைத்து மாணவர்களும் வெளியேறிய பின்னர் தான் அடித்தது வலித்ததா என்றும், இனி அடிக்க மாட்டேன் என்றும் செல்லமாக விசாரிக்க ஆரம்பித்தார். விசாரித்துக் கொண்டிருக்கும் போதே மெதுவாக காற்சட்டையுடன் சேர்த்து எனது ஆண்குறியினைக் கசக்க ஆரம்பித்தார். அதற்கு முதல் எந்தவகையிலும் பாலியல் தொடுகையொன்றினை உணர்ந்திராத எனது உடல் நடுங்க ஆரம்பித்தது. பதற்றத்தில் வியர்த்து ஒழுகியது. ஓர் அசௌகரியமான மனநிலையில் நெளிந்துகொண்டிருந்த என்னைச் சிறிது நேரத்தில் விடுவித்துவிட்டார்.

எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அப்போது அவர் அடித்த அடியின் வலி முற்றாக மறக்கடிக்கப்பட்டிருந்தது. நான் தவறிழைத்து விட்டேன் என்பதைப் போல உணர்ந்தேன். இதைப்பற்றி அம்மாவிடம் சொல்லக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டேன். யாரிடமும் சொன்னால் என்னைப் பற்றித் தவறாக நினைப்பார்கள், ஏசுவார்கள் என்று நினைத்தேன். பதற்றத்துடன் அன்று வீடு நோக்கி ஓடிச்சென்ற என்னை எனக்கு இப்போதும் நினைவில் உள்ளது. வீடுபோய்ச் சேர்ந்து அழுதபோது, எனது அழுகைக்கான காரணம் என் புத்தகப்பையில் இருந்த மதிப்பெண்கள் குறைவாகப் இடப்பெற்ற அந்தப் பரீட்சை வினாத்தாளே என்று என்னிடம் எதுவுமே கேட்காமலே எனது அம்மா ஊகித்துக்கொண்டார். “அடுத்த தடவைகள் அதிக மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளலாம்” என்றார். ‘கட்டாயம் எடுத்தாக வேண்டும்; மறுபடியும் அடிவாங்கிச் சிக்கிக்கொள்ள முடியாது’ என்று யோசித்துக்கொண்டேன்.

பிறப்பிலேயே கேட்கும் திறன் குறைவாகக் கொண்ட நான் வகுப்பறைகளில் அதிகளவில் முன் ஆசனங்களிலேயே அமர்ந்துகொள்வேன். ஆனால் அச் சம்பவத்தின் பின் அன்பழகன் அவர்களின் வகுப்பறையில் முன் ஆசனங்களில் அமர்வதை வலிந்து தவிர்த்துக் கொண்டேன். அது அவரிடமிருந்து என்னைத் தூர வைத்துக்கொள்ளும் என்று பலமாக நம்பினேன்.

அந்தக் காலகட்டத்தில் அச் சம்பவம் எனக்கு வளர்ந்த ஆண்கள் மீதான பயத்தினை உருவாக்கியது. அனைவரது நெருங்குகையினையும், தொடுகைகளையும் சந்தேகிக்க ஆரம்பித்தேன். அவற்றிலிருந்து ஒருவகையான பதற்றத்துடன் விலகியே இருக்க எத்தனித்தேன். இவற்றையெல்லாம் வலிந்து மறக்கடிக்க எனக்கு அண்ணளவாக மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன.

இவைபோன்ற துஷ்பிரயோகங்கள் ஒரு பிள்ளையின் மனநிலையில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும்? இக் கேள்விக்கான பதிலினையும் துஷ்பிரயோகங்கள் சார்ந்த புரிந்துணரவினையும் சாட்சி வெளிப்படுத்துகைகளின் மூலமும், பாலியல் கல்விமுறைமையின் மூலமும் அடைய முடியும். இப் புரிந்துணர்வாக்கம் பிள்ளைகள் பெற்றோர்களிடம் வெளிப்படையாகப் பேசும் சந்தர்ப்பங்களினை உருவாக்கும். இச் சமூகத்தில் தொடர்ச்சியாக துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஓர் பயத்தினையும் உருவாக்கும்.

ஒரு சமூக செயற்பாட்டாளராய் என்னால் இச் சம்பவம் நடைபெற்று 15 வருடங்களின் பின்னரே அதனைப் பற்றி பேசக்கூடிய தைரியத்தைப் பெற முடிந்திருக்கின்றது. ஆனால் இவை போன்ற துஷ்பிரயோக சாட்சி வெளிப்படுத்துகைகள் எதிர்காலத்தில் பாதிக்கப்படுபவர்களின் குரல்களையும் எதிர்ப்புக்களையும் உடனடியாகவோ அல்லது விரைவாகவோ பதிவுசெய்யக்கூடிய வெளிகளை உருவாக்கும் என நம்புகின்றேன். இங்கு துஷ்பிரயோகம் செய்தவர்களைத் தண்டித்தல் என்பது முக்கிய நோக்கமல்ல. என்னைப் போல் 15 வருடங்களுக்குப் பின்னரோ அல்லது அதிகளவான கால இடைவெளிக்குப் பின்னரோ பாதிக்கப்பட்டவர்கள் தமது எதிர்ப்பினைப் பதிவுசெய்வார்கள் என்பதனை நாம் உறுதிப்படுத்துகின்றோம். அதுவே எமது வெற்றியும் சமூகத் தேவையும் ஆகும்.

அத்துடன் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் சமூகத்தில் தவறான புரிந்துணர்வுகளின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கின்றன. எம்மில் அதிகமானவர்களுக்கு தற்பாலீர்ப்பிற்கும் துஷ்பிரயோகங்களுக்குமான வேறுபாடு புரிவதில்லை. தனது பாலினத்தைச் சேர்ந்த நபர்கள் மீது பாலீர்ப்புக்கொள்ளும் நபர்களினை நாம் தற்பாலீர்ப்புள்ளோர் என அழைக்கின்றோம். அனைத்து சமூகங்களிலும் நல்லவர்களும் இருக்கின்றார்கள்; தவறான விடயங்கள் செய்பவர்களும் இருக்கின்றார்கள். அது தற்பாலீர்ப்புள்ளோர் சமூகமாயினும் சரி; எதிர்பாலீர்ப்புள்ளோர் சமூகமாயினும் சரி. இத் துஷ்பிரயோக சாட்சி வெளிப்படுத்துகைகள் எல்லா சமூகங்களிலும் துஷ்பிரயோகம் தவறு என்பதனையும், அவை சார்ந்த சமூகப் புரிந்துணர்வினையும் ஏற்படுத்துகின்றது.

16 வயதிற்கு மேற்பட்ட இரு ஆண்களோ அல்லது இரு பெண்களோ பாலீர்ப்புக்கொண்டு காதலித்தல் என்பது அன்பினை அடிப்படையாகக் கொண்டது. தற்பாலீர்ப்பு அடிப்படை மனித உரிமை என்பதுடன், தற்போது இலங்கையில் சட்டவிரோதமானதாகக் காணப்படுகின்றது. அதனைச் சட்டபூர்வமானதாக மாற்ற பல சமூக செயற்பாட்டு அமைப்புக்கள் போராடிக்கொண்டிருக்கின்றன. இந் நிலையில் இவைபோன்ற துஷ்பிரயோக சம்பவங்கள் சமூகத்தில் தற்பாலீர்ப்பு சார்ந்து ஓர் எதிர்மறையான புரிந்துணர்வினை உருவாக்குகின்றன. ஆகவே துஷ்பிரயோக சாட்சி வெளிப்படுத்துகைகளில் துஷ்பிரயோகம் மற்றும் தற்பாலீர்ப்பு சார்ந்து சரியான கருத்துக்கள் முன்வைக்கப்பட வேண்டும்.

ஆகவே துஷ்பிரயோகங்களற்ற சமாதானமான சமூகவெளி ஒன்றினை எமது எதிர்காலச் சந்ததிக்கு வழங்குவதற்காய் ஒன்றிணைவோம். எமது சமூகத்தில் பாலீர்ப்பு சார்ந்த சரியான புரிந்துணர்வினை உருவாக்குவோம். துஷ்பிரயோகங்களுக்கு எதிராகக் குரல்கொடுப்போம். துஷ்பிரயோக சாட்சி வெளிப்படுத்துகைக்கான சமூகத் தேவையினை உணர்வோம்.

கஸ்ரோ துரை

Related posts

அரசியல் கிரிக்கெட்

vithai

தொன்ம யாத்திரை- 2 குருவிக்காடு

vithai

காட்டுப்புலம் – ஓரு சமூக உரையாடல் – 1

vithai

நானும் கூட என்னும் பெண்ணியப் பகிர்வுக் குறியீட்டுச் செயற்பாட்டியக்கம் #MeToo

vithai

நீர் என்பதும் ஒரு உயிர் வார்த்தை -மோட்டார் சைக்கிள் குறிப்புகள் – 3

vithai

தொன்ம யாத்திரை – 2 குருவிக்காடு – முன்கள ஆய்வு

vithai

1 comment

Aba February 9, 2021 at 3:55 pm

My goodness.

Nanum anbalagan ta grade 5 tution ponanan. Enga amma ku ellam avar mela periya mathippu. Nan school la ovvoru naalum adi vangi depressed a irunthanam. Anga kondu pona piragu avar encourage pannathula than nan theliva exam eluthinan endu. Ippa itha kattina udanayum “ithu poyya irukkumo” endum konja neram yosichanga.

This is the problem we have in our society. I’m glad you came out with your experience. Kudos to you! I can only hope he gets the punishment he deserves.

Reply

Leave a Comment