vithaikulumam.com
கட்டுரைகள் கலந்துரையாடல்கள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி : 03

பாலியல் துன்புறுத்தல் என்டா பெரும்பாலும் எல்லாரும் பொம்பிளைப் பிள்ளைகளைப் பற்றித்தான் கதைக்கிறது. ஆனா ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் உண்மை. அதாலை வாற வடு காலத்துக்கும் நிலைச்சு நிக்கும் என்டு நம்புறன். அந்தப் பாதிப்பு உடன் விளைவுகளைக் காட்டாட்டியும் எதிர்காலத்திலை வளர்ந்து வரும் போது நிச்சயம் பாதிப்புகள் வெளிவரும் என்டு அனுபவம் மூலமாய் உணர்ந்து கொண்டன்.

எனக்கு நினைவு தெரிஞ்சு முதல் முதலாய் துஷ்பிரயோகம் செய்தது ஒரு சங்கக்கடை மனேஜர் தான். அப்ப வயசு பத்துக்கும் குறைவு தான். அம்மா சங்கக்கடைக்கு ஏதோ வாங்கச்சொல்லி அனுப்பி விட்டவா. நானும் போனான். அங்கை கன பேர் நின்டவை அந்த சங்கக்கடை மனேஜர் எல்லாரையும் விட்டுட்டு தான் எனக்கு சாமான் தந்தவர். அப்பிடியே கிட்டக்கூப்பிட்டு ரொபி ஒன்டு தந்து மடியிலை கூப்பிட்டு இருத்தி வச்சு ஆணுறுப்பை போட்டு கசக்கினவர். அப்பேக்கை என்னாலை அதை விளங்கிக்கொள்ள ஏலாமல் இருந்தது. சாதாரண ஒரு விசயமாய்தான் எடுத்துக்கொண்டன். அது பிழையான விசயம் என்டு கூட என்னாலை புரிஞ்சு கொள்ளுறதுக்கு வயசு இல்லை.

அதுக்குப் பிறகு ஸ்கொலர்சிப் படிக்க அன்பழகன் சேரிட்டை போய்ச்சேர்ந்தன். வகுப்பிலை எப்பவுமே முதலாவதாய்த்தான் வருவன். ஒவ்வொரு முறையும் பரீட்சை வச்சு முதல் பத்துக்குள்ளை வாற ஆக்களுக்கு காசு தருவார். நான் எப்பிடியும் கூடுதலாய் முதல் மூண்டுக்குள்ளை நிப்பன். அவர் அப்ப என்னைக்கூப்பிட்டு மடியிலை வச்சு அடிக்கடி ஆணுறுப்பை கசக்கினது நினைவிலை இருக்குது. அதோடை என்னை Jaffna Hindu Primaryலை வந்து சேரச்சொல்லிக் கேட்டவர். எங்கடை வீட்டை ஒத்துக்கொள்ளாததாலை நான் சேரேலை. அப்பேக்கை அவர் வச்சிருந்த Sony Ericson Phoneலை தன்னட்டை படிச்ச பொடியன் ஒருத்தன் தன்ரை வீட்டை அடிக்கடி வாறவன் என்டு ரெண்டு பேரும் படுத்திருந்த போட்டோ காட்டி, சேர்ந்து படுக்கிறனாங்கள் நீயும் வந்தா சேர்ந்து படுக்கலாம் என்டு சொன்னது இப்பவும் நினைவிலை இருக்குது.

இதையெல்லாம் வீட்டை சொல்லனும் என்டு கூட எனக்கு போதுமான அளவு அறிவில்லை. இந்த நடவடிக்கைகள் ஏதோ ஒரு விதத்திலை என்னயறியாமலேயே மனதிலை குழப்பத்தை ஏற்படுத்த தொடங்கிட்டுது. படிக்க ஏலாமல் சரியாய் கஷ்டப்பட்டன். எல்லாரையும் கண்டு பயப்பிடத் தொடங்கினன். முக்கியமாய் ஆம்பிளைகளை. கன ஆக்கள் நிக்கிற இடத்துக்கு போனா உடம்பு பயத்திலை நடுங்கத்தொடங்கும், வேர்க்கத் தொடங்கும், வீட்டை உள்ள சாமானுகளை உடைக்கத் தொடங்கினன். கத்தினன். ஏதோ தாங்க ஏலாத விரக்தி மனதிலை. அதற்கு பிறகு ஒரு மனோதத்துவ டொக்டராய்ப் பாத்தது. பிறகு ஒரு கிட்டத்தட்ட 4,5 மாதத்துக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு வந்து திரும்ப படிக்கத்தொடங்கினான். அதுக்கு பிறகு கொஞ்சமாய் மறக்கத் தொடங்கினான். பிறகும் அப்பிடி கனக்க சம்பவங்கள் நடக்கத் தொடங்கினது.

அப்பைக்கே ஏழாம் ஆண்டு படிச்சன் பக்கத்து வீட்டிலை ஒரு அண்ணா இருந்தவர் அவர் எங்கடை வீட்டிலை அம்மா, அப்பா வெளிய போனாப்பிறகு வந்து ஆணுறுப்பைப்பிடிச்சு கசக்கிறதும் ஆணுறுப்பை வாயிலை வைக்கிறதும் தன்னுடைய ஆணுறுப்பிலை கை வைக்கச்சொல்லி கட்டாயப்படுத்துறதுமாய் அடிக்கடி நடக்கத் தொடங்கினது. அப்ப கொஞ்சம் விசயம் விளங்கினாலும் வீட்டிலை சொல்லிறதுக்கு சரியான பயம். அதாலை அம்மா அப்பா வெளியை வெளிக்கிடும் போது நானும் எங்கையும் வெளிக்கிட்டுடுவன் இல்லாட்டி வீட்டுக்கை ஒளிஞ்சு சத்தம் போடாமல் இருப்பன். அதுக்கு பிறகு ரியூசன் போய் வாறனான். அப்ப ஒரு அண்ணா என்னோடை வந்து தன்ரை பாட்டிலை கதைக்கத் தொடங்கினார் எனக்குப் பின்னாலையே வருவார். என்னோடை வீடு மட்டும் வருவார், நடந்து வந்தா ஏத்திக்கொண்டு வருவார். ஒரு நாள் ஒரு சந்தியிலை நிப்பாட்டி வைச்சு செக்ஸ் படம் காட்டினார், காட்டிட்டு என்ரை ஆணுறுப்பை பிடிச்சு கசக்கினார், புதுவருச நாளுக்கு படுக்க வரச்சொல்லி கேட்டார் நான் முடிஞ்ச வரை தவிர்த்துக் கொண்டு வந்தன். ஒரு கட்டத்திலை தாங்க ஏலாமால் வீட்டை அப்பாட்டை சொல்லிட்டன். அப்பா போய் அந்த அண்ணாக்குப் பேசினாப்பிறகு அவர் வாறது இல்லை.

என்னைப் போலவே கன பொடியள் அந்த அண்ணாவாலை கஷ்டப்பட்டவை. இந்த விசயம் பள்ளிக்கூடத்திலை தெரிஞ்சிட்டு பள்ளிக்கூட வாத்தியார் என்னைக் கூட்டிக்கொண்டு போய் எனக்கு கவுன்சிலிங் பண்ணினார். எனக்கு விளங்கவே இல்லை “தப்பு செய்யது அந்த அண்ணா, ஆனா ஏன் என்னைப்பிடிச்சு எல்லாரும் அட்வைஸ் பண்ணினம் என்டு”. அதை விட பள்ளிக்கூடத்திலை சேர்மாரெல்லாம் நான் ஏதாவது வேலை ஒழுங்காய்ச் செய்யாட்டி என்னைப்பாத்து “அவனுக்கு குனிஞ்சு குடுக்கத் தெரியுது சொன்ன வேலைகள் தான் செய்ய ஏலாமல் இருக்குது” என்டு நக்கல் கதைக்க தொடங்கிட்டினம். வீட்டிலை தலையணிக்கை முகத்தை புதைச்சு வைச்சு அழுறதையும், கையிலை பிளேட்டாலை வெட்டுறதையும், அயர்ன் பொக்ஸாலை சூடு வைக்கிறதைத்தவிர எனக்கு வேற வழி தெரியலை. அதுக்குப்பிறகும் கனக்க நடந்தது ஆனா இப்பிடிப்பட்ட நக்கல் வார்த்தைகளாலை சொல்லுறதுக்கு தைரியம் வரலை. உறவு முறைப் பெரியப்பா, நெருங்கிய உறவினர் ஒரு ஆள், O/Lலை தமிழ் படிப்பிடிச்ச சேர் என்டு பாலியல் துன்புறுத்தல் ஏகப்பட்ட விதத்திலை அனுபவிக்கதொடங்கினான். போகப்போக மனதிலை விரக்தி கூடத்தொடங்கிட்டுது. படிக்க கஷ்டப்பட்டன். வீட்டுக்கு வெளிய வெளிக்கிட பயப்பிட்டன், ஆம்பிளைகளை கண்டா பயப்பிட்டன். ஆம்பிளைகள் தொட்டாலே கோபம் வரும். அப்பாவோடை கூட என்னாலை கதைக்க ஏலாமல் இருந்தது. அப்பா பாசத்திலை தொட்டாக்கூட வெறுப்பு வரத்தொடங்கிட்டுது.

மனோகரன் செல்லத்துரை

Related posts

அண்மைக்கால புலம்பெயர் நாவல்களின் பொதுப் போக்குகள் மற்றும் சில அவதானங்கள் –

vithai

காட்டுப்புலம் ஒரு சமூக உரையாடல்- 4

vithai

“மரபுரிமையைக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான்” – பா.அகிலன்

vithai

பெறுமதிமிக்க ‘Pride’ மாதம்

vithai

மோட்டார் – சைக்கிள் குறிப்புக்கள் -01

vithai

போராடுவது என்றால் என்ன?

vithai

Leave a Comment