அப்போ ஒன்பதாம் ஆண்டு படிக்கேக்க ஒரு நாள் நண்பன் வீட்ட போய்ட்டு வரும்போது கோயில் ஒண்டுல தண்ணி குடிக்க இறங்கினேன். குடிச்சிட்டு சைக்கிளை மிதிக்க போக ஒரு அண்ணா கையை பிடிச்சார். என்னை பற்றி விசாரிச்சு கொண்டு என்னை தொட தொடங்கினார். எனக்கு நடுங்க தொடங்கிட்டுது. பொய் பொய்யா சொன்னேன். அவரும் கேள்விக்கு மேல கேள்வி கேட்டு சைக்கிளோட என்னை பிடிச்சு வைச்சுருந்து ஆணுறுப்பை கசக்கினார். KKS வீதில வாகனம், ஆள் நடமாட்டம் அதிகமா இருந்த ஒரு பின்னேரத்துல தான் நடந்துச்சு. சனம் உதவி பண்ணுமெண்டு பார்த்தா யாரும் வரேல. சைக்கிளும் நானுமாய் ஒரு ஒழுங்கைக்குள்ள திருப்பி அவரை இழுத்துட்டு நடக்கிறேன். ஒரு 15 மீட்டர்க்கு இழுத்து சைக்கிள்ளை ஏறி போராடித்தான் அவரை கழட்டி விடமுடிஞ்சது. வீட்ட போனதும். அந்த உடுப்பை பல தடவை தோய்ச்சேன். அதே காற்சட்டை திரும்ப போட பயம், ஆனா வெளிய சொல்ல முடியாத சூழ்நிலைல ஒரு சில மாதங்கள் மனதுக்குள்ள போராடினேன். வீட்டுல சொன்னா என்னில தான் பிழை போடுவாங்க எண்டு தெரியும். வீட்ல ஏற்கனவே கண்டிப்பாங்க இதையும் சொல்லி அடிவாங்க விரும்பல. இதேவேளை ஒரு நாள் எங்கட வீட்டுக்காரர் வெளிய போச்சீனம். நான் போக மறுத்து தனிய இருந்தன். அப்பா வந்து பயமுறுத்தினார் “தனிய இருந்தா வீட்ட யாரும் வருவாங்கள். ஏதும் செஞ்சுட்டு வெட்டிப்போட்டுட்டு போய்டுவாங்கள்” எண்டு. அதுக்குபிறகு தினமும் தனிய இருக்குறபோதெல்லாம் கட்டிலுக்கு கீழ போய் வெளிய இருந்து ரெண்டு உடுப்பு பெட்டியாலை கட்டில் கீழ்ப்பக்கக்தை அடைச்சிட்டு உள்ளுக்கு பயந்தபடி இருப்பேன்.
O/L முடிச்ச லீவுல எனக்கு மனஉளைச்சல் அதிகமா இருந்துச்சு. 2 நெருங்கிய நண்பர்கள் என்னுடன் தனிய பேசும்போது “மனநோயாளி” னு என்னை அழைச்சாங்க. நண்பர்கள் என்னை “போக்கு”னு கூப்ட ஆரம்பிச்சாங்க. ஏதாவது பிரச்சனை எண்டா நான் அதிகதூரம் எங்கயாச்சும் போக ஆரம்பிச்சிருந்தேன். ஒருநாள் அதிக தொலைவுல உள்ள ஒரு கோயில்க்கு போய்ட்டு அங்க இருந்து திரும்பும் போது ஒரு வயதானவர் தன்னை 4km கழிச்சு வாற சந்தில இறக்கசொன்னார். சரினு ஏத்திட்டுபோனேன். அவர் அதே போல தொட தொடங்கினார். வீதியில சனமும் இல்லை. வேகமா மிதிச்சு போனேன். அவர்ட கையை தட்டி விட்டேன். தொடர்ந்து செய்தார். அதை பற்றி அவரிட்ட சொல்லவே பயமா இருந்துச்சு. இப்டியே இதுக்கு பிறகு என்னோட பயம் அதிகமாகி உடம்புல மறைவான இடங்கள்ல பிளேட்டால அறுத்துக்க ஆரம்பிச்சேன். இதுக்கு பிறகும் நான்கு தடவை இதே போல நடந்துச்சு. என்னில் தான் பிழைனு நம்ப ஆரம்பிச்சேன். அதோட மற்றவங்களுக்கு சொல்ல முடியாத இன்னொரு பிரச்சனை எனக்குதொடங்கிச்சு. எனக்கு பெண்கள் மீது ஈர்ப்பு இருந்ததில்லை. ஆண்கள் மேல அது இருப்பது போல தோணிச்சு. போகப்போக அது உறுதியாகிடுச்சு. நான் அந்த ‘ஆணுறுப்பை கசக்கிய நபர்கள்’ போல ஆகிடுவேனோ எண்டு பயம். அவங்க மேல வெறுப்பு கூடிச்சு. என்னை நானே துன்புறுத்தினேன். அப்ப A/L காலம் தானே வீட்ட ‘வகுப்பு’ எண்டு பொய் சொல்லிட்டு சாப்டாமலே வெளிக்கிடுவேன். நல்லா மெலிஞ்சு எலும்பும் தோலுமாகினேன். என்னை மாதிரி ஆட்கள் கெட்டவனாய் மாறாம இருக்க இதெல்லாம் தேவை எண்டு தோணிச்சு.
அதேவேளை என்னை பெண்ணை போல இருக்கிறாய், 9, அலி எண்டு எல்லாம் சிறுவயதுல இருந்து கிண்டல் பண்ணி இருக்காங்க. அதால தான் எனக்கு துஸ்பிரயோகம் நடக்குது எண்டு கருதினேன். என்னுடைய என்னென்ன செய்கைகளை வச்சு அப்டி சொன்னாங்களோ அதை எல்லாம் மாற்ற தொடங்கினேன். சைக்கிள் மிதிக்குறது, நடக்கிறது, மற்றவங்களோட கதைக்குறது எல்லாம் ரோபோ போல அசைவுகளை குறைச்சு இயங்க பழகினேன்.
A/L exam முடிய இந்த பிளேட் ஆல கீறுறது போன்றவிசயங்கள் அதிகமாகிச்சு, தெரிஞ்ச உளவியலாளரை வீட்டுக்குதெரியாம சந்திச்சேன். அப்ப தான் ‘gay’ சம்பந்தமான அறிவு உண்டாகிச்சு. “அது சாதாரணமான விசயம் தான், அப்டி இருக்கிறவங்க எல்லாரும் துஸ்பிரயோகம் பண்றவங்களாய் மாறமாட்டாங்க” எண்டு அந்த உளவியலாளர் கூறினார். பிறகு கம்பஸ். புகைவண்டில போகணும். புகைவண்டில ஒருத்தர் கிட்ட மாட்டிகிட்டேன். 10 மணிநேர பயணம். எதிர்த்து ஏதும் செய்யாமல் மௌனமாகிட்டேன். இன்றைக்கும் அதை பற்றி யோசிச்சால் குழம்பிய உணர்வுகள் தான் வருது. பிறகு ஒரு உளவியல் நிறுவனத்தின் உதவியை நாடினேன். கடந்த ஒருவருடம் என்னை காயப்படுத்துறதை குறைச்சுக்கொண்டேன்.
பிரகாஷ் ரமணன்
1 comment
This series is extremely important. Thank you for writing your experiences. Let’s encourage others to write more. It’s time we start discussing such taboo topics in the society and empathising with victims.