vithaikulumam.com
கட்டுரைகள் கலந்துரையாடல்கள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி 05

என்னை நானே பரிசோதனைக்கு எடுத்துக் கொள்கிறேன்

எனக்கு 12 வயதாக இருக்கும் போது குடும்பத்திற்கு புதிதாக சித்தப்பா எனும் முறையிலான ஒருவர் நுழைந்தார். அவர் எனக்கு இன்னொரு தகப்பன் ஸ்தானத்தை ஏற்க வேண்டியவர் எனும் வகையில் நினைத்திருந்தேன்.

எனக்கும் எனது சகோதரனுக்குமிடையில் ஏற்பட்ட ஒரு பேனைச் சண்டையில் சகோதரனது கையில் பேனை ஒன்றால் குத்திவிட்டு அப்பா அடிப்பார் எனும் பயத்தில் வெளியே ஓடிவந்து விட்டேன். இருட்டுக்குள் நான் வெளியே நிற்பதால் பாம்பு பூச்சிகடிக்கும் என்று அம்மா என்னை உள்ளே அழைத்து வரும் படி அந்த சித்தப்பாவினை அனுப்பியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். வெளியில் வந்த அந் நபரிடம் சகோதரன் செய்தது பிழை எனக் கூறிக்கொண்டிருந்தேன். தனது கன்னத்தில் முத்தமிட்டால் எனக்கு அடி விழுவதிலிருந்து காப்பாற்றுவதாகவும் இல்லை என்றால் காப்பாற்ற மாட்டேன் எனவும் கூறினார். கன்னத்தில் முத்தம் கொடுத்தால் மட்டுமே தப்பிக்க முடியும், அடி விழுவதிலிருந்து காப்பாற்ற முடியும் என அவர் நீண்ட நேரம் விளக்கமளித்துக் கொண்டிருந்தார். அது வரை எனக்கு இது மாதிரியான சூழல் ஏற்பட்டதில்லை. நான் சித்தப்பா தானே என்னைப் பிடிக்கும் எண்டு சொன்னனி தானே எனக் கூறிக் கொண்டிருந்தார். எனது சித்தியார் வழமையாக தன் மீதும் தன் கணவர் மீதும் எல்லோருக்கும் நன்மதிப்பு இருப்பதாகக் காட்டிக் கொள்வார் அதன் படி அவர் எல்லாக் குழந்தைகளையும் இந்தச் சித்தப்பா பிடிக்குமா அந்தச் சித்தப்பா பிடிக்குமா எனக் கேட்பார். உண்மையில் யாரைப் பிடிக்குமோ அவரைக் கூறமுடியாத நிலமை இருக்கும் ஏனெனில் அதை அடிக்கடி சுட்டிக்காட்டி மற்றப் பிள்ளைகளுடன் ஒப்பிட்டு ஓரங்கட்டுவார். அதனால் அனேகமாக அவருக்கு ஏற்றாற் போல் கூற வேண்டியிருந்தது. அது மட்டுமல்லாமல் வெளியில் அந் நபர் எல்லோருடனும் அன்பாகப் பழகுபவராகத் தான் எனக்கும் தெரிந்தார்.

இத் துஷ்பிரயோகத்தை எவ்வாறு நிகழ்ந்தது என விபரிக்கத்தொடங்கிய போது முகமெல்லாம் எரியத் தொடங்கி, தொண்டை அடைத்துக் கொண்டிருந்தது. இதற்கு மேல் என்ன செய்வது எனத் தெரியாது அழத்தொடங்கி விட்டேன். விரும்பினால் மட்டுமே இவற்றை எழுதும் படி கூறியிருந்த எனது துணைவர் எழுதவேண்டாம் என என்னைத் தேற்றத் தொடங்கினார். இத்தனை வருடமாகியும் இவை பற்றிய புரிதல்கள் எனக்கு வந்த பின்னர் கூட அதை மீள நினைக்கும் போது தவிர்க்க இயலாத அளவில் மனக்காயம் இருக்கிறது என்பதை சிறிது நேரத்தின் பின்னர் தான் உணரத்தொடங்கினேன். இது பெண் பிள்ளைகளின் ஆளுமையைப் பாதிக்கக் கூடியது, பெண்கள் இன்னுமொரு படி மேலே செல்வதற்கு இது தடையேற்படுத்தக்கூடியது. இப்போது எழுதுவதே தாமதம் தான்.
இதுவே கடைசி அழுகையாக இருக்கட்டும்.

*

குனிந்து தனது கன்னத்தைக் கொண்டு வர நானும் அவர் சித்தப்பா தான் என நினைத்து வேறு வழியில்லாது எனது கன்னத்தால் வேண்டா வெறுப்பாக முட்டி விட்டு வீட்டுக்குள் விரைவாக ஓடிவிட்டேன். அது ஒரு மோசமும் அருவருப்புமான தொடுகை. அவ்வேளை இதுக்கு மேல் நிற்பதை விட அப்பாவிடம் அடி வாங்கலாம் என நினைத்தேன். அன்று நான் பயந்தது போல் அடி விழவில்லை. ஆனால் இந்த சித்தப்பா எனக் கூறும் உறவினரின் இந்த நடத்தை மூலம் தான் நான் மன அழுத்தத்தால் குழப்பிப்போயிருந்தேன். நான் கன்னத்தால் முட்டியதை நினைத்து எனது கற்பு போய்விட்டது என்றெல்லாம் நினைத்தேன். பார்க்கும் சினிமாவும், கேட்கும் பாடல்களும், வாசிக்கும் கதைகளும், அற நூல்களும் என்னைக் குற்ற உணர்வுக்குள்ளாக்கியது. அது நான் குற்ற உணர்வு கொள்ளவேண்டிய விடயம் இல்லை என்பதை எனக்கு சமூகம் வழங்கவில்லை. அக்காலகட்டங்களில் எனக்கு யாருமே அதை விளங்க வைக்கவில்லை. தமிழ் சினிமாவில் வன்புணர்வுக் காட்சிக்குப் பின் அப்பெண் ‘கற்பிழந்தவள்’ எனக் கருதி தற்கொலை செய்வதைக் காட்டுவது போல் நானும் சாக வேண்டுமா என நினைப்பேன். ‘கற்பழித்தல்’ என்பது என்ன என்று கூட எனக்குத் தெரியாது, அது என்ன என்று எனக்கு இருபது வயதிற்குப் பின்னர் தான் தெரியவந்தது. அது பற்றி பிள்ளைகள் தெரிந்திருக்காதிருப்பது நல்ல பிள்ளை ஒன்றுக்கான பண்பாக இருந்தது. நானும் நல்ல பிள்ளையாகவே இருக்க விரும்பினேன். பாலுறவு என்பது என்ன என்று தெரியாத ஒரு பெண் பிள்ளை எப்படி ‘கற்பு’ என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.

இந்த இடத்தில் தான் பாலியல் கல்வி அவசியம் என இனங்கண்டு கொள்கிறேன். பாலியல் கல்வி என்பது என்ன நோக்கத்திற்கானது என்பதை விளங்கிக்கொள்ளாதவர்கள் தான் அனேகமானோர். அவர்கள் பாலியல் கல்வியை நிராகரிப்பர். அத்துடன் அதன் மூலம் தம்மால் அடக்குமுறைகளைப் புரியமுடியாது போகும் என்றாலும் நிராகரிக்கத்தான் செய்வார்கள். சமூகத்தில் சிறுவர்களுக்கு பாலியல் சார் துஷ்பிரயோகங்கள் ஒடுக்குதல்கள் எல்லாம் நிகழ்ந்த படி தான் இருக்கின்றன. ஆனால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு பாலியல் அறிவு கிடையாது. இவற்றை எவ்வாறு அணுகுவது, தவிர்ப்பது போன்ற கலந்துரையாடல் குடும்பத்திலும் சமூகத்திலும் நிகழவேண்டும், இதற்கு சமூகத்தில் ஏற்கனவே பிரபலமாக உள்ள, “பாதிக்கப்பட்டவரை குற்றம் செலுத்தும் போக்கினை” கைவிட வேண்டும்.

சமூகத்தில் கிடைத்த தகவல்களின் படி
எல்லாக் கதைகளுமே ‘கற்பு’ பெண்களுக்கு மட்டுமே உள்ளது என்று கூறுகின்றன. பாலியல் வன்முறையே நிகழ்ந்தாலும் அது அப்பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரமான ஒரு விபத்து, அதைப் புரிந்தவனுக்கே சகல தண்டனையையும் கொடுக்கவேண்டும், அதன் மூலம் அப்பெண்ணின் ஒழுக்கத்திலோ, கற்பிலோ, புனிதத்திலோ எந்தக் குறைபாடும் ஏற்படுவதில்லை எனும் புரிதல் துளியளவும் இல்லாத சமூகத்தில் தான் நான் வளர்ந்தேன். ‘கற்பு’ எனும் சொல்லை பெறுமதியான ஒரு சொல்லாக நான் கருதக் கூடாது என்கிறேன். காரணம் அதன் அர்த்தம் பக்கச்சார்பானது. கற்பு பற்றி எல்லோரும் அறிந்த சாதாரண உதாரணம் ஒன்று கோவலன் கண்ணகியை விட்டு மாதவியுடன் வாழ்ந்த போது கண்ணகி கணவனையே( கோவலன்) நினைத்து வாழவேண்டும், பின்னர் கோவலன் மாதவியை விட்டு மீண்டும் கண்ணகியிடம் வந்த போது கண்ணகி ஏற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த கட்டம் மாதவி கோவலனை நினைத்து வாழவேண்டும். இப்படிப் பெண்கள் இருந்தால் அவர்கள் கற்புடை மகளிர். இது ஒரு சமத்துவமான அறமா? இது தான் தமிழரின் அறமா? இதில் கண்ணகியா மாதவியா சிறந்த கற்புடைய பெண் என பாடசாலை தொடங்கி சமூக மட்டங்களில் பட்டிமன்றங்கள் எல்லாம் அடிமுட்டாள்த்தனமாக வைப்பார்கள். தமிழ்ப் பண்பாடு என இவற்றைக் காவிக்கொண்டு திரிவதுடன் சமூகத்தில் பெருங்கதையாடலாக( பெரும்பான்மையினரிடமுள்ள/ஆதிக்கமுள்ள கதைகள்) இவை இருப்பதால் எல்லா மக்களிடமும் இக் கதையாடல்கள் இலகுவாக அனைத்து ஊடகங்களுடாகவும் சென்றடைகின்றன. கலை வடிவங்கள், தொலைக்காட்சி, விளம்பரங்கள், கோயில்,மதம், சடங்குகள், நிகழ்வுகள், கல்வி நிறுவனங்கள் போன்ற ஊடகங்களைக் கூறலாம். இந்தக் கருத்தாடல் மீண்டும் மீண்டும் இவ் ஊடகங்களாலும் எமது அன்றாட சாதாரண உரையாடல்களூடாகவும் கூட பயிற்சி செய்யப்பட்டு வருகிறது.

*

அந்நபர் வெற்றிலை பாக்குடன் புகையிலை போட்டிருந்ததால் தலை சுற்றுவதாகக் கூறிக்கொண்டிருந்தார். புகையிலை, மதுபானம் எல்லாம் போதைப் பொருட்கள் அவற்றைப் பயன்படுத்துவது பெருங்குற்றமாக எனக்குப் போதிக்கப்பட்டமையால் அவற்றைப் பயன்படுத்தியதால் தான் அவர் அவ்வாறு நடந்திருக்கிறார் என நினைத்து அவரை மன்னிக்கலாம் எனும் முடிவிற்கு வந்தேன். ஏனெனில் அதுவரை நான் அறிந்து பெரியோர்கள் எப்போதும் சிறுவர்களை மன்னித்ததில்லை. தண்டனை தான் வழங்குவார்கள். அதனால் சிறுவர்கள் தான் மன்னிக்க வேண்டும் என்பது எனது நிர்ப்பந்தம்.

ஆதரவாக எந்தப் பெரியோரையும் நான் பார்த்ததில்லை. சிறுபிள்ளைகளுக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுப்பதிலேயே அவர்களது முழுக்கவனமும் இருக்கும். சில பெரியோர்கள் சிறுவர்களுடன் அன்பாக இருந்திருக்கிறார்கள் ஆனால் ஆதிக்கம் காட்டும் பெரியோர்களோ இவர்களை மதிப்பதில்லை. இவர்கள் அதிகாரமற்றவர்களாக இருந்தமையால் இவர்களை அணுகுவதில் நம்பிக்கைத்தன்மை குறைவாக இருந்தது.

எல்லோருடனும் நன்றாகப்பேசக்கூடியவர்,
குடிப்பழக்கமற்றவர் என அந்நபர் மீது எங்கள் குடும்பத்தினர் அனைவருக்குமே நன்மதிப்பும் உண்டு.
குறித்த நபர் எல்லோரும் இருக்கையில் என்னுடன் சாதாரணமாகத்தான் நடந்து கொள்வார். இந்த விடயத்தை விளங்கிக் கொள்ளவே எனக்கு சில காலம் எடுத்தது. யாரும் இல்லாத நேரத்தில் தான் அசெளகரியப்படும் படி முதுகைத் தடவுவார். இந்நபர் முதுகைத் தடவுகிறார் என நான் யாருக்கு கூறினாலும் நான் கூறுவதைக் கண்டித்து அது பாசம் எனக்கூறி ஏளனம் தான் செய்வார்கள் என்பது எனக்கு நன்றாக அந்த வயதிலேயே தெரியும். இவற்றை அவ் வயதில் எப்படி எதிர்கொள்வது என்பது தான் பெரும் குழப்பமாகவும் மன வருத்தமாகவும் இருக்கும். யாருக்கும் சொல்லி அழமுடியாத அழுத்தமாக அது எனக்குள் இருக்கும். கூட்டமாக இருக்கும் போது அருகில் செல்வதற்குப் பயமிருக்காது ஆனால் சிறிய நேர அளவில் கூட தனியே அந் நபருடன் இருப்பதைத் தவிர்ப்பேன். இதுபற்றி அதுவரை வெளியில் நான் சொல்லவில்லை இனிமேலாவது இவற்றைத் தவிர்த்தால் மன்னித்துவிடத் தயாராகத் தான் இருந்தேன். அந் நபர் ஒரு நாள் திருந்துவார் என நானும் என்னை சமாதானப்படுத்தியிருந்தேன். கூட்டமாக இருக்கும் போது அந் நபர் திருந்திவிட்டாரா என்பதை என்னால் உணரமுடியவில்லை. அந்நபருக்கு அருகில் இருக்கும் தருணங்களை என்னால் முடிந்த அளவில் தவிர்த்து வந்தேன். பின்னர் சில வருடங்களின் பின் குறித்த நபர் கிடைத்த இடைவெளியில் ஆட்களுக்குள் நின்ற என்னை ஏதோ வேலை கூறுவது போல் அழைத்து தனது போனிலுள்ள படத்தைக் காண்பித்து நடிகையின் நிர்வாணப்படம் எனக் கூறினார். நான் நன்றாகவே வளர்ந்துவிட்டேன் என்பது அப்போது எனக்குப்பட்டது. “போ விசர் நாயே” எண்டு முகத்துக்கு நேரே பேசி விட்டு வெளிக்கிட்டு உடன வீட்ட வந்துவிட்டேன். என்னால் அன்று கூறமுடிந்தது அவ்வளவு தான். அது போதாது தான். ஆனால் அவ்வளவு தைரியம் எனக்கு 16,17 வயதில் தான் வந்தது. அது வரை காலமும் என்னுடைய எதிர்ப்பு வடிவம் முறாய்த்துப் பார்ப்பது மட்டும் தான்.

தமிழ் பெண்ணிற்குரியவை எனக் கூறும் எல்லாப் பண்பாட்டு ஒழுக்கங்களையும் நான் கடைப்பிடித்துக் கொண்டு தான் இருந்தேன். ( அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு) இது எதனாலும் அந்த அச்சத்திலிருந்து என்னைக் காப்பாற்ற முடியவில்லை.
கண்ணகி போல் முறாய்த்து பார்வையால் எரிக்க முடியாது என்பது எனக்கு சிறுவயதில் விளங்கவில்லை. ஆண்களுக்கு மட்டுமே நன்மை தரக் கூடிய இந்தக்கதைகளை பண்பாடு என எனக்குப் போதித்து என் வாயை அடைத்துவிட்டார்கள். இதைப் போதிக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பண்பாட்டுக்காவலர்களுக்கு பண்பாட்டை எவ்வாறு அணுகுவது என்பது கூடத் தெரியாது. அனேகம் சினிமாவைப் பார்த்து தான் அவற்றை உள்வாங்குகிறார்கள். இவர்களது கையில் எத்தனை குழந்தைகள் வன்முறைக்கு உள்ளாகின்றன. அவற்றைப் பண்பாடு எனும் பெயரில் நியாயப்படுத்துகிறார்கள். சங்க இலக்கியங்களையும் பின் வந்த இலக்கியங்களையும் பண்பாட்டினைக் கட்டமைப்பதற்கான கருவியாக எடுக்கும் போது அவற்றிலிருந்து தெரிவு செய்தவற்றைத் தான் எடுத்துள்ளார்கள். எனவே எல்லோரையும் சமத்துவமாக அணுகும் விழுமியங்களை பண்பாடு என தெரிவு செய்வதை பண்பாட்டு ஆர்வலர்கள் இனி கவனம் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

இது ஒரே ஒரு நபர் பற்றிய மிகச்சுருக்கமான கதை தான். இன்னும் இருக்கின்றன. இந்தக் கதைகளை நான் சிலரிடம் கூறியிருக்கிறேன். அவர்களில் பலர் தமக்கும் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் நிகழ்ந்ததாகக் கூறியுள்ளனர். பலருக்கு நிகழ்வதால் இதை சாதாரணமாக கடந்து போகும் போக்கே இங்கு நிகழ்கிறது. ஆனால் குழந்தையாக அதை எதிர்கொள்ளல் என்பதும் இன்று வளர்ந்தவர்களாக இவற்றை எதிர்கொள்வதும் ஒன்றல்ல. இதை ஒரு துஷ்பிரயோகம் என்பதை உறவினர்களில் சிலர் ஏற்றுக்கொண்டதாக நான் உணரவில்லை, அவ்விடத்தில் அவர்கள் மௌனமாக இருந்தார்கள். இந்த மௌனம் வன்முறையை ஆதரிப்பதற்கு துணை போகும் மௌனம். அதற்கு இன்னும் பல காரணங்கள் உண்டு. “சின்னப்பிள்ளயளின்ர பிரச்சனையை பெரியாட்கள் பெரிசு படுத்தக்கூடாது”. இந்த வசனத்தின் தீவிரம் தான் இந்த மௌனத்துக்கான ஒரு காரணம். சொந்தம் விட்டுப் போயிடும் இதுகளைப் பெரிசு படுத்தக்கூடாது என அதை மூடி மறைத்து துஷ்பிரயோகம் செய்தவருடன் வழமை போல் பழகுபவர்களும் உண்டு. இது அவர்களது இயலாமையின் வெளிப்பாடு. உண்மையில் சிறுவர்களை தமது ஆதிக்கத்தின் மூலம் கையாளும் சமூகம், குடும்பம், பாடசாலை போன்றவை அவர்களது பிரச்சினைகளை மட்டும் அலட்சியம் செய்வதற்குக் காரணம் சுயநலமாகத் தான் இருக்க முடியும். அதில் தமது நலன்களைத் தான் ஆதிக்கமுள்ள ஒவ்வொரு நபரும் கருத்திலெடுப்பர்.

அடுத்தது “இதை வெளியில் சொல்வதால் பாதிக்கப்பட்ட பிள்ளைக்குத்தான் மீள மீள
அவதூறு”எனக் கூறுவர். இந்த துஷ்பிரயோகத்தால் எனக்கு அவதூறு என நான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். எனக்கு இது அவமானமும் அல்ல. துஷ்பிரயோகம் செய்து விட்டு இதுவரை காலமும் கனவானாக வாழும் அந்நபருக்கு அவமானம் எனக் கூறிக்கொள்ளுங்கள்.
அடுத்து “வெளியே கூறுவதால் குடும்ப மானம் போய்விடும்” எனக் கூறுவோற்கு_ சிறுவர்களை மதித்து அவர்களுடன் சமமாக உரையாடத்தெரியாத, சிறுவர்களுக்குப் போதிப்பதை தாமே கடைப்பிடிக்கத்தெரியாத, சிறுவர்களிற்கு நிகழும் துஷ்பிரயோகங்களை மூடி மறைப்பவர்களுக்கு ஏற்கனவே மானம் என்பது இல்லை என்றே கருதிக்கொள்ளுங்கள். இவ்வகை கௌரவம் பார்க்கும் நபர்கள் தான் எம்மிடையே அதிகம் பேர்.

இதை வெளியில் கூறியது ஒரு கலாசார சீர்கேடு, குடும்பமானத்தை அழித்தல் எனக் கூறிக்கொண்டு வருவார்கள். ஒரு கட்டத்தில் தமது இயலாமையில் எனது நடத்தைகள் பிழை எனக் கூறவும் செய்வார்கள். ஏனெனில் இவ்வாறான உண்மைகளைப் பெண்கள் வெளிப்படுத்தும் போது இது போல் தான் செய்வார்கள். யார் எல்லாம் இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பார்கள் எனக் கேட்டால் இந்த வன்முறைகளை செய்துகொண்டிருப்பவர்கள், பண்பாட்டுப் புரிதலற்றவர்கள், சமத்துவத்தைக் கடைப்பிடிக்காதவர்கள் ஏற்றுக்கொள்ளாதவர்கள், வன்முறைகளுக்கு முகவர்களாக இருப்பவர்கள், மானம் என்றால் என்ன எனத் தெரியாதவர்கள்.

  • பிரிந்தா

Related posts

வாசிப்பும் அறிதலும் – அஞ்சலியும் பிரசுர வெளியீடும்

vithai

நாங்களும் இருக்கிறம் – ஆவணப்பட வெளியீடு

vithai

“மரபுரிமையைக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான்” – பா.அகிலன்

vithai

பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏன் வெற்றி பெற வேண்டும்?

vithai

நீர் என்பதும் ஒரு உயிர் வார்த்தை -மோட்டார் சைக்கிள் குறிப்புகள் – 3

vithai

பெறுமதிமிக்க ‘Pride’ மாதம்

vithai

Leave a Comment