vithaikulumam.com
கட்டுரைகள் கலந்துரையாடல்கள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி 06

பொதுப்பிரச்சனைகள் தாண்டி பெரும்பாலான குடும்ப அமைப்புக்களில் சமூகத்தால் குழந்தைகளுக்கு இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள், வன்முறைகளை வெளியே கடத்தாமலிருப்பதன் முக்கிய காரணம் வெளியே தெரிந்தால் சமூகம் என்ன சொல்லும்?, கௌரவம் என்னாகிவிடும்? வளர்ப்பு பற்றி கேள்வி கேட்கப்படுமே என்பது தான். பரீட்சையையும் பெறுபேறுகளையும் நோக்கமாகக் கொண்ட தற்போதைய கல்வி முறைமையில் கற்றலில் இருக்கின்ற அழுத்தங்களைத் தாண்டி உடல்ரீதியாக, மனரீதியாக பாதிக்கப்படுகின்ற குழந்தைகளை தொடர்ச்சியாக மனச்சிக்கலுக்குள்ளாக்கும் வழிகளும் இவ்வாறான கட்டுப்பாடெனச் சொல்லிக்கொள்கின்ற சமூகவாதிகளால் ஏதோவொரு தருணத்தில் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது.

துஷ்பிரயோகங்கள் ஒவ்வொரு வடிவங்களாக, வெவ்வேறு தளங்களில் சாதாரண விடயமாக கடந்திடும் தன்மையாகவும், அதை உணர்கின்ற போதும் இது தவறான விடையமா என ஊகிக்க முடியாததுமான வயதுகளில் உறவினர், தெரிந்தவர், ஆசிரியர்களால் துஷ்பிரயோகிக்கப்பட்டிருப்போம்.

இது தவறான பாலியல்த் தொடுகை என வகைப்படுத்தி அறிய முடியாத வயதில் இடம்பெற்ற சம்பவங்களை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இவை உடல்ரீதியாக இடம்பெற்ற துஷ்பிரயோகங்கள். இவை தவிர மனரீதியாக பாதிக்கப்பட்ட விடையங்களுமுள்ளன. இவ் உண்மைச்சம்பவங்களை வெளிப்படுத்துவதற்கான நோக்கம் இவ்வாறான வடிவங்களில் நமது பிள்ளைகளுக்கும் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றிருக்க, இடம்பெற வாய்ப்புண்டு. அவற்றை இயல்பாக பரஸ்பரம் வெளிப்படுத்துவதன் மூலம் தொடர்ச்சியாக இச்சம்பவங்கள் இடம்பெறாமலிருப்பதற்கும், பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச்செல்லக் கூடாதென்பதற்காகவுமாகும்.

”தவறான பாலியல்த்தொடுகை” எண்டு இப்ப என்னால உணரக்கூடியதா இருந்த, என்னைப் பாதிச்ச இப்பவும் அந்த சம்பவங்களை, சம்பவ இடங்களை, அவையள எதிரில காணேக்குள்ள தொற்றிக்கொள்ளுற ஒருவிதமான பதட்டம், இயல்பாய் இருக்க முடியாம, வெறுப்பு மாதிரியான மனநிலையை உருவாக்கிற சம்பவங்களை இஞ்ச சொல்லுறன்.

2003, 2004 காலப்பகுதியில வயது 8,9 இருக்கும். அம்மப்பாவோடு கன்டர் வாகனத்தில் டிரைவராக இருந்த ஒரு அண்ணா வாறவர். ‘நல்ல குண்டம்மா, வடிவான பிள்ளை’ என்று கன்னத்தைக் கிள்ளுவார். எனக்கு நிறைய புழுகா இருக்கும். எப்ப எண்டாலும் வீட்ட வரேக்குள்ள தூக்கிக் கொண்டு திரிவார். ஒரு நாள் இரவு வாகனத்தில இருத்தி கொஞ்சத்தூரம் ஓடிக் காட்டிற்று வீட்ட தூக்கிக்கொண்டு வரேக்குள்ள தன்ர இடுப்புக்குக் கீழ என்ர உடம்பை இறுக்கி அழுத்திக் கொண்டு தன்னோட அணைச்சுக்கொண்டு வந்தார். அவர் அப்பிடி செய்தது முதல் தூக்கி வைச்சிருக்கேக்கையும் கொஞ்சேக்குள்ளையும் இருந்ததை விட வித்தியாசமா, சினமா இருந்தது. இப்பவும் அவர் அப்பிடி செய்த இடம் தாண்டி போகேக்குள்ள அப்பேக்குள்ள இருந்த இருட்டும், அவர் அப்பிடிச் செய்த ஞாபகமும் ஒவ்வொரு முறையும் வரும். ஒரு மாதிரி இருக்கும். அவரால பிறகு ஏதும் நடந்திருக்குமோ, அவர் யார் எண்டு ஞாபகமும் இல்லை. ஆனால் அவர் அப்பிடிச் செய்தது பிடிக்கேல்லை.

இதேமாதிரி அந்த வயசு மட்டில தான் நடந்திருக்கும் எண்டு நினைக்கிறன். எங்கட சொந்தக்கார அண்ணா ஒராள், என்னை எண்டா அவருக்கு நல்ல விருப்பம் எண்டு சொல்லுவார். செல்லம் காட்டுவார். அவை கரவெட்டித்திடல்ல ( வன்னி) இருந்தவை. நாங்கள் 2002 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து குடத்தனைக்கு வந்த பிறகு ஒருநாள் வந்து தங்கினவர். எல்லாரோடையும் கதைச்சுக்கொண்டு இருக்கேக்க நான் மடியில இருந்தனான். அப்பிடியே நித்திரையாகிட்டன். சாமத்தில திடுக்கிட்டு முழிக்கேக்குள்ள அவர் ஆணுறுப்பை என்ர கையால பிடிக்க வைச்சு தன்ர கையால அமத்திக்கொண்டு இருந்தவர். என்னை அப்பிடிச் செய்யச் சொல்லி அரியண்டப்படுத்திக் கொண்டு இருந்தவர். எனக்கு எங்க படுத்திருக்கிறன், யார் பக்கத்தில இருக்கிறன் எண்டு அவரின்ர குரல்ல தான் விளங்கினது. எனக்கு நித்திரை கொள்ளோணும் போலயே இருந்தது. நான் கைய எடுக்க எடுக்க திருப்ப திருப்ப அப்பிடியே செய்து கொண்டு இருந்தவர். சிணுங்கி சிணுங்கி அம்மாவ கூப்பிட்டு, பிறகு ஒருமாதிரி வெளியில போயிருக்கிறன். எப்பிடி எண்டு ஞாபகத்தில இல்ல. போய் விடியும் மட்டும் மாமரத்துக்குக் கீழ தனிய படுத்திருந்தனான். பயமா இருந்தது. போர்வை ஒண்டும் இல்லை. சரியா குளிர்ந்தது. இறுக்கிக் கண்ணை மூடிக்கொண்டு அப்பிடியே நித்திரையாகிட்டன். விடிய அம்மம்மா பேசினவா. உள்ள படுத்திருக்கலாம் எப்ப குளிருக்குள்ள வெளியில வந்து படுத்த எண்டு. ஒருதருக்கும் ஒண்டும் சொல்லேல்ல. என்னை பேசுவினம் எண்டு பயமா இருந்தது. 15 வருசத்துக்கு பிறகு அவரை காணேக்குள்ள பயமாவும், பதட்டமாவும் இயல்பா இருக்கவும் ஏலாம இருந்த. நிறையக் காலத்துக்குப் பிறகு கண்டதால என்ர சின்ன சின்ன வயசுக் கதைகள் எல்லாம் சொல்லி எல்லாரும் சிரிச்சு சந்தோசப்பட எனக்கு கோவம் மட்டும் தான் வந்தது. அந்த விளையாட்டு, குறும்புகளை கேட்டு சந்தோசப்பட ஏலாம எரிச்சலா இருந்தது. பழைய நினைவுகள் எப்பவுமே சந்தோஷத்தை தாறதும் இல்ல. பதட்டத்தையும் பயத்தையும் கூட தரும்.

அடுத்த சம்பவம், சுனாமிக்குப் பிறகு வீடுகள் எல்லாம் அழிஞ்சதால அந்த ஊரில இருந்த எல்லாரையும் தங்க வைக்குறதுக்கான இடைத்தங்கல் முகாம் எங்கடை ஊரில், எங்கட வீட்டுக்குப் பக்கத்தில இருந்தது. அப்பேக்க எங்கட வீட்டில சின்ன கொத்துரட்டிக்கடை ஒண்டு செய்தனாங்கள். எனக்கு 10,11 வயசு. கொத்து வித்து வாற காசெல்லாம் என்னட்டை அப்பா தருவார். தாற காசு, வாங்குற காசு எல்லாம் எழுதி வைப்பன். பெரிய ஆளெண்ட நினைப்பில சரி பிழை பாத்துக்கொண்டு திரிவன். பக்கத்தில இருந்த இடைத்தங்கல் முகாமில இருந்த 30, 35 வயது அண்ணா ஒராள். மாமா எண்டு சொல்லுறனான். அடிக்கடி கொத்துரட்டி வாங்க கடைக்கு வாறவர். அப்பாவோடயும் நல்ல மாதிரி. ஒருநாள் என்னை மடில தூக்கி வைச்சு தன்ர ஆணுறுப்பால குத்தினவர். எழும்பிப் போக வெளிக்கிட வெளிக்கிட இறுக்கிப்பிடிச்சு மடியிலயே வைச்சிருந்து அப்பிடியே திருப்பத்திருப்பச் செய்து கொண்டு இருந்தவர். அந்தரமா இருந்தது. பிறகு அவரைக் கண்டா ஓடிடுவன். பக்கத்தில போகமாட்டன். ‘மாமா கூப்பிட ஏன் போகாயாம். நல்ல பழக்கம். பெரியாக்களுக்கு மரியாதை குடுக்கிறேல்ல. எண்டு சொல்லுவினம். நான் ஏதோ மாதிரி பக்கத்திலையே போகாம ஓடி ஒழிச்சிடுவன். சில வேளை எனக்கு தெரியாம பின்னால ஓடி வந்து தூக்கி இறுக்கி நசிச்சு கொஞ்சுவார். அவற்றை எச்சில் பிரளும். அரியண்டமா இருக்கும். வளந்த பிறகு அவரைக் கண்டா தெரியாத மாதிரி, கவனிக்காத மாதிரி போய்டுவன். இப்ப அவர் இஞ்ச இல்ல.

இந்த சம்பவங்கள் எல்லாம் ஒரு தடவை நடந்ததா தான் ஞாபகம் இருக்கு. முதல்தரம் எண்டதால ஆக பயந்திருப்பனோ தெரியா.

மற்றதும் அதே வயது இருக்கேக்குள்ள எண்டு நினைக்கிறன். பத்து, பதினொரு வயதிருக்கும். எங்கட வீட்டுக்குப் பக்கத்தில ஒரு மரக்கோயில். அண்டைக்கு வெள்ளிக்கிழமை. பூசை நடக்கிறதுக்கான ஆயத்தம் நடந்துகொண்டு இருந்தது. அந்த ஏற்பாடு எல்லாம் முடிய நிறைய நேரம் ஆகுமெண்டு சொன்னவை. அங்க அப்பாவோட அடிக்கடி வீட்டுக்கு வாற சித்தப்பா முறை அண்ணா ‘பூசைக்கு நிறைய நேரம் இருக்கு தானே, வாவன், எங்கட வீட்ட போய் கொஞ்ச நேரம் இருந்திட்டு வருவம்’ என்று கூட்டிக்கொண்டு போனார். அவர்ட வீட்டுக்காரர் எல்லாம் கோயில்ல இருந்தவை. அவருக்கு அப்பேக்குள்ள 24,25 வயதிருக்கும். என்னை கூட்டிக்கொண்டு போனவர். நான் வீட்டு அறைக்குள்ள வாசல்ப்பக்கமா இருந்தனான். அவர் வாசலில் இருந்து வெளிய பாத்துக் கொண்டு தன்ர ஆணுறுப்பை என்னை பிடிக்கச்சொல்லித் தந்தவர். அப்பேக்க நான் கத்திரிக்கோலால பேப்பர் வெட்டி விளையாடிக் கொண்டு இருந்தனான். ஒரு கையால வெட்டி விளையாட கஸ்ரமா இருந்தது. அவர் செய்யச் சொன்னதை செய்யவும் பிடிக்கேல்ல. அண்டைக்கு தான் வெளிச்சத்தில முதல் தடவை பாத்தனான். பயமாவும், சத்தி வாற மாதிரியும், வேர்த்துக்கொண்டும் வந்தது. எப்ப கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போவார் எண்டு இருந்தது.

பிறகு வீட்ட வரேக்க அண்டைக்கு செய்தது எப்பிடி இருந்து? ஆக்களில்லாத நேரம் சொல்லுறன். அங்க போய் அப்பிடி விளையாட்டு விளையாடுவம் நல்லா இருக்கும் எண்டு சொன்னவர். வாற நேரமெல்லாம் என்ர பின்பக்கமா கைய விட்டு தடவுவார். பக்கத்தில வந்து படுத்திருந்து கதை கேட்டு அரியண்டப்படுத்திக் கொண்டு இருப்பார். பிறகு வீட்டுக்காறரோட ஏதோ சண்டை பிடிச்சதால வீட்டுப்பக்கம் வாறேல்ல. என்னை கதை கேட்டா அப்பா பேசுவார் கதைக்க மாட்டன் எண்டு சொல்லீட்டு ஓடிடுவன்.

இதோட சம்மந்தப்பட்டவையால பிறகு நடந்திச்சோ, இல்ல அது மட்டும் தானோ நினைவில இல்ல. பிறகு யாரும் கொஞ்சினா, தூக்கி வைச்சிருந்தா எனக்கு பயம். சின்னனில நல்ல வாயாடி, ஏதாவது கதைச்சு விளையாடி, துறு துறு எண்டு இருப்பன் எண்டு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கன். இந்த சம்பவங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமா தனிய இருக்க தொடங்கீட்டன். என்ர பாட்டில இருந்து விளையாடுவன். நிறைய கதைக்க மாட்டன். யாரும் தெரிஞ்சாக்கள் வீட்ட வரேக்க கதைகேட்டு பதில் செல்லாம இருந்தா, கூப்பிட்டு பக்கத்தில போகாம இருந்தா அம்மாக்கள் பேசுவினம். ஏன் உம்மெண்டு நீட்டிக் கொண்டு இருக்கிறாய் எண்டு. ஆக்களுக்கு மரியாத குடுத்துப் பழகு எண்டு. நல்லா கத்திப் பேசோணும் போல இருக்கும். ஆக தாங்கேலாட்டி அழுதிடுவன். போக மாட்டன்.

இந்த தனிமையும், அமைதியும் இயல்பாவே இருக்கத் தொடங்கீட்டு. இந்த விசயங்களால இப்ப யாரும் சின்னாக்கள் யாரிட்டையும் போக பயப்பிட்டாலோ, விருப்பமில்லாம இருந்தாலோ கொஞ்சம் கவனமா கவனிச்சுப் பாப்பன். எனக்கு இப்படியான துஷ்பிரயோகம் செய்த ஒராள் பக்கத்தில தான் இருக்கிறார். அவை வீட்டுக்கு எனக்குத்தெரிஞ்ச பிள்ளையளை அவர் கூடாது எண்டு சொல்லி போக விடுறேல்ல. நடந்த விசயம் தைரியமா சொல்லேலாம இருந்த. பாதிக்கப்பட்ட என்னை கூடாம நினைச்சிடுவினம் எண்டு. எந்த வழிமுறைல இதை கையாளுற எண்டும் அந்த சந்தர்ப்பத்தில தெரியேல்ல.

ஏதோவொரு வடிவத்தில் இவ்வாறான துஷ்பிரயோகங்கள், எதிர்ப்பாலினத்தவர் மீதோ, தன்பாலினத்தவர் மீதோ இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. எனக்கு நடந்த அனுபவங்களின் படி பெரியவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இயல்பாக ஒருவரோடு பழகிய பிள்ளை திடீரென மாற்றத்தை காட்டுகின்றது, பின்வாங்குகின்றது எனில் அதற்கான காரணத்தை அறிய முற்பட வேண்டும். அதை விடுத்து மரியாதையையும், பிள்ளையின் ஒழுக்கத்தை இவை இவைதான் என திணிப்பதும் ஒருவகையில் பாதிக்கப்பட்ட குழந்தையின் மனநிலையில் இன்னும் கூடியளவு பாதிப்பைச் செலுத்துகின்ற விடையங்கள் தான்.

பாடசாலைக்காலத்தில் ஆசிரியர் ஒருவரால் எனக்கு நிகழ்ந்த, அவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவிகள் பகிர்ந்து கொண்ட சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றேன்.

நான் படித்தது தரம் ஒன்றிலிருந்து சாதாரண தரம் வரை 150 மாணவர்களை மாத்திரம் கொண்ட கலவன் பாடசாலை. 2007, 2008 ல் அப்போது தரம் ஏழு அல்லது எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருப்பேன் என நினைக்கின்றேன். அப்போது கணித பாடம் கற்பித்த ஆண் ஆசிரியர் ஒருவர் பாடத்தில் இருக்கின்ற சந்தேகங்கள் தொடர்பாக கேட்பதற்காக அவரது மேசைக்கு செல்கின்ற போது ”இஞ்ச பக்கத்தில வாம்மா.. என்னம்மா டவுட்? என்ற வினவல்களோடு முதுகில் இருந்து பின்புறமாக தடவிய படி கேட்பார். மயிர்க்கொட்டி ஊருகின்ற, மழைக்கால கறுப்பு அட்டைகள் பார்க்கின்ற போது வருகின்ற இந்த அருவருப்பும் வெறுப்பும் இயல்பாகவே தொற்றிக்கொள்ளும். ஒருபக்கம் நெளிந்து எதேச்சையாக கொஞ்சம் விலகிப்போகும் தன்மையோடு அவற்றைத் தவிர்க்கப் பார்த்திருக்கின்றேன். இருந்தாலும் வகுப்பில் முதலாம் பிள்ளை கணக்குப்பாடத்தில் பிழை வந்தால் மார்க்ஸ் குறைஞ்சிடும் என்ற மனநிலையோடு சந்தேகங்கள் வரும்போது பழைய தோரணையில்த்தான் விளங்கப்படுத்தப்படும் என்பதை மறந்து அருகே போகின்ற போது ஞாபகம் வர திக்குமுக்காடுவதுமாக இருக்கும். அவர் அதே பாணியில் தொடர்வார். கூச்சத்தன்மையாக, அருவருப்பாக உணரும் போது கேக்காம விட்டிருக்கலாமோ, எப்ப இவர் விளங்கப்படுத்தி முடிப்பார் என்ற மாதிரி இருக்கும். கணக்கு விளங்காம செய்யவும் ஏலாது. செய்யாட்டி பக்கத்தில விளங்கப்படுத்தக் கூப்பிடுவார் எண்ற பயம். சில வேளைகளில் சந்தேகங்களோடேயே இருந்திருக்கன். பிறகு பின்னேர ரியூசனில அதை கவனமா படிக்க முயற்சி எடுத்திருக்கன். இந்த விசயங்கள் தந்த பதட்டமும், பயமும் அடுத்த பாடவேளைகளில ஒழுங்கா கவனிக்கேலாமலும் இருந்திருக்கு. கொஞ்சம் வளர வளர ஒதுங்கிப்போனது ஞாபகம். அவருக்கு ஆறு விரல். எந்த நேரமும் நகம் கடிச்சுத் துப்பிக்கொண்டு கண்வெட்டாம பாத்துக்கொண்டு இருப்பார். முகத்துக்கு நேர பாக்கேலாம இருக்கும். இப்ப யார் நகம் கடிச்சாலும் அவர்ட ஞாபகம் வரும். என்ன நோக்கமா இருக்கும் எண்டு ஒரு வித குழப்பமா இருக்கும். இப்ப வரைக்கும் யாரைக்கேட்டாலும் அவர் நல்ல சேர்.

இந்த விடயங்களை வீட்டில் வெளிப்படுத்துவதற்கான சூழல் இல்லை. காரணம் அந்த ஆசிரியருக்கு ஒவ்வொரு மாணவர்கள் வீட்டிலும், பாடசாலையிலும், சமூகத்திலும் அவரால் தோற்றுவிக்கப்பட்டிருந்த நன்மதிப்பு. ஒரு வேளை வெளியில் சொல்வதற்கான மனநிலை வந்திருந்தாலும் யாருக்கு சாதகமான, எந்த மனநிலையில் அவை விசாரிக்கப்பட்டிருக்கும் என்பது ஊகிக்கக்கூடியதே.

சில நாட்களுக்கு முதல் எனக்கு நடந்த இந்த விடயம் பற்றி நண்பர்களுக்கிடையில் உரையாடும் போது அவர் எனக்கு மட்டும் இல்ல தொடர்ச்சியாக எல்லாருக்குமே செய்திருக்கார் என்றும், அவர்களும் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும், இன்னொரு தரப்பு அதை மென்மையாக விளங்கப்படுத்துவதற்கான வழிமுறையாக புரிந்து கொண்டிருந்ததையும் அறியக்கூடியதாக இருந்தது. இந்த முரண்களை பிரித்து விளங்கிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.

இவ் ஆசிரியர் தொடர்பான விபரங்களை முழுமையாக வெளிப்படுத்தாமைக்கான காரணம், தனியார் வகுப்பொன்றில் குறித்த பிரபல கணிதபாட ஆசிரியர் பணி புரியும் போது அங்கும் ‘மென்மையாக’ விளங்கப்படுத்த முனைந்திருக்கின்றார். பெற்றோருக்கு இவ் விடயம் சென்ற பிற்பாடு அவர் சட்டரீதியாக எச்சரிக்கப்பட்டிருந்தமையும் தெரியக்கிடைத்தது. இந்தத் துஷ்பிரயோகங்களை வெளிப்படுத்துவதற்கான காலச்சூழல் தற்போது கிடைத்திருக்கின்றது. ஆயினும் தொடர்ச்சியாக அவதானிக்கக் கிடைக்கும் தருணத்தில் இவ்வாறானவர்களின் விபரங்களை வெளிப்படுத்துவதற்கு தயங்கப்போவதும் இல்லை

இவற்றைச் சாதாரண விடயமாக கடந்து போகும் மனநிலையில் தற்போது இருக்கமுடியாமலிருக்கின்றது. இவ்வாறான மனநிலையுடையவர்களை வெளிப்படுத்தாமல்ப் போனால் இதுபோன்ற பலர் நற்பெயரோடு சமூகத்திற்குள் துஷ்பிரயோகங்கள், வன்முறைகளைக் கடத்திக்கொண்டே இருப்பார்கள்.

குழந்தைகளோடு சந்தோசங்களை பகிர்ந்து கொள்வதில் காட்டுகின்ற ஆர்வத்தை, அவர்கள் தாம் அறிந்தவற்றின் அனுபவங்களின் வழியாகச் சொல்லும் ஒவ்வொரு கதைக்குள்ளும் மறைந்திருக்கும் அறியப்படாத துயரங்களையும் அணுகிப்பாருங்கள். நாங்களிருக்கின்றோம் என்கின்ற தோழமையோடு இயல்பாக உடனிருங்கள்.

பாரதூரமான அளவு பாதிக்கப்படுகின்ற போது பொது வெளிகளில் பொங்குகின்ற நாம் அடிப்படையில் எங்கிருந்து இவை ஆரம்பிக்கின்றது? எவ்வாறு அவற்றை சரியான முறையில் கையாள்வது? இவற்றிற்கான கலந்துரையாடல்களின் முக்கியத்துவம் என்ன? என்பது பற்றி சிந்தித்திருக்கின்றோமா? தொடர்ச்சியாக உரையாடுவோம்.

ரஜிதா இராசரத்தினம்

Related posts

நானும் கூட என்னும் பெண்ணியப் பகிர்வுக் குறியீட்டுச் செயற்பாட்டியக்கம் #MeToo

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி

vithai

ஆமிக்காரனே! எயார்போஸெ! காணிய விட்டிட்டு வெளிய போவன்ரா

vithai

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது ?

vithai

நிலத்தடி நீர் மாசுபடல் தொடர்பில் போராட்டங்களின் பின்னான பொதுவெளி உரையாடல்

vithai

தொ.பரமசிவன் – அரசியல்மயப்பாடும் நிலைப்பாடும்

vithai

Leave a Comment