vithaikulumam.com
கட்டுரைகள் கலந்துரையாடல்கள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி 07 – நவாலியூர் தாமா

சிறுவயது பாலியல் வன்முறையின் விளைவுகள்

ஆனி மாதம் 5ஆம் திகதி உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு செய்த ஓவியப் போட்டியில் நான் பங்கேற்று யாழ் மாவட்ட முதல் பரிசை பெற்றேன். ஈழப் போரின் மத்தியில் நான் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பரிசை பெற்றது மிகவும் பெருமையான விடயம். ஆனால் அப்பெருமையினுள் அவமானமும் சோகமும் கலந்துள்ளது. எனது பெருமை மீது உரிமை கொள்ள என்னுள் ஒரு தயக்கம் இருந்தது.

நான் அவ் ஓவிய போட்டியில் பங்கேற்பதற்காக ஒரு சித்திர ஆசிரியரிடம் பயிற்சி பெற்றேன். தினமும் பயிற்சி நேரத்தில் அவர் எனது மார்பு முளையை கிள்ளுவார். மிகவும் எரிச்சலாக இருக்கும். பயமாகவும், ஆத்திரமாகவும் இருந்தது. ஆனால் அவமானம் காரணமாக அதை யாரிடமும் கூற முடியவில்லை. என் மீது பழிபோடுவார்கள். என்னை திட்டுவார்கள் என்ற பயம் என்னை மௌனமாக வைத்திருந்தது.

நான் சிறுமியாக இருந்த போது மனம் திறந்து யாருடனும் என் உணர்ச்சிகளையோ, அனுபவங்களயோ பகிர முடியவில்லை. நான் புறக்கணிக்கப்பட்டவளாக
கருதினேன். என்னை, எனது விருப்பத்தை, எனது கஷ்டத்தை ஏற்று கொள்ள யாரும் இல்லை என நான் நம்பினேன். எனவே எனது ஆசிரியரால் நான் அனுபவித்த துன்பத்தை நான் மூடி மறைத்தேன். நான் எனது முதல் பரிசு சான்றிதழை பார்த்த போதெல்லாம் எனக்கு ஆத்திரமும் கோபமும் வந்தது. எனது ஒவிய அங்கீகாரத்தை வெறுத்தேன்.

எனக்கு என் மார்பகம் மீது வெறுப்பாக இருந்தது. என்னால் ஆடைகளை கழற்றி
நிர்வாணமாக என்னை பார்க்க முடியவில்லை. எனது உடலை ஆடைகளால் முடி மறைத்தேன். எனது உடலை நான் ஒர் எதிரியாக தான் பார்த்தேன். அதே நேரம்
யாராவது எனது மார்பகத்தை முத்தமிட மாட்டார்களா என்ற ஏக்கமும் எனக்குள்
இருந்தது. என்னால் எனது மார்பகத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. எனது
மார்பகங்கள் எனக்கு வலியாகவும் ஒரு பாரமாகவும் இருந்தது. எப்போது எனக்கு மார்பு புற்று நோய் வரும்? எப்போது எனது மார்பகத்தை அகற்றுவார்கள் என
காத்திருந்தேன்.

சிறுவயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான வயது வந்தோருக்கான சிகிச்சையை டொறொன்டோ நகரில் gate house என்ற நிறுவனத்தில் பெற்றேன். நான் (survivors) பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து பிழைத்து கொண்ட மற்ற குழுவினருடன் எனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன். இச் சிகிச்சை முறை ஒவ்வொரு கட்டமாக நடைபெற்றது. அத்துடன் தனியாக சிகிச்சை நிபுணர் எனது பாதிப்பின் மீது அக்கறை காட்டினார். சிகிச்சை மூலம் அனுதாபத்தையும் இரக்கத்தையும் பெற்று கொண்டேன். எனது அவமானத்தை சுய கௌரவமாக மாற்றினேன்.

எனது ஆசிரியர் தான் குற்றவாளி, அவர் என்ன தான் அவமானப்பட வேண்டும். ஒரு போதும் பாதிக்கப்பட்டவர் அவமானப் படக்கூடாது என்பதை உறுதியாக புரிந்து கொண்டேன். நான் இன்று எனது முதல் பரிசை குறித்து பெருமைப்படுகிறேன். தவறு சித்திரம் வரைய சென்றது அல்ல தவறு ஆசிரியரின் நடத்தை என நேர் நோக்கமாக சிந்திக்கிறேன் . குழந்தை பருவத்தில் பாலியல் தொல்லைக்குள்ளானதால் குழந்தையான என்னை நான் கடிந்து கொண்டேன். என் மீது பழியை போட்டேன். இன்று ஓர் பெண்ணாக பாதிக்கப்பட்ட என் குழந்தை பருவத்திடம் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு பொறுப்பு எனது ஆசிரியர் என கூறுகிறேன்.

சிறுவயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான வயது வந்தவர்கள் நாம், குழந்தை பருவத்தில் எவ்வாறு குற்ற உணர்வுடன் வயது முதிர்ந்தவர்களை குற்றம்
சுமத்த முடியாது குழப்பத்துடன் வாழ்ந்தோமோ, அதே வாழ்வை, வயது முதிர்ந்தவர்களாக வாழ வாய்ப்பு உண்டு. மூடி மறைத்து வாழ்வோமானால் உள்ளுக்குள் அது கோறையாக நம்மை அரித்து கொண்டு இருக்கும். இன்று சிறுவயது பாலியல் துஷ்பிரயோகத்தை பலர் பகிரங்கமாக பகிருகின்றனர். அதை சமுதாயம் ஏற்று கொள்கிறது. பலருக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

அண்மையில் நான் நன்கு அறிந்த பெண், பாலியல் துஷ்பிரயோகம் செய்த தனது தந்தையை சட்டத்துக்கு முன் நிறுத்தி சிறைத் தண்டனையை தந்தைக்கு வழங்கியுள்ளார். அவரது சிறு வயது பாலியல் துஷ்பிரயோக கதையை broken at six என்ற YouTubeஇல் ஆங்கிலத்தில் கேட்கலாம். இன்று சிறுவயதில் பாலியல் தொல்லைக்குட்பட்ட வயது வந்தவர்களுக்கு பல சேவைகள், சிகிச்சை முறைகள் உண்டு. இழந்த குழந்தை பருவத்தை மீண்டும் கட்டியெழுப்பி ஆரோக்கியமான வாழ்வை வாழ சந்தர்ப்பம் கிடைக்கிறது. நான் பாலியல் துஷ்பிரயோக வடுவை குணமாக்கி இன்று ஆரோக்கியமாக தன்னம்பிக்கையுடன் வாழ்வதையிட்டு பெருமைப்படுகிறேன். பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவது நமது கடமை. அதற்காக ஒன்று பட்டு செயல்படுவோம்.

நவாலியூர் தாமா

Related posts

தொன்ம யாத்திரை – 3 நெடுந்தீவு முன்கள ஆய்வு

vithai

குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்வு

vithai

இலங்கை இன முரண்பாட்டை விளங்கிக்கொள்ளுதல் –நிகழ்வு 03

vithai

சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய சினிமாக்கள்

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி

vithai

காட்டுப்புலம் – ஓரு சமூக உரையாடல் – 2

vithai

Leave a Comment