vithaikulumam.com
கட்டுரைகள் கலந்துரையாடல்கள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி -08 -மீராபாரதி

மனமும் உடலும் பாலியல் என்றால் என்னவென்று அறியாத உணராத நான்கு வயதில் பாலியற் செயற்பாடுகளை கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சிறுவர் விளையாட்டாக மேற்கொள்வேன். இவற்றை எங்கிருந்து எப்படிக் கற்றேன் என்பது நினைவில் இல்லை. எனது ஐந்து வயதில் பக்கத்து வீட்டு சின்னப் பெண் குழந்தையுடன் “அம்மணமாக” (நிர்வாணமாக) அம்மா அப்பா விளையாடினேன். ஆனால் என்னுடன் விளையாடிய சக குழந்தைகள் என் அம்மாவிடம் நான் “கெட்ட” விளையாட்டுக்கள் விளையாடுவதாக ஒவ்வொரு முறையும் முறையிட்டு (கோள் சொல்லி) விடுவார்கள். இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் அம்மாவிடம் நான் அடி வாங்கத் தவறியதில்லை. இதேபோல் அப்பாவிடமும் பல நேரங்களில் பல்வேறு காரணங்களுக்காக அடி வாங்கியிருக்கின்றேன். இவ்வாறு நான் பெரியவனாக வளரும் வரை மட்டுமல்ல வளர்ந்த பின்பும் கூட ஏதாவது காரணங்களிற்காக அடிகள் வாங்கியிருக்கின்றேன். இந்த அடிகள் தந்த வலிகளினதும் வடுக்களினதும் விளைவாக நான் பயந்தவனாக, பொது இடங்களில் மட்டுமல்ல தனித்தும் பெண்களுடன் பேசவோ விளையாடவோ தயங்கியவனாக வளர ஆரம்பித்தேன். இதன் காரணமாக எனது இருபத்தைந்து வயது வரை வீட்டில் அப்பாவிடம் மட்டுமல்ல அம்மாவிடமும் காதல் என்ற சொல்லை சாதாரணமாகக் கூடப் பயன்படுத்த முடியாதளவிற்குப் பயம் இருந்தது. இந்தப் பண்புகள் எனது படைப்பாற்றலுக்கும் விளையாட்டுத்தனத்திற்கும் சுய தேடலுக்கும் முட்டுக்கட்டை போட்டு என்னைக் கட்டிப் போட்டன என்றால் மிகையல்ல. இதனால் எனது இயற்கையான இயல்பு ஒடுங்கி மறைந்து போனது. என் மீது செயற்கையான இயல்புகள் ஒரு முகமூடியாக வந்து அமர்ந்து கொண்டன. சமூகம் விரும்புகின்ற, எதிர்பார்க்கின்ற இயந்திர மனிதராக வளர ஆரம்பித்தேன் நான்.

எனக்கு ஆறு வயது இருக்கும் பொழுது பக்கத்து வீட்டுற்கு ஒருவர் வந்திருந்தார். அவர் என்னை வீட்டின் முன்பக்கம் அழைப்பார். அங்கு ஒருவரும் இருக்க மாட்டார்கள். அவர் எனது கையை எடுத்து தனது ஆண்குறியைப் பிடிக்கச் சொல்லுவார். நானும் எந்த மறுப்பும் இல்லாமல் பிடித்துக் கொண்டிருப்பேன். இவ்வாறு செய்வது தவறு என அப்பொழுது எனக்குத் தெரியாது. இப்படிப் பல நாட்கள் தொடர்ந்தன. இதற்காக எனக்கு இனிப்புகள் தருவார். அந்த இனிப்புகளுக்காக நான் என்ன செய்கின்றேன் என்பதை அறியாது செய்தேன். இதேபோல் பதின்மூன்று வயதிலும் ஒரு சம்பவம் நடந்தது. அப்பொழுது எனக்குத் திரைப்படங்கள் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. நாம் வாழ்ந்த அறை திரையரங்கு ஒன்றுடன் இணைந்திருந்தது. அங்கு வேலை செய்தவர் என் ஆர்வத்தை அறிந்து திரைப்படங்களைப் பார்க்க அழைப்பார். படம் காண்பிக்கும் அறைக்கும் அழைத்துச் சென்று படம் எவ்வாறு திரையிடப்படுகின்றது என்பதைக் காண்பிப்பார். இவை எனக்கு மகிழ்ச்சியளிக்கும். பின் மேல்மாடத்திற்கு (பல்கனிக்கு) அழைத்துச் செல்வார். அங்கு ஒருவரும் இருக்க மாட்டார்கள். இருட்டாக இருக்கும். அவர் என்னைக் குனிந்து இருக்கச் சொல்லிவிட்டு பின்னால் நின்று என்னவோ செய்வார். பின் துடைத்துவிடுவார். இவை இன்று நினைப்பதற்கு அருவருப்பாக இருந்தபோதும் அன்று என்னை ஒன்றும் செய்யவில்லை. ஆகவே யாரிடமும் சொல்லவில்லை. அல்லது ஏதோ ஒரு இனம் புரியாத பயம் தடுத்தது. ஏன்? இவற்றைப் பற்றி எல்லாம் வீட்டில் இன்றுவரை கூறவில்லை. ஏனெனில் இவ்வாறான விடயங்களை உரையாடும் ஒரு சூழல் இருக்கவில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களை உருவாக்கவில்லை. ஆகவே இதை வாசிக்கும் பொழுதே அறிந்து கொள்வார்கள். இவை சிறுவர்கள் மீதான பாலியல் தூஸ்பிரயோகங்கள் என்பதை வளர்ந்த பின்பே அறிந்து கொண்டேன்.

எனது பதினைந்தாவது வயதில் (1983ம் ஆண்டு) நடைபெற்ற தமிழ் மக்கள் மீதான சிங்களப் பேரினவாத தாக்குதல்களின் விளைவாக யாழ் சென்று குருநகர் அகதிகள் முகாமில் நாம் தங்கியிருந்தோம். அந்தக் காலத்தில் தான் எனது உடல் காமத்தை உணரத் தொடங்கியது. எனக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. அப்பொழுது அங்கிருந்த ஒரு அகதி நண்பன் இந்த வேளைகளில் தனது ஆண்குறியைத் தானே ஆட்டியதாக, அதாவது கைதுய்மை (கையில் போடுவது) செய்வதாகக், கூறினான். அவன் கூறியதைக் கேட்டு நானும் செய்து பார்க்க விரும்பினேன். அது ஒரு பகல் வேளை. முதன் முதலாக சுய இன்பம் காண்பதில் ஈடுபட்டேன். ஆண் குறி பெரியதாகி சிறிது நேரத்தில் வெள்ளைத் திரவம் வெளியேறியது. உடலுக்கு இதமாகவும் மனதிற்குத் திருப்தியாகவும் இருந்தது. ஆனால் அதன்பின் குறி சின்னதாக மாறவில்லை. பெரிதாகவே இருந்தது. பயந்து போனேன். நீண்ட நேரங்கள் குறியுடன் மல்லுக் கட்டி ஒருவாறு சின்னதாகிய பின் பயந்து பயந்து அறைக்கு வெளியே வந்தேன். “அம்மா நான் பெரியவனாகி விட்டேன்” என கூறமுடியவில்லை. ஆனால் இதற்கு முதல் வருடம் தங்கை பெரியவளாகி இருந்தால். அதை சிறியளவில் நண்பர்கள் உறவினர்களை அழைத்துக் கொண்டாடினார்கள். ஏன் எனக்கு மட்டும் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. தங்கைகளைப் போல எனக்கும் உடலில் மாற்றங்கள் வந்தன. ஆனால் அதை அப்பாவிடமோ அம்மாவிடமோ சொல்லாமல் விட்டது ஏன்? தயக்கம் ஏன்? அவர்களும் என்னிடம் கேட்காமல் விட்டது ஏன்? ஆண்களுக்குள் நடைபெறும் மாற்றங்கள் முக்கியத்துவமானவை இல்லையா?

மீராபாரதி


’பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம்: ஒரு ஆண் நிலை நோக்கு’ நூலில் வெளியான குறிப்பு.

Related posts

பிணமெரியும் வாசல்

vithai

தாய்மையை ஏன் பால் நீக்கம் செய்ய வேண்டும்?

vithai

காட்டுப்புலம் – ஓரு சமூக உரையாடல் – 2

vithai

குழந்தைகள் சாதியத்தை எவ்வாறு அறிகிறார்கள் ?

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி -10- நவாலியூர் தாமா

vithai

தொன்மயாத்திரை – கடலுரையாடல்

vithai

Leave a Comment