விதை குழுமம் அதன் நீண்ட காலநோக்கமாக சுயமரியாதையும் சமத்துவமும் கொண்ட சமூகத்தினை உருவாக்குதல் என்பதை வரித்துக்கொண்டுள்ளது. அதற்கான அடிப்படை வேலைத்திட்டங்களை ஆய்வுசெய்தபோது குழந்தைகள் / சிறுவர்களை எப்படி எமது சமூகம் கையாள்கின்றது என்கிற கரிசனையுடனான நோக்கு எமக்குள் உருவானது. அது, குழந்தைகளையும் சிறுவர்களையும் நாம் எப்படிக் கையாள்கின்றோம் என்பதில் இருந்து அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் உடல் / பாலியல் / உளவியல் ரீதியிலான துஷ்பிரயோகங்களை எப்படிக் கையாள்கின்றோம் என்பதைக் குறித்து கரிசனையுடன் நோக்கத் தூண்டியது.
விதை குழுமம் முன்னெடுத்த இந்தத் துஷ்பிரயோகத்தின் சாட்சியங்களுக்கும் ஊடகங்களும் பொதுசனவெளியும் காட்டிய கள்ள அல்லது அசட்டு மௌனத்தினையே நாம் கேள்விகேட்கவும் எதிர்கொள்ளவும் வேண்டியிருக்கின்றது, பாதிக்கப்பட்டவர்களின் கேள்விகளைப் புறக்கணித்து பாதிக்கப்பட்டவர்களையே குற்றத்தின் காரணிகளாகவும் அடையாளப்படுத்துகின்ற சூழலில் இந்த மௌனத்தைக் கலைக்க IBCயின் அக்கினி சிறகுகள் எடுத்த முதலாவது காலடிக்கு விதை குழுமத்தின் தோழமை நிறைந்த நன்றிகள்.