vithaikulumam.com
கட்டுரைகள் கலந்துரையாடல்கள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி -10- நவாலியூர் தாமா

என் அம்மாவின் சிறிய தந்தை பார்வை அற்றவர். அவர் வாத்தியக் கருவிகளை (மவுத் ஓகன், மெலோடிக்கா, எக்கோடியன், வயலின்) மிகவும் திறமையாக வாசிக்கக்கூடியவர். நெசவு ஆலையில் கைத்தறியுடன் நெசவு தொழிலில் ஈடுபட்டுவந்தார். கதிரைகளையும் பின்னுவார். ஒரு மனிதரின் கையைப் பிடித்து அந்நபரின் குரலைக் கேட்காமலே அவர் யார் என அடையாளம் சொல்லக்கூடியவர். பார்வை அற்ற அவரிடம் இப்படியாக நிறையத் திறமைகள் இருந்தன.

எனது பெரிய தாயுடன் வாழ்ந்துவந்த அவர் எனக்குப் பத்து வயதானபோது எமது வீட்டில் எம்முடன் வாழத் தொடங்கினார். அவர் சுயமாக தனது தேவைகளை தானே பூர்த்தி செய்தவர். யாரையும் எதற்கும் எதிர்பார்க்கவில்லை. கிணற்றில் தானே தண்ணீர் அள்ளிக் குளித்தார். தனது ஆடையை தானே துவைத்தார். தன்னாற்றல் மிக்க ஒருவராகக் காணப்பட்டார்
நமது குடும்பம் கிறீஸ்தவ மதத்தை பின்பற்றினாலும் அவர் சுவாமி இராமகிருஷ்ணரின் பக்தன். வானொலியூடாக ஆன்மிக சொற்பொழிவுகளைக் கேட்பார். புத்தகத்தை வாசிப்பதற்கு அவர் மற்றவர்களை எதிர்பார்த்து காத்தருந்தார். அவருக்கு நான் சுவாமி விவேகானந்தரின் புத்தகங்களை வாசித்தேன். பைபிளை மட்டும் கிறீஸ்தவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும் என்ற போதும் மனித நேயம் காரணமாக அவருக்கு வாசித்தது இன்றும் எனது ஆன்மீக வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கிறது.

எனது மாதவிடாய் சக்கரம் பதினொரு வயதில் ஆரம்பித்ததால் பத்து வயதில் என் மார்புகள் விருத்தியடைய தொடங்கிவிட்டன. பார்வையற்றவருக்கு அருகில் செல்லும்போது அவர் என் மார்பபை இறுக்கிப் பிடிப்பார். எனக்கு அந்தரமாகவும், வெறுப்பாகவும் இருந்தது. அவருக்குக் கண் தெரியாததால் அவ்வாறு அவர் செய்வது பிழை என்று என்னால் நினைக்க முடியவில்லை. எனக்கு அவர் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தை இறுக்கி பிடித்தது வேண்டும் என்று செய்வதாகத் தோன்றினாலும், பார்வை அற்றவர் தெரியாது தவறுதலாகச் செய்வதை பிழை என நினைப்பது தப்பாகப்பட்டது. எனக்கு நடப்பது என்ன என தெரியாது குழம்பி இருந்தேன். அதேநேரம் அருவருப்பாக இருந்தது. அவருக்குக் கிட்ட போகப் பயமாகவும் இருந்தது. நான் பார்வை அற்றவரை குற்றம் சாட்டினால் அதற்கு தண்டனையைப் பெறுவேன் என்ற பயத்தில் அமைதியாக இருந்தேன். அதே நேரம் மார்பை அவர் தெரியாது தொடுவதை பொருட்படுத்த வேண்டாம் என்றே குடும்பத்தினர் கூறுவர் என நினைத்தேன். அத்துடன் யாரும் எனக்கு ஆதரவு தரமாட்டார்கள் என்ற காரணத்தாலும் அமைதியாகவே என்றும் இருந்தேன்.
2020 ஆம் ஆண்டு நான் ஒரு ஸ்பானிஷ் பெண்ணைச் சந்தித்தேன். அவர் தனது பார்வையற்ற தந்தையால் சிறுவயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக கூறினார். என்னால் அவர் கூறியதை நம்ப முடியவில்லை. எவ்வாறு பார்வை அற்ற நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யமுடியும்? எவ்வாறு பார்வையற்ற நபரால் உடல் உறுப்புக்களை அடையாளம் காணமுடியும்? இப்படியான கேள்விகளே எனக்குள் எழுந்தன. அவர் எழுதிய சுயசரிதைப் புத்தகத்தை வாசித்தபோதுதான் அவர் எவ்வாறு பார்வையற்ற தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம் அடைந்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

பார்வை அற்ற நபருக்கும் பாலியல் உணர்ச்சிகள் உள்ளன. அவர்களும் தமது பாலியல் துஷ்பிரயோகம் செய்யலாம் என்பதை அறிந்து கொண்டேன். எனக்கு ஏற்பட்டது பாலியல் துஷ்பிரயோகம் என்பதையும் ஏற்று கொண்டேன். எமது உடம்பை நாம் விரும்பும் நபர் எமது அனுமதியின்றி தொடுவதும் கூட பாலியல் துஷ்பிரயோகம் தான்.

குறிப்பு
சிறுவர் மீது நிகழ்த்தப்படும் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் விதைக் குழுமம் சிறுவயதில் பாலியல் துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டவர்களின் சாட்சியங்களைப் பதிவுசெய்து வந்தது. பாதிக்கப்பட்டவர்கள் துணிந்து அவை குறித்துப் பேசவேண்டும் என்பதே விதை குழுமத்தின் நோக்கமாக இருக்கின்றது. இதுவரை 10 சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றை முன்வைத்து தொடர்ச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் விதை குழுமம் தொடர்ந்து செயற்படும்.

Related posts

வாசிப்பும் அறிதலும் – அஞ்சலியும் பிரசுர வெளியீடும்

vithai

காட்டுப்புலம் – ஓரு சமூக உரையாடல் – 1

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி 07 – நவாலியூர் தாமா

vithai

வாய்ப்பாட்டு மட்டை

vithai

அரசியலற்ற கலையை வணங்குதல் : கட்டட மரபுரிமைகளும் ஒடுக்குதல் வடிவங்களும்

vithai

தொன்ம யாத்திரை – 4 முன்கள ஆய்வு

vithai

Leave a Comment