vithaikulumam.com
அறிக்கைகள் சமகாலகுறிப்புகள்

இன்னும் கிடைக்காத சமூகநீதி

கிளிநொச்சி, பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள வரசக்தி விநாயகர் கோயிலில் சகலகலாவல்லி மாலை பாடச் சென்ற உயர்தர வகுப்பில் கல்விகற்கும் மாணவர் ஒருவரை அவ்வாறு பாடமுடியாது என்று சொல்லி ஆலய நிர்வாக சபையின் தலைவர் வெளியேற்றிய சம்பவம் ஒன்றினைக் குறித்த காணொலி ஒன்றினை ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது தொடர்பில் விதை குழுமம் “கோயிலில் சாதியும் எதிர்ப்பின் குரல்களும்” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. இதையடுத்து குறித்த பிரச்சினை தொடர்பாக அக்குடும்பத்தாரைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தோம். அது தொடர்பிலான அறிக்கையும் ‘பெரியபரந்தன் பிள்ளையாரும் சமூக நீதியும்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த பிரச்சினை தொடர்பில் தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டிருக்கும் குடும்பம் தமக்கான உறுதியான சமூகநீதி கிடைக்கவில்லையென்று தற்போது அறியத் தந்திருக்கிறார்கள். இது தொடர்பில் தற்போது வரை நடந்திருக்கும் நிகழ்வுகளை இக் குறிப்பில் தொகுத்திருக்கிறோம். காணொலி வெளியாகி அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக அழுத்தங்களால் குறித்த பிரச்சினைக்கு காரணமான நிர்வாக சபை உறுப்பினர்கள் தமது பதவி விலகல் கடிதங்களை கொடுத்து நிர்வாகத்தை விட்டு விலகியிருந்தனரே தவிர குறித்த மாணவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்படுத்தப்பட்ட அவமதிப்புக்கும் அநீதிக்கும் மன்னிப்புக் கேட்கவில்லை. அவர்களுக்கு தாம் இழைத்தது அநீதியென்ற ஓர்மையும் இல்லை. அது எங்கும் வெளிப்படுத்தப்படவுமில்லை .

இது தொடர்பில் அரச நிர்வாக மட்டங்களுக்கும், குறித்த பிரதேச கலாசார உத்தியோகத்தருக்கும் அறிவித்த பின்னரும் கூட புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ய வேண்டும் என்பதைத் தாண்டி, நிர்வாகத்தினர் செய்தது ஒரு குற்றம், அதற்கு அவர்கள் மன்னிப்புக் கேட்பதுவும் அதே தவறோ அல்லது வேறு வகையிலுமோ குறித்த குடும்பத்திற்கு அவர்கள் அநீதி இழைக்காமல் இருப்பதற்கான எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. மாறாக, அதுவொரு கடந்த காலப் பிரச்சினை, அதனை அப்படியே விடுங்கள் என்பதே அரச தரப்பு சொல்லிக்கொண்டிருக்கும் பதில். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பிரச்சினைக்குரியவர்களாக சித்தரிப்பதும், அவர்களைக் குற்றவாளிகள் போல் நடத்துவதும், ஒடுக்குமுறையைச் செய்பவர்களிடம் எந்தச் சலனமுமின்றி இருப்பதுவும் அவர்களின் அணுகுமுறையாகத் தொடர்கின்றது.

குறித்த சாதி ஆணவமிக்க நிர்வாக உறுப்பினர்களின் விலகலைத் தொடர்ந்து குடும்பத்தினர் கோயில் நடவடிக்கைகளில் பங்குபற்றவும் பாடல்கள் பாடுவதிலும் சிக்கல்கள் இருக்கவில்லை. ஆனால் புதிய நிர்வாகத் தெரிவுக்கான கூட்டம் அண்மையில் இடம்பெற்றிருக்கிறது. மீண்டும் அதே உறுப்பினர்கள் வருகைதர குடும்பத்தினர் கேள்வியெழுப்பியிருக்கின்றனர். தமக்கான சமூக நீதி உறுதிப்படுத்தப்படாத, மூடி மறைக்கும் போக்கே தொடர்ந்தும் நிலவுகின்ற இந்தச் சூழலில் இந்த நிர்வாகத் தெரிவை ஏற்க முடியாதென்று கூறி மறுக்க நிர்வாகத் தெரிவு இடம்பெறாமல் கூட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது, கூட்டத்தின் பின்னர் இப்பிரச்சினை தொடர்பில் கேள்வியெழுப்பிய முதியவர் ஒருவரின் கையில் இடித்து அடிக்க முயற்சித்திருக்கிறார் அங்கிருந்த பழைய நிர்வாகம் சார்ந்த ஒருவர். கோயிலில் அநாகரீகமான வார்த்தைகளால் பேசுவதும் வன்முறைப்போக்காக நடந்து கொள்வதும் அவர்களின் கடந்தகாலச் செயற்பாடுகளிலிருந்தே தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது.

இதற்கு சில காலம் முன்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் இப்பிரச்சினை தொடர்பிலான முறைப்பாடொன்றை குடும்பத்தினர் வழங்கியிருந்தனர். அவர்களும் தங்களால் இந்தப் பிரச்சினையை கையாள முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். இடையில் பிரச்சினை சுமூகமாக முடிவடைந்து விட்டது என்று பொதுவெளியில் அறிவித்தல் விட்டிருந்த சின்மயா மிஷன் சாமியாரும் குடும்பத்தினையே குழப்பம் விளைவிக்கிறவர்களாக வைத்துக் கதைத்திருக்கிறாரே ஒழிய அவர்களின் மனநிலை இதனால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களிற்கான சமூகநீதியென்பது மன்னிப்புக் கேட்டலும் மீள நிகழாமைக்கான உறுதிப்பாடுமே ஒழிய மூடி மறைப்பது அல்ல என்பதை உணர வேண்டும். மதத்திற்குள் சாதியின் பெயரால் நிகழும் அநீதிகளுக்கும் ஒடுக்குறைகளுக்கும் துணைபோவபர்களாக சமூகநீதிப் பார்வையுள்ள யாரும் இருக்க முடியாது.

அந்த மாணவரின் தாயார் இது குறித்துச் சொல்லும் போது, “எனது மகனுக்கு நடந்தது வேறு எந்தப் பிள்ளைக்கும் நடந்து விடக் கூடாது என்பதற்காகவே நான் இவ்வளவு தூரம் போராடுகிறேன். நான் சாகும் வரையிலும் அன்று என் மகன் அவமானப்பட்டு நின்ற தோற்றம் என் கண்ணை விட்டு மறையாது, இதுக்கு நீதி கிடைச்சே ஆக வேண்டும். இப்படியான அக்கிரமம் செய்பவர்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,” என்று மனவேதனைப்பட்டுக் கூறியிருந்தார். வேறு சிலர் நீங்கள் வேறு கோயிலுக்குச் சென்று கும்பிடுங்கோவன் என்று கூறியிருக்கிறார்கள். இது எங்கட ஊர், நாங்கள் வாழுற இடம், இதை விட்டுவிட்டு வேறு கோயிலுக்கு நாங்கள் ஏன் போக வேண்டும் என்று உறுதியாக மறுத்திருக்கிறார். அநீதி செய்வபவர்களை எதிர்த்து நம் சமூகம் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் உறுதியாக நின்று குரல் கொடுக்க வேண்டும்.

நமது சமூகத்தில் தொடர்ந்தும் நிலவும் சாதிய ஏற்றத் தாழ்வுகளும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கல்வியிலும் வாழ்விலும் முன்னேறுவதை பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதியினரின் மனநிலையும் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது. கோயில்கள் சமூகநீதியுள்ளதாய் இருக்க வேண்டும். தமிழ்ப்பிரதேசங்களில் ஏராளமான கோயில்களில் இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதை நாம் அவதானிக்கிறோம். அவற்றைக் கண்டும்காணாமல் போகின்றோம். அவற்றை எதிர்த்து செயற்படவும் அங்கு நிகழும் ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் பேசவும் இளைய தலைமுறையினரும் சமூக அக்கறை கொண்டவர்களும் தொடர்ந்து பேசவும் செயலாற்றவும் வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கிடைக்க வேண்டிய சமூக நீதியை உறுதிப்படுத்துவதும் அதற்காக செயற்படுவதும் நம் ஒவ்வொருவரினுடையதும் தார்மீகப் பொறுப்பு. அதுவே அறம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சமூக நீதிக்கான போராட்டத்திற்கு விதை குழுமத்தின் ஆதரவும் தோழமையும் நீதி கிடைக்கும் வரை தொடரும்.

தோழமையுடன்
விதை குழுமம்

Related posts

உதவிக்கரம் நீட்டுவோம் – கணக்கறிக்கை

vithai

எரித்தலுக்கெதிராக ஒன்றுபடுவோம்!

vithai

குழந்தைகளும் தண்டனைகளும்

vithai

குட்மோர்னிங் டீச்சர்

vithai

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பான ஊடக அறிக்கை வெளியீடு

vithai

மெய்நிகர் வெளியில் பாலியல் வசைகள்

vithai

Leave a Comment