vithaikulumam.com
கட்டுரைகள் சமகாலகுறிப்புகள்

சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய சினிமாக்கள்

தமிழ் சினிமாவில் அரிதாகப் பேசப்படும் அல்லது பெரிதும் கவனத்திலெடுக்கப்படாத பகுதி சிறுவர் துஷ்பிரயோகங்களும் அது சார்ந்த உடல், உளவியல் தாக்கங்களும். அண்மைக்காலங்களில் சமூக அக்கறை வணிக சினிமாக்களிலும் ஊடுருவியிருக்கும் பட்சத்திலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய சினிமாக்களின் பற்றாக்குறையானது சமூக மட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் சார்ந்த அயர்ச்சி நிலையைக் குறிக்கிறது. பிற மொழி சினிமாக்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் மையக்கருவாக எடுக்கப்படுவது அரிது. இருந்தும் பெரும்பாலான இடங்களில் கதை நகர்த்தும் கருவியாக அவை கையாளப்படுகின்றன. தமிழ் மொழிமூல சினிமாவிலும் கதையின் பாத்திர வடிவமைப்பிற்கு சிறுவர் துஷ்பிரயோகம் சார்ந்த நிலைப்பாட்டம்சங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக திரைப்படத்தின் எதிர்க் கதாப்பாத்திரம் சிறுவயதில் வன்முறைச்சூழலுக்குள் வாழ்ந்ததாலும் உடல், உள துஷ்பிரயோகங்களுக்குட்பட்டதாலும் எதிர்க்கதாப்பாத்திரமாக மாறுவது போன்ற பாத்திர வடிவமைப்பு பெரும்பாலான திரைப்படங்களில் அவதானிக்கக்கூடியதாக இருக்கும். இந்த பண்பியல்பு எதிர்க்கதாப்பாத்திரம் மீது பார்வையாளர்களுக்கு ஒரு பரிதாபத்தை தோற்றுவிப்பதுபோன்ற வணிக ரீதியான நேர்மறை அனுகூலங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

தமிழ் மொழிமூல சினிமாவில் நோட்டமிட்டு கலந்துரையாடக்கூடிய சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய சினிமாக்கள் மிக அரிது. அவ்வாறு சிறுவர் துஷ்பிரயோகங்களை காட்சிப்படுத்தும் சினிமாக்களின் வணிகரீதியான கையாளுகை நீதியற்றது என்றும் அவை வெறுமனவே துஷ்பிரயோகம் என்ற உணர்திறன்மிக்க உள்ளடக்கங்களை வணிகப்பயன்பாட்டுக்காக தவறாக வழிநடத்துகிறது என்றும் சினிமா புத்திஜீவிகள் வாதங்களை மேற்கொண்டாலும் சமூக அக்கறையின் பேரில் ஒருசில சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய சினிமாக்கள் சமூகத்திற்கு ஆரோக்கியமானதாக அங்கீகரிக்கப்படக்கூடியவை.

குற்றம் கடிதல் (2014)

ஆசிரியை ஒருவரினால் தண்டிக்கப்படும் மாணவன் திடீரென மயக்கமடைகிறான். நினைவு திரும்பாத மாணவன் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். இந்த சம்பவம் சார்ந்து மாணவனின் குடும்பத்திற்கும் தண்டனை வழங்கிய ஆசிரியைக்கும் சமூகத்திற்கும் இடையில் நடைபெறும் உளவியல் ரீதியான போராட்டம் தான் குற்றம் கடிதல்.

பாடசாலைகளில் தண்டனைகள் என்ற பெயரில் நடைபெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் பெரும்பாலானவை ஆசிரியர்களின் தனிப்பட்ட விரக்தியின் வெளிப்பாடு. வெளிச்சூழல்களிலிருந்து பெற்றுக்கொள்ளும் அழுத்தத்தை ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அறிந்தோ அறியாமலோ வன்முறையாக பிரயோகிக்கின்றனர் என்ற கதைக்கரு குற்றம் கடிதல் திரைப்படத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் பாராட்டத்தக்கது. வணிகக் கூறுகள் கொண்ட யதார்த்த சினிமாக்களின் முக்கியத்துவம் அவை சினிமா விரும்பி மக்களிடையே கதைக்கருவை பேசுபொருளாக தோற்றுவிக்கக்கூடியவை. குற்றம் கடிதல் சிறிய வணிகக்கூறுகளை கையாண்டு பாடசாலைகளில் நடைபெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை திரையமைத்த விதம் ஆரோக்கியமானது.

நிசப்தம் (2017)

பாடசாலை செல்லும் வழியில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் சிறுமியும் அதை விட்டு மீட்டு வருவதற்கு சிறுமியின் குடும்பம் செய்யும் போராட்டங்களுமாக திரைப்படம் அமைந்திருக்கும்.

பாலியல் ரீதியாக சிறுவர்களுக்கு நடைபெறும் அத்துமீறல்கள் நிரந்தர வடுக்களை உருவாக்கக்கூடியவை. பாலியல் அறிவு, உணர்வு இல்லாத பராயங்களில் நடைபெறும் துஷ்பிரயோகங்கள் சிறுவர்களை நிரந்தர அதிர்ச்சியிலும் பயத்திலும் ஆழ்த்திவிடுகின்றன. உயிராபத்திலிருந்து மீண்டுவரும் சிறுவர்கள் அந்த இனம்புரியாத அதிர்ச்சியை தாங்கிக்கொள்ளும் மனப்பாங்கும் முதிர்ச்சியும் இல்லாததால் உள ரீதியாக தனிமைப்படுத்தப்படுவதோடு உளவியல் கோளாறுகளுக்கும் முகங்கொடுக்கின்றனர். இது சிறுவர்களின் எதிர்காலத்தை சிதைத்துவிடுகின்றது.

குடிபோதையிலிருப்பவர்களே சுயநினைவின்றி குற்றங்கள் புரிவர், சிறுவர்களை பலாத்காரம் செய்வர் என்ற தவறான கருத்து திரைப்படத்தில் விதைக்கப்பட்டிருந்தாலும் நிசப்தம் திரைப்படத்தின் திரைக்கதை சமூகத்தின் அழுத்தங்களுக்கு மத்தியிலும் சிறுமியின் உள ரீதியான மீட்சியூடு நகர்ந்துகொண்டிருக்கும் விதம் பாராட்டத்தக்கது.

சிறுபராயத்தில் நடைபெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மன அழுத்தத்தை தூண்டுவதற்கும் அதன் விளைவாக குற்றங்கள் செய்வதற்கும் வழிகோலுகின்றன என்பது நடுநிசி நாய்கள் (2011) திரைப்படத்தில் கூறப்பட்டிருக்கும். சிறுவயதில் தந்தையால் தொடர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சிறுவன் வயது வந்ததும் மனநலம் பாதிக்கப்பட்டு பெண்களை கடத்தி சித்திரவதை செய்தலாக கதை அமைந்திருக்கும் (இது வயதுவந்தவர்களுக்கான திரைப்படம்)

சிறுவர்களின் மீது நடைபெறும் வன்முறைகளை திரைப்படமாக்குதலின் நோக்கம் சமூக விழிப்புணர்வை தூண்டுவதாக இருத்தல் வேண்டும். அது சிறுவர் துஷ்பிரயோகம் செய்யாத சமூகத்தை உருவாக்க கற்பித்தல் ஊடகமாகவும் இருக்க வேண்டும்.

-தனுஸ்சயன் கருணாகரன்

Related posts

இன்னும் எவரெவர் கால்களில் விழ வேண்டுமோ?

vithai

நீர் என்பதும் ஒரு உயிர் வார்த்தை -மோட்டார் சைக்கிள் குறிப்புகள் – 3

vithai

கோயிலில் சாதியும் எதிர்ப்பின் குரல்களும்

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி : 03

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி 06

vithai

இன்னும் கிடைக்காத சமூகநீதி

vithai

Leave a Comment