vithaikulumam.com
அறிக்கைகள் கலந்துரையாடல்கள்

வாய்ப்பாட்டு மட்டை

மன்னாரில் உள்ள முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்கத் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபரினால் அப்பாடசாலையின தரம் ஐந்தைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலையில் வைத்து வாய்ப்பாட்டு மட்டை கொண்டு வராதமைக்காக கடந்த மாதம் 27 ஆம் திகதி கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக சிறுவர் துஷ்பிரயோக மையத்திற்கு தகவல் வழங்கப்பட்டு பொலிசாரின் விசாரணையின் பின்னர் வைத்திய அதிகாரியின் மருத்துவ சான்றிதழின் அடிப்படையிலும் தண்டனை பெற்ற குழந்தைகளின் பெற்றோர் வழக்குத் தொடுத்திருக்கின்றனர். இது தொடர்பில் கல்வி நிர்வாக மட்டங்களுக்கும் கடிதங்கள் மூலம் அறிவித்திருக்கின்றனர்.

குறித்த அதிபர் மாணவர்கள் வாய்ப்பாட்டு மட்டை கொண்டுவரவில்லை என்ற காரணத்தின் அடிப்படையிலேயே மாணவர்களை அடித்திருக்கிறார். மேலும் பெண் குழந்தையொன்றை அநாகரீகமான வார்த்தைகளாலும் இவர் பேசியிருந்திருக்கிறார். தொடர்ச்சியாக பல்வேறு பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் அதிபர்கள் உடல் ரீதியிலான தண்டனைகளை வழங்குவதும் வாய்மூலம் மனம் நோகப் பேசுவதும் நமது சமூகத்தில் அன்றாட வழமைகளாகவே தொடர்கின்றன. சட்ட ரீதியில் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியில் பாதிப்புக்குள்ளாகும் வகையில் தண்டனைகளை வழங்குவது குற்றமாகக் கொள்ளப்பட்டாலும் சமூகம் தமது குழந்தைகள் மேல் கொண்டிருக்கும் கட்டற்ற உரிமை மீறலால் தாமும் பிறரும் குழந்தைகளை உடல் உள ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி அவர்களை கட்டுப்பாடுள்ள, அறிவுள்ள மனிதர்களாக ஆக்க முடியும் என்று நம்புகிறார்கள். இது எவ்வளவு முரண். தமது உயிர் ஆற்றலை எவ்வளவு தூரம் பெருக்கிக்கொண்டு தம்மைச் சூழவுள்ள புறவுலகை அறிந்து அதன் ஒழுங்குகளையும் அறங்களையும் பகுத்தாராய்ந்து கற்றுக்கொள்கிறார்களோ அப்பொழுதே கற்றல் நிகழ்கிறது. நாம் வளர்ப்பு விலங்குகளாகக் குழந்தைகளைக் கருதுகிறோம். குழந்தைகள் எங்கள் வழியாக இந்த பூமியில் நுழைந்தவர்கள் என்பது தவிர அவர்கள் மேல் நாம் மிகையான உரிமை கொள்வது அவர்கள் என்னவாக ஆக விரும்புகிறார்களோ அதற்கு மாறான இன்னொன்றாக ஆக அவர்களைக் கட்டாயப்படுத்துவது.

தண்டனைகள் மிக இயல்பானவை. தண்டனைகளின்றி நாம் ஒழுங்கை உருவாக்க முடியாது என்பது ஒரு சோம்பேறிச் சிந்தனை. மூட நம்பிக்கை.

கற்றல் என்பது என்ன? கல்வி என்பது என்ன? இவை பற்றி நம்மைச் சுற்றியிருக்கும் குழந்தைகளிடமும் சிறுவர்களிடமும் கேட்டுப்பாருங்கள், அவர்களின் விடைகள் எவ்வளவு சாதாரணமானதாக இருக்கின்றன என்பது விளங்கும். படிச்சாத் தான் வாழலாம். படிச்சால் தான் வேலை கிடைக்கும். இதென்ன கேள்வி படிக்கத் தானே வேணும்.. இப்படி சில வார்த்தைகளில் முடிந்து விடும் அற்பமான காரணங்களை முன்வைப்பார்கள். கற்கத் தொடங்கியது முதல் பெரும்பாலான மாணவர்கள் விடையளிக்கப் பழக்கப்படுத்தப்படுகிறார்களே ஒழிய, கேள்விகள் கேட்க அல்ல. வழங்கப்பட்ட புத்தகங்களை மனனம் செய்து அப்படியே வரிகள் மாறாமல் ஒப்பிக்கவே தவிர, பகுத்தறிய அல்ல. திருவள்ளுவர் சொல்வது போல் “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்பதாகவா நாம் கல்வியை வழங்குகிறோம்? புத்தகம் என்ன சொல்கிறதோ அதைப் பாடமாக்கு, எழுது, மிஞ்சிக் கேள்வி கேட்காதே. அது தான் நாம் இப்போது வழங்கி கொண்டிருக்கும் அறிவு. அதாவது வாய்ப்பாடாக எல்லாவற்றையும் சொல். எதையும் உன்னால் மாற்ற முடியாது. இந்த சமத்துவமற்ற அமைப்பை அப்படியே பேண்.

நாம் நம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி அவர்களுக்கு உகந்ததா? இதில் ஏதேனும் தவறிருக்கிறதா? பிழையானவற்றால், தவறான அணுகுமுறைகளினால் எங்கள் குழந்தைகள் வதைபடுகிறார்கள் என்பதை என்றாவது உணர்கிறோமா? உடலுக்கு வழங்கப்படும் உணவை எவ்வளவு கரிசனையுடன் வழங்குகின்றோம். எல்லாச் சத்துக்களும் சேர்கிறதா? நஞ்சற்ற உணவுகளை வழங்குகிறோமா ? எவ்வளவு சாப்பிடுவது நல்லது? அளவுக்கு மிஞ்சிச் சாப்பிட்டால் செரிக்குமா? என்பதல்லாம் பார்க்கிறோமோ இல்லையோ, பார்க்க வேண்டும் என்ற விளக்கமானது இருக்கிறதல்லவா? அதே போல் குழந்தையின் உயிருக்கான சத்தாக, அவர் என்ன மாதிரியான மனிதராக ஆகப்போகிறார் என்பதைத் தீர்மானிக்கும் கல்வியை பார்க்க வேண்டுமில்லையா?

மேலே குறிப்பிட்ட பாடசாலை அதிபரினுடைய செயல்களுக்குக் கண்டனங்கள். குழந்தைகள் உடல் மீதும் மனத்தின் மீதும் யாருக்கும் அதிகாரமில்லை. அவர்கள் சுதந்திரமானவர்கள், வாழ்வதற்கான உரிமைகளைக் கொண்டவர்கள். அவற்றை மதிப்பதே முதன்மையானது. அவர்களிற்கு வழங்கப்படும் கல்வி குறித்தும் அதன் முறைமை குறித்தும் நம்மில் எத்தனை பேர் அக்கறையாயிருக்கிறோம். அக்கறை என்பதும் குழந்தைகள் மேல் நாம் கொள்ளும் அன்பு என்பதும் அவர்களுக்கு இனிப்பு வாங்கிக் கொடுப்பதோ கொஞ்ச நேரம் விளையாடுவதோ மட்டுமல்ல. அவர்களைப் பாதிக்கும் விடயங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பது தான் நாம் அவர்கள் மேல் கொள்ளும் அன்பின் முதன்மையான குறிகாட்டி. அதற்காக வாசிப்பதும் உரையாடுவதும் நமது சமூகத்தில் அதிகமாக்கப்பட வேண்டும். இத்தகைய உரையாடல்களை நம்மால் கொண்டு சேர்க்கக் கூடிய எல்லைகள் வரை கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். நமது சமூகத்தில் குழந்தைகளுக்கான பொதுவெளிளை
அதிகமாக்க வேண்டும் . அவர்களின் வாயை மூடப் பழக்குவது கொடியது. அவர்களின் பாடப்புத்தகங்களை வாங்கிப் பாருங்கள், அவர்களுக்குப் பள்ளியில் என்ன கற்பிக்கப்படுகிறது, எப்படி கற்பிக்கப்படுகிறது என்பதைக் கேளுங்கள். அவர்களுக்குத் தண்டனைகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும் போது அவர்களின் பக்கம் நின்று குரல் கொடுங்கள், அவர்களைக் காப்பாற்றுங்கள், அதுவே குழந்தைகளை சமூகத்தின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்யும் செயல். மாறாக அவர்களைத் துன்புறுத்துபவர்களின் பக்கத்தில் நின்று குழந்தைகளுக்கு வகுப்பெடுக்காதீர்கள். மேலும், குழந்தைகளுடனும் சிறுவர்களுடனும் செயல்வாதத்தில் ஈடுபடும் சுயாதீன அமைப்புகளும் குழந்தைகளுக்கு வாசிக்கச் சொல்வதுவும், புத்தகங்கள் சப்பாத்துகள் வாங்கிக் கொடுப்பதும், நூலகங்களை உருவாக்குவதும் மட்டுமல்ல தமது பணி என்பதை உணர்ந்து அவர்களின் உரிமைகளைக் காப்பாற்றும் அறிவை அவர்களுக்கு வழங்கவும், அவர்கள் மேல் நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு எதிராகச் செயற்பட வேண்டிய சமூகப் பொறுப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாய்ப்பாட்டு மட்டை கொண்டு வராமைக்கு குழந்தைகள் இவ்வளவு கடுமையாகத் தண்டிக்கப்படுகிறார்கள் என்பது மட்டுமல்ல. அவர்கள் வாய்ப்பாடு போல் தான் சிந்திக்க வேண்டும், நடக்க வேண்டும், தங்கள் எல்லைகளைத் தாங்கள் மீறவே முடியாது என்று சமூகத்தின் மூட நம்பிக்கைகளால் அவர்களின் வாழ்வை அழுத்தும் ஒவ்வொருவர் கையிலுமிருந்தே அந்த அதிபர் தடியை விசுக்குவதற்கான விசை அளிக்கப்படுகிறது. அவர்கள் கற்பதற்காக வாழவில்லை. வாழ்வதற்குத் தான் கற்கிறார்கள்.

தோழமையுடன்
விதை குழுமம்

Related posts

குட்மோர்னிங் டீச்சர்

vithai

தொன்ம யாத்திரை -6 பெண் நடந்த பாதை – முன்கள ஆய்வு

vithai

கரும்பாவளி – ஆவணப்பட வெளியீடு

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி 04

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி – 09 -நவாலியூர் தாமா

vithai

“மரபுரிமையைக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான்” – பா.அகிலன்

vithai

Leave a Comment