vithaikulumam.com
ஒளிப்படம் கற்கை வட்டங்கள் கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்

சிட்டுக்குருவிகள் புத்தகக் குடில்

விதை குழுமத்தின் நூலக உருவாக்கத் திட்டத்தின் முதற் தனி நூலகம் யாழ்ப்பாணம், குடத்தனையில் உள்ள விளாங்காடு எனும் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டு கடந்த பத்து மாதங்களுக்கு மேல் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. விதை குழுமத்தின் தனி நூலகங்களிற்கான திட்டப் பெயர் ‘புத்தகக் குடில்’ என்பதாக தீர்மானித்திருக்கிறோம், விளாங்காட்டில் அமைந்துள்ள இந்தத் தனி நூலகத்துக்கு சிட்டுக்குருவிகள் புத்தகக் குடில் என்று பெயரிடப்பட்டுள்ளது.

விளாங்காட்டின் சிறுவர்களுடனான தொடர்ச்சியான உரையாடல்களையும் களச் செயற்பாடுகளையும் இரண்டு வருடங்களாக பசுமைச் சுவடுகள் என்ற எமது தோழமை அமைப்பினருடன் இணைந்து செயற்படுத்தி வருகிறோம். அங்குள்ள பொதுமக்களையும் சிறுவர்களையும் இணைக்கும் மையமாக அவர்களுக்கு வாசிப்பு, கலைகள், விளையாட்டுகள் ஊடான அறிவுப் பரிமாற்றத்தை உருவாக்கும் நோக்குடன் இயங்க ஆரம்பித்திருக்கிறோம்.

விளாங்காட்டில் வசிக்கும் பசுமைச் சுவடுகள் அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர் சிறு குடிலையும் காணியையும் எமது புத்தகக் குடில் செயற்பாட்டுக்காக வழங்கினார். அதனைச் சுற்றி கருக்கு மட்டைகளால் வேலியமைத்து, பனைகள் அடர்ந்த சிறுகூடல் ஒன்றில் கலந்துரையாடல்களுக்கான இருக்கைகளையும் அமைத்திருக்கிறோம். அமர்ந்து கதைப்பதற்கான மணற் பரப்பொன்றையும் அங்குள்ள சிறுவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். மேலும் குடிலின் மேற்கூரை பனையோலைகளால் வேயப்பட்டு இயற்கைச் சூழலாக விளாங்காட்டுப் புத்தகக் குடில் அந்தக் கிராமத்தின் சிறுவர்களாலும் மக்களாலும் இணைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. குடிலுக்கான ஓவிய வேலைகள் இன்னும் மிச்சமிருக்கின்றன. பெருந்தொற்றுக்காலத்தில் கூட்டு வேலைகளை நாம் தவிர்ப்பதால் அவை முழுமை பெற்று குடிற் திறப்பு நாளினை ஒரு நிகழ்வாக்க முடியவில்லை. ஆனால் வேலைகள் ஆரம்பிக்க முதலே ஒரு தொகுதி புத்தகங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. பின்னர் குடிலுக்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்டோம். விதை குழுமத்தின் தோழமைகள் குடிலாக்கச் செலவுக்கானதும் புத்தகக் கொள்வனவிற்காகவும் வழங்கிய பங்களிப்புடன் குடிலை சிறுவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கியிருக்கிறோம். தோழமைகளின் நிதிப்பங்களிப்புக்கு மிக்க அன்பும் தோழமையும்.

குழந்தைகளும் சிறுவர்களும் மட்டும் புழங்கும் வெளியாக ஓர் அறிவு மையம் இயங்குவது அவர்களின் உரையாடலை மட்டுப்படுத்தும். அகலத் திறந்த காதுகளையும் கண்களையும் கொண்டு உலகத்தை அணுகுவதற்கும் உரையாடல்களின் வழி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான இயல்புகளை அவர்கள் அடையவும் சமூகத்தினதும் செயற்பாட்டு அமைப்புகளினதும் பங்களிப்பு மிக முக்கியமானது. பொதுவான கல்வி முறைமைகளுக்கு வெளியே மாற்றான உள்ளூர் அறிவுப் பரிமாற்றத்தையும் அனுபவங்கள் வழியான சமூகம் பற்றிய அறிவையும் நாம் முன்கொண்டு செல்ல வேண்டும். அவற்றைக்கொண்டு கற்பனையை உருவாக்கி பிரச்சினைகளை அறியவும் சமூகநீதியுள்ள பார்வையின் அடிப்படையில் அவற்றைத் தீர்ப்பதற்குக் கற்றலும் சிறுவர்களிற்கு தேவையாகவுள்ளது. அவர்களைக் கேள்வி கேட்கப் பழக்குவது, அதன் மூலம் சிந்தனையை தூண்டுவது, உரையாடல்களின் வழியே தீர்வுகளைக் கண்டடைதல் ஆகியவற்றிற்குப் பயிற்சிப்படுத்தல் முக்கியமானது.

சுதந்திரமானதும் சமத்துவமானதுமான கல்வி வாய்ப்பையும் அதனூடான அறிவையும் நமது சிறுவர்களுக்கு வழங்க வேண்டியது நம் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பு. சிறுவர்களின் கனவுகளைப் பெருக்கி அவற்றை அடைவதற்கான வழிமுறைகளை உரையாடுவதுடன் அவர்கள் கல்விபெறுதிலும் கல்வியை முழுமையாகத் தொடர்வதிலும் எதிர்கொள்கின்ற சவால்களை இனங்காணுவதும் முதன்மையான சமூகத் தேவை. அதுவே தமது உரிமைகளையும், பொறுப்புக்களையும் உணர்ந்தவர்களாக சிறுவர்களை உருவாக்குவதற்கு உதவும். பாடசாலை இடைவிலகல் வீதத்தைக் குறைத்தல், உயர்தர வகுப்புகளிற்கு தொடர்ந்தும் மாணவர்கள் செல்வதற்கான சமூகச் சூழலை வழங்குதல், பாடசாலைக் கல்விக்குப் பின்னரான தொழில்சார் கற்கைகள், மேற்படிப்புகளுக்கான வாய்ப்புகளை அறியச்செய்து அவற்றுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் என கல்விதொடர்பான கிராமங்களின் தேவைகள் நீண்ட பட்டியலாகத் தொடர்கின்றன. அவற்றையும் நாம் கவனத்திலெடுக்க வேண்டும். இங்குள்ள கிராமங்கள் வளப்பற்றாக்குறையுடன் சாதிய மதவாத பொருளாதாரச் சிக்கல்களுக்குள் இன்னமும் நெருக்குண்டு போயிருக்கின்றன. அதற்காக நகரங்கள் சமத்துவமின்மையில் இருந்து மீண்டு விட்டார்கள் என்பது பொருளில்லை. ஆனால் ஒப்பீட்டளவில் நகரங்களில் வாய்ப்புகள் மலிந்திருக்கின்றன. கிராமங்கள் இன்னமும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, வீதிகளுக்காகவும் உட்கட்டமைப்பு சார் வசதிகளுக்காகவும், ஒரு வாய்ப்புக்காகவும் அல்லது தேவைக்காகவும் பல தூரங்கள் பயணிக்க வேண்டியவர்களுமாக இருக்கின்றனர். அத்தகைய ஒடுக்கப்பட்ட மக்களின் வாசல்களிற்கும் கிராமங்களிற்கும் செல்லும் நூலகங்கள் அவர்களின் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் இடங்களாகவும் சமூக நீதிக்கான மையங்களாகவும் மாறவேண்டும். அவர்கள் வாழ்வதற்கான சுயமரியாதையும் சமத்துவமும் கொண்ட சமூக அமைப்பொன்றை உருவாக்குவதற்கான மையங்களாக அவை பொருள் கொள்ளப்பட வேண்டும். தனியே நூலகங்களை உருவாக்குவதும் அவற்றை பராமரிப்பதுடன் நமது பணி முடிவடையப் போவதில்லை. குழந்தைகளுடனும் சிறுவர்களுடனும் இன்று பணியாற்றும் அனைவருக்குமான முதன்மை பாத்திரம் அவர்கள் ஒரு குழந்தை / சிறுவர் உரிமைகள் செயற்பாட்டாளாரகவும் இருக்கவேண்டும் என்பது தான்.

சிறுவர்களை அழுத்தும் சமூக நடைமுறைகள், தண்டனைகள், எதிர்கொள்ளும் சமூக அநீதிகள் குறித்து நாம் விழிப்பாய் இருக்கவேண்டும். தம் மேல் நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளை அறியவும் கற்கவும் அதனை மாற்றவும் நாம் குழந்தைப்பருவம் முதலே சொல்லித்தர வேண்டும். இல்லையென்றால் ஆயிரக்கணக்கான புத்தகங்களால் பயனில்லை. அறிவென்பது சமூகநீதியை நோக்கி நகர்த்திச்செல்வதாக இருக்கவேண்டும். நாம் சுயநலம் மிக்க மனிதர்களாக சிறுவர்களை ஆக்கிக் கொண்டிருக்கிறோம். சுற்றியும் உள்ள புற அழுத்தங்களால் நமக்கு சிறுவர்களின் குரல்கள் கேட்பதில்லை. அவர்கள் என்னவாக ஆக விரும்புகிறார்கள் என்பதற்கு முதற் படி அவர்கள் என்னவாகவெல்லாம் ஆக முடியும் என்பதை அவர்கள் அறிவதும் அவற்றை நோக்கிய பயணத்தை தொடர்வதுமே. அவர்கள் சுதந்திரமானவர்கள். அதே நேரம் நம் பாதுகாப்பு தேவைப்படுபவர்கள். அவர்களுக்கான எதிர்காலத்தை மகிழ்ச்சியானதாகவும் சமத்துவமும் சுயமரியாதை கொண்டதாகவும் ஆக்குவதற்கான பயணத்தின் கண்ணிகளாக புத்தகக் குடில்கள் இயங்கும்.

தோழமையுடன்
விதை குழுமம்

Related posts

மேலைக்கடலில் பிளாஸ்டிக் கப்பலும் – வட கடலில் பேருந்துகளும்

vithai

போராடுவது என்றால் என்ன?

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி 06

vithai

வாய்ப்பாட்டு மட்டை

vithai

குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்வு

vithai

பாராளுமன்ற தேர்தல் நிலவரங்கள் தொடர்பான உரையாடல்

vithai

Leave a Comment